புரட்சி மண் தெலிங்கானா!

தெலிங்கானா ராஷ்டிரா சமிதி, இந்தக் கட்சிதான். தொடர்ந்து போராடி புரட்சிகரமான போர்க் குணத்தால் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தனி மாநிலமாக தெலிங்கானா என்ற தனி மாநிலத்தை கண்டது. சரி!
தெலிங்கானா தனி மாநில கோரிக்கை என்பது விடுதலைக்கு முன்பாகவே வைக்கப்பட்டு, போராட்டம் கண்ட ஒன்று. தெலுங்கு மொழி பேசும் விவசாயிகளும் பாட்டாளிகளும் நிஜாம் அரசை எதிர்த்து கையில் கிடைத்த தடி, கல், துடைப்பம், முறம், உழவுக் கருவிகளை வைத்து துப்பாக்கி ஏந்தி நிஜாம் படைகளை எதிர்த்தனர். நிஜாம் அரசு கடுமையான வழிமுறைகளை கையாண்டது. புரட்சி நின்றபாடில்லை. இதனை தலைமை தாங்கி வழிநடத்தியது அன்றைய கம்யூனிஸ்டுகள். இந்த போராட்டம் நாடு முழுவதும் பிரிந்து போகும் அளவுக்கு உணர்வுகளைக் கிளப்பி விட்டது. விடுதலை பெற்ற 1947 இல் தெலிங்கானாவில் வீரியம் அதிகமானது. இந்திலையில்தான் காங்கிரசின் படேல் உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்து நிஜாம் அரசை இந்தியாவுடன் சேர்த்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தினார்.
எனினும் வளம் நிறைந்த பகுதிகளான பலவற்றிலிருந்து வசதியானவர்கள் மென்மேலும் உயரும் வகையில் முன்னேறும் வகையில் அரசு வேலைகளில் இடம் பெற்றனர். இது தெலிங்கானா இளைஞர்களை ஆத்திர மூட்டியது. தெற்கே அனந்த பூரிலிருந்து வடக்கே மகாராட்டிர எல்லை வரை நீள அகலத்தில் பரந்து விரிந்த தெலிங்கானாவின் பகுதிக்குள் உள்ள படித்த இளைஞர்கள் திட்டமிட்டு பின் தங்க வைக்கப்பட்டனர். நாளுக்கு நாள் பாகுபாடு அதிகரித்த நிலையில் தெலுங்கு தேசம் என்ற கட்சியை என்.டி.ராமராவ் தொடங்கினார். ஒன்றுபட்ட ஆந்திர மக்கள் அவரை நம்பி ஆதரித்தனர். எனினும் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சந்திர சேகர் ராவ் துணிந்து தங்கள் பகுதி வளர்ச்சிக்கான தனி மாநிலம் வேண்டும் என்று கட்சி தொடங்கி போராடினார். உஸ்மானிய பல்கலைக் கழக மாணவர்கள் உண்ணாவிரதம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றின் மூலம் அவருக்கு பக்கபலமாக போராடினர்.
இதனால் தெலிங்கானா ராஷிடிரிய சமிதி பலம் பெற்றது. முஸ்லிம்கள், தலித்கள், பழங்குடிகள் நிறைந்த பகுதி தெலிங்கானா, கிழக்கில் ஒடிசா, ஒரிய மொழி கலந்த தெலுங்கு பேசப்படும் போது ராகம் இசைப்பது போலவே தனி மொழிநடைக்கு உரிய மண் தெலிங்கானா!
தனி மாநிலம் கோரும் போராட்டத்தை நசுக்க காங்கிரஸ், பாஜக முதலான கட்சிகள் மக்களுக்குள்ளேயே உட் குழப்பம் செய்தது. எனினும் தல்லி தெலிங்கானா தாய் தெலிங்கானா என்ற சொல் மந்திரச் சொல்லானது.
ஆயினும் விடுதலைக்கு முன்பே தங்கள் முன்னோர்களின் கனவான தெலிங்கானாவை தாங்கள் பெற்று விட வேண்டும் என்ற உந்துதலில் திடமாக அனைத்தையும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் எதிர் கொண்டனர்.
இதற்கு முன்னோட்டமாக சந்திர சேகர் உள்ளிட்ட சிலரை தெலிங்கானா மக்கள் மக்களவைக்கு அனுப்பினர். பல இடங்களில் பா.ஜ.க., காங் தோற்றது. தொடர்ச்சியான போராட்டம் வன்முறைன் கைதுகள் நடந்தன. மக்கள் அசரவில்லை.
