saleem

saleem

Write on செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018

7.10.2018 அன்று வேலூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பாரம்பரியமான மஹல்லா பேர்ணாம்பட்டில்"பொற்காலம் திரும்பட்டும்" நிகழ்ச்சி நடைபெற்றது.
வெகுவேகமாக மாறிவரும் இந்தியவின் சமூக அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த 30 ஆண்டுகளில்

Write on செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018

திருச்சியில் 14.10.2018 அன்று “நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மா - அறிவு - உடல் - வாழ்சூழல் ஆகியவைகள் சமூக கட்டுமானத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நான்கு தூண்களும் உறுதிமிக்கதாக எழுப்பப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் சமூகமே பூமியில் மனித சமூகத்திற்கு தலைமைதாங்கும் என்ற செய்தியை சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சி திருச்சி தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

Write on செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018

தில்லி முஸ்லிம்கள் மாநாடு
(1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பின் தில்லி ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற தில்லி முஸ்லிம்கள் மாநாட்டில் மாவுலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை)
தமிழில் : ஃபைஸ் காதிரி
என் சொந்தங்களே! என்னை இங்கு அழைத்து வந்தது எது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஷாஜஹானின் இந்தப் பள்ளிவாசலில் இந்த மாநாடு நடைபெறுவது எனக்கு புதிய ஒன்றல்ல. இரவு பகலின் பல சுழற்சிகளைக் கடந்துவிட்ட அந்தக் காலத்திலும் இங்கிருந்துதான் நான் உங்களிடம் உரையாற்றினேன்.
அப்போது உங்களின் முகங்களில் நிம்மதியின்மைக்கு பதிலாக அமைதி இருந்தது. உங்கள் இல்லங்களில் ஐயத்திற்குப் பதிலாக நம்பிக்கை இருந்தது.
இன்று உங்கள் முகங்களில் நிம்மதியின்மையையும் உள்ளங்களில் வெறுமையையும் பார்க்கும் போது மறந்து போன கடந்த சில ஆண்டுகளின் கதைகள் எனக்குத் தாமாகாவே நினைவுக்கு வந்து விடுகின்றன.
உங்களுக்கு நினைவிருக்கும் நான் உங்களை அழைத்தேன் நீங்கள் என் நாவைத் துண்டித்தீர்கள்! நான் நடக்க விரும்பினேன்; நீங்கள் என் கால்களை வெட்டி விட்டீர்கள்! நான் புரண்டு படுக்க விரும்பினேன்; நீங்கள் என் இடுப்பை ஒடித்தீர்கள். எதுவரை என்றால் இன்று பிரிவுத் துயரை உங்களுக்கு அளித்துச் சென்றுவிட்ட கடந்த ஏழாண்டுகளில் கசப்பான அரசியலை அதுதான் இளமைக் காலத்தில் இருந்தபோதும் கூட நான் ஆபத்தின் நெடுஞ்சாலையில் நின்று உங்களைப் பிடித்தசைத்தேன். ஆனால் நீங்கள் என் குரலைத் தவிர்த்தது மட்டுமின்றி அலட்சியத்திற்கும் மறுப்புக்குமான அனைத்துவித வழிமுறைகளையும் உயிர்ப்பித்தீர்கள். இதன் விளைவை அறிவோம்!
எதற்கான அச்சம் உங்களை நேரான பாதையிலிருந்து விலகிச் சென்றதோ அந்த ஆபத்துகளே உங்களைச் சூழ்ந்து கொண்டன. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் நான் உறைந்து போன ஒன்றாகவோ, தன் சொந்த நாட்டிலேயே அந்நிய நாட்டில் வாழும் ஒருவனின் மிகத் தொலைவில் ஒலிக்கும் குரலாகவோ இருக்கிறேன்.
இதனால் தொடக்கத்திலேயே நான் எனக்காகத் தேர்வு செய்து வைத்திருந்த இடத்தில் என் சிறகுகள் முறிக்கப்பட்டுவிட்டன என்றோ கூடு கட்ட எனக்கு அங்கே இடமில்லை என்றோ அர்த்தமில்லை. மாறாக நான் சொல்ல விரும்புவதெல்லாம் என் யாசக மடிக்கு உங்கள் கைகளின் கொடுமைகள் மீது முறையீடு உண்டு. என் உணர்வு காயம்பட்டிருக்கிறது; என் இதயம் துயரமடைந்து இருக்கிறது. நீங்கள் ஏற்றுக்கொண்ட பாதை எது? எங்கு சென்றீர்கள்? இப்பொழுது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? என்பதையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்! இது அச்சத்திற்குரிய வாழ்க்கை இல்லையா? உங்களுடைய புலன்களில் உணர்வின்மை வந்து விடவில்லையா? இந்த அச்சம் நீங்களாகவே வரவழைத்துக் கொண்டது. இது உங்களுடைய சொந்த செயல்களுக்கு கிடைத்த பலன்.
சிலநாட்களுக்கு முன்தான் நான் கூறினேன் “இரு சமூகக் கொள்கை” உண்மையான வாழ்க்கைக்கு மனநோயாக இருக்கிறது அதை விட்டுவிடுங்கள். நீங்கள் நம்பியிருக்கும் இந்த தூண்கள் மிக வேகமாக உடைந்துகொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் கேள்விப்பட்டதையும் கேள்விப்படாததையும் சமமாக்கி விட்டீர்கள்.
நேரமும் அதன் வேகமும் உங்களுக்காகத் தம்முடைய விதிமுறைகளை மாற்றிக்கொள்ளாது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. நேரத்தின் வேகம் நின்றுவிடவில்லை. எந்த ஆதரவுகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்ததோ அவை உங்களை அனாதை என எண்ணி விதியிடம் ஒப்படைத்து விட்டன. அந்த விதி என்பது உங்களுடைய “மனநிலை அகராதியின்” நோக்கத்திலிருந்து மாற்றமான பொருளைக் கொண்டது. அதாவது அவர்களிடம் துணிவின் பற்றாக்குறைக்குப் பெயர்தான் விதி என்பது.
