செல்போன் ஆசை…

Cell Phones  Smartphones
காசீம் காக்கா மெதுவாக எட்டிப்பார்த்தார். ஹால் அமைதியாக இருந்தது.
பேரப்பிள்ளைகள் மதரஸா சென்றிருந்தார்கள். ஒரு பக்கம் லொட லொட வென்று ஆடிக்கொண்டிருந்த மூக்குக்கண்ணாடியை அணிந்து கொண்டார்.
எண்பது எட்டிப்பார்க்கும் வயது. தள்ளாமையினால் சற்றே கூன் விழுந்த முதுகு.
கண்களை இடுக்கிய படி ‘அதை’ த் தேடினார்.
மெத்தென்று ஆளை உள்வாங்கும் சோபாவின் மேலே இருந்தது அந்த செல்போன்.
காசீம் காக்காவின் கடைசி மகன் முனீருக்கு சொந்தமான கேலக்ஸி s2 ஸ்மார்ட்போன் அது. வெள்ளை நிறத்தில் பளபளவென்று இருந்த அந்த செல்பேசியை நெருங்கினார் காசீம் காக்கா.
அந்த நேரம் பார்த்து சிணுங்கத்தொடங்கியது அந்த அலைபேசி, சத்தம் கேட்டு வெளியிலிருந்து வாலறுந்த பட்டமாய் ஓடி வந்தான் முனீர். காசீம் காக்கா முகம் வெளிறிப்போனார்.

காசீம் காக்காவுக்கு நீண்ட நாளாய் ஒரு ஆசை. ஒரு செல்போன் பயன்படுத்திப் பார்க்க வேண்டுமென பேராவல் கொண்டிருந்தார். பார்ப்பவர்களிடமெல்லாம் இருக்கும் செல்போன் அவருக்குள்ளும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஒரு “ஈர்ப்பை” ஏற்படுத்தியது.

வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் கடைசியாகக் குடும்பத்துடன் வந்திருந்த போது சாடை மாடையாக தனது ஆசையை வெளிப்படுத்தினார் காசீம் காக்கா. அவரது மகன் மஜீதுக்கு அது புரியவேயில்லை. ‘உங்களுக்கெதுக்கு வாப்பா போன், நீங்கள் ஓதலும் தொழுகையுமா இருங்க’ என்று அவருக்கு தொழுகை முஸல்லாவொன்றை கொடுத்து விட்டுப் போய்விட்டான்.
பேரன்கள் பேத்திகளிடமும் செல்போன்கள் உண்டு. அதை அவர்கள் காதில் வைத்துக் கொண்டு ஸ்டைலாகப் பேசுவதை, பேசிக் கொண்டே ஹாலிலிருந்து சமையலறை வரை உலாத்தித் திரிவதை அவர் பார்த்துக் கொண்டு தானிருந்தார்.

ஆசையை வெளிப்படையாகச் சொல்வதில் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்த வயதில் இப்படியொரு ஆசையா என்று எல்லோருக்கும் “கேலிப்பொருள்” ஆவதில் காசீம் காக்காவுக்கு உடன்பாடில்லை.

செல்போன் ஒன்று தனக்கென்றிருக்க வேண்டும். பக்கத்துத் தெரு சல்மானின் கடையில் பேப்பர் வந்து விட்டதா என்று கால் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இரவு தூங்கும் நேரம் தலையணைக்கடியில் பத்திரமாய் போனை வைத்துக் கொள்ள வேண்டும், அப்படித்தான் பேரன்கள் தூங்குகிறார்கள். இரவில் அடிக்கடி எழுந்து போனைப் பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொள்கிறார்கள்.

பேரன்களின் போன்களைத் தொட்டுப்பார்க்க அவர்களின் தாய் தந்தையருக்கே அனுமதியில்லை. அப்படியிருக்கும் போது காசீம் காக்காவை அனுமதிப்பார்களா?
அன்று வெள்ளிக்கிழமை. காசீம் காக்கா குளித்து அத்தர் பூசி பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு விட்டார். ஜும்மா முடிந்தது. வீடுகளிருந்து வரும் நெய்ச்சோறு, கறிகளின் மணம் காற்றில் மிதந்து வந்தது. மக்களால் நிரம்பியிருந்த பள்ளிவாசலின் நீண்ட பரப்பு ஒரு சில நிமிடங்களில் வெறிச்சோடிப் போனது. ஓரிரு வயதானவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

சில இளைஞர்கள் சிறு குழுக்களாய் சிதறி வம்பளக்க , காசீம் காக்கா மெல்ல எழுந்தார். கால் கொஞ்சம் வலிக்க மெதுவாக நீவி விட்டுக் கொண்டார். சுவற்றில் ஒரு கையும் முட்டுக்காலில் ஒரு கையையும் ஊன்றிப் பிடித்து எழுந்தார்.
முன்னால் செல்ல காலில் ஏதோ இடறியது. குனிந்து பார்த்தால், பளிங்குத்தரையில் ஒரு செல் போன். காசீம் காக்கா சுற்றிவர பார்வையைப் பரவவிட்டார், ‘யாரோட போனாயிருக்கும்’ அவருக்கு வியர்த்துக் கொட்டியது.

இது வரை இப்படி எதற்கும் அவர் ஆசைப்பட்டது கிடையாது. கண்ணாடியைச் சரி செய்து கொண்டே ஆசையுடன் அந்த செல்பேசியை எடுத்தார்.
அந்த மாடல் செல்பேசி அரதப் பழசானது என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாமமில்லை. அவரைப் பொறுத்தவரை அது ஒரு செல்போன். அவசரமாக சட்டை பாக்கட்டுக்குள் போனைத் திணித்துக் கொண்டு வேகமாக நகரத்துவங்க அந்த விபரீதம் நடந்தது.

நோக்கியா ரிங்க் டோன் ஒலிக்கத் தொடங்கியது. விட்டு விட்டு ரிங்க் டோன் அடித்துக் கொண்டிருருக்க முகம் வெளிறிப்போனார் காசீம் காக்கா… என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தோடு இருந்த அவர் சுதாரித்துக் கொள்வதற்குள் அவரைச் சுற்றிக் கூட்டம் கூடி விட்டது.

‘அல்லாவே, ஏன் காசீம் அப்பா… இப்டிச் செஞ்சீங்க’ அவருக்கு வியர்த்து வியர்த்துக் கொட்டியது, நாக்குலர்ந்து தளதளத்தது. ‘நா… நான்…………’ விரல்களைப் பிசைந்து விட்டுக் கொண்டார். அதற்குள் போனுக்கு உரியவன் அதை காக்காவின் பாக்கட்டுக்குள் கையை விட்டு எடுத்து விட்டான்.

‘ஐய்யோ என்னதிது வாப்பா…..’ முனீர் தலையில் அடித்துக்கொண்டான்.
சாரி மச்சான், வாப்பாக்குக் கொஞ்சம் ஒரு …………’ போனுக்கு உரியவனின் காதுக் கருகே சென்று சொன்னான் முனீர். அவன் என்ன சொன்னான் என்பது காசீம் காக்காவுக்குக் கேட்கவில்லை; அந்த மெல்லிய சப்தத்தை கேட்கும் திராணியும் அவருக்கில்லை.

விடுவிடுவென அவரையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தவன் கத்தினான். ‘மானமே பேய்ட்டு, இந்த வாப்பாக்கு ஏன்தான் இப்படி ஒரு குணமோ தெரியல’ காசீம் காக்கா தலை குனிந்திருந்தார், ஒரு திரண்ட கண்ணீர்த்துளி அவரையும் மீறி நிலத்தில் விழுந்தது.
சமீலா யூசுப் அலி