இன்றைய துருக்கி !

arthukan தனது நாட்டின் பெரும் பகுதியை (97% பகுதி) ஆசியாவிலும், மிகச் சிறிய பகுதியை (3% பகுதி) ஐரோப்பாவிலும் கொண்டுள்ள துருக்கி புவியியல், ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு. 90 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற மாதம் துருக்கியின் ஜனாதிபதியை தேர்தல் முறையில் மக்களே தேர்ந்தெடுக்கும் தேர்தல் முடிவு வெளியானது

. 52% சதவிகித வாக்குகள் பெற்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாக 60 வயதான ரஜப் தையிப் அர்துகான் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு முன் அர்துகான் இஸ்தான்புல் நகரத்தின் மேயராகவும், மூன்று முறை துருக்கியின் பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2011 -ல் பிரதமர் பொறுப்புக்கு வந்த பிறகு துருக்கி பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்றது. இன்று உலகப் பொருளாதார வளர்ச்சியில் துருக்கியின் பொருளாதாரம் 16ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஜி- 20 நாடுகளில் துருக்கியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய வருமானம் ஜிடிபி 9% வளர்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பாவில் பொருளாதார ரீதியாக ஜெர்மனி பெற்றுள்ள வளர்ச்சியை விட இது 3 மடங்கு அதிகம். வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. லஞ்சமும் ஊழலும் குறைந்துள்ளது என்று ஐரோப்பிய கவுன்சிலின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இதையெல்லாம் விட மிகக் குறிப்பாக துருக்கியில் தடை செய்யப்பட்டிருந்த இஸ்லாம் இன்று வாழ்வியலாக மாறுவதற்கான சுதந்திரம் இருக்கிறது. இஸ்லாமிய விழுமியங்களோடு வாழ்வதற்கான உரிமை மீட்டப்பட்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
துருக்கியில் இஸ்லாம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்.
   இஸ்லாம் துருக்கியில் உமர் ரழி... அவர்களின் ஆட்சிக் காலத்தில் அறிமுகம் ஆனதாக கருதப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இஸ்லாம் ஹி.857இல் முஹம்மது அல் ஃபாதிஹ் அவர்களின் தலைமை மூலம் துருக்கி வெற்றி கொள்ளப்பட்டு அங்கு உஸ்மானிய ஆட்சியாளர்களால் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் துருக்கி இஸ்லாமியர்களின் தலைமை பீடமாக இருந்து வந்தது. ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சிக்குப் பின் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாமிய விழுமியங்களை மறந்து ஐரோப்பியர்களின் மதச்சார்பற்ற மலட்டுச் சிந்தனையின் பக்கம் சாய்ந்து ஒரேயடியாக 1924 இல் இஸ்லாமிய தலைமை எனும் கிலாபத் ஆட்சி முறை இல்லாமலாக்கப்பட்டது. அதன் பின் சடவாத மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட முஸ்தபா கமால் அத்தாதுர்க் பதவிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் மிகக் கடுமையான அடக்கு முறைக்கு ஆளானார்கள். பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மூடப்பட்டு, இஸ்லாமிய அடையாளங்களோடு வாழ்வது தடை செய்யப்பட்டது.
இந்த வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் இஸ்லாத்தை வாழ்வியலாக கொண்டு வருவதற்கு பல இயக்கங்கள் தோன்றின. அதில் ’நக்‌ஷ்பந்திய்யா’ தரீக்காவைச் சேர்ந்த ஸஈத் பீரான் அவர்கள் மதச்சார்பற்ற சிந்தனையை எதிர்த்து களம் இறங்கி, ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார். விளைவு கமால் அத்தா துர்க்கினால் அந்த அமைப்பு நசுக்கப்பட்டு ஸஈத் பீரான் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
இவர்களுக்குப் பின் இவர்களுடைய சிந்தனையை பின்பற்றிய சீர்திருத்தவாதி பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் இஸ்லாமிய பண்பாட்டுப் பயிற்சி மூலம் போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதன் காரணமாக அவர் இருப்பிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டார். எங்கிருந்தாலும் அவர் துருக்கிய மக்களுக்காக பல கட்டுரைகளையும் நூற்களையும் எழுதிக் கொண்டேயிருந்தார். அவரது உரைகள் உள்ளத்திலும் பகுத்தறிவிலும் ஊடுறுவக் கூடியவை.

அதாதுர்க்கும் அவனது ஆதரவாளர்களும் இழைத்த கடும் கொடுமைகளுக்கு மத்தியிலும் துருக்கிய முஸ்லிம்களை அவை உறுதியாக நிற்கச் செய்தன.
அவர்களது இந்தப் பணியின் தாக்கம் இன்றுவரை துருக்கியில் ஆளுமை செய்து வருகிறது.
