சென்னையின் தண்ணீர் தேவையும், பெருமழையின் செயற்கைச் சீற்றமும்

chennai

சென்னையின் தண்ணீர் பிரச்சனை என்பது 400 ஆண்டுகள் வரலாற்றை உடையது. ஆங்கிலேயர்கள் சென்னையில் கோட்டை அமைப்பதற்காக ஒப்பந்தம் போட்ட நாளிலிருந்தே இருந்து வருகிறது. வெள்ளையர்களின் கோட்டை அமைந்துள்ள ஜார்ஜ் டவுனுக்கு அந்த காலத்தில் மாட்டு வண்டிகளில் கட்டிய பீப்பாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இது “பெத்தநாயக்கன் பேட்டையில்” (இன்றைய வள்ளலார் நகர்) உள்ள “ஏழு கிணறு” விலிருந்து கொண்டு செல்லப்பட்டது. இந்த இடத்தை இன்றும் “ஏழு கிணறு” (7 Wells) என்றே அழைக்கின்றனர். சென்னை நகரம் வேகமாக வளர்வதைக் கருத்தில் கொண்டு குழாய்கள் மூலம் 1783 லிருந்து 1787 வரை விநியோகம் செய்ய முயற்சிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சியை ஏற்றுக் கொள்ளாத மக்கள் கிணற்றையும், குளத்தையும் நம்பியே தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தனர். சென்னை ஆட்சியாளராக இருந்த “எல்லீஸ்” 1818 இல் நகரில் பல்வேறு இடங்களில் கிணறுகள் தோண்டி தண்ணீர் தேவையை சமாளித்தார். பின்னர் 1872 இல் “கொசஸ்தலை” தாமரைப்பாக்கம் அருகே தடுப்பணையைக் கட்டி செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இங்கு ஏற்படுத்தப்பட்ட நீராதாரமானது செங்குன்றம் ஏரியிலிருந்து கீழ்ப்பாக்கத்துக்கு மூடப்படாத கால்வாய் மூலம் கொண்டு வரப்பட்டு குழாய்கள் மூலம் மூர் மார்க்கெட் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. இந்தக் கால்வாயில் கழிவு நீர் சூழ்ந்ததால் திறந்த கால்வாய் மூடிய கால்வாயாக மாற்றப்பட்டது.

சென்னையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது 1914 டிசம்பர் 17 ஆம் தேதி. மாநகராட்சி பொறியளராக இருந்த J.W.மேட்லி என்பவர் “பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோக திட்டம்” என்ற அறிக்கை ஒன்றை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தார். அந்த திட்டம் செயலாக்கம் பெற்று கீழ்ப்பாக்கத்தில் 14வித மணல் வடிகட்டிகள் பொறுத்தப்பட்டு அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு “மெட்ரோ வாட்டராக” விநியோகம் செய்யப்பட்டது. இது பின்னர் நிர்வாக செயலின்மையால் நிறுத்தப்பட்டது. பின்னர் 1921 முதல் குளோரின் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இப்படியான கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்த சென்னையின் தண்ணீர் விநியோகம் மக்கள் தொகையின் பெருக்கத்திற்கு ஏற்ப தண்ணீர் தேவைகள் அதிகமாயின. ஆதலால் 1944 இல் சத்திய மூர்த்தி சென்னை மேயராக இருந்த போது ரூ.60 இலட்சத்தில் “பூண்டி” ஏரியும், பின்னர் வந்த ஆட்சியாளர்களால் 1983 இல் கிருஷ்ணா நதிநீர் திட்டமும், 2005 இல் வீராணம் திட்டமும் ஏற்படுத்தப்பட்டு சென்னையின் தண்ணீர் தேவையை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்யப்பட்டது.
குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கி வந்த சென்னை மாநகராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்கிற நோக்கில் 1950 லிருந்து லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகிக்கத் தொடங்கியது.
இப்போது தினமும் சுமார் 3500 லாரிகள் சென்னையின் பல பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீரை சுமந்து சென்று விநியோகிக்கிறது. இப்படியாக சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “மெட்ரோ வாட்டர்” தினமும் சுமார் 580 மில்லியன் லிட்டர் நீர் குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் அபரிமிதமாக வளர்ச்சியடையும் மாநகர மக்களின் தண்ணீர் தேவையை பற்றாக்குறையுடனே நிறைவேற்றி வருகிறது.
சென்னை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும், அழித்தொழிப்பும் :-