ஆங்கிலேயர்களின் அதிகாரம் உங்களுடைய விருப்பத்திற்கு எதிராக கவிழ்க்கப்பட்டுவிட்டது. நீங்களாகவே வார்த்துக்கொண்ட வழிகாட்டல்களின் அந்தச் சிலைகளும் உங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டன. ஆனால், அந்த அதிகாரம் நிரந்தரமானது என்றும் அந்தச் சிலைகளை வணங்குவதில்தான் வாழ்க்கை உண்டு என்றும் நீங்கள் கருதியிருந்தீர்கள். நான் உங்களுடைய காயங்களைக் கிளற விரும்பவில்லை. உங்களுடைய உங்களுடைய நிம்மதியின்மையை அதிகரிக்கச் செய்வது என் ஆசையுமல்ல. ஆனால், கொஞ்சம் கடந்த காலத்தின் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்த்தால் உங்களுக்கான பல முடிச்சுகள் அவிழ்ந்துவிடலாம். ஒரு காலம் இருந்தது அதில் நான் இந்தியநாட்டின் விடுதலையைப் பெற உணர்வூட்டும் வண்ணமாக உங்களுக்கு குரல் கொடுத்து இவ்வாறு கூறினேன்.maulana-abul-kalam-lead-maulana-azad-125-birth-anniversary 730x419
“நிகழவிருப்பதை எந்த ஒரு சமூகமும் தன்னுடைய தீய பண்புகளால் தடுத்துவிடமுடியாது. இந்தியாவின் விதியில் அரசியல் புரட்சி எழுதப்பட்டுவிட்டது அதன் அடிமைச் சங்கிலிகள் இருபதாம் நூற்றாண்டின் விடுதலைக் காற்றால் கழன்று விழப்போகின்றன. நீங்கள் காலத்தின் தோளோடு தோள் சேர்த்து காலடியை எடுத்து வைக்காமல் முடங்கிப் போன தற்போதைய வாழ்கையையே வழக்கமாகக் கொண்டிருந்தால், ‘ஏழு கோடி மனிதர்களின் தொகுதியாக இருந்த உங்கள் கூட்டம் சுதந்திரம் தொடர்பாக ஏற்றுக்கொண்டிருக்கும் போக்கு என்பது பூமியிலிருந்து சமூகங்கள் ஏற்ற வழிமுறை’ என்று எதிர்கால வரலாற்று அறிஞன் எழுதுவான். இன்று இந்திய தேசியக் கொடி எண்ணற்ற முறையீடுகளோடு காற்றில் அசைந்துகொண்டிருக்கிறது. எந்தக் கொடியின் உச்சத்தைக் கண்டு அதிகாரச் செருக்கு கொண்டவர்களின் காயப்படுத்தும் வெடிச் சிரிப்பு எள்ளி நகையாடிக் கொண்டிருந்ததோ அந்தக் கொடிதான் இது!”
காலம் உங்களுடைய ஆசைக்கிணங்க வளைந்து கொடுக்கவில்லை என்பது உண்மைதான். மாறாக அது ஒரு சமூகத்தின் பிறப்புரிமையை கண்ணியப்படுத்துவதற்காக திசை திரும்பி இருக்கிறது. திசைமாறி உங்களைப் பெருமளவில் அச்சமூட்டிவிட்ட அந்தப் புரட்சி இதுதான். உங்களிடமிருந்து ஒரு நல்ல பொருள் பறிக்கப்பட்டு விட்டதென்றும் அந்த இடத்தில் ஒரு தீய பொருள் வந்து விட்டதென்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆமாம், நீங்கள் நிம்மதியற்று இருப்பதெல்லாம் உங்களை நீங்கள் நல்ல பொருளுக்காகத் தயார்படுத்திக் கொள்ளாமல் தீய பொருளையே தன் புகலிடமாகக் கருதிக் கொண்டதன் விளைவே! அதாவது நான் சொல்ல வருவது அந்நிய நாட்டின் அடிமைத்தனத்தை! அதன் கரங்களில் அதிகாரம் பேராசையின் விளையாட்டுப் பொருளாக நீங்கள் பல ஆண்டுகள் வாழ்க்கையைக் கழித்திருக்கிறீர்கள்! ஒருகாலம் இருந்தது அதில் சமூகத்தின் பாதங்கள் ஒரு போரின் தொடக்கத்தை நோக்கியவையாக இருந்தன. ஆனால், இன்றோ நீங்கள் அந்தப் போரின் விளைவைக் கண்டு நிம்மதியிழந்து நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அவசரகதியைப் பற்றி நான் என்ன சொல்வேன்? பயணத் தேடலே இங்கு முடிவடையாத நிலையில் அங்கு வழிபிறழ்வுக்கான ஆபத்து எதிரே வந்து நிற்கிறது.
என் சகோதரர்களே! நான் அரசியலை எப்பொழுதும் ஆளுமைகளை விட்டு விலக்கி வைக்கவே முயன்றிருக்கிறேன். நான் முட்கள் நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கில் கால்பதித்ததில்லை. அதனால்தான் என்னுடைய பல பேச்சுகள் மறைமுகச் சுட்டுதலைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று நான் சொல்ல வேண்டியதை எவ்விதத் தடையுமின்றி சொல்ல விரும்புகிறேன். ஒன்றுபட்ட இந்தியாவின் பிரிவினை அடிப்படையிலேயே தவறாக இருந்தது. மார்க்கக் கருத்துவேறுபாடுகள் தூண்டப்பட்ட முறையின் தவிர்க்க இயலாத விளைவுதான் நாம் கண்ணால் கண்ட பாதிப்புகளும் காட்சிகளும். துரதிஷ்டவசமாக நாம் வேறுபகுதிகளில் இன்றும்கூட இதைக் கண்டு வருகிறோம்.azad 6
கடந்த ஏழாண்டுகளின் அறிக்கையை மீண்டும் ஒப்புவிப்பதில் எந்தப்பயணமில்லை. அதனால் எந்த நல்ல விளைவும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும் இந்திய முஸ்லிம்களின் மீது வந்துநிற்கும் பெருவெள்ளம் என்பது சந்தேகமின்றி (பாகிஸ்தானிய) முஸ்லிம் லீக்கின் தவறான தலைமையின் வெளிப்படையான பிழைகளின் விளைவே! ஆனால் எனக்கு இது புதிதானது ஒன்றுமில்லை. நாள் கடந்த காலத்திலேயே இந்த விளைவுகளை அறிந்திருந்தேன்.
தற்பொழுது இந்திய அரசியலின் திசை மாறிவிட்டது.

