வெற்றிடத்தை நிரப்பலாம் வாங்க..!

புத்தம் புதிய ஆண்டு பூத்திருக்கிற நேரமிது. இப்புது நாட்களில் நாம் புதுநடை போட்டு நகர்ந்து கொண்டிருக்கிற இவ்வினிய வேளையில், சற்றே நாம் நம்மையே பின்னோக்கிப் பார்க்கவும் வேண்டியதிருக்கிறது. காரணம், நாட்கள் நகர்கிறது நாமும் நகர்கிறோம் என்றால் அதிலென்ன சிறப்பிருக்கமுடியும் ?
நல்லதொரு முன்னேற்றம் நம்மிடம் வரவேண்டும் என்றால் அதற்கு முதலில் செய்ய வேண்டியது நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வது தான். அப்படியொரு தெள்ளத் தெளிவான வரைபடம் போன்ற வழிகாட்டலைத்தான் நமது இஸ்லாம் நமக்குத் தந்திருக்கிறது என்பதில் எவருக்கும் எள்ளளவும் ஐயமில்லை.
இஸ்லாமில் “இதற்கு விடையில்லை” என்று எதுவுமேயில்லை. அப்படி ஏதேனுமொன்று இருப்பின் அது இஸ்லாமும் இல்லை. ஆக, இப்புனித இஸ்லாமில் “வெற்றிடம்“ என்பது அறவேயில்லை. இன்றைக்கு எங்கும் நிலவுகிற பெரும் பிரச்னையே ஏதோ ஒன்றுக்கு அங்கு “விடையில்லை...!” என்பதுதான். ஈருலக வாழ்க்கைக்கும் மிகத் தெளிவாக இஸ்லாம் ஒளியூட்டி வழிகாட்டி இருக்கிறது.
இங்கு “டார்க் ஏரியா - இது இருட்டுப் பகுதி, வேகென்ட் பிளேஸ் - இது வெற்றிடம்“ என்று எதுவுமேயில்லை. இதையே பின்வரும் மெய்மறைவசனம் மெய்ப்பித்துக் காட்டுகிறது இப்படி : இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். (குர்ஆன் : 5 : 3)
எனவே தான் இன்னொரு இறைமறை வசனம் நீங்கள் முழுமையாக இஸ்லாமிற்குள் நுழையுங்கள் என்று நுண்ணியமாய் நுவல்கிறது இப்படி : நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (அல்குர்ஆன் : 2:208)
ஆக, முழுமை, பூரணம், நிறைவு இவைதான் இஸ்லாமின் தாரகமந்திரம். அப்படியானால், எப்போதுமே நாம் முழு நிறைவோடு இருக்க வேண்டுமல்லவா..? அந்த நிறைவு இன்று நம்மிடையே நிரப்பமாக இருக்கிறதா என்பதுதான் நம்முன்னுள்ள ஒரே ஒரு கேள்வி? கல்வி, கலாச்சாரம், சமூகநீதி, சமூக மேம்பாடு, சுகாதாரம், செல்வம், மருத்துவம், உயர்பதவி, தீனிய வாழ்வு, அரசியல், அறிவியல் என எந்தவொரு துறையிலும் நமது பங்களிப்பு முழு நிறைவுடன் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கிறதா... இல்லையே..!
பிறகு எப்படி நாம் பரிபூரணமாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியும்?அல்லது பிறருக்கு நாம் அமைத்துக் கொடுக்க முடியும்...?
நாம் நினைப்பது போல் இஸ்லாம் ஒன்றும் அவ்வளவு சர்வசாதாரணமான ஒரு மூன்றாம் தர மார்க்கமல்ல! அதுதான் முதல் தரமான மார்க்கம். அதுதான் உயர்தரமான மார்க்கம். அதுதான் நிரந்தரமான மார்க்கம்.
