அன்னை கதீஜா கல்லூரி

வரலாற்று சிறப்புமிக்க பாக்தாத் பைத்துல் ஹிக்மா ஆய்வு நிறுவனத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி
தமிழ்நாடு முஸ்லிம் எஜுகேஷனல் டிரஸ்டின் கீழ் இயங்கும் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பைத்துல் ஹிக்மாவின் 758 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாற்றுப் புகழ்மிக்க அப்பாஸிய கிலாஃபத் தலைநகர் பாக்தாதில்

கி.பி.813 இல் கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு அவருடைய மகன் அல் மாமூன் அவர்களால் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் மொழியெர்ப்பு நிறுவனம் தான் பைத்துல் ஹிக்மா. அடுத்து வந்த 400 ஆண்டுகள் உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களையும் விஞ்ஞானிகளையும் அறிவு ஜீவிகளையும் உலகிற்கு அளித்த உயர்வான நிறுவனம் மங்கோலியர் படையெடுப்பால் பாக்தாத் அழிக்கப்பட்டபோது கி.பி.1258 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் “பைத்துல் ஹிக்மா” கல்வி நிறுவனமும் அழிக்கப்பட்டது.
அந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாகவும் மாணவிகளிடம் இஸ்லாமிய வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தும் விதமாகவும் இன்றைய முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாமிய அறிவாளுமைகளை உருவாக்க வேண்டிய தேவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்னை கதீஜா கல்லூரி தாளாளர் திருமதி சயிதா பானு அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளி மாணவிகள் “அறிவுத் தேடல்” என்ற பொருளில் ஒரு நாடகத்தை நடத்தினர்.
இன்ஷா அல்லாஹ்... பத்தாண்டுகளுக்கு பிறகு 2027 ஆம் ஆண்டில் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றுச் செல்லும் மாணவிகள் என்ன அறிவுத்திறனோடு இருப்பார்கள் என்ற வருங்கால எதிர்பார்ப்பு வடிவத்தை முன் வைத்து நாடகம் ஒன்றை அன்னை கதீஜா கல்லூரியின் மாணவிகள் நடத்தினார்கள்.
மூன்றாம் ஆண்டு உளவியல் பிரிவு மாணவி செல்வி ராஷீதா பேகம் பைதுல் ஹிக்மா உருவாக்க வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார். பைத்துல் ஹிக்மா குறித்த செய்திகளோடு இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை மாணவிகளின் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியது இந்நிகழ்வு.