இறைச்சி

beef-politics
தமிழின் இலக்கண நூலான இறையனார் களவியல் நூலில் இறைச்சி என்ற சொல்லாடல் மிகுந்து வரும். இறைச்சி என்பதற்கு உட்பொருள் என்று பொருள். தற்போது மனிதன் உயிர் வாழத் தேவையான ஊட்டத்தை விலங்கு, காய்கனி, தானியம் முதலியவற்றில் பெறுகிறான்.
காய்கனி வகையில் கீரைகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதில் சிலவற்றை நாம் சமைத்து உண்ண முடியாது. இதனை நேரடியாக உண்ணும் விலங்குகளான வரையாடு, வெள்ளாடுகளை உண்டு மூலிகைப் பலன்களைப் பெறுகின்றனர். இவ்வாறு மனித உணவில் விதவிதமான விலங்குகள் உணவுகளாகின்றன. பழங்குடிகளான மக்கள் இத்தகைய வினோதப் பழக்கங்களைக் கொண்டுள்ளனர். இருளர்கள் எப்படிப்பட்ட நாகரீக வாழ்க்கையை மேற்கொண்டாலும் அவர்களின் திருமணத்தில் நிச்சயம் ஆமைக்கறி உண்டு.
இது போல் நரிக்குறவர்கள் ஏற்கனவே சமைக்கப்பட்ட நெய் சோற்றை வெயிலில் காய வைத்து அதை பக்குவமாக எடுத்து வைப்பார்கள். திருமண வைபவங்கள் நேரத்தில் இந்த உலர்ந்த சோற்றுடன் காய்கறி, பூனைக்கறி கலந்து பூனை பிரியாணி விருந்து பறிமாறுவார்கள். ஊட்டியில் உள்ள தோடர்கள் இறந்தால் இறந்தவர் ஆவி எருமைக்குள் புகுவதாக அவர்களிடம் நம்பிக்கை உண்டு. இன்றும் வீட்டில் (மந்து) வயதானவர்கள் இறந்தால் ஒரு எருமையை பலியிட்டு அதன் தலையை இறந்தவர் தலைக்குப் பக்கத்தில் வைப்பார்கள். அடக்கம் செய்யும் நேரத்தில் இறந்தவர் விரலை எருமை மூக்கில் விட்டு சிறிது நேரம் வைப்பார்கள். இதனால் பால் வளம் பொழியும். எருமை செல்வங்களோடு இறந்தவர் ஐக்கியமாவதாக ஒரு நம்பிக்கை.
வெட்டப்பட்ட எருமை இறைச்சியை அந்த ஊர் தலித்களுக்குத் தந்து விடுவார்கள். வடநாட்டில் புகழ் பெற்ற ஒரு குடும்பம் இறந்தவர்கள் உடலைச் சுற்றி உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது போல் அந்தப் பிணத்தைக் கடிப்பார்கள். பின்னர் அடக்கம் நடக்கும். இது பிணம் தின்னும் பழக்கமல்ல! இறந்தவர் தங்கள் உயிருடன் ஒன்று கலந்ததாக ஒரு நம்பிக்கை. இவ்வாறு நம் நாட்டில் 630 மொழி பேசும் கூட்டங்கள் பல்வேறு பிரிவுகள் ஆயிரக்கணக்கான உட் பிரிவுகள் உணவு விருந்து, உணவுப் பொருள் பலவற்றில் பேதங்கள் உள்ளன. இவற்றை எதிர்ப்பது முட்டாள் தனம். அது போலவே தனக்குப் பிடித்தமான மாட்டிறைச்சியை உண்டவரைக் கொன்றது பெரும் பாவம்.
வேதங்கள் ஜீவாய ஜீவஸ்ய என்று கூறுகின்றன. இதன் பொருள் ஒரு உயிர் இன்னொன்றை காக்கும் என்பதே. அதன்படி உயிர்க் கொலை செய்து அதை புசிப்பது ஏற்புடையதே ஆனால், எதை கொல்வது என்பது அறிவு சார்ந்தது. முஸ்லிம்களுக்கு பெருமானர் (ஸல்) அவர்கள் தெளிவாக ஒற்றை வரியில் எதைப் புசிக்கலாம் எதைத் தவிர்க்கலாம் என்று அவரை பின் பற்றுபவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். அதன் படி நேற்பார்வை உள்ள எதையும் அவர் தவிர்க்கச் சொல்கிறார். பக்கவாட்டு பார்வையுள்ள எதுவும் ஆகுமானதே.
மீன், ஒட்டகம், ஆடு, மாடு, பறவை, கோழி, வாத்து முதலியவற்றை உணவுக்கு பயன்படுத்த அனுமதியுண்டு. அவசியம் ஏற்பட்டால் நோயாளர்களுக்கு மருத்துவ காரணங்களுக்காக தவிர்க்கக்கூடிய சிலவற்றை ஏற்கலாம் என்று விதி வகுத்துள்ளார். உணவு என்பது பொதுவானது. என்றாலும் அதை முறைப்படி எப்படி பக்குவப்படுத்தி உண்பது என்பதற்கும் விளக்கம் உள்ளது. அதன் படி முஸ்லிம்கள் தங்களின் புரதத் தேவைக்காக ஆடு, மாடு போன்றவற்றை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். இது முழு சுதந்திரம் உள்ள குடிமக்களின் உரிமை. தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக இவைகள் கிடைக்கச் செய்வது அரசின் கடமை. மாறாக ஏற்றுமதி செய்வதற்காக அதை பரவலாக உண்பதைத் தடுத்து மீதமாவதை ஏற்றுமதி வணிகர்களுக்கு சாதகமாக மக்களை மிரட்டும் பாணியில் நேரடித் தாக்குதல், கொல்வது போன்றவை அரசுக்கு அழகல்ல. உண்பவர்களைக் கேலி பேசுவது அடுத்த நாட்டிற்குச் செல்லத் தூண்டுவது குற்றம். அரசு பயங்கரவாதம்.