நம் இறைத்தூதரின் இறுதிநாட்கள் என்றைக்கும் நம்மால் சற்றும் மறக்க முடியாத ஒன்று. தாங்கள் வாழும் போதே அடுத்த கலீஃபா - பிரதிநிதி யார் ? என்பதை மக்கள் முன்னிலையில், தாங்கள் இமாமாக நின்று தொழ வைக்க முடியாமல் போன போது, தங்களது உற்ற தோழரான அபூபக்ர் (ரளி)அவர்களை இமாமத் செய்யச் சொல்ல, ஆரம்பத்தில் அவர் மறுத்த போதும் நபிகளாரின் விடாப்பிடியின் காரணமாக இமாமத் செய்ய, இதர நாயகத் தோழர்கள் அணி அணியாய் அவர் பின்னே நிற்க, அந்தக் கண் கொள்ளாக் காட்சியை மனப்பூர்வமாக மாநபி (ஸல்) அவர்கள் தம் இல்லத்தில் இருந்தபடியே திரையை சற்றே விலக்கி ரசித்தார்கள். இந்த இறுதிக் காட்சி ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் துல்லியமாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்து நபிகளார் மரணித்த பிறகு அவர்கள் அடக்கம் செய்யப்படும் முன்பே ஏகமனதாய் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஹஜ்ரத்அபூபக்ர் (ரளி) அவர்கள். இதன் மூலம் மிகப்பெரும் குழப்ப நிலை நீக்கப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது. இதில் சூழ்ச்சிகள் ஏதும் இல்லை. அதனால் அதில் வீழ்ச்சிகளும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்பதவியை உதறித் தள்ளுபவர்கள் தான் அதிகம். காரணம் இது பணம் சம்பாதிக்கும் பதவியல்ல!
மிகமிக எச்சரிக்கையுடனும், இறையச்சமுடனும் இருக்க வேண்டிய பதவியிது. அப்படியிருந்த தால் தான் அடுத்தடுத்த பிரதிநிதிகளும் உடனுக்குடன் எவ்வித கூச்சல், குழப்பமும் இன்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்று சொல்லிச் செல்கிறது இஸ்லாமிய வரலாறு. ஹிஜ்ரி எட்டாம் வருடம் ஹஜ் செய்வதற்காக திருமக்கா நகர் வந்தபோது மக்கத்து மக்கள் ஊருக்குள் செல்ல அனுமதி வழங்கவில்லை.
ஊரின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டது. அனைவரும் “இஹ்ராம்“ ஆடை அணிந்திருக்கிறார்கள். ஹதீ எனும் குர்பானிக்கான ஒட்டகங்களும் அங்கு தயாராகயிருக்கின்றன. ஆனாலும் கஅபாவை காணமுடியாத நிலை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போது என்ன செய்வது ? பரபரப்பான இச்சூழலில் தான் பட்டென தமக்குத்தோன்றிய ஒரு அற்புதமான ஆலோசனையைச் சொன்னார்கள் அன்னை உம்முசல்மா (ரளி)அவர்கள். அல்லாஹ்வின் அருட் தூதரே! தாங்கள் இவ்விடத்திலேயே மொட்டையடித்து, இஹ்ராம் கட்டிய ஆடையை அவிழ்த்து விட்டு, குர்பானி
கொடுக்க ஆரம்பித்தால் அனைவரும் தாங்கள் செய்தவாறே அவர்களும் செய்ய ஆரம்பித்து விடுவார்களே...! என்று கூறியதுதான் தாமதம் இது மிக அருமையான ஆலோசனை அப்படியே செய்வோம் என்று கூறி அவ்வாறே நபியவர்கள் செய்ய, நபித்தோழர்களும் அவ்வாறே செய்ய அன்று நிகழவிருந்த பெரும் பிரச்னை மாமலை போல் வந்தது பனித்துளி போல் நீங்கியது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது அங்கு நிரப்பப்படாமல் இருந்த ஒரு வெற்றிடம் மிக அற்புதமாக நிரப்பப்பட்டதுதான். அது இஸ்லாமின் ஆரம்பகாலம் என்பதால் தான் ஷரீஅத்தின் சட்ட திட்டங்கள் யாவுமே காலச்சூழல்களுக்கு ஏற்ப, அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப நிறைவேறியது. எனவே இஸ்லாம் என்றென்றைக்கும் பரிபூரணமானது என்பதில் மறு கருத்தில்லை. ஆனால் நம்மிடம் அந்த பரிபூரணத்துவம் இன்றைக்கு இருக்கிறதா என்பதுதான் நம்முன்னுள்ள மாபெரும் கேள்வி.
இன்று நம்மைச்சுற்றி வெற்றிடங்கள் நிறையவேயிருக்கின்றன. இறையச்சப் பேச்சாளர்கள் இல்லை, இலக்கிய எழுத்தாளர்கள் இல்லை, இன்குரல் இமாம்கள் இல்லை, ஆற்றல் மிகுந்த அரபு மொழியாசிரியர்கள் இல்லை, அனுபவமிக்க அரசியல் வழிகாட்டிகள் இல்லை, ஆக்கப்பூர்வமான மெஞ்ஞானவான்கள் இல்லை, அறிவுப்பூர்வமான இஸ்லாமிய அழைப்பாளர்கள் இல்லை, ஆராய்ச்சிப் பூர்வமான விஞ்ஞானிகள் இல்லை, எதார்த்தமான ஏகத்துவவாதிகளும் இல்லை ஆக, இல்லைகளுக்கு பஞ்சமே இல்லை.
