அரசியல்வாதிகளின் தேர்தல் வெற்றி!

ulal
தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !
மும்பையில் 2016-17-ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை வெளியிட்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தேர்தல் நேரத்தில் மக்களிடம் அதிகரிக்கும் பணப்புழக்கம் குறித்து விவரித்திருக்கிறார். தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும் என்கிறார். அவை என்ன, ஏன் என்று அவர் விவரிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரப்படி பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
தேர்தல் நேரத்தில் கட்சிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பது துவங்கி பல்வேறு முறைகளில் செலவழிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம்தான். அதே நேரம் இது ஏதோ ஐந்து பத்து ஆயிரம், லட்சம் கூட அல்ல. ரிசர்வ் வங்கி கணிப்பின் படி 60,000 கோடி ரூபாய். (இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்தது? என்பதை மக்களிடம் மறைக்க முடிகிறதென்றால் கருப்பு பணத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும் ? தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் சுமார் 28.95 கோடி ரூபாய். (, 28,000 லிட்டர் மது) அதிலும் வணிகர்கள், சிறு முதலாளிகள் பணமே அதிகம். (570 கோடி கணக்கில் வராது?) மீதி...?)
இங்கே பகிரங்கமாக 60,000 கோடி ரூபாய் பணம் சுற்றுகிறதே இதையே பிடிக்க முடியாத ரிசர்வ் வங்கி ரகசிய பனாமா கணக்குகளை விசாரிப்பதோ, சுவிச்சர்லாந்து கருப்புப் பணத்தை மீட்பதோ நடக்க கூடியதா என்ன? இதெல்லாம் இந்தியாவில் எப்படி சாத்தியமாகிறது ...?!!

நம் நாடு சோஷலிசத்திற்குப் பதிலாக பணக்காரர்களும், அதிகாரமுடையவர்களும் அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் கொடுத்து தங்களுக்கு நிலமும் வளமும் வாங்கிச் சேர்க்கும் முதலாளித்துவத்தை பதிலீடு செய்து விட்டது என்பதே அது.
வெளிப்படைத்தன்மையையும், போட்டியையும் கொல்லும் முதலாளித்துவமானது சுதந்திர சந்தைக்கும், வாய்ப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஆபத்தானது. மேலும் பொது நலனுக்கு பதிலாக குறிப்பான நலன்களை (Special needs) பதிலீடு செய்வது ஜனநாயக வெளிப்பாடுகளுக்கும் (Democratic expressions) பாதகமாக அமையும்.
முதலாளித்துவம் குறித்த இத்தகைய கருத்துக்களில் ஏதாவது உண்மை இருக்கும் பட்சத்தில் எழும் இயல்பான கேள்வி இதுதான். ஏன் மக்கள் இதை சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலாளித்துவம் நிலைத்திருப்பதை சாத்தியமாக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறார்கள்?
பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருதுகோள் என்னவென்றால் நம் நாடு “ஒரு சில நல்ல அரசியல்வாதிகளுக்காக ஏங்குகிறது.” ஆனால் நிகழ்காலத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இந்தக் கருத்து சற்று நேர்மையற்றதுதான். ஆனாலும் ஒரு வாதத்திற்கு அதை உண்மை என்றே எடுத்துக் கொண்டாலும், நாம் அடிக்கடி சில குழுக்கள் எழுந்து வருவதையும், அவர்கள் பெரும்பாலும் மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் அரசியலைத் தூய்மைப்படுத்த முயற்சிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த நல்ல மக்கள் தேர்தலில் நிற்கும்போது அவர்கள் பெரும்பாலும் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். நம் வாக்காளர்கள் உண்மையிலேயே தூய்மையான அரசு ஒன்றை விரும்புவதில்லையா?
இதற்குக் காரணம் குறித்து தன்னுடைய நீண்ட ஒரு கட்டுரையில் முன்னாள் நீதிபதி சந்த்ரு எழுதுகிறார் : ஊழல், லஞ்சம்போன்ற குற்றங்களினால் பாதிக்கப்படுவதைச் சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எடுத்துகொண்டுவிட்டனர். மக்களுக்கு உதவிசெய்ய ஏற்படுத்தப்பட்ட அரசு அலுவலகங்கள் எவற்றிலும் கையூட்டு கொடுக்காமல் காரியங்கள் ஏதும் நடைபெறாது என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்துகொண்டுள்ளனர். கையூட்டு வாங்குவது தண்டிக்கப்படக்கூடிய குற்றமென்று அரசு அலுவலக சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தாலும், அவ்வாசகங்கள் பெரும்பான்மையான அரசு அலுவலர்களுக்கு மறந்துபோனதா (அ) மரத்துப்போனதா என்று தெரியவில்லை.