இதே கால கட்டத்தில் 1950 இல் அத்னான் மந்த்ரீஸ் என்பவர் துருக்கியின் பிரதமராக பொறுப்புக்கு வருகிறார். இவர் இஸ்லாமியவாதியாக இல்லாவிட்டாலும் இவரது ஆட்சி காலத்தில் இஸ்லாமிய செயல்பாடுகள் மக்களிடத்தில் அதிகரித்தது. இதை சகித்துக் கொள்ளாத ராணுவம் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி 1960 இல் மந்த்ரீஸ் அவர்களை ஆட்சியிலிருந்து இறக்கி அவருக்கும் அவருடை ஆட்சியில் மந்திரிகளாக இருந்த சிலருக்கும் தண்டனை வழங்கி தூக்கிலிட்டு கொன்றது. அதே ஆண்டில் இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்களும் வஃபாத்தானார்கள்.
இந்த நிலை நீடித்த போது 1970 க்குப் பிறகு இஸ்லாமிய சிந்தனையாளரும், அடிப்படையில் பொறியளருமான நஜ்முதீன் அர்பகான் எனும் ஆளுமை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களையும், சிந்தனையாளர்களையும் இணைத்துக் கொண்டு ஒரு கட்சி ஆரம்பித்தார். பின்னர் பல பிரச்சனைகளுக்கிடையே பல்வேறு பெயர்களில் கட்சி நடத்திய அவர் மதச்சாற்பற்ற கட்சி ஒன்றுடன் 1973 இல் துனை பிரதமராக செயல்பட்டார் இந்த காலகட்டத்தில் மதரஸாக்களை நிறுவுவது, இஸ்லாமிய நாடுகளோடு தொடர்பு, இஸ்லாமிய வங்கி போன்ற சில மாற்றங்களை செய்தார்.1980 க்குப் பின் மீண்டும் ஒரு ராணுவப் புரட்சி ஏற்பட்டு அர்பகான் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். விடுதலையான பின்பு மீண்டும் எழுச்சியுடன் செயல்ப்டத் தொடங்கினார். இதன் பலனாக 1996 ஆம் ஆண்டு அர்பகான் அவர்கள் துருக்கியின் பிரதமராக பொறுப்புக்கு வந்தார். இவர்தான் 1924 கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு பொறுப்புக்கு வந்த முதலாவது இஸ்லாமியவாதி. பின்னர் மீண்டும் மேலை நாடுகளின் தூண்டுதலால் துருக்கி ராணுவம் அர்பகான் அவர்களது ஆட்சியை கவிழ்த்தது. சில நாட்கள் கழித்து மீண்டும் அர்பகான் பழீலா என்ற பெயரில் ஒரு கட்சியை 2000 இல் ஆரம்பித்தார். அதே கால கட்டத்தில் அர்பகான் அவர்களின் மாணவரும் தொடர்ந்து அவரோடு கட்சிப் பணிகளிலும் ஆட்சிப் பணிகளும் உடன் பயணித்தவருமான இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ரஜம் தயுப் அர்துகான் 1994 – 1998 வரை இஸ்தான்புல் நகர மேயராக இருந்து சீரழிந்து போன அந்த நகரை செல்வாக்கு மிக்க நகராக மாற்றினார். 2001 ஆம் ஆண்டில் அர்பகான் அவர்களிடமிருந்து பிரிந்து வந்து அர்துகானும் அப்துல்லாஹ் குல்லும் இணைந்து நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை(AKP) நிறுவினர். அந்தக் கட்சி துருக்கிய மக்களுக்கு மத்தியில் அதிகமான செல்வாக்கு பெற்று 2002இல் நடைபெற்ற தேர்தலில் 368 இடங்களைப் பெற்று வெற்றிபெற்றது. அப்போது அர்துகான் அரசியலில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டிருந்ததால் அமைச்சரவைக்கு அப்துல்லா குல் தலைமை ஏற்றார். பின்பு தடை நீக்கப்பட்டு அதே ஆண்டு அர்துகான் பிரதம மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.
அன்றிலிருந்துதொடர்ந்து மூன்று தடவை பிரதமராக பொறுப்பு வகித்து தற்போது ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்துள்ளார். 2009 இல் அர்துகானுடைய அரசுக்கு எதிராகவும் ஒரு புரட்சி திட்டமிடப்பட்டது. ஆனால் அது ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டது. அர்துகான் தன்னுடைய ஆட்சியை இஸ்லாமிய அரசாக அறிவித்துக் கொள்ளவில்லை. அது இன்று வரை இஸ்லாமிய சிந்தனைவாதிகளுக்கிடையே பெரும் விமர்சனத்திற்குறியதாக கருதப்படுகிறது.
துருக்கியில் இப்போது இஸ்லாத்திற்கு எதிரான அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு, ராணுவத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு விட்டது. இன்று பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறியுள்ளது. இஸ்லாமிய வாழ்வியல் விழுமியங்கள் மெல்ல மெல்ல முளை விட்டு மதரஸாக்களும், இஸ்லாமிய பல்கலைக் கழகங்களும் பெருகி வருகின்றன. இது அர்துகானின் சாதுர்யத்தின் விளைவாக ஏற்பட்டதே! அவரின் இந்த அணுகுமுறை உடனடி விளைவுகளை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்தி தராது. ஆனால் நீண்டகால திட்டத்தின்படி இந்த வழிமுறை சிறந்த மாற்றங்களைத் தரும் என்பது துருக்கியில் இன்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. கிலாபத் இல்லாமலாக்கப்பட்டது முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட அடக்குமுறைகளும், சர்வாதிகாரமும் நிறைந்த துருக்கியின் வரலாற்றை ஆழமாக புரிந்தவர்களுக்கு இன்றைய அர்துகானின் சாணக்கியம் புரியும்.
பலஸ்தீனுக்கு ஆதரவாக அனைத்து நிலைகளிலும் கை கொடுத்து பெரும் துணையாக இருக்கிறார். ஜனாதிபதியாக வெற்றி பெற்றவுடன் “காசா மற்றும் சிரியாவில் அநீதி இழைக்கப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் எனக்காக துஆ செய்ததற்கு நன்றி. அல்லாஹ்வுடைய உதவியால் இன்று இரவு முதல் காசாவில் காயப்பட்டுள்ளவர்கள், சிகிச்சைக்காக துருக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று அறிவித்தார். காசாவில் காயம்பட்டவர்கள் துருக்கிக்கு உடனடியாக 12 மணி நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களும் பலஸ்தீனுக்கு அனுப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அர்துகான் பலஸ்தீன் விசயத்தில் இஸ்ரேலை கடுமையாக எதிர்த்து வருகிறார். 2009ல் சுவிட்சர்லாந்து டாவோஸ் மாநாட்டில் உலக நாடுகளையும் இஸ்ரேலின் அத்துமீறலை கண்டிக்க வேண்டும் என குரல் கொடுத்தார். பின் சிமோன் பெரஸை பார்த்து "உமது கரங்களில் இரத்தம் தோய்ந்து கிடக்கிறது. நீங்கள் பொதுமக்களை கொன்று குவிக்கின்றீர்" எனக் கூறி இவ்வகையான கொலையாளிகள் பங்குகொள்ளும் மாநாட்டில் தாம் பங்குகொள்ளத் தயாரில்லை எனக் கூறி மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தார். பலஸ்தீன விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன சுயாட்சிக்கு ஆதரவாக துருக்கி வாக்களித்தது. மற்ற நாடுகளின் ஆதரவுகளைப் பெறவும் துருக்கியின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் களமிறங்கினார். இப்படி பலஸ்தீன் மட்டுமல்ல, சோமாலியா, மியான்மர்,சிரியா எகிப்து ஆகிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் வந்தபோதும் அவர்களுக்காக குரல் கொடுத்தார். அவர்களுக்கு துருக்கி அரசாங்கத்தின் மூலம் பொருளாதார உதவியும் வழங்கப்பட்டது..
இன்று துருக்கி:
போர் கப்பல், டாங்கிகள், ஆளில்லா தானியங்கி விமானம், செயற்கை கோள் என ராணுவத்துறை வளர்ச்சி.
ஐரோப்பாவின் நோயாளி என்றழைக்கப்பட்ட துருக்கி உலகப் பொருளாதாரத்தில் 111 இடத்திலிருந்து 16 வது இடத்துக்கு முன்னேற்றம்.darki
ஏற்றுமதி அதிகரிப்பு, தனி நபர் வருமானம் அதிகரிப்பு
உலக வங்கியிடம் கடனில்லாத நாடு துருக்கி.
2023 இல் 3,00,000 அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்க இலக்கு.
10 ஆண்டுகளில் 2,771,000,000 மரங்கள் நடப்பட்டுள்ளது.
அல்குர்ஆனும், ஹதீஸும் அரசு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 90% மாணவர்கள் அதை தாமாகவே தேர்வு செய்கிறார்கள்.
8 ஆண்டுகளில் புதிய கல்விக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள் எழுப்பப்பட்டுள்ளது.
இப்படி கல்வி, கலாச்சாரம், அறிவியல், பொருளாதாரம் ஆகியவற்றில் சீரான சிறப்பான வளர்ச்சியை துருக்கி பெற்று வருகிறது. அல்லாஹ் அவருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி அவருக்கும், மக்களுக்கும், சமூகத்துக்கும் பயன் தருவானாக ஆமீன்.