முஸ்லிம்கள் மேலாண்மையில் இந்திய அரசியல்...

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலால் இந்திய அரசியலின் போக்கு மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை ஒரு கட்சியைத் தோற்கடித்து மற்றொரு கட்சி ஆட்சியைப் பிடித்ததாகக் கருதக்கூடாது.

பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழந்து சமாஜ்வாதி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது வெறும் பதவிகள் பெறுவதற்கான இடம் பெயர்வு மட்டுமல்ல, மிகப் பெரிய, எதிர்கால, இந்திய அரசியலின் போக்கையே திசை திருப்பும் வண்ணம் அமைந்த தேர்தல் எனலாம். இந்த அரசியல் போக்கின் திசைமாற்றும் செயல்பாடுகளை உ.பி.வாழ் முஸ்லிம் சமூகம் சாதித்துள்ளது. இந்தச் சாதனையின் ஊடாக உ.பி. முஸ்லிம் சமூகம் இந்திய அரசியலின் மேலாண்மையை தன் கட்டுக்கோப்பான சமூக உணர்வுகளால் தேர்தலில் நிரூபித்துள்ளது.

இந்த நிரூபணங்கள் மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவருக்கு புரிவது கடினம். ஆனால் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் அரசியலை மேலாண்மை செய்ய இயலும் என்பதை மட்டும் தேசியக் கட்சிகள் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்துள்ளன.

வழக்கமாக உ.பி.யை பொறுத்தமட்டில் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் வலிமை ஒடுக்கப்பட்ட சமூகத்திடம்தான் இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷிராம் அவர்கள் தலைமையில் மாயாவதி கட்டமைத்த பின்னர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆதரவுகள் ஒருங்கே திரட்டப்பட்டன. அந்தச் சமயத்தில் அந்தக் கட்சிக்கு மற்றொரு பேராதரவாக முஸ்லிம்கள் விளங்கினர். இந்த நேரத்தில் முற்பட்ட சமூகம் உ.பி. தேர்தலின் போக்கை நிர்ணயிப்பவர்களாக இருந்தனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் சிதறுண்டு சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சி எனப் பிரிந்திருந்தனர். இந்தச் சூழலில்தான் கல்யாண்சிங் என்ற பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டவர் தலைமையில் முற்பட்ட சமூகத்தின் ஆதரவோடு ஆட்சி அமைந்தது.வ அத்வானியின் தேர்பவனியும் இதற்கு ஓர் காரணமானதுடன் அன்றைய முஸ்லிம்களும் பலவாறாக பல கட்சியிலும் சிதறி இருந்தனர்.

இந்தியக் குடியரசுத் தலைவராக சங்கர் தயாள் சர்மா, இந்தியப் பிரதமராக நரசிம்மராவ், உ.பி முதல்வராக பார்ப்பனர்கள் ஆதரவு பெற்ற கல்யாண்சிங் என விளங்கிய அரசியல் லாபி அயோத்தியில் அதுவரை அமைதியாக இருந்த நிலையை மாற்றிட, பாபர் மஸ்ஜிதை தரை மட்டமாக்கி இனி இதுதான் இந்திய அரசியல் எனக் கட்டியம் கூறியது. பின்னர் கலவரம் நடந்தது. ஒரு புறம் இரத்தமும் கண்ணீரும் கலந்த சகதி; இன்னொரு புறம் சனாதனிகளின் வெறிக்கூச்சல், அதன் பின்னே மத்திய ஆட்சி அதிகாரம் கைப்பற்றல் என நிகழ்ந்தது.

காயம் பட்ட முஸ்லிம்கள் செய்வதறியாது திகைத்த நேரத்தில்தான் முலாயம் சிங்கின் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும், கன்ஷிராமின் கட்சியும் முஸ்லிம்களை அரவணைக்க முன்வந்தன. முன்பு போலவே இந்த மூன்று அமைப்பிலும் முஸ்லிம்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த சந்தர்பத்தில் தான் பி.எஸ்.பி. கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் தனி ஒரு பிரதிநிதியாக இருந்த நிலையில் லேசாக ஒரு மாற்றம் செய்யும் வகையில் ஒரு சாணக்கியத்தனத்தோடு முற்பட்ட பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு மாயாவதி புதிய அரசியல் களம் கண்டார். மூன்றில் ஒருபங்கு முஸ்லிம்கள் மாயாவதியை நம்பினர். முற்பட்ட சமூகத்தின் பலருக்கு கட்சியிலும், தேர்தலிலும் கணிசமான இடங்கள் தரப்பட்டன. கூடுதல் பலமாக ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகமும் பி.எஸ்.பி. பின்னே அணி வகுத்தது. எவரும் எதிர்பாராத வெற்றியை மாயாவதி பெற்றார்.

மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மன்மோகன்சிங் அரசு இந்திய முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுக்காக ஒரு தேசிய ஆணையத்தை நீதிபதி இராஜீந்தர் சச்சார் தலைமையில் அமைத்தது. இந்த ஆணையம் தன் ஒவ்வொரு தகவல் பெறவும் பட்ட சிரமங்கள் குறித்த செய்திகளை உருது நாளேடுகள் பரவலாக வெளியிட்டு வந்தன. இதன் சாயல் துளி கூட இதர மொழிகளில் பத்திரிக்கை நடத்திய முஸ்லிம்கள் கண்ணில் படவில்லை (அவைகளுக்கு அந்தளவு சமூக அக்கறை!) ஒருவழியாக நீதிபதி இராஜீந்தர் சச்சாரின் ஆணைய அறிக்கை வெளியான போதுதான், இந்திய முஸ்லிம்கள் தங்களுக்குள்ளாகவே உணர்வு பெறத் தொடங்கினர். இனி சிதறலாக இருப்பது பலனில்லை. அரசியல் உரிமை வென்றெடுக்க ஒன்றுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்பதைத் தெளிவாக முஸ்லிம்களில் படித்த வர்க்கம் உணர்ந்தது.

மாயாவதியின் ஒடுக்கப்பட்ட சமூகம் + பார்ப்பன முற்பட்ட இனம் கலந்த கூட்டு தங்களுக்கு உதவுவது கடினம்; அதைப் போலவே நீதிபதி ராஜிந்தர் சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டிய பின்னரும், முஸ்லிம்களுக்காக உரிமைகள், சலுகைகள் வழங்க அமர்க்களமாக அமைச்சராக்கப்பட்ட அந்துலே கூட அமைதியாக்கப்பட்டார். இந்தச் சூழலை நன்கு உள்வாங்கிய உ.பி. முஸ்லிம்கள், காங்கிரசை நம்புவதைக் கூட தவிர்த்தனர். இதில் மிஞ்சி இருப்பது நம்பகத்தன்மையுள்ளவர், பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டின் போராளி, சோசலிச சிந்தனையுள்ளவர். அதையெல்லாம் விட அவர் சமயச் சார்பின்மையில் சமரசம் செய்து கொள்ளாதவர் போன்ற காரணங்களால் உ.பி. முஸ்லிம்கள் முலாயம்சிங் பின்னே திரண்டனர்.

ஏற்கனவே முலாயம்சிங் ஆண்ட போதும் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை. பா.ஜ.க. வின் கல்யாண்சிங் ஆட்சியின் கசப்பை அனுபவித்த முஸ்லிம்கள் மாயாவதியை பெருமளவு நம்பினர். ஆனால் அவரோ ஒடுக்கப்பட்ட மக்கள் பேராதரவுடன் முற்பட்ட சமூகத்தையும் அரவணைத்தார்.இது முஸ்லிம்களை யோசிக்க வைத்தது. இதன் விளைவாக எந்த தேசியக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர்களை தள்ளியது. அதனால்தான் காங்கிரசின் ராகுல்காந்தி சுற்றி சுற்றி வந்தாலும் உ.பி. முஸ்லிம்கள் தங்கள் முடிவில் உறுதியாக நின்றனர்.

ரகசிய தேர்தல் சர்வேக்களில் ஒடுக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த ஆதரவு பி.எஸ்.பிதான் பெறும் என்றும் முற்பட்ட சமூகமும் அதனை ஓரளவு ஆதரிக்கும் என்றும் தெரியவந்தது. அதைப்போலவே பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோர் முலாயம் சிங்கின் பின்னால் அணிவகுத்துள்ளனர் என்றும் சமாஜ்வாதி கட்சியின் கூடுதல் பலமாக இளைஞர்களைக் கவரும் அகிலேஷ் யாதவ் களமிறங்கியுள்ளதால் அந்தக் கட்சிக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிய வந்தது. ஆனால், உ.பி. முஸ்லிம்கள் இனிதங்களைக் காத்துக் கொள்ள சமாஜ்வாடியே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தனர்.

சர்வே முடிவும் முஸ்லிம்களின் ஒட்டு மொத்த ஆதரவும் சமாஜ்வாடி பெற்றுள்ளதால் ஆட்சி மாற்றம் உறுதி எனக் கூறின. இந்த சந்தடிச் சாக்கில்தான் முஸ்லிம்களை சிதறடிக்க காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தை களமிறக்கியது. அவர் பகிரங்கமாகவே பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது. முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கிடைக்க கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசினார். தேர்தல் ஆணையமும் இதனைக் கண்டித்தது. இவருக்குப் பாடம் புகட்டும் வகையில் இவர் மனைவி நின்ற தொகுதியில் முஸ்லிம்கள் அவரை தோற்கடித்தனர்.