கொலை, குத்து, வெட்டுபோன்ற உடல்ரீதியாக இழைக்கப்படும் குற்றங்களுக்குக் கொடிய தண்டனை வழங்கவேண்டுமென்று நினைக்கும் மக்கள் பொருளாதார குற்றங்களும் அதே போன்றவைதான், எனவே அக்குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று நினைப்பதில்லை.
ஊழல் குற்றங்களில் கைதுசெய்யப்பட்டு காவல்வாகனத்தில் ஏறும்போதும் நீதிமன்றங்களில் வாய்தாக்கள்பெற்று வெளியேறும்போதும் புன்னகையுடன் இருவிரல்கள் மூலம் ‘v’ என்ற எழுத்து தென்படும்படியாக வெற்றிச் சின்னத்தைக்காட்டி உலாவரும் ஊழல் அரசியல்வாதிகளின் படங்களை அப்பொழுதிலிருந்துதான் ஊடகங்கள் மக்களுக்குக் காட்ட முற்பட்டன.
இன்றைய எதிர்க்கட்சி நாளைய ஆளுங்கட்சி என்றவகையில் பங்கு வைத்துக் கொண்டு அனைத்து அரசியல்கட்சிகளும் தங்குதடையின்றி ஊழல் செயல்களில் ஈடுபடுவதை
மத்தியில் ‘லோக்பால்’, மாநிலங்களில் ‘லோக் அயுக்தா’ போன்ற அதிகார வரையறைகளை உருவாக்குவதன்மூலம் ஊழல் அரசியல்வாதிகளைத் தண்டிக்கமுடியும் என்ற நினைப்பும் ஏற்பட்டது. ஆனால் ஊழல்பற்றிய அடிப்படையான கருத்தோட்டம் இல்லாததாலும் அமைப்புரீதியான மாற்றமில்லாததாலும் ஊழல் குற்றங்களை அடியோடு அகற்றிவிட முடியாதென்ற சிந்தனைப்போக்கு அவர்களிடம் விதைக்கப்படவில்லை.
பொதுநிர்வாகத்தில் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடுவது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, ஊழல் என்பது, கிழக்கிந்திய கம்பெனியினர் எப்போது நீதிபரிபாலனம் செய்ய ஆரம்பித்தனரோ அப்போதே ஆரம்பித்துவிட்டது.
இந்தியாவில் பிரிட்டிஷார் வருவதற்குமுன் தொகுக்கப்பட்ட முறையான குற்றவியல் சட்டங்கள் நாடுமுழுவதும் நடைமுறையில் இருக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் அமுலிலிருந்தன. அதையே தொடர்ந்து அமுல் படுத்தினால் மாபெரும் நிலப்பிரதேசத்தை சிறிய ராணுவ பலத்துடன் மக்கள் ஆதரவில்லாமல் ஆளமுடியாது என்பதாலும் அவர்கள் புதிய குற்றவியல் சட்டமொன்றை உருவாக்க முற்பட்டனர். அத்தகையதொரு ஏற்பாட்டில் மெகாலே பிரபு எழுதியதுதான் 1835 இல் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம். இச்சட்டத்தின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவது குற்றமாக்கப்பட்டது. அப்பிரிவுகளின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவதை குற்றவியல் நீதிமன்றங்களில் நிரூபிப்பது மிகக்கடினமாக இருந்ததனால் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதை இன்று வரை தடுக்கமுடியவில்லை.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடங்கிவைத்த ஊழலில் இப்போது மக்களும் பங்குதாரர்களாக ஆகியிருக்கிறார்கள்.
அதேநேரத்தில் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரிமாற்றம் நடத்திவரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இப்படிப்பட்ட தடுமாற்றங்களில் தங்களை ஆட்படுத்திக் கொள்ளவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது. அக்கருத்தோட்டங்களை ஒருமுகப்படுத்துவதுடன் இப்படிப்பட்ட இளைஞர் சக்திகளை அமைப்புரீதியாகத் திரட்டுவதன் மூலமே புதியமாற்றங்களை உருவாக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.