ஆளுமைகள் என்பவர்கள் யார்?

images
பத்தாம் வகுப்பு தேர்வுகளும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் முடிந்துள்ளது. கிடைத்த மார்க்கை வைத்து டாக்டர் சீட் கிடைக்குமா, இஞ்சினியரிங் சீட் கிடைக்குமா, எந்த சீட் கிடைக்குமோ அது கோட்டாவில் கிடைக்குமா இல்லை அதற்கும் செலவு செய்ய வேண்டுமா என்று பல்வேறு குழப்ப நிலைகளில் இருந்து கொண்டிருக்கும் பெற்றோர்களும், மாணவர்களும் எது பற்றிய குழப்பமும் தடுமாற்றமும் வேண்டாம். நீங்கள் உங்கள் கடமைகளை செய்து விட்டீர்கள். உங்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். இந்த நம்பிக்கை எப்போதும் அவசியம்.
மனிதனுக்குள் மறைந்திருக்கும் தனித்தன்மையை வெளிப்படுத்துவதற்காகத்தான் கல்வி என்பதை, மறந்து விட வேண்டாம். வெறும் மதிப்பெண்கள் நம் தலை எழுத்தை தீர்மானித்து விடாது. நல்ல எண்ணங்களும், நற்சிந்தனைளும் மட்டுமே நாம் வாழ்வதற்கு ஆதாரம்.
தேர்வை எழுதி முடித்துவிட்டோம் எவ்வளவு கீழாக அல்லது மேலாக மதிப்பெண் வாங்கினாலும் அது பற்றிய அச்சமும் கவலையும் தேவையில்லை. நாம் சாதிப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் நம்மிடம் சிந்தனை இருக்கிறது செயல்படுத்துவதற்கு துணிவிருக்கிறது.
நாம் மனிதர்கள், நாம் சகோதரர்கள், இன்று இந்த பூமியிலே வாழும் நாம் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவருகிறோம். மனிதர்களுக்கு இடையில் சண்டை நிம்மதியில்லை. மனிதனின் நடத்தையில் நேர்மையில்லை அதனால் பூமி தன் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது சுற்றுச் சூழல் பிரச்சனை, உணவில் சத்தில்லை புதிய புதிய நோய்களை எதிர் கொண்டு வருகிறோம் இப்படி நம்மிடம் இருக்கும் பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்.
அதை தீர்த்து மனித சமூகத்திற்கு இயல்பான சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டத்தான் ஆட்கள் இல்லை. அந்த வாழ்க்கை முறைகளை மனித சமூகத்திற்கு வழங்கிட ஆளுமைகள் தேவை.
ஆளுமைகள் என்பவர்கள் யார் அவர்கள் எங்காவது விற்பனை செய்யப்படுகிறார்களா? இல்லை. அவர்கள் எங்காவது தயாரிக்கப்படுகிறார்களா? இல்லை.
ஆளுமை என்பது தோற்றத்தைப் பொறுத்ததல்ல. காரணம் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. உள்ளத்தாலும், எண்ணத்தாலும், செயலாலும் தீர்மானிக்கப்படுவதுதான் ஆளுமை. இது இரு கூறுகளை உடையது. ஒன்று தன்னைத்தானே ஆளும் திறன். மற்றது, மற்றவர்களை ஆளும் வல்லமை.
பொதுவாக, பிறரை ஆளும் வல்லமையையே ஆளுமை என்கின்றனர். இது முழுமையான முடிவு அல்ல. தன்னைத்தானே ஆளும் திறனே ஆளுமையின் முதன்மை அடையாளம். தன்னை ஆள முடியாதவன் மற்றவரை ஆள முடியாது. எனவே, ஆளுமையின் அடிப்படையே தன்னை ஆளுகின்ற திறனில்தான் அடங்கியுள்ளது என்பதை ஆழமாக மனதில் பதிய வையுங்கள்.

அழுகை குழுந்தையின் ஆளுமைத் திறன். தன் தேவைக்குக் குரல் எழுப்ப வேண்டும் என்ற புரிதலால் எழுவதுதான் குழந்தையின் அழுகை, தேவை நிறைவேறுவதற்கான முயற்சி. எனவே, அம்முயற்சியே ஆளுமையின் அடையாளமாய் அமைகிறது. பின்பு வளரவளர, வயது கூடக்கூட தனது தேவைகளை பூர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கற்றுக் கொண்டே வருகிறான் மனிதன்.
சூரிய ஒளியைச் சக்தியாக மாற்றுவது போல, இன்னும் நாம் நமது ஆளுமைத் திறன்களை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி, நமது வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், உலகின் செழுமைக்கும் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகளும் தங்கள் ஆளுமை அறிந்து, அதை மெருகேற்றி உயர உதவ வேண்டும்.
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் இறைவன் தருகிறான். சமூகத்தை மாற்றுவதற்காக மரணித்தவர்கள் நம் மத்தியிலிருக்கிறார்கள். அவர்களை முன் மதிரிகளாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு ஆளுமை என்பவன் கடைசி நிலையில் இருப்பவர்களைக்கூட முதல் நிலைக்கு அழைத்து வரவேண்டும். நம் திட்டங்கள் மட்டும் சிறப்பாக இருந்தால்போதாது. அதைச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிந்தனைக்குத்தான் தெளிவின் வெளிச்சத்தை தேடி எடுக்கும் வல்லமையிருக்கிறது!
படித்து வாங்கிய பட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறோம். அதில் எதிர்பாராத சூழல் எழும்போது நமது சிந்தனையின் மூலம் அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது அனுபவ ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளலாம்.
நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் எதிர்பாராத சிக்கல்களை பிரச்சனைகளை சிறப்பான முறையில் திறம்பட கையாண்டு அதற்கு சரியான தீர்வுகளை யார் வழங்குகிறாரோ அவரே ஆளுமை (Personality Person) திறன் மிக்கவர். அவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். இல்லை அப்படிப்பட்டவராக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு ஒரே ஒரு அடிப்படை நீங்கள் உயிர்களின் மீது நேசமுள்ளவராக இருக்க வேண்டும். அது ஒன்று போதும். சமூகம் எழுச்சி பெற வேண்டுமானால் ஆண்கள் மட்டுமல்ல பெண் ஆளுமைகளும் நமது சமூகத்தில் அதிகம் உருவாக வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளவும். மதிப்பெண்கள் நம் வாழ்க்கையை தீர்மானித்து விடாது. இறை நம்பிக்கையால் நமது தன்னம்பிக்கையால் மனித சமூகத்திற்கு வழிகாட்டுகிற ஆளுமைகளாக மாற வேண்டும். இன்ஷா அல்லாஹ்…