இதற்கு காரணம் சமாஜ்வாதி கட்சியின் மூன்றில் ஒரு பகுதி கட்சிப்பதவிகளில் முஸ்லிம்கள் இருப்பதும் உ.பி. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக சமாஜ்வாடியில் ஐக்கியமாகி இருப்பதும்தான். மேலும் ஏற்கனவே நம்மூரில் உள்ள லெட்டர்பேட் கட்சிகளைப் போல அங்கு ஏராளமான பழைய, புதிய அமைப்புக்கள் பல இருந்தும் அவைகளை உ.பி. முஸ்லிம்கள் சட்டை செய்யவில்லை. அவர்கள் நோக்கமெல்லாம் ஒரு தேசிய அரசியல் மாற்றம் காண உ.பி.யில் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்பதே இதற்காக ஆயிரக்கணக்கான மொஹல்லா கூட்டங்களில் சமாஜ்வாடிக்காக ஆதரவு திரட்டினர்.

உ.பி. முஸ்லிம்களுக்குள் இந்த எழுச்சி ஏற்படக் காரணம் ஏற்கனவே தேசியக் கட்சிகளாக இருப்பவை, காங்கிரஸ்,பா.ஜ.க. பி.எஸ்.பி உள்ளிட்டவைகளின் நடைமுறை அரசியலில் தாங்கள் பெற்ற அனுபவப் பாடங்கள் அவர்கள் சிந்தனைக்குள் தனித்தனி அமைப்புகளாக சிதறி இருந்த நிலையை மாற்றிக் கொள்ள உதவின.

இதன் காரணமாக நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் இடம் பெறும் சட்டமன்றமாக உ.பி. அமைந்துள்ளது. தங்கள் ஒற்றுமையின் கண் கூடான பலனை இதர மாநில முஸ்லிம்கள் பார்வைக்கும் தீர்வுக்கும் அந்த முடிவுகள் சாட்சியம் கூறுகின்றன.

சமாஜ்வாடிக் கட்சியிலேயே பலம் மிக்க தலைவர்களாக மாநில முதல்வரை முன் மொழியும் அளவுக்கு அங்கு அரசியல் அதிகாரத்தில் கட்சியை மேலாண்மை செய்வதில் முஸ்லிம்கள் முன்னின்றுள்ளனர்.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முலாயம்சிங்கின் மகனை பொறியாளர் அகிலேஷ் யாதவை முன் மொழிந்தவர் ஆசம்கான். இவர்தான் உ.பி. முஸ்லிம்கள் சமாஜ்வாடியை ஆதரிக்க பெருமளவு காரணமானவர்.

அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும், அரசியல் மேலாண்மை செய்ய வேண்டும், சமூக உரிமைக்காக சிதறியவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று விரும்பும் எவருக்கும் சமாஜ்வாடி கட்சியின் ஆசம்கான் சமீபத்து சாட்சியமாக உள்ளார்

முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கு நாங்கள் உதவுகிறோம் என்ற தேசியக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையிலேயே எதையும் செய்யவில்லை. இன்னொரு தேசியக் கட்சி இந்திய முஸ்லிம்கள் மீது மிக வன்மத்தோடு உள்ளது. ஏற்கனவே அரவணைத்து ஆட்சியைப் பிடித்த கட்சியின் நெகிழ்வு அரசியல் என எல்லாம். உ.பி. முஸ்லிம்களுக்குள் தாக்கம் ஏற்படுத்திய விளைவுதான் சமாஜ்வாடி கட்சியின் பின்னால் திரளவும், தங்கள் ஒட்டுமொத்த வாக்கால் திணறக்கூடிய வெற்றியை ஈட்டவும் காரணமானது. இது முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் அரசியல் உரிமைகளை மட்டுமல்ல மேலாண்மையும் செய்ய இயலும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்துள்ளன. 2014ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலும் உ.பி.யின் அணுகுமுறையைப் போலவே அமையும் என நம்பலாம்

இதெல்லாம் சரி, நம் தமிழக முஸ்லிம்கள் இப்படி ஒரு மகத்தான அரசியல் உரிமைகளைத் தக்கவைக்க மேலாண்மை செய்ய என்ன செய்யப் போகிறார்கள்? என்பதுதான் கேள்வியாக உள்ளது. அங்கே ஒரு ஆசம்கான் இருக்கிறார் இங்கே யார்?