ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்,,,1

student

            என் இதயம் நிறைந்த மாணவக் கண்மணிகளே! உங்கள் மீது. அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் குன்றாமல் குறையாமல் நிறைவாய் நிலவட்டுமாக! ஆமீன்!

            நீங்களும். உங்கள் பெற்றோர்களும். உறவினர்கள்.

சுற்றார்கள் அனைவரும் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்! இங்கு நானும் எனது நண்பர்களும். உறவினர்களும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நலமாக இருக்கிறோம்! உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளுக்கு சொல்ல வேண்டிய நிறைய செய்திகள் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன! அந்த செய்திகளையும். எனது அனுபவங்களையும் சமூகநீதி முரசுமாத இதழின் மூலமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்,

            உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளோடு பேசுவதிலும் உரையாடுவதிலும் நேரங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைபவன் நான் காரணம். உங்கள் இளமை, துடிப்பு, சிந்தனை, அதனுள் வெளிப்படும் திறமை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

            ஒரு காலம் இருந்தது! ஒரு முஸ்லிம் மாணவன் உயர்கல்வி படித்து அரசு வேலையில் அமர்வது என்பது ஆச்சர்யமும். அபூர்வமும் நிறைந்த செய்தியாக இருக்கும்! அப்படி உயர்ந்த வேலை பார்ப்பதில் அக்குடும்பத்திற்கும். குடும்பம் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்! ஆனால் இன்று உங்களைப் போன்ற ஒரு முஸ்லிம் மாணவன் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியைத் தொடர்ந்து அரசு வேலைகளில் அமர்வது என்பது இஸ்லாமிய சமூகம் சார்ந்து பார்க்கப்படுகின்ற நிகழ்வு, முஸ்லிமான ஒருவர் மருத்துவராகவோ. வக்கீலாகவே. பேராசிரியராகவோ. தாசில்தாரகவோ இருந்தால் அது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கிறோம்!

           

 Indian Administrative Service(IAS), Indian Police Service(IPS), Indian Engineering Service(IES), Indian Foreign Service(IFS), National Eligibility Test(NET), State Eligibility Test(SET), Tamil Nadu Public Service Commission(TNPSC) போன்ற அரசு தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் போது யாரேனும் ஒருவர் முஸ்லிமாக இருக்க மாட்டாரா என்று தேர்வு முடிவுகளின் பட்டியலை தேடுபவர்களும் நம்மில் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்!

            ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கும். சந்தோஷத்திற்கும் அடிப்படையாக அமைவது உங்களின் இந்த புனிதம் நிறைந்த மாணவப் பருவம் தான்! ஆம்! இப்போது 10th (or) +2 தேர்வுகளை முடித்துவிட்டு Result–ஐ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பீர்கள்! மூன்று மாதம் விடுமுறை என்று சந்தோஷப்படும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டமிடுதலையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள்! முழு ஆண்டுத் தேர்வுகளை முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கப்போகிறோம் என்ற குழப்பத்தில் உங்கள் தலைகளை பிய்த்துக்கொண்டு இருப்பதும் எனக்கு நன்றாக புரிகிறது!

            அவன் அந்த பள்ளியில் இந்த Group–ஐ எடுக்கப் போகிறான்! நீயும் அவனுடன் அதே பள்ளியில் இந்த group–ஐ படி என்று உங்கள் தந்தை சொல்லும்போது அதில் ஆர்வம் இல்லாமலும். உடன்பாடில்லாமலும் இருமனதோடு சரி! என்று குழம்பிப்போய் பதில் சொல்வதும் தெரிகிறது,

            10th ,+2 முடித்த உடன் என்னென்ன course  படிக்கலாம் என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி எங்கேனும் நடக்கிறதா என்று ஜும்ஆ பயான் அறிவுப்புகளிலும். சாலைகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும் உங்களது பார்வையும், சிந்தனையும் தேடுவதைப் பார்க்கிறேன்,

            நானும் உங்களைப் போன்ற மாணவப் பருவத்தில் இருந்த போது அந்த course–ஐ படித்தால் அப்படி போகலாம். இந்தப் course -ஐ படித்தால் இந்த வேலைக்கு போகலாம்; என்று வழிகாட்டுதல் எனக்கு இல்லை! உற்சாகப்படுத்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் ஆள் இல்லாமல் தவித்த நேரத்தில் தாயாகவும். தந்தையாகவும் இருந்து என்னை ஹாஃபிழாகவும். ஆலிமாகவும் அதே நேரத்தில் பொருளாதாரத்துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான அடிப்படையையும். அடித்தளத்தையும். அமைத்துக் கொடுத்து ஊக்கப்படுத்தியும். உற்சாகப்படுத்தியும் என்னை இன்று இந்த உயர்விற்கு கொண்டு வந்த பெருமை தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்திருக்கும் ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா மதரஸா என்பதை நன்றி உணர்வோடு உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்!