Ambattur lake1. சென்னையின் பழமையான நீர்நிலைகளில் ஒன்று “மக்கள் பூங்கா”. இந்த பூங்கா 11 குளங்கள், மரங்கள், அரிய வகை பூச்செடிகள் ஆகியவற்றால் நிறைந்து காணப்பட்டன. இத்தகைய சிறப்பம்சத்தின் காரணமாகவே இந்த இடம் “பார்க் டவுன்” என்றழைக்கப்பட்டது. பின்னர் இது சிறியதும் பெரியதுமான ஆக்ரமிப்புக்கு ஆட்பட்டு 1855 இல் மெட்ராஸ் ஜூ (Madras Zoo) என்கின்ற விலங்கு காட்சி சாலையும், 1887 இல் விக்டோரியா பப்ளிக் ஹாலும், 1898 இல் மூர்மார்க்கெட்டும், 1902 இல் தென்னிந்திய தடகள சங்கமும், 1913 இல் ரிப்பன் மாளிகையும், பின்னர் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் போன்றவைகளால் ஆக்ரமிக்கப்பட்டு இன்று முற்றிலுமாக நீர்நிலைகள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.
2. “குதிரை லாட ஏரி” என்று அழைக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இது நுங்கம்பாக்கம் தொடங்கி தேனாம்பேட்டை வழியாக சைதாப்பேட்டை வரை குதிரை லாட வடிவில் காணப்படும். இதனாலேயே இந்த ஏரிக்கு இந்தப் பெயர் வந்தது. 1909 இல் அரசு வெளியிட்ட கணக்கெடுப்பின் மூலம் இந்த ஏரி எந்த ஆக்ரமிப்புக்கும் உள்ளாகாமல் இருந்தது. பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏரியை ஆக்ரமித்து பிரபலக் கல்லூரி மற்றும் வள்ளுவர் கோட்டமும், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை ஏரியை ஆக்ரமித்து மேற்கு மாம்பலம், பனகல் பூங்கா, பாண்டி பஜார் போன்ற ஊர்குடிகளும் வரப்பெற்றன. இப்படியாக ஆக்ரமிக்கப்பட்டது இந்த ஏரி. இன்று அதன் சுவடுகள் கூட காணக் கிடைக்கவில்லை.
3. பள்ளிக்கரனை சதுப்பு நிலம் 5000 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகவும் இது மத்திய கைலாஷ் வரை பரவிக் கிடந்ததாகவும் 1960 இல் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அரிதினும் அரிதான நன்னீர் சதுப்பு நிலம் ஆகும். நிலத்தடி நீரைச் சேமிப்பதில் சதுப்பு நிலத்தின் பங்கு முதன்மையானது. மேலும் வலசை செல்லும் பறவைகள் இனப் பெருக்கம் செய்யும் இடங்களாகவும் இவை திகழ்கின்றன. இதன் நிலப்பரப்பு 10 இல் ஒரு பங்காக சுருங்கி வெறும் 500 ஹெக்டேருக்குக் குறைவாகவே இன்று காணப்படுகிறது. இதில் 80 ஹெக்டேருக்கு மாநகராட்சி குப்பைகள் கொட்டி ஆக்கிரமித்தும், சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள் என முற்றிலுமாக அதன் இயற்கைத் தன்மை சீரழிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் சீற்றமும், செயற்கையின் பேரழிவும் :-
AmbatturEri Lakeசென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை வரலாறு காணாதது என்றாலும் கூட அதனூடே நடந்த பேரழிவும் கூட வரலாறுதான். ஏனெனில் இந்த உலகில் நடக்கும் எத்தகைய இயற்கைச் சீற்றத்தையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை அதிலிருந்து ஓரளவாகிலும் தற்காத்துக் கொள்வதற்கு இந்த உலகச் சமூகத்தால் இயலும். சென்னையைப் பொறுத்தவரை மழையால் ஏற்படும் எத்தகையை பெருவெள்ளத்தையும் தாங்கிக் கொள்ளும் சக்தி படைத்த நீர்நிலைகள் சென்னைக்கு உள்ளேயும், புற மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்திலும் உள்ளன.
இப்படி இருக்கையில் சென்னையின் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட “போரூர் ஏரி” இன்று வெறும் 330 ஏக்கராக சுருங்கி நிற்கிறது. கால்வாய்களின் கழுத்து நெறிக்கப்பட்டு தனியார் கல்லூரிக்கும், பெரு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 3 ஆயிரத்து 700 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் முக்கியமானதாகவும் சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவது செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளாகும். சென்னையில் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 698.40 மி.மீ. ஆனால் சமீபத்தில் பெய்த மழை மூன்று மடங்கு அதிகரித்து 1,605.2 மி.மீ பதிவாகி உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கான முன்னெச்சரிக்கையை ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தும் அதற்கான எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் துரிதகதியில் ஆட்சியாளர்களால் முடுக்கி விடப்படவில்லை. இத்தகைய பெருமழையை மிக அபரிமிதமான தண்ணீர் தேவை கொண்ட சென்னை மாநகரில் சேமிக்க இடமில்லாமல் நீர்நிலைகள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு வேறுவழி அறியாமல் பெரும்பான்மையான தண்ணீர் கடலிலே கலந்தது. அதுமட்டுமில்லாமல் செம்பரம்பாக்கதிலிரிந்து டிசம்பர் 1 மற்றும் 2 ம் தேதி திறந்துவிடப்பட்ட 29000 கன அடி நீர், அது செல்லும் வழித் தடக்கால்வாய்களில் ஏற்படுத்திய ஆக்கிரமிப்பால் முற்றிலுமாக குடியிருப்பு பகுதியில் புகுந்து துவம்சம் செய்தது.
இயற்கையின் சீற்றம் ஒரு புறம் ஆக்கிரமிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் மறுபுறமாக ஒரு பேரழிவு சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் உதவி செய்த சமூக ஆர்வலர்களின் பணி மெச்சத்தகுந்தது.
இன்றைய நிலையில் ஆட்சியாளர்கள் உடனடியாக செய்ய வேண்டியது அடையாறு மற்றும் கூவம் கரையோரம் உள்ள ஏழைகளையும், விளிம்பு நிலை மக்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பான மாற்று இடம் தேடித் தருவதாகும்.
அதேவேளையில் இவர்களையும், இயற்கை தந்த மழையையும் மட்டுமே இத்தகைய பேரிடருக்கு காரணம் போல் சித்தரிப்பது என்பது இதற்கான தீர்வல்ல! இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் விசயத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சமில்லாமல் குடிசை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு என்ற பேதமில்லாமல் அணுக வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
ஆக இது உண்மையில் இயற்கையின் சீற்றம்தான், ஆனால் அதேநேரத்தில் ஆட்சியாளர்கள் அதிகாரம் படைத்தவர்கள், பெரு முதலாளிகள், ஒரு சில கல்வி வியாபாரிகள் சேர்ந்து நடத்திய ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீதான செயற்கையான பேரழிவு…