கை பிடித்து கற்றுக் கொடுங்கள்…

2
குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். ஆனால், எவ்வாறு ஆதரவாக இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில், குழந்தைகளுக்கு பங்குண்டு. உதாரணமாக 7 வயது சிறுவனின் தாய், “உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடிக்க நான் உதவட்டுமா?” என்று கேட்பது, குழந்தைகளுக்குத் தீர்மானிக்கும் பொறுப்பை உருவாக்குவது – உறுதுணையான குழந்தை வளர்ப்பு முறை.
இதில் குழந்தைகளுக்கு உருவாகும் எண்ணம், “என்னுடைய தாய் எனக்கு உறுதுணையாக இருப்பார். ஆனால், நான் தனியே என் வேலையைச் செய்ய முடியுமானால், செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் அம்மாவின் உதவியை நாடலாம்” என்று சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வாய்ப்பு அளிக்கிறது. தனக்கு தேவைப்படும் போது, உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குழந்தைகள் பல முயற்சிகளை தைரியமாக செய்து முடிக்க பெரும் துணையாக இருக்கும்.
20 வயது பெண், தன் பெற்றோரிடம்.. “நான் கல்லூரி முடித்து வரும்போது, சிலர் என்னை கிண்டல் செய்கிறார்கள்” என்று கூற, அவளின் அம்மாவோ.. “நீ சரியில்லை. உன் பார்வை சரியில்லை.. நாளை முதல் நீ கல்லூரிக்குச் செல்ல வேண்டாம்” என்று கூச்சலிட, அந்தக் கல்லூரி மாணவிக்கோ, “ஏன் இந்தப் பிரச்சனையை வீட்டில் சொன்னோம்?” என்றாகி விட்டது.
அம்மா சொல்வது சில ஆண்மகன்கள் செய்த தவறுக்கு.. நான் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது போல் தோன்றுகிறது என்றார் அந்த மாணவி.
அவள் அப்பாவோ “நாளை முதல் நான் என் வாகனத்தில் உன்னை கல்லூரிக்கு கூட்டிச் செல்கிறேன். மீண்டும் கல்லூரியில் இருந்து நீ வீட்டுக்கு திரும்பும் போது, நானே உன்னுடன் வருகிறேன்” என்று ஆதரவாக கூறினாலும், எப்படிப்பட்ட உதவி வேண்டும் என்று அவளிடம் கேட்கவில்லை என்பதே மனக்குறையாக இருந்தது.
இதை புரிந்து கொண்ட பெற்றோர், “எத்தகைய உதவி வேண்டும்” என்று கேட்ட போது அவள் கூறியதாவது : “உன்னால் இந்தப் பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்று நீங்கள் உறுதுணையாக சொன்னால் போதும். ஒருவேளை என்னால் முடியாது என்று தோன்றினால், அப்பாவை நான் அழைத்துக் கொள்கிறேன்” என்றும் “வாழ்க்கையை எதிர்கொண்டு பார்க்க வேண்டும் என்று எனக்கு எண்ணம் இருப்பதால் நீங்கள் எப்போதும் என்னுடன் பாதுகாப்பாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனவும் சொல்ல.. அவளின் எண்ணத்துக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்த பெற்றோர், அவள் கூறியவாறே செய்தார்கள். ஆம்.. அக் கல்லூரி மாணவியே பிரச்சனையை எளிதாக் சமாளித்து விட்டாள்.
ஆகவே உங்கள் குழந்தையை தனித்தன்மை படைத்த இன்னொரு மனிதனாகப் பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதவி தேவையா? தேவையில்லையா? உதவி தேவை என்றால் எத்தகைய உதவி வேண்டும்? என்று தீர்மானிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு கொடுப்பது உறுதுணையான குழந்தை வளர்ப்பு முறை.
இந்தச் சூழலில் வளரும் குழந்தைகள், தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், தன் மீதும் பிறர் மீதும், வாழ்க்கையின் மீதும் நம்பிக்கையுடையவர்களாக திகழ்கிறார்கள். உறுதுணையான பெற்றோர் வழிமுறை… உறுதுணையானதே!
செல்லம் கொடுத்து வளர்க்கும் பிள்ளை!
இந்த முறையில் குழந்தையின் தேவையை விட பெற்றோர்கள், “என் பிள்ளையை நான் எப்படி வளர்க்கிறேன் பார்!” என்ற சுய பெருமையிலேயே அதன் வளர்ப்பு பாதிக்கப்படுகிறது.
இந்த வழிமுறையைக் கையாளும் பெற்றோர்கள், குழந்தைகள் கேட்பதற்கு முன்பே பொருட்களை வாங்கிக் கொடுப்பது – குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பது என்று தாங்களாகவே அவர்களை அறிவற்றவர்களாக வளர்க்கிறார்கள்.
என்னிடம் வந்த குடும்பத்தினர் தங்களது 13 வயது மகன் தனது வேலைகளில் ஒன்றைக் கூட தானே செய்து கொள்வதில்லை என்றும்… காலையில் பள்ளிக் கூடத்துக்குச் செல்ல தந்தைதான் அவனை எழுப்பி, உடை அணியச் செய்து, பாடப் புத்தகங்களை சீர் செய்து தர வேண்டும் என்று கூறினார்கள். இந்த பெற்றோரின் வருத்தம், அவர்களது மகன் சுய பொறுப்பு இல்லாமல் இருக்கிறானே என்பதுதான்!
நான் அவர்களுக்குச் சொன்ன ஆலோசனை “இப்படி உதவி செய்வதை நிறுத்துங்கள்” என்பது மட்டும்தான்.
ஒருவாரம் ஒன்றும் செய்யாமல், தந்தையை தன் காரியங்களை செய்யச் சொல்லி முரண்டு பிடித்தான். தந்தையோ அன்பாக மறுக்க, வேறு வழியிலாமல் தானே புத்தகங்களை சீர் செய்ய ஆரம்பித்தான். படிப்பதும், தனது துணிகளை சரியாக வைத்துக் கொள்வதும், காலையில் சுயமாக எழும்புவதும் சில நாட்களுக்குள் அச்சிறுவனுக்கு பழக்கமாகி விட்டது.
அதனால்தான் சொன்னார்கள் ‘மீன் பிடித்துக் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள். மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்’ என்று!
குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று தந்தை செய்த காரியங்களால் எதிர்மறை விளைவு உண்டாயிற்று என்பதை உணர்ந்த பின், ‘சரியான சிந்தனை இல்லாமல் செய்யும் உதவி, உதவியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு’ என்பதை அக்குடும்பத்தினர் உணர்ந்தார்கள்.
ஒரு சிறுவன் கம்பளிப் பூச்சியானது பட்டாம் பூச்சியாக உருமாறி அதன் கூட்டுக்குள் இருந்து வெளிவர முயற்சிப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். அந்தக் கூட்டின் துவாரம் மிகவும் சிறியதாக இருந்ததால், பட்டாம் பூச்சி வெளிவர முடியாமல் தவிக்கிறது என்று உணர்ந்து சிறு கத்தியைக் கொண்டு வந்து அக்கூட்டின் துவாரத்தை பெரிதுபடுத்தி விட்டான்.
அவனுடைய ஆர்வமோ பட்டாம் பூச்சிக்கு உதவுவது. நல்ல எண்ணம்தான். அதன் விளைவு, பட்டாம் பூச்சி எளிதாக கூட்டில் இருந்து வெளிவந்தது. ஆனால் அதன் இறக்கைகள் தொய்வாகவும், சிறகடித்துப் பறக்க முடியாதவையாகவும் இருந்தன. காரணம் பட்டாம் பூச்சிஅந்த மெல்லிய துவாரத்தின் வழியாக வெளியே வரும்போதுதான் அதன் இறக்கையில் உள்ள நீர் வடிந்து, அது சிறகடித்துப் பறக்க முடியும்.
சிறுவன் உதவுவதாக நினைத்து செய்த உதவி உதவியல்ல, தீங்கு! இதேபோல்தான் அதிக செல்லம் கொடுத்து குழந்தைகளை வளர்க்கும் முறை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வதாக நினைத்து, அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறார்கள். அது உண்மையில் உதவுகிறதா என்று சற்று யோசித்து, செல்லம் கொடுப்பதற்குப் பதிலாக உறுதுணையாக இருப்பது நல்லது.
அலட்சியமாக குழந்தை வளர்க்கும் முறை
“என் குழந்தை எந்த வகுப்பில் படிக்கிறான் என்று எனக்குத் தெரியாது” என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்கள், இந்த முறையை கையாள்கிறார்கள்.
இம்முறையில் முழந்தைகள் வளர்வதற்கும், பெற்றோர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கும். தாயோ வீட்டு வேலை – பிரச்சனைகளில் மூழ்கி, குழந்தைகளை கவனிக்காமல் இருப்பாள். தந்தை வெளிவேலைகளில் மட்டும் கவனத்துடனோ அல்லது குடிநோயாளியாகவோ இருப்பார்.
குழந்தைக்கு என்ன தேவை? அவர்களுடைய உணர்வுகள் என்ன? என்பன போன்ற விஷயங்கள் தெரியாமல் குழந்தைகளை வளர்ப்பது அதிக பாதிப்பை உண்டாக்கும்.
இச்சூழலில் வளரும் குழந்தைகள் பெற்றோர் இருந்தும் தனக்கு யாரும் இல்லை என்ற உணர்வுடன் வளர வாய்ப்புண்டு. இவர்கள் தங்கள் கற்பனையில் பெற்றோரோ அல்லது பிறரோ உதவுவதாக பாவனை செய்து கொண்டு, மனதை தேற்றிக் கொள்வார்கள். வளர்ந்த பின்னும் கற்பனை மூலமகவே உறவுகளோடு வாழ்வதால்… பிறருடைய உண்மையான அன்பைக் கூட உணர முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். இதனால் வாழ்க்கையில் ஒரு வெறுமை இருக்கும்.
இத்தகைய குழந்தைகள், ஒரு பிரச்சனை என்று வந்தால்… அதை யாரிடம் கூறுவது? யாரை நம்புவது? என்று தெரியாமல் திண்டாடுவார்கள். பிறரிடம் உதவி கேட்டு பெற்றுக் கொள்ள முடியும் என்பது புரியாததால் தவறான வழியை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
குழந்தை வளர்ப்பு என்பது குடும்ப பொறுப்பு மட்டும் கிடையாது. அது ஒரு சமுதாயக் கடமை. அதை உதாசீனப்படுத்துவது கண்டிக்கத்தக்கதே.
மேலே நாம் கண்டவற்றில் உறுதுணையாக இருந்து குழந்தைகளை வளர்க்கும் முறை சிறந்ததாக இருக்கிறது.
சில பெற்றோர்கள், குழந்தைக்காக எதை செய்தாலும் குழந்தைகளிடம் உடனடியாக மாற்றம் உண்டாக வேண்டும், தங்களின் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலிப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டு. பெற்றோர் நல்ல குழந்தை வளர்ப்பு முறையை தேர்வு செய்தாலும் அதன் பயன் வெளிப்பட பல காரணங்களால் தாமதமாகலாம் அல்லது குழந்தைக்காக செய்யும் சேவைகளை அவர்கள் கவனிக்காமல் கூட போகலாம்.
ஒரு தோட்டக்காரன் நிலத்தை சரி செய்து, உரமிட்டு, உழுது, விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி.. செடிகளை வளர்த்தான். அருமையாக் வளர்ந்த செடிகளிடம் சென்று “உன் வளர்ச்சிக்கு யார் காரணம்?” என்று கேட்டால் அதற்கு அந்த செடிகள் சொன்ன பதில் “சூரியன்” என்று!
கடமையைச் செய். பலனை எதிர்பாராதே.. என்ற தத்துவம், எதார்த்தமான குழந்தை வளார்ப்புக்கு பொருந்தும்.