            அதுபோல். எனக்கு வழிகாட்டுவதற்கு ஆள் இல்லை. ஊக்கப்படுத்துவதற்கும். உற்சாகப்படுத்துவதற்கும் ஆள் இல்லை என்று நீங்கள் சொல்லக்கூடாது! உங்களைப் போன்ற இளைஞர்களின் ஏக்கங்களுக்கும். எதிர்பார்ப்புகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் சமூக விழிப்புணர்வு மாத இதழான சமூகநீதி முரசு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது, சமூகநீதி முரசு வாயிலாக உங்களிடம் மாதம் தோறும் கடிதத்தொடர்பின் மூலமாக உங்களிடம் உரைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

            எனதருமை இளைய ரத்தினங்களே! விடுமுறையை கழித்துவிட்டு அடுத்து என்ன செய்யப் போகிறோம்! என்ன படிப்பை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதற்கு முன் நான் சொல்கின்ற இந்த விஷயத்தை உங்கள் மனதிற்குள் போட்டு வையுங்கள்!

            நீங்கள் உங்கள் நண்பர்களோடு டீ குடிக்க ஒரு டீ கடைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். டீ குடித்து முடித்த உடன் அதற்கு காசு கொடுக்கலாம் என்று நினைத்து உங்கள் பையில் கையை விடுகிறாய்! திடுக்கம் அடைகிறாய்! சட்டை மாட்டும் போது 200 ரூபாய் வைத்திருந்தேனே! இப்போது 100 ரூபாய் மட்டும் தானே இருக்கிறது! மீதி 100 ரூபாய் எங்கே போனது? என்ற சிந்தனையில் உன் முகமெல்லாம் வாட. சிந்தனைகள் சிதற. அருகிலிருக்கும் உன் நண்பன்! டேய்! என்னடா ஒரு மாதிரியா இருக்கேனு கேட்டா! ஒன்னுமில்லடானு மழுப்பிவிட்டு செல்வாயல்லவா!

            100 ரூபாய் தொலைந்து விட்டது என்பதற்காக பதறுகிறாய்! தடுமாறுகிறாய்! நேரம். காலம் என்பதும் உன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள் (பணம்) தானே! உனது பெற்றோர்கள் உன்னை நம்பி நேரத்தையும். காலத்தையும் முதலீடாக உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்,

            +2 படித்துக்கொண்டிருக்கின்ற உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்! முதல் வகுப்பில் இருந்து 10th வரைக்கும் நீ படித்ததில் இப்போது எதுவெல்லாம் உன் நினைவில் இருக்கிறதோ அதையெல்லாம் இப்போது சொல்! என்று கேட்டால் உன்னால் என்ன பதில் சொல்ல முடியும்? சரி +1,+2 வில் படித்ததில் எதையேனும் சொல் என்று கேட்டால் ஏதோ சில கேள்விகளையும். அதற்கான பதில்களையும் சொல்லி விடுவாய், மூன்று வருடம் கழித்து +1,+2 வில் படித்த எதையேனும் சொல் என்றால் உன்னால் அப்போது சொல்ல முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது!

            நீ பள்ளிப்பயணத்தில் நுழைந்து 4320 நாட்கள் 576 வாரங்கள். 144 மாதங்கள். 12 ஆண்டுகளாக பயணப்பட்டு கொண்டிருக்கிறாய்! நீ இத்துனை வருடங்களில் என்ன கற்றுக்கொண்டாய் என்று உன்னிடம் கேட்டால் உன்னால் என்ன பதில் சொல்ல முடியும்,,,? என்று யோசித்துப்பார்!

            8thபடிக்கும் போது அனைத்து விடைகளையும் மனனம் செய்து படித்து பழக்கப்பட்ட உனக்கு 9th வரும் போது பழைய விடைகள் எல்லாம் மறந்து 9th க்கான மனனத் தேடலில் களமிறங்கி விடுகின்றாய், இப்படியாக முதல் வகுப்பு முதல் +2 வரை உனது கல்விப் பயணம் தொடர்கிறது! ஒரு வருடம் மனனம்; அடுத்த வருடம் மறதி! ஒரு நாள் தனிமையில் அமர்ந்து இப்படி யோசித்துப்பார்! 12 ஆண்டுகளில் நான் என்ன தெரிந்து வைத்திருக்கிறேன் என்று உன்னையே நீ கேட்டுப்பார்! பதில் மௌனமாகத்தான் இருக்கும்!

            ஒரு நூறு ரூபாய் தொலைந்துவிட்டதற்காக பதட்டப்படுகிறாயே! தடுமாறுகிறாயே! 12 ஆண்டுகள். 144 மாதங்கள். 576 வாரங்கள். 4320 நாட்களை தொலைத்துவிட்டு பதட்டப்படாமல். தடுமாறாமல் உன்னால் எப்படி இருக்க முடிகிறது என்று தெரியவில்லை!

            ஒரு பொருளை ஒருவனிடம் கொடுத்து வைத்து. அவன் அப்பொருளை தொலைத்து விட்டால் அவனை திட்டுகின்ற நீ. நேரம்எனும் பொருளைத் தொலைத்துவிட்ட உன்னை. உன் பெற்றோர்களும். இந்த சமூகமும் திட்டினால் கோபம் கொள்கிறாயே! இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை! உனக்கு ஒரு நியாயம்! உனது பெற்றோருக்கு ஒரு நியாயமா,,?

            என்னடா,,, இவர் நம்மை குறை சொல்கிறாரே என்று நினைக்காதே! நல்ல ஆடை உடுத்திக் கொண்டு. கமகமவென்று அத்தர் பூசிக்கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு நீ செல்கிறாய் என்று வைத்துக்கொள்வோம்! ஆனால். அந்த ஆடையின் பின்புறம் ஒரு கரும்புள்ளி அசிங்கமாகத் தெரிகிறது! உன்னால் அதை பார்க்க முடியாததால் (அல்லது) உனக்கு அது தெரியவில்லை என்பதால் அந்த ஆடையை அப்படியே அணிந்து கொண்டாய்! எதிரில் வந்த நான். தம்பி! இந்த அழகிய சட்டையில் ஒரு கரும்புள்ளி இருக்கிறதே! நீ கவனிக்கவில்லை போல் தெரிகிறது! அதை கழுவிவிட்டு செல்! நன்றாக இருக்கும்! என்று உன்னிடம் சொன்னால் என் மீது கோபப்படுவாயா?! நிச்சயம் கோபப்படமாட்டாய்! காரணம் உன் பெருமையிலும். அந்தஸ்திலும். அழகிலும் உன் உயர்விற்கு நான் காரணமாக இருக்கிறேன் என்பதால் தானே!

            அதுபோல் உன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாய் உனக்குத் தெரியாமல் சில கரும்புள்ளிகள் உள்ளது, அவைகள் எல்லாம் எது என்னவென்றே தெரியாமலே நீ சென்று கொண்டிருக்கிறாய்! அந்த கரும்புள்ளிகளோடு நீ பயணப்பட்டால் உனது வெற்றிக்கும். முன்னேற்றத்திற்கும் அது தடையாக இருக்கும் என்பதை நான் உணர்ந்த காரணத்தால்தான் உனக்குச் சொல்கிறேன்.

            ஆடையில் இருக்கும் கரும்புள்ளியை சுட்டிக்காட்டியதற்கு குறை என்று பாராமல் மனமுவந்து ஏற்றுக்கொண்டதைப்போல உன் வாழ்க்கையின் தடைக்கற்களாய் இருக்கும் சில முட்டுக்கட்டுகளை சுட்டிக்காட்டியதையும் குறை என்று பாராமல் மனமுவந்து ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

            காரணம் நீ உன் வாழ்க்கையில் தோற்றுவிட்டால் உனது வெற்றியை இன்னொருவர் தீர்மானிப்பார். உனது வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைக்க நீ சம்மதிக்கமாட்டாய்! என்ற தன்னம்பிக்கையுடன் இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன், இன்னுமொரு புதிய சிந்தனைகளோடு அடுத்த மாதம் இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்,

பிரியாத உணர்வுகளுடன்,,,

அல்ஹாஃபிழ். Dr. M. பக்கீர் இஸ்மாயில் பிலாலி

(பொருளாதாரப் பேராசிரியர். புதுக்கல்லூரி)

தொடர்புக்கு: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.