(பாகிஸ்தானிய) முஸ்லிம் லீக்கிற்கு இங்கு எந்த இடமும் இல்லை.

நாம் சிறந்த முறையில் சிந்திக்கத் தகுந்தவர்களா என்பதெல்லாம் இப்பொழுது நம்முடைய சொந்த மூளையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, நான் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்திய முஸ்லிம் தலைவர்களை தில்லி அழைக்க எண்ணியுள்ளேன். அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அச்சத்தின் பருவம் தற்காலிமானது. நம்மைத் தவிர யாரும் நம்மை வீழ்த்திவிட முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதிபடத் தெரிவிக்கிறேன். நான் அன்றும் சொன்னேன் இன்று மீண்டும் சொல்கிறேன். இந்தத் தடுமாற்றப் பாதையை விட்டுவிடுங்கள்! சந்தேகத்தை கைவிடுங்கள்! தீய செயல்பாடுகளை விட்டுவிடுங்கள்!
நாடு துறத்தல் எனும் புனிதப் பெயரைக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தப்பிப் பிழைத்தலைக் கூர்ந்து கவனியுங்கள்! உங்களுடைய இதயங்களை உறுதிபடச் செய்யுங்கள்! மூளைக்குச் சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்! உங்களுடைய இந்த முடிவுகள் எத்தனை கொடூரமானவை என்பதைப் பிறகு பாருங்கள்! நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக சென்று கொண்டு இருக்கிறீர்கள்?
இதோ பாருங்கள்! இந்தப் பள்ளிவாசலின் உயர்ந்த மினாராக்கள் தாவி வந்து உங்களிடம் “உங்களுடைய வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்து விட்டீர்கள்?” என்று கேட்கின்றன. யமுனை நதிக்கரையில் உங்களுடைய பயணக் கூட்டம் ‘ஒளு’ செய்து அதிகக் காலம் கடந்து விடவில்லை. அவ்வாறிருக்க நீங்களோ இன்று இங்கு தங்குவதற்கே அச்சம் கொள்பவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் தில்லியில் உங்கள் ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
என் சொந்தங்களே! உங்களுக்குள் அடிப்படையானதொரு மாற்றத்தை உருவாக்குங்கள். சில காலத்திற்கு முந்தைய உங்கள் ஆர்வமும் விருவிருப்பும் தவறாக இருந்ததைப் போலவே உங்களுடைய இன்றைய அச்சமும் தவறானதே!
முஸ்லிம்களும் கோழைத்தனமும், முஸ்லிம்களும் வன்முறையும் ஓரிடத்தில் ஒன்று சேராதவை. முஸ்லிம்களைப் பேராசையால் அசைக்கவும் முடியாது எந்தவொரு அச்சத்தாலும் அச்சுறுத்தி விடவும் முடியாது. சில முகங்கள் காணாமல் போய்விட்டதால் அச்சம் கொள்ளாதீர்.
அவர்கள் உங்களை அழைத்துச் செல்ல ஒன்று திரட்டினார்கள். இன்று அவர்கள் உங்கள் கைகளின் மீதிருந்த தம் கைகளை எடுத்துக் கொண்டார்களெனில் இதில் அவமானத்திற்கு ஒன்றுமில்லை. இதோ பாருங்கள்! உங்கள் இதயம் அவர்களோடு சென்றுவிடவில்லை. உங்கள் இதயங்கள் உங்களோடுதான் இருக்கின்றதென்றால் அதை இறைவனுக்குரிய இடமாக்குங்கள்! அந்த இறைவன் பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு(நபிய)வரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான் “நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்வே’ என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்க.” (உலகப் பொதுமறை குர்ஆன் 46:13)
காற்று வரும் சென்று விடும். இது புயலாகவே இருக்கட்டும். ஆனால் இதற்கு அதிகமான வயதொன்றும் இல்லை. கண்களுக்கு எதிரே நிற்கும் இன்னல்களின் இந்தப் பருவம் கடக்கப் போகிறது. முன்னர் எப்பொழுதும் இந்நிலையில் இருந்ததே இல்லை என்பது போல நீங்கள் மாறி விடுங்கள்.
உரையில் கூறியது கூறல் என் வழக்கமல்ல. ஆனால், உங்களுடைய அலட்சியப் போக்கில் காரணமாக மூன்றாவது சக்தி தன் தலைக்கனத்தின் சுமையை எடுத்துச் சென்றுவிட்டது என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. நடக்க வேண்டியது நடந்து முடிந்தது. அரசியல் மனநிலை தன் பழைய வார்ப்படத்தை உடைத்து விட்டது. இப்பொழுது புதிய வார்ப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது உங்களுடைய உள்ளத்தின் நிலை மாறவில்லையெனில், உங்களுடைய மனங்களின் நெருடல்கள் தீரவில்லையெனில் நிலைமை வேறு. ஆனால் உண்மையாகவே உங்களுக்குள் மாற்றத்தின் ஆசை பிறந்துவிட்டது எனில் வரலாறு தன்னை மாற்றிக் கொண்டதைப்போல மாறிவிடுங்கள். ஒரு புரட்சிக் காலத்தை நிறைவு செய்திருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட, நமது நாட்டின் வரலாற்றில் சில பக்கங்கள் காலியாக உள்ளன. அந்தப் பக்கங்களின் தலைப்புகளாக நம்மால் அழகு சேர்க்க இயலும். ஆனால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதியாக இருக்கிறது.
என் சொந்தங்களே! மாற்றங்களோடு பயணம் செய்வீர்களாக! மாற்றங்கள் குறித்து நாங்கள் தயாராக இருக்கவில்லை என்று கூறாதீர்கள். மாறாக இப்பொழுது தயாராக இருக்கவில்லை என்று கூறாதீர்கள். மாறாக இப்பொழுது தயாராகி விடுங்கள். நட்சத்திரங்கள் உதிர்ந்து விட்டன. ஆனால், சூரியன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அதனிடம் கிரணங்களைப் பெற்று வெளிச்சத்தை வேண்டும் இந்த இருள் சூழ்ந்த பாதைகளில் பரப்பி விடுங்கள்.
“அதிகார அரசின் கல்லூரியிலிருந்து விசுவாசத்தின் சான்றிதழைப் பெற்று அந்நிய நாட்டு ஆட்சியாளர்களின் காலத்தில் உங்கள் வழக்கமாக இருந்த பிச்சைப் பாத்திரம் ஏந்திய வாழ்க்கையை நீங்கள் கடைபிடியுங்கள்” என்று நான் உங்களிடம் கூறவில்லை.
நான் கூறுவதெல்லாம் இதுதான், இந்தியாவின் கடந்த காலச் சின்னங்களாக வெண்ணிற வேலைப்பாடுகள் தெரிகின்றனவே அவை உங்கள் பயணக் கூட்டத்தைச் சார்ந்தவையே.Prime Minister Jawaharlal Nehru with his cabinet including Dr Babasaheb Ambedkar the then law minister sitting down for a meal
அவற்றை மறக்காதீர்! அவற்றை விடாதீர்! அவற்றின் வாரிசுகளாக இங்கே இருங்கள். நாட்டைத் துறக்க நீங்கள் தயாராக இல்லையெனில் பிறகு எந்த சக்தியாலும் உங்களைத் துரத்திவிட முடியாது. வாருங்கள்! இந்த நாடு நம்முடையது. இதற்கான விதியின் அடிப்படை முடிவுகள் நம்முடைய குரலின்றி அரைகுறையானதே!
இன்று நீங்கள் பூகம்பத்திற்கு அச்சம் கொள்கிறீர்கள். ஒரு காலத்தில் நீங்களே பூகம்பமாக இருந்தீர்கள். இன்று இரவைக் கண்டு நடுங்குகிறீர்கள். உங்கள் சுயமே வெளிச்சமாக இருந்தது உங்களுக்கு நினைவில்லையா? மேகங்கள் அழுக்கு நீரைப் பொழிந்ததால் நனைந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் கீழாடையை உயர்த்திக் கொண்டவர்கள் நீங்கள். சமுத்திரத்தில் இறங்கியவர்களும் மலைகளின் நெஞ்சை மிதித்து நசுக்கியவர்களும் எதிரே வந்த மின்னல்களைப் பார்த்து புன்னகைத்தவர்களும் உங்களுடைய முன்னோர்கள்தாம். இடி இடித்தபோது சிரிப்பொலியால் பதிலளித்தவர்கள் அவர்கள். வெள்ளம் வந்த போது அதன் திசையை மாற்றியவர்கள் புயல்காற்று வீசியபோது அதனிடம் இது உன் பாதையல்ல என்று கூறியவர்கள்.
மன்னர்களின் எழுத்துச் சட்டைகளைப் பிடித்தசைத்தசைத்தவர்கள் தற்பொழுது சொந்த கழுத்துச் சட்டையோடு விளையாடிக் கொண்டிருப்பதென்பது விசுவாசத்தின் மரணத் தருவாயாக இருக்கிறது. மேலும், இறைநம்பிக்கையே இருந்ததில்லை என்று கூறும் அளவிற்கு இறைவனை அலட்சியப்படுத்தி விட்டோம்.
என் சொந்தங்களே! என்னிடம் உங்களுக்கான புதிய வழிமுறை ஏதும் இல்லை. பல ஆண்டுகள் பழமையான அதே வழிமுறைதான் என்னிடம் இருப்பது. அந்த வழிமுறையைக் கொண்டு வந்தவர் மனிதப் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கொடையாளர் அந்த வழிமுறை திருக்குர்ஆனின் இந்தப் பிரகடனம்தான் : “எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள்தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (உலகப் பொதுமறை குர்ஆன் 3 :139)
இன்றைய சந்திப்பு முடிவுகிறது. சொல்ல வேண்டியவற்றை நான் சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டேன். தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்கிறேன். உங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வையுங்கள். உங்களைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை நீங்களே உருவாக்குங்கள். பெற்றுத்தர இது கடையில் கிடைக்கும் பொருளல்ல. இது உள்ளத்தின் கடையில் மட்டுமே நற்செயல்களில் ரொக்கத்தால் கிடைக்கப் பெறுவது!
வஸ்ஸலாமு அலைக்கும்