இதற்கிடையே பெருகி வந்த சாராயக் கடைகளை ஒழிக்கும் போர் நடந்தது. மது அருந்தும் சட்டப்பூர்வ அனுமதி இருந்தும் சாராயத்தை ஒழிப்பதில் தெலிங்கானா பெண்கள் முன்னிலையில் இருந்தனர். அங்கு பெண்களே சாராயத்தை ஒழித்துக் கட்டினர்.
உயர்சாதி வகுப்பினர் நலிவுற்ற மக்களை அடிமைப்படுத்தி உணர்வு பெறாமல் வைத்திருக்கும் கருவி சாராயம் என்பதை உணர்ந்ததால் தீவிர எதிர்ப்பில் அங்கு சாராயம் ஒழிந்தது! மேலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் தெலிங்கானாவில் வசித்ததால் அவர்களின் கடுமையான எதிர்ப்பில் இது சாத்தியமானது.
தெலுங்கு மொழி பேசினாலும் தெலுங்கு தேசம் கட்சி அங்கு எடுபடவில்லை. மத்திய அரசு தனி மாநிலம் பிரிப்பதற்கு ஆணை பிறப்பித்தது. 27 மாவட்டங்களை உள்ளடக்கி தெலுங்கானா மாநிலம் பிறந்தது.
அந்த புதிய மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்., காங்கிரஸ், பா.ஜ.க., புதிய மாநில மக்களிடம் வாக்குப் பெற முயன்றனர். இவர்களில் தனிமாநிலம் கோரிப் போராடி வெற்றி கண்ட ராஷ்டிரிய சமிதி கட்சி தன் தேர்தல் அறிக்கையில் கடந்த கால போராட்டத்துக்கு ஆதரவு தந்த பெரும்பான்மை மக்களான முஸ்லிம்களுக்கு அன்றைய நாளில் பரபரப்புடன் பேசப்பட்ட நீதிபதி ராஜேந்தர் சச்சாரின் பரிந்துரைகள் தொடர்பான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டதுடன் முஸ்லிம்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு தந்து அவர்களை மேன்மைப்படுத்துவது தங்களின் தார்மீக கடமை என்ற கருத்தாக்கம் இந்திய அளவில் வியாபித்திருந்தது. இதை சந்திர சேகர ராவ் தன்னுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள் வாங்கினார். இதன் விளைவாக தெலிங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி அமைத்தால் தற்போதுள்ள இடஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து வழங்குவோம் என்று வாக்குறுதி தந்தார்.
இதனால் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்குகளை டி.ஆர்.எஸ். கட்சி அள்ளிக் குவித்தது. அதற்கு நன்றி கூறும் வகையில் இந்தியாவில் வேறெந்த மாநிலமும் வழங்காத விகிதத்தில் தெலிங்கானா அரசு முஸ்லிம்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீட்டை வழங்கியது.
பிரபலமான பிளிட்ஸ் ஆங்கிலப் பத்திரிக்கை சார்பில் ஒரு குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜேஸ்வர ராவை நேர்காணல் செய்ய தெலிங்கானா அன்றைய ஆந்திரா சென்றது. பிரபல புகைப்பட நிபுணர் ரகுராய் உடன் செல்கிறார்.
வழியில் அவர்கள் காணும் வயல் வெளிக் காட்சிகளை படம் பிடித்தபடி இருந்தார். நிருபர் அங்கு வயலில் ஏர் உழுது கொண்டிருந்த நபரிடம் “ஐயா! இங்கு ராஜேஸ்வர ராவ் வீடு எது?” என்று கேட்டவுடன் ஏன்? என்ன விசயம் நீங்கள் யார் என்று கேட்டார் வேஷ்டியை கோவணமாகக் கட்டியபடி தலையில் முண்டாசுத் துண்டுடன் இருந்த அந்த விவசாயி.
“நாங்கள் பிளிட்ஸ் ஆங்கில இதழிலிருந்து வருகிறோம்” என்று சொன்னதும் அடுத்த வார்த்தைகளை சரளமான ஆங்கிலத்தில் அந்த விவசாயி “நான்தான் ராஜேஸ்வர ராவ் அதோ அதுதான் என் வீடு” என்றார் சர்வ சாதாரணமாக. ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர் எவ்வித பகட்டும் இல்லாமல் விவசாய வேலைகளை அவரே இறங்கிப் பார்ப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சேதி அறிந்த புகைப்பட நிபுணர் ரகுராய் தன் கை வண்ணத்தால் அவரை பல கோணங்களில் படம் பிடித்தார். அவர் வேறு யாருமல்ல இந்திய குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டியின் உடன் பிறந்த சகோதரர். அந்த இதழ் பிளிட்ஸ் அட்டைப்படம் அவருடையதாக இருந்தது. பேட்டியில் தெலிங்கானா போராட்டத்தை பெருமளவு நினைவு கூர்ந்தார். ஏனெனில் அவர் அன்றைய தெலிங்கானா போராட்டத்தில் முக்கியமானவராக முதன்மையாளராக இருந்தார்.
தெலிங்கானா போராட்டம் தொடர்பாக தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. இதில் பசவபுன்னைய்யா எழுதிய ‘தெலிங்கானா போராட்டம்’ என்ற நூல் விவரமானது. இத்தகைய போராட்டம் நிறைந்த புரட்சிகர மண்தான் தெலிங்கானா தனிமாநிலமாகி முச்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இந்தியாவில் வெறெங்கும் வழங்ப்படாத முக்கியத்துவம் நிறைந்த இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
தான் தேர்தல் அறிவிப்பில் எதைக் குறிப்பிட்டு முஸ்லிம்களிடம் டி.எஸ்.ஆர். கட்சி வாக்கு கேட்டதோ அதை நிறைவேற்ற 2017 ஏப்ரல் 15 ஆம் நாள் அமைச்சரவை கூடி முஸ்லிம்கள், தலித்கள், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தரும் முடிவுக்கு ஒப்புதல் தந்தது.
மறுநாள் மாநில சிறப்பு சட்ட மன்றம் கூடி முதல்வர் சந்திர சேகர் ராவ் அதுவரை தந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மாநில மக்கள் தொகை கணக்கின்படி 4% லிருந்து 12 % ஆக உயர்த்தியும், எஸ்.சி., எஸ்.டி க்களுக்கு 6% லிருந்து 10% உயர்த்தியும் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதை பா.ஜ.க. கடுமையாக கண்டித்தது. குழப்பம் விளைவித்த ஐந்து பா.ஜ.க.வினர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். தீர்மானம் நிறைவேறியது. அத்துடன் சாசன சட்டம் 92 அட்டவணையில் சேர்ப்பதற்கான குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறவும் அனுப்பி விட்டனர். முறைப்படி இந்த ஒதுக்கீடு உத்தரவு எவ்வித வழக்கு இடையூறுகள் வந்தாலும் செல்லத்தக்கதாக மாறிட உரிய ஏற்பாட்டை தெலிங்கானா முதல்வர் மேற்கொண்டுள்ளார்.
இந்த தீர்மானம் ஏப்ரல் 16 அன்று நிறைவேறிய தருணம் பா.ஜ.க. தேசிய குழு புவனேஸ்வரத்தில் கூடி இருந்தது. அங்கு குய்யோ முய்யோ என இதனை விமர்சித்தனர். “இது மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கும்” என வெங்கய்யா நாயுடு குமுறுகிறார்.
அவருக்கு பதில் தரும் டி.எஸ்.ஆர். கட்சித் தலைவர் தெலிங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் “இது மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதே தவறு. தெலிங்கானாவில் பெருவாரியாக உள்ள முஸ்லிம்கள் அளவுப்படி இது குறைவுதான்! எனினும் பொருளாதாரத்தில் நலிந்துள்ள முஸ்லிம்கள் மேன்மை பெற சட்ட விதிகளை ஆராய்ந்து உரிய பாதுகாப்பு பெறும் வகையில் இதனை நிறைவேற்றியுள்ளோம். இதில் அரசியல் செய்வது தவறு” என்று கூறியுள்ளார்.
அதேவேளை பா.ஜ.க. கட்சியின் அந்த மாநிலத் தலைவர் கிருஷ்ண சாகர் ராவ் இது குறித்து கூறும் போது ‘குப்பைக் கூடைக்குள் போட வேண்டிய தீர்மானம் இது’ என்று வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த தீர்மானம் அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவதே சாலச் சிறந்தது. தன் கட்சியின் வாயிலாக, தன் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தால் சந்திர சேகர் ராவ் சாதித்துள்ளார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
க. குணசேகரன்.