ஒரு அரசாங்கம் தரவேண்டியது.....

ana  mo

2002ல் உலகை உலுக்கிய புகைப்படம் குதுபுதீன் அன்சாரியினுடையது. குதுபுதீன் அன்சாரியின் முகத்தை உலகம் அறியும். ஆனால் அவருடைய வாழ்க்கை அதன் வலியும் வேதனையும் உணர்வுகள் ஒடும் சதைகள் கொண்ட மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்படும். மனிதத் தோற்றம் கொண்ட சதைப் பிண்டங்களுக்கு அது

வராது. நான் அன்றைக்கு செத்துவிட்டேன்.

அவருடைய பேட்டி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. அதன் சுருக்கம்தான் இது. 2002ல் வெளியான என்னுடைய அந்த புகைப்படம் சாமானியனாகிய எனக்கு சுமையாகிபோனது. 2002 கலவரத்துக்குப்பின் இருந்ததை விட இப்போது மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம்.

கலவரத்துக்குப்பின் பல மாநிலங்களுக்கு சென்ற நான் மீண்டும் குஜராத் வரக்காரணம் இந்த குஜராத்தான் எங்கள் பூர்வீக மண். என் தந்தையும் தாத்தாவும் அவர் முன்னோர்களும் பிறந்து வளர்ந்த மண். கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியதேயன்றி, கலவரத்துக்குப் பின் எல்லோரையுமே இந்தக் கலவரம் சங்கடப்பட வைத்தது. இங்கே எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் உதவினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த சின்ன உதவிகள்கூட எங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் குஜராத்துக்கே அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. இந்தக் காரணங்கள்தான் நம்பிக்கைக்கான அடிப்படை.

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும்தானே... குஜராத் கலவரத்தில் என் புகைப்படத்தைப் போலவே, கத்தியுடன் கைகளை உயர்த்தியபடி சத்தமிடும் அவர் படமும் பிரபலம். பின்னாளில் அவர் மனம் மாறினார். முஸ்லிம்களுக்குத்தான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டார். இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். குஜராத்தின் வளர்ச்சி பற்றி பலரும் பேசுகிறார்கள் வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை.

காலையில் எழுந்திருக்கிறோம். வேலைக்குப் போகிறோம். கடுமையாக உழைக்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். இரவாவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட முடிய வேண்டும். அவர்களோடு நிம்மதியாகப் பேச முடிய வேண்டும். முக்கியமாக, பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், வளர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த நாட்டின் விஷேசமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக்கூடாது. இந்த நாட்டைச் சிதைத்துவிடக் கூடாது.