தமிழக விவசாயிகளின் தீராப்போராட்டம்....

'விவசாயி' என்ற பெயரில் திரைப்படம் நடித்து, விவசாயிகளின் ஆதரவை அரசியலாக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் தொடங்கிய அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகள் பரிதாபத்துக்குரிய போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். பயிர் செய்ய மழையும் இல்லை. தண்ணீர் தந்த நதியும் இல்லை. பிழைக்க வழியும் இல்லை. இது தான் தமிழக விவசாயிகள் நிலைமை. தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் சுமார் 100 தமிழக விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்திய தலைநகர் தில்லியில் இருக்கும் ஜந்தர் மந்தர் திடலில் மார்ச் 14 தொடங்கி 41 நாட்கள் அறப்போராட்டம் நடத்தினார்.
தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர். பிரதமர் மோடியை சந்தித்து குறைகளை தெரிவிக்க வேண்டும் என்பது தான் போராட்டத்தின் இலக்காக இருந்தது. 41 நாட்களும் வெவ்வேறான வினோத போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் இறுதிவரையில் பிரதமர் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை.
இதனிடையே விவசாயிகளை சமாதானப்படுத்தவும் இதனால் தமிழக சூழலில் பாஜக செல்வாக்கு சரியாமல் பார்த்து கொள்ளவும் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருக்ஷ்ணன் தில்லியில் விவசாயிகளை சந்தித்துப் பேசினார். ஆனால் பிரதமரை சந்திக்க வைக்க அவரால் இயலாமல் போனது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தமிழக விவசாயிகள் கடன்தள்ளுடி அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணம் ஆகிடும் என்றார்.
ஆனால்,2004 ல் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இருந்த 60000 கோடி ருபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. அருண்ஜெட்லி வசதியாக இதை மறந்து விட்டார்.
தமிழக விவசாயிகள் போராட்டம் தொடங்கிய பின்னர் தான் உ.பி யில் பாஜக அரசு அமைந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து விட்டார். உ.பி யை உதாரணமாக கொண்டு எங்கள் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்றார்கள் தமிழக விவசாயிகள். தமிழக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கா? தமிழக அரசுக்கா? என்ற உரிமை பிரச்சனையும் வந்தது. தமிழக அரசே பொறுப்பு என்று தட்டி கழிக்கப் பார்க்குது தில்லி அரசு.
ஆனால் மத்திய அரசு வங்கிகளில் வாங்கியிருந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் ஒன்று. மத்திய வங்கிகளில் இருக்கும் கடன்களை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய முடியும். ஆனால் மாநில அரசின் பக்கம் விவசாயிகள் கடன்களை தள்ளிவிடப் பார்க்கிறது மத்திய அரசு. இந்த கடன்களுக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்குமானால் கூடுதல் கடன் சுமை ஏற்படும். அதனால் தமிழக அரசு விவசாயிகள் போராட்டத்தை சத்தமில்லாமல் தில்லி பக்கம் தள்ளிவிட்டது.
விவசாயிகளின் தில்லி போராட்டம் தமிழக செய்தி சேனல்களில் விவாதமானது. தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க ஒரு நாள் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். எலிக் கறி சாப்பிடுவதாக ஒரு நாள் போராட்டம் நடத்தினர். அது உண்மையில் தேசிய ஊடகங்களையும் ஈர்த்தது. தமிழகத்தில் இந்தப்போராட்டம் அனுதாபத்தை உண்டாக்கியது. இருந்தும் பிரதமர் விவசாயிகளை சந்திக்க மறுத்து வந்தது தமிழக மக்களுக்கு அதிருப்தி தந்தது.
ஜெயலலிதா இல்லாத தமிழக அரசை மிரட்டி கட்டுப்படுத்த நித்தம் ஒரு திட்டம் போட்டு செயல்படும் மோடி அரசு அதில் ஒரு கணப்பொழுதை கூட விவசாயிகளுக்கு ஒதுக்க விரும்பவில்லை.
பிரதமர் கூட்டிய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் 23 ஆம் நாள் தில்லி சென்றார். போன இடத்தில் தான் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை எடப்பாடி சந்தித்தார். பிரதமரிடம் விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றி பேசுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் திரும்பினார்கள் விவசாயிகள். அவர்களில் 10 பேர் உடல் நலம் குன்றி ஏற்கெனவே தமிழகம் திரும்பி இருந்தனர். 30 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் கோரிக்கையை ஏற்க தவறினால் மே 25 ல் மீண்டும் போராட்டம் தொடங்குவோம் என்றும் அய்யா கண்ணு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழக அரசுக்கு தன்னை காப்பாற்றிக் கொள்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இதில் விவசாயிகள் போராட்டத்தை எங்கே கவனிப்பது. விவசாயிகளின் குரலை மதித்து திமுக அனைத்து கட்சிகளை கூட்டி ஏப்ரல் 25 அன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தியது. இந்த போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் அது மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி தந்ததாக தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களுக்குப் பிறகு நடந்த பெரிய போராட்டம் தான் இது. தமிழகம் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான போக்கையே காட்டி வருகிறது. இத்தகைய போராட்டங்கள் தமிழகத்தில் பாஜகவுக்கான செல்வாக்கை மட்டுப்படுத்தும். மத்திய அரசு அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழக பாஜக பதறுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத அரசு விரைவில் அமைய வேண்டும். அதில் முதலமைச்சராக அமரவேண்டும் என்று தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் ஆர்வப்படுகின்றனர். மோடி அந்த ஆர்வத்தை மதிப்பதாகத் தெரியவில்லை. இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைவரையும் பகைத்துவிட்டு தமிழகத்தில் பாஜக எதனை அறுவடை செய்யும். மத்திய அரசு தமிழக பிரச்சனைகளை புறக்கணிப்பதில் ஒரு பழிவாங்குதல் இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.
உச்சநீதிமன்றம் உத்தரவு தந்த பிறகும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கிறது. மேலாண்மை வாரியம் அமையாமல் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. நதி நீர் பங்கீடு தொடர்பாக தேசிய அளவில் 8 வாரியங்கள் இருக்கின்றன. இந்த 8 யும் கலைத்துவிட்டு ஒரேயொரு மேலாண்மை வாரியம் அமைத்து அதையும் தன் பிடிக்குள் வைத்து கொள்ளவே மத்திய அரசு விரும்புகிறது.

vivasaye1
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அன்றைய மெட்ராஸ் மாகாண அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்தின் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை இப்போது ஏற்க சொல்வது அறிவுடைமை ஆகாது என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7 ஆம் நாள் தெரிவித்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு காவிரி நதிநீரைபங்கிடுவது தொடர்பாக Cauvery Water Dispute Tribunal ன் இறுதி முடிவினை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் மாநிலங்கள் மேல்முறையீடு செய்த மனுக்கள் பிப்ரவரி 7 ஆம் நாள் விவாதத்துக்கு வந்தன. கர்நாடகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி.என்.நாரிமன், "மைசூர் அரசுக்கும் மெட்ராஸ் அரசுக்கும் இடையில் 1892 மற்றும் 1924 ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் சுதந்திரத்துக்குப் பிறகு புதிய அரசியல் அமைப்புச்சட்டம் உண்டானதால் ரத்தாகி விட்டது. 1924 ஒப்பந்தத்துக்கு முந்தியது 1892 ஒப்பந்தம். அதில் மெட்ராஸ் அரசின் முன் அனுமதி இல்லாமல் காவிரியின் பாசன கட்டமைப்பில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் செய்யக்கூடாது என்று இருக்கிறது. சமரச தீர்ப்பாயங்கள் மூலம் தான் எந்த குறைபாட்டையும் சரி செய்ய வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது. 2002 ல் ஒருமுறை காவேரி தீர்ப்பாயத்தின் முன்பும் இதே கருத்தை கர்நாடகம் முன்வைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, மெட்ராஸ் மற்றும் மைசூர் அரசுகளின் நலன்களுக்காக பரஸ்பரம் கூடி பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்று வாதிட்டது. இதற்கு பதிலளித்த நாரிமன், இந்த ஒப்பந்தத்தை ஏற்கும்படி மைசூர் அரசு கட்டாயப்படுத்தப் பட்டிருக்கலாம் என்றார். இனி வரும் காலங்களில் தமிழக அரசு கர்நாடகம் மற்றும் மத்திய அரசுகளை காவிரி விசயத்தில் எதிர்க்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. இப்போதே தமிழக விவசாயிகள் சாவுக்கு இதய அடைப்பு தான் காரணம் என்று கூறியிருக்கிறது.
கர்நாடகம் ஒரு அழுத்தம் பெறாமல் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதாக இல்லை. இவ்வாண்டு இறுதியில் கர்நாடகத்தில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதுவரையில் மத்திய அரசு கர்நாடகம் விருப்பத்துக்கு மாறாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காது. இப்போதுள்ள அரசியல் சூழலில் தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக அரசும் மாநிலத்தின் எந்த உரிமைக்காகவும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்கப்போவதில்லை. ஒருவேளை தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு முன்வரலாம். ஆனால் தமிழகத்துக்கு மட்டும் குறிப்பிட்டு மத்திய அரசு வங்கி கடன்களை தள்ளுபடி செய்யமுடியுமா? என்பது தெரியவில்லை. இந்திய மத்திய வங்கி ஆளுனர் உர்ஜித் பட்டாலும் விவசாயிகள் வங்கி கடனை தள்ளுபடி செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அதுபோல் காவேரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு அமையும் சாத்தியம் இல்லை. எனவே விவசாயிகள் போராட்டம் முடிவுறா தொடர்கதையாக இருக்கப் போகிறது என்பதே உண்மை.