எனவே இம்மாதிரியான வெற்றிடங்களை நம்மில் நிரப்பப்போவது யார் ? அந்தந்தக் காலி வெற்றிடங்களை நிரப்புவதில்தான் நமக்கான வெற்றி முழுமையாய் மையம் கொண்டிருக்கிறது.
முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனாலும் நாம் எதற்குமே முயலுவதில்லை. பிறகு எப்படி நமது உயரங்களை நாம் எட்டிப்பிடிக்க முடியும்..? நபிகளாரின் வாழ்வில் எந்தவொரு பகுதியுமே “இங்கே வெற்றிடம்“ என்று சுட்டிக் காட்ட எதுவுமே இல்லையே..! அதனால் தான் அவர்கள் மாபெரும் வெற்றியாளராக பரிணமித்தார்கள். ஆனால் நமது வாழ்க்கையில் இதோ வெற்றி என்று சுட்டிக்காட்டக் கூட எதுவுமே இல்லையே! நாம் திரும்பிய திசையெல்லாம் வெற்றிடங்கள் தானே வரிசைவரிசையாய் முதலில் வந்து முன்னிலையில் நிற்கிறது..?
இந்நிலையில் நாமென்னசெய்வது..?
உதாரணத்திற்கு ஒன்று. சாதாரணமாக நமது பள்ளிவாசல்கள் அரை நூற்றாண்டுகளையும் தாண்டி இன்று எப்படியிருக்கின்றன ?அவை வெறும் வணக்க வழிபாட்டுத்தலங்கள் தானா,
நபி காலத்துப் பள்ளிவாசல்கள் எந்த நிலையில் இருந்தன ? சகல காரியங்களும் பள்ளியை மையமாக வைத்துத் தானே செயல்பட்டன! ஆனால் இன்று நமது பள்ளிகள் முற்றிலும் மக்களற்ற வெற்றிடங்களாகத்தானே காட்சியளிக்கின்றன ? ஏதோஅவ்வப்போது மணமகன்களைப் பார்த்துப் பார்த்து கண்குளிர்ச்சியடைந்த பள்ளிவாசல்கள் இந்த மண்டபங்களின் வருகையால் அதுவும் பறிபோய்விட்டது. நல்லவேளை ஜனாஸா தொழுகைக் கென்று இன்னும் மண்டபங்கள் வரவில்லை அதுவரை முஸ்லிம்களின் முகங்களை பார்ப்பதில் பள்ளிவாசல்களுக்கு பெரும் சந்தோஷம் தான்.
சின்னச் சின்ன மதரசாக்களை ஏன் பள்ளிவால்களில் நடத்தக்கூடாது ? பள்ளியைச் சுற்றிலும் ஏன் கடைகளை அமைத்துக் கொள்ளக்கூடாது? டியூசன் சென்டர், கம்ப்யூட்டர் சென்டர், குறைந்த கட்டணத்தில் தங்குமிடம், சிறு சேமிப்பகம், ஆதரவற்றோர் காப்பகம், பேரிடர் உதவி மையம், இளைஞர் மன்றம், இஸ்லாமிய அழைப்பகம், திருமணத் தகவல் மையம், மருத்துவ உதவி மையம், பொது நூலகம் என பள்ளிவாசலைச் சுற்றி செயல்படுவதற்கென்று ஏகப்பட்ட காரியங்கள் இருக்கின்றன.
ஆனால் நாம் தான் எங்களூரில் எந்த ஜமாத் பள்ளிவாசல் பெரியது ? எங்களது மிஹ்ராபா ? இல்லை உங்களது மினராவா? என்று “ஈகோ” சண்டையிலேயே பல வருடங்களை வீணாய்க் கழித்து விடுகிறோம்
பிறகு “ஜமாத், ஜமாத் - ஒற்றுமை, ஒற்றுமை” என்று பேசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லையே...! ஆக வெற்றிடங்கள் நம்மைச் சுற்றி பற்பல வடிவங்களில் வலம் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் தான் அவற்றில் அக்கறை காட்டாமல் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று விடுகிறோம்..! நாம் தப்பித்துச் சென்று விட்டோம் என்று எண்ணிக் கொண்டே...! இல்லை... இல்லை நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று தான் இதற்குப் பொருள். இந்நிலை மாறாதவரை நமக்கான வெற்றி வாசல்கள் இங்கு நிச்சயம் வெகுதூரம் தான் என்பதுமட்டும் வெகு நிச்சயம்.
வாருங்கள் !
வெற்றிடங்களை நிரப்புவோம் !
வெற்றியிடங்களை பரப்புவோம் !