இதுபோன்ற சகிப்புத் தன்மையற்றவர்கள் பிறர் உண்ணும் போது அதைப் பார்த்து விமர்சிப்பது ஒழுக்கக் கேடானது. நம் நாட்டில் தற்போது பாம்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டை உரிப்பது போல் நமது நாடு பிரிவினைக்குப் பின்னர் சகிப்புத்தன்மை என்ற சட்டையை பா.ஜ.க. அரசு உரித்துப் போட்டுள்ளது. இதனால் சமாதானத்தை விரும்பும் மதநல்லிணக்க மனப்பான்மை கொண்ட பெரும்பான்மை இந்தியர்கள் அரசை அவமானப்படுத்தும் வகையில் எதிர்வினை புரிய தொடங்கியுள்ளனர். இதன் படி முதன் முதலாக அரசின் அராஜகப் போக்கை குறிப்பாக நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் அமைதி காக்கும் அரசுக்கு எதிராக தங்களின் கோபத்தை முன்பு அரசை மதித்து பெற்ற விருதுகளை, மாண்புகளை தூக்கி, திருப்பித் தாக்குவதற்கு பதில் தந்து விட்டனர்.
தற்போது இந்த நிகழ்வில் அரசின் தவறான அணுகு முறையால் படைப்பாளர்கள், சினிமாக்காரர்கள், முன்னாள் இரணுவ வீரர்கள் என பட்டியல் நீள்கிறது. இதில் சிலர் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் குறுக்குசால் ஓட்ட முனைகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த உணர்வுகளை எவர் புரிந்துகொள்ள இயலாதது போல் தங்களை சித்தரித்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த கருத்தை திணிக்க முயல்வது கண்டனத்திற்குரியது. இப்படித்தான் ஆள்வார் பேட்டை அரைவேக்காடுகள் தங்கள் சினிமாவுக்கு மலிவு விளம்பரம் தேட சர்ச்சைக்குரிய விஷயத்தை படம் பிடிப்பது என்ற நிலையிலிருந்து மாறி சர்சைக்குரிய கருத்தை தெரிவித்து அதன் வாயிலாக தன் பெயரை ஊடகங்களில் பெருமளவு புழங்கிட நினைக்கும் சிலரால் ஒட்டு மொத்த உணர்வை கட்டுப்படுத்த இயலாது. அவர்கள் பெற்ற விருது வாங்கப்பட்டதா?வழங்கப்பட்டதா என்பதை காலம் அறிவிக்கும்.
ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டு மக்களின் சகஜமான வாழ்க்கை, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளம், பாதுகாப்பு, அச்சமற்ற வாழ்க்கை, சுதந்திரமாக கருத்துக் கூறுதல், அந்நிய நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, நீதி, செல்லத்தக்க பணப்புழக்கம், உணவுத் தேவை நிறைவாகுதல், நல்ல சுற்றுச் சூழல், வாழ்க்கை வசதி, போக்கு வரத்து வசதி என்பனவற்றை அரசு உருவாக்க வேண்டும். ஏற்கனவே உருவாக்கப்பட்டதை சிதைவில்லாமல் பாதுகாக்க வேண்டும். ஜனநாயக தேர்தல் முறையில் தேர்வானவர்கள் இவற்றை மேம்படுத்த வேண்டும். சீரழிக்கக் கூடாது. ஆனால் பா.ஜ.க. அதன் குரு ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தங்களுக்குள் உள்ள ரகசிய செயல் திட்டங்களை நாட்டை, நாட்டின் இறையான்மையை கேலிக் கூத்தாக்கும் வகையில் செயல்படுவதை எதிர்க்க இயலாமல் அவைகளை கட்டுப்படுத்த துப்பில்லாமல் ஒரு அரசு இருக்குமானால் சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் தார்மீக எதிர்ப்பை அரசு மீது வெளிப்படுத்த தங்களுக்கு அரசு தந்த மதிப்பு மிக்கவற்றை அரசிடமே திருப்பித் தந்து அரசை அதன் தவறை உணர்த்த வேறு வழியின்றி கோபத்தின் வெளிப்பாடாக விருதுகளை பட்டங்களைத் திருப்பியளிப்பது ஒரு வழிமுறை.
அரசு இதை நாசூக்காக தன் தவறை உணர சந்தர்ப்பம் வாய்த்ததாக கருதி ஒவ்வொரு சிக்கலையும் தீர்க்க முன் வரவேண்டும். பின்னர் மனதளவில் பாதிக்கப்பட்ட சிந்தனையாளர்களை சமாதானப்படுத்தி அவர்களை மதிக்க வேண்டும். மாறாக எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் கருத்துக் கூறி மேலும் மேலும் நாட்டின் அமைதியைக் கெடுப்பதை அண்டை நாடுகள் கேலி பேசுவது வளரும். உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர் தங்களது மாநிலப் பிரச்சனையை ஐ.நா. அவைக்கு கொண்டு சென்று தீர்வு கண்டார். இதே நிலை நாடெங்கும் ஏற்பட்டு ஐ.நா. அவை பா.ஜ.க. அரசை கண்டித்து வழி நடத்தவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. செல்வது உறுதி. மொத்த த்தில் இறையாண்மையைப் பாதுகாக்க ஐ.நா. அவை தன்னுடைய கூட்டுப் படைகளை இந்தியாவுக்கு அனுப்பி அனைத்தையும் சரி செய்யும் அளவுக்கு நாட்டை பா.ஜ.க. அரசு நாசமாக்கியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் ஆகுமோ?