Write on செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018

 சேயன் இப்ராகிம்

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்

வடஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) வந்தவாசிக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. 22.01.1760 அன்று இங்கு நடைபெற்ற மூன்றாவது கர்நாடகப்போரில் அயர்புட் தலைமையிலான ஆங்கிலேயக் கம்பெனிப்படை, தாமஸ் ஆர்தர் தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தது.
இப்போரின் மூலம் இந்தியாவில் பிரான்ஸ் நாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. அவர்கள் படிப்படியாக இந்தியாவிலிருந்த அனைத்து பெரிய, சிரிய அரசர்களை வென்று முழு இந்தியாவையும் தங்களது குடையின் கீழ் கொண்டு வந்தனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசி நகரில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் தவிர, தமிழ் நாட்டின் தென்பகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் இந்நகருக்குப் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியுள்ளனர். இந்நகரில் பிறந்த சமூதாயச் சேவையாளர் ஜனாப் கே.ஏ. வகாப் அவர்களைப்பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
கே.ஏ.வகாப் 12.06.1932 அன்று வந்தவாசியில் அப்துல் ஹமீது சாகிப் - ருக்கையா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் அப்துல் ஹமீது சாகிப் வந்தவாசியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார். வந்தவாசி பெரிய பள்ளிவாசலின் முத்தவல்லியாகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அன்றையக் காலகட்டத்தில் வந்தவாசியிலிருந்து மக்கா சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றித் திரும்பிய இரண்டாவது முஸ்லிம் இவர் என்றது குறிப்பிடத்ததக்கது.

வகாப் சாகிப் தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை வந்தவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளியின் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சென்னை சென்று அங்குள்ள அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயின்று கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னை புதுக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்த சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிப் மற்றும் நீடூர் சயீது ஆகியோருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. கல்லூரியில், தமிழ்ச் சங்கச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவை அழைத்துச் சிறப்புக் கூட்டம் நடத்தினார்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் அவர் அரசுப் பணியில் சேர ஆர்வம் காட்டவில்லை. சட்டக் கல்லூரியில் சேர்ந்து சில மாதங்களே அங்கு பயின்று விட்டு இடையிலேயே ஊர் திரும்பினார். தனது தந்தையார் நடத்தி வந்த பாத்திரக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தார். தந்தையாரின் மறைவிற்றுப் பின்னர், கடையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். பாத்திரங்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கினார். நகரின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவராக உயர்ந்தார். நகர வர்த்தக சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார்.
வந்தவாசியில், பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் கோரைப்பாய் நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருந்தனர். இந்த நெசவாளர்களுக்கு கட்டுபடியாகின்ற விலை கிடைக்க வேண்டு மென்பதற்காகவும். அரசு வழங்குகின்ற உதவிகளை முறையாகப் பெறவேண்டு மென்பதற்காகவும், அவர்களை ஒன்று திரட்டி கூட்டுறவு சங்கம் ஒன்றை அமைத்தார். அந்த சங்கத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் தலைவராகவும் பல ஆண்டுகள் பதவிவகித்தார்.
அரசியல் ஈடுபாடு :
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபுடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக மாணவப் பருவத்திலேயே முஸ்லிம் லீகில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்து ஊர் திரும்பியதும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். விரைவிலேயே நகர முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்தார். நாளடைவில் தனது ஈடுபாடு காரணமாக மாநில முஸ்லிம் லீக் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். மாநில அளவிலும் பல பொறுப்புகள் இவரைத் தேடிவந்தன.
1977 ஆம் ஆண்டு முதல் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபின் மறைவிற்குப் பின்னர், 19.05.1999 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில முஸ்லிம் லீக் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகயிருந்த பேராசிரியர் காதர் முகையதீன் சாகிப் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வகாப் சாகிப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கபட்டார். மரணிக்கும் வரை அவர் அப் பொறுப்பில் இருந்து திறம்படப் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு வந்தவாசி நகரில் மாவட்ட முஸ்லிம் லீக் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். இக் கூட்டத்தில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்தார். 1958ஆம் ஆண்டு தனது 26வது வயதிலேயே வந்தவாசி பேரூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1978ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். பின்னர். 1986ஆம் ஆண்டு நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு (இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களித்து தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.) அ.தி.மு.க வேட்பாளரான பாலு முதலியாரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகள் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
பேரூராட்சித் தலைவராகவும், நகராட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றிய காலத்தில் வந்தவாசி நகரில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். குறிப்பாக மக்களின் நீண்ட காலப் பிரச்னையான குடிநீர்ப் பிரச்னையை தீர்ப்பதற்காக செய்யாறு நகரிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றி மக்களின் தாகம் தீர்த்தார்.

தேர்தல் அரசியலில் :
சட்ட மன்றத் தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட கட்சி இவருக்கு பல முறை வாய்ப்பளித்தது. 1971ஆம் ஆண்டு இராணிப் பேட்டை தொகுதியிலும், 1977 ஆம் ஆண்டு அதே தொகுதியிலும். 1980ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியிலும், 1989ஆம் ஆண்டு துறைமுகம் தொகுதியிலும், 1996ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி தொகுதியிலும் முஸ்லிம் லீகின் வேட்பாளராகப் போட்டியிட்டார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வந்தவாசித் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவற்றுள் 1971ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றார். பிற தேர்தல்களில் இவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. 1980ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் 940 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

muthaal1muthal 2

1971ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்ட இவர், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி. ரங்கநாத நாயக்கரை விட 5385 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் இவருடன் மேலும் ஐந்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டிருந்தனர்.
1. சென்னை துறைமுகம் - திருப்பூர் மைதீன்
2. புவனகிரி - எம்.ஏ. அபூ சாலிஹ்
3. அரவாக்குறிச்சி - வி.எம். அப்துல் ஜப்பார், பி.ஏ.
4. வாணியம்பாடி - எம்.ஏ. அப்துல் லத்தீப்
5. மேலப்பாளையம் - எஸ். கோதர் முகையதீன்
இந்த அறுவர் கொண்ட முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சிக்கு திருப்பூர் முகையதீன் தலைவராக இருந்தார். இந்த சட்டமன்றத்தில் தான் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஆறுபேர் இருந்தனர். அதற்கு முன்னரும் இல்லை பின்னரும் இது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1977ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் அ.இ.அ.தி.மு.க கூட்டணியிலும் 1980ஆம் ஆண்டு தி.மு.க கூட்டணியிலும், 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலும், 1996ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியிலும் 1999ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் இவர் சென்னை துறைமுகம் தொகுதியில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை எதிர்த்தும், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை திருவல்லிக் கேணியில் தி.மு.க வின் நாஞ்சில் மனோகரனை எதிர்த்தும் முஸ்லிம் லீக் வேட்பாளராகக் களத்தில் இருந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் :
1971-1976 ஆம் ஆண்டுகளில் இராணிப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவிவகித்த வகாப் சாகிப், சட்டமன்ற நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார். முஸ்லிம்களின் நலன்கள், உரிமைகள் சார்ந்த பிரச்னைகள் குறித்தும், தொகுதியின் பிரச்னைகள் குறித்தும் மற்றும் மக்களைப் பாதித்த பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்தும் சட்டமன்றத்தில் பேசினார். இராணிப்பேட்டையில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைந்திடப் பாடுபட்டார்.

சட்டமன்றத்தில் பல்வேறு மானியக் கோரிக்கைகளில் கலந்து கொண்டு பேசிய வகாப் சாகிப், தனது பதவிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமிருந்து பதில்களைப் பெற்றுள்ளார். வக்ப் போர்டு சார்பில் சென்னை நகரில் கல்லூரி நிறுவப்பட வேண்டுமென்றும், மாணவிகளின் கிளர்ச்சி காரணமாக அப்போது மூடப்பட்டிருந்த சென்னை எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரியைத் திறப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், வடஆற்காடு மாவட்டத்திலுள்ள பீடித் தொழிலாளர்களின் பிரச்னை குறித்தும், வந்தவாசியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வக்ப் போர்டின் சார்பில் மருத்துவக் கல்லூரியும், தொழில் நுட்பக் கல்லூரியும் தொடங்கப்பட வேண்டுமென்றும், வந்வாசி கோரைப்பாய் நெசவாளர்களின் பிரச்னைகள் குறித்தும். உருது மொழி பேசும் முஸ்லிம்களைப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும், மதுவின் தீமைகள் குறித்த செய்திகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறவேண்டுமென்றும், தனித் தொகுதிகளாக உள்ள வந்தவாசி, ஆம்பூர், பேர்ணாம்பட்டுத் தொகுதிகளைப் பொதுத் தொகுதிகளாக மாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக தகுதி படைத்த முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும், இப்படிப் பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இவரது சட்டமன்றப் பணிகள் அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டன.
11.08.1973 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது உரையாற்றிய சட்டமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ‘நாடெல்லாம் கள்வர் கூட்டம்’ என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடினார் அவருக்குப் பின் உரையாற்றிய வகாப் சாகிப் அதேபோல் ‘நாடெல்லாம் கள்வர் கூட்டம்’ என்று தொடங்கும் கீழ்க்கண்ட பாடலைப் பாடி தனது உரையை நிறைவு செய்தார்.
நாடெல்லாம் கள்வர் கூட்டம்
நல்லவர் இல்லை என்று
பாடலை ஏற்றுக் கொண்டால்
நாமெல்லாம் கள்வராவோம்
வீடெல்லாம் இன்பம் வேண்டும்
வேதனை தொலைய வேண்டும்
நாடெல்லாம் செழிக்க வேண்டும்
நல்லவர் பெருக வேண்டும்
காடெல்லாம் திருத்தி நல்ல
கழனியாய் ஆக்க வேண்டும்
பாட்டாளி வாழ வேண்டும்
பண்புகள் பெருக வேண்டும் என்று
பாடெல்லாம் பட்டு வரும்
பண்பட்ட தமிழராட்சி
வாழவே கை கொடுப்போம்
வளரவே ஒத்துழைப்போம்
சட்டமன்ற உறுதி மொழிக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்த வகாப் சாகிப் 1974ஆம் ஆண்டு டெல்லி சென்று அப்போதையப் பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களைச் சந்தித்து வந்தவாசி கோரைப் பாய் நெசவாளர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்தார். கோரைப் புல்லை விவசாய விளைபொருளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரைப்பாய் நெசவாளர்களின் கோரிக்கையை அப்போது வலியுறுத்தினார்.

சமயப் பணிகள் :
பல்வேறு அரசியல் பணிகளுக்கிடையிலேயும், சமயப் பணிகளிலும் வகாப் சாகிப் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1960ஆம் ஆண்டு தி.மு.க பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணாவையும். முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபையும் அழைத்து வந்து வந்த வாசியில் மிகப் பெரும் மீலாது மாநாடு ஒன்றை நடத்தினார். தனது தந்தையாரைப் போலவே வந்தவாசி பெரிய பள்ளிவாசலை நிர்வகிக்கும் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மரணிக்கும் வரை அந்தப் பள்ளி வாசலின் நிர்வாகத்தில் ஏழாவது ஒரு பொறுப்பிலிருந்து பணியாற்றினார். பள்ளிவாசலின் பொருளாளராக இருந்த போது வந்தவாசி நகரப் பேருந்து நிலையத்தில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காலியிடத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டார். அதன் மூலம் பள்ளிவாசலின் வருமானம் பெருகியது.
பின்னர் அந்தப் பள்ளி வாசலின் முத்த வல்லியாகத் தேர்ந்தெடுக்கபடப்டார். தனது பதவிக் காலத்தில் வந்தவாசி நகரின் புறநகர்ப் பகுதிகளான காயிதே மில்லத் நகரிலும், சீதக்காதி நகரிலும் புதிய பள்ளிவாசல்கள் கட்டி அவற்றை சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமதை சாகிபைக் கொண்டு திறப்பு விழா நடத்தினார். பெரிய பள்ளி வாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு திருமண மண்டபம் கட்டினார். (அவரது மறைவிற்குப் பின்னர் இந்த கல்யாண மண்டபத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது) மேலும் அல்ஹஸனதுல் ஜாரியா என்ற அரபிக் கல்லூரியையும் ஜமாத் சார்பில் தொடங்கி நடத்தி வந்தார்.

எழுத்து :
மாணவப் பருவத்திலேயே மணிவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு ஆகிய இதழ்களில் சமயம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதினார். பின்னர் தெடர்ந்து ‘வந்தவாசி வகாப்’ என்ற தலைப்பில் முஸ்லிம்லீக் இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். அமீரக நாடுகளில் பயணம் மேற்கொண்ட போது எற்பட்ட அனுபவங்கள் குறித்து ஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம் என்ற தலைப்பிலும், தனது ஹஜ் பயண அனுபவங்களைத் தொகுத்து ‘ புனித ஹஜ் பயண அனுபவங்கள்’ என்ற தலைப்பிலும் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
பண்பு நலன்கள் :
வகாப் சாகிப், அனைத்து சமய மக்களாலும் மதிக்கப்பட்டவராகத் திகழ்ந்தார். சாதி, சமய பேதமின்றி தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வார். பல படித்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற உதவியுள்ளார். அதன் காரணமாகவே இந்து சமய மக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் வந்தவாசியின் பேரூராட்சி/நகராட்சித் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாகிபுடன் அவருக்கு கல்லூரி நாட்களில் ஏற்பட்ட உறவு தொடர்ந்து பல்லாண்டுகள் நீடித்தது. அவரின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்தார். ஜப்பான், சிங்கப்பூர், தைவான், மலேசியா, பர்மா, ஹாங்காங், அரேபியா, அமீரக நாடுகள் ஆகியவற்றுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
குடும்பம் :
வகாப் சாகிபிற்கு 1953 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ஹஜ்ஜா பீவி. இத்தம்பதியினருக்கு ரஜியா சுல்தானா என்ற மகளும், அப்துல் காதர் ஷெரீப் என்ற மகனும் உண்டு. மகன் தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இறுதி நாட்கள்:
2004ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகையதீனை ஆதரித்து வகாப் சாகிப் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 5.5.2004 அன்று தேர்தல் பணி நிமித்தம் சென்னை சென்ற அவர் தி.மு.க பிரமுகர் முஸ்தபா என்பவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிட்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார்.
வகாப் சாகிப் தனது வாழ்நாள் முழுவதையும் சமூகப் பணிக்கும் சமுதாயப் பணிக்குமே செலவிட்டார். அவர் ஒரு மிகச் சிறந்த சேவையாளராக, மக்கள் தலைவராக விளங்கினார். அவரது அரிய பணிகள் வந்தவாசி நகர மக்களாலும் அந்த மாவட்ட மக்களாலும் என்றென்றும் நினைவு கூரப்படும் என்பது திண்ணம்.
குறிப்பு:
வகாப் சாகிப் குறித்த தகவல்களைத் தந்திட்ட திருவண்ணாமலை மாவட்ட முஸ்லிம் லீக் கௌரவத் தலைவர் டி.எம். பீர்முகம்மது அவர்களுக்கும் வகாப் சாகிபின் மகனார் அப்துல் காதர் ஷெரீப்புக்கும் எனது நன்றி

கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள .... 99767 35561

Write on புதன்கிழமை, 28 நவம்பர் 2018

வணக்கம் புரிபவரை விட ஓர் அறிஞரின் சிறப்பு நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பை போன்றதாகும். அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகள். இறைத்தூதர்கள் தங்கம், வெள்ளி நாணயங்களை அனந்தரப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் “இல்ம்” என்ற ஞானத்தைத்தான். அதை எடுத்துக்கொண்டவர் மாபெரும் நற்பங்கை அடைந்துகொண்டார் என்று மார்க்க அறிஞர்களின் சிறப்பை அகிலத்துக்கு உணர்த்தியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். (அபூதர்தா(ரலி), அபூதாவுது) அந்த அறிஞர்களின் பத்து அடையாளங்கள் இதோ…

Ø இறை பொருத்தம் பெறும் ஆர்வம்
“அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி கற்க வேண்டிய கல்வியை, உலக ஆதாயங்களில் ஒன்றை அடைவதற்காக ஒருவர் கற்றால் நாளை மறுமையில் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்.” (அபூதாவூது, அபூ ஹூரைரா(ரலி)) “மறுமையின் விளைச்சலை விரும்புகிறவருக்கு அவரது விளைச்சலை அதிகப்படுத்துவோம். இவ்வுலகத்தில் விளைச்சலை விரும்புகிறவருக்கு அதிலிருந்து அவருக்கு கொடுப்போம். ஆனால்… அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை” (அல் குர்ஆன் 42:20)
Ø பிரபலமடையும் நோக்கம் கூடாது.
கல்வியிம் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும். அறிவீனர்களிடம் வாதம் புரிய வேண்டும். அதன் மூலம் மக்களின் உள்ளங்களை தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவன் கல்வியைத் தேடினால் அவனை அல்லாஹ் நரகத்தில் போடுவான். (கஃப் இபுனு மாலிக் (ரலி), திர்மிதி)
எதிலும் வலிந்து மூக்கை நுழைக்கக் கூடாது.
ஒரு தேவையை முன்னிட்டு தன்னை யாராவது அணுகினால், அவருக்கு உடனே உதவிபுரிந்து பயன் அளிப்பார். தன்னை விட்டும் விலகிக் கொண்டால் (அதற்காக கோபமோ வருத்தமோபடாமல்) தானும் ஒதுங்கிக் கொள்கிற மார்க்க அறிஞன் எத்துனை சிறப்பானவன்; எத்துனை சிறப்பானவன். (அலீ (ரலி) - மிஷ்காத்)
Ø மார்கத்தை மறைக்கக் கூடாது , மறுக்கக்கூடாது.

ஒரு மார்க்க அறிஞரிடம் அவர் அறிந்துள்ள கல்வியைக் கற்றுத்தருமாறு வேண்டப்படும் போது மறுக்காமல் அவர் கற்றுத்தர வேண்டும். (அவரே சிறந்த அறிஞர்) அதை அவர் கற்றுத்தர மறுத்தால், மறுமைநாளில் அவருக்கு நெருப்புக் கடிவாளம் இடப்படும் (அபூஹூரைரா(ரலி) அஹ்மது)
Ø தீமையைக் கண்டு கோபம் வரவேண்டும்
ஒருவர் எப்போது முழுமையான மார்க்க அறிஞராக ஆவாரென்றால், அல்லாஹ்வின் வரம்புகளை மீறும் விசயத்தில் மக்கள் மீது அவருக்கு கோபம் வரவேண்டும். பின்னர் அவர் தம்மைப் பற்றிச் சிந்தித்து அதைவிட கடுமையாகத் தம்மீதே கோபம்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் முழுமையான மார்க்க அறிவு பெற்றவர் ஆவார். (அபூதர்தா(ரலி)
Ø கற்பதின்படி செயல்பட வேண்டும்
“மக்களுக்கு நல்லவற்றை போதித்து விட்டு அதன்படி செயல்படாத அறிஞர், மக்களுக்கு வெளிச்சம் தந்துவிட்டு தன்னைத் தானே எரித்துக்கொள்கிற விளக்கை போன்றவர் ஆவார்” (ஜுந்த் இபுனு அப்துல்லாஹ் (ரலி) தப்ரானி). சுவனவாசிகள் சிலர் நரகவாசிகள் சிலரை எட்டிப் பார்ப்பார்கள். அப்போது அவர்கள் நரகவாசிகளிடம் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதன் மூலம்தான் நாங்கள் இங்கே சுவனத்துக்கு வந்தோம் நீங்கள் எப்படி நரகத்தில்? என்று ஆச்சரியத்துடன் வினவுவார்கள். அதற்கு அவர்கள் “உண்மைதான்… நாங்கள் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தோம், ஆனால் எங்களை மறந்து விட்டோம்” என்று பதில் அளிப்பார்கள். (இபுனு அஸாகிர்)
Ø அதிக சலுகையும் கூடாது அதிக கண்டிப்பும் கூடாது
தனது உரையின் மூலம் மனிதர்களை இறைக்கருணை குறித்து நிராசையடையும்படி செய்யாமலும், இறைவனுக்கு மாற்றமாக நடக்கும் விசயத்தில் சலுகை காட்டாமலும், இறைவேதனை குறித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்காமலும் இருப்பவனே சிறந்த அறிஞன் (அலீ(ரலி), கிதாபுல் ஃகராஜ் )
Ø அதிகார வர்க்கத்தை அண்டியிருக்கக் கூடாது.
எனது சமுதாய மக்களில் சிலர் மார்க்க அறிவைப் பெறுவர். குர்ஆனைக் கற்று அதைக் கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருப்பர். அதோடு… “அதிகார வர்க்கத்திடம் நாங்கள் செல்வதெல்லாம் அவர்களிடமுள்ள சில உலக வசதிகளை அடைந்து கொள்வதற்குத்தான். அதேசமயம் எங்களின் மார்க்கத்தை விட்டுத் தரமாட்டோம்” என்றும் கூறுவார்கள். ஆனால், இது சாத்தியமானது அல்ல, ஏனெனில் முட்செடியிலிருந்து முள்ளைத் தவிர வேறு எதனையும் பெற முடியாது என்பது எவ்வளவுக் கெவ்வளவு உண்மையோ அதுபோல, அதிகார வர்க்கத்துடனான நெருக்கம் பாவத்தின் பழியைத் தவிர வேறு எதனையும் பெற்றுத் தராது. (இப்னு அப்பாஸ்(ரலி) இப்னு மாஜா)
Ø குர்ஆன் நபிவழி நடக்க வேண்டும்
ஒருவர் நீரில் நடப்பதையோ, வானில் பறப்பதையோ வைத்து, அவரை சிறந்த இறைநேசர், மார்க்க அறிஞர் என்று நீங்கள் முடிவு செய்து ஏமாந்து விடவேண்டாம். அவருடைய நடத்தை குர்ஆன் நபிவழியோடு ஒத்து இருக்கிறதா என்று ஆய்வு செய்தே அவரை இறைநேசர், மார்க்க அறிஞர் என்று முடிவு செய்யுங்கள். (அறிஞர் லைஸ் இப்னு சஃத்(ரலி))
Ø மறுமைச் சிந்தனை வேண்டும்
அறிஞர்கள் கல்வியை முறைப்படி பாதுகாத்திருந்தால், மேலும் அதைத் தகுதியானவர்களிடம் மட்டுமே சேர்த்திருந்தால், நம் சமகால மக்களுக்குத் தலைவர்களாகவும் - முன்னோடிகளாகவும் அவர்கள் திகழ்ந்திருப்பார்கள். ஆனால், அதை அவர்கள் உலகாதாயவாதிகளிடம் சேர்த்து பாழ்படுத்திவிட்டார்கள். அதன் மூலம் அவர்களிடமுள்ள வசதிகளைப் பெற விரும்பினார்கள். அதன் விளவு என்ன ஆனது” அத்தகைய அறிஞர்கள், அந்த உலகதாயவாதிகளின் பார்வயில் இழிவடைந்தவர்களாயினர். ஒன்றை நன்றாக நினைவில் வையுங்கள். நபி (ஸல்) அவர்கள் மூலம் நான் செவிமடுத்த செய்தி இது. தனக்கு ஏற்படும் துன்பம் எதையும் பொருட்படுத்தாமல் மறுமையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றவனின் உலகத் துன்பங்களை நீக்க அல்லாஹ் போதுமானவன். அதேசமயம் உலக வாழ்க்கையின் துன்பங்களை பெரிதாக எடுத்துக் கொள்பவனை இறைவன் பொருட்படுத்துவதே இல்லை. அவன் துன்பக் கடலில் அமிழ்ந்து போனாலும் சரியே.
(இபுனு மஸ்வூத்(ரலி)இப்னு மாஜா)

Write on புதன்கிழமை, 28 நவம்பர் 2018

ஐரோப்பிய நாடுகளில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்க முடியாது. மற்ற நாடுகளில் இந்த கட்டுப்பாடு 13 வயதாக உள்ளது. முகநூல் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 29 கோடிக்கு மேற்பட்டோர் முகநூல் கணக்கும், 20 கோடிக்கு மேற்பட்டோர் வாட்ஸ் அப் கணக்கும் வைத்துள்ளனர். சுமார் 25 கோடி பேர் யூ-டியூப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் 2 ஆண்டு களில் 50 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அண்டை நாடான சீனாவில் முக நூல், வாட்ஸ்அப், ட்விட்டர் உள் ளிட்ட சமூக ஊடகங்கள் எதுவும் கிடையாது. இந்தியாவில் இளைஞர்கள் குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யூ-டியூப் மூலமாக ஆபாச படங்கள் பார்ப்பதாகவும், இதற்காகவே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள், தாக்கங்கள் குறித்து பள்ளியில் இருந்தே மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பொறுப்பின்றி வெளியிடப்படும் தகவல்களை, கட்டுப்பாடின்றி பரப்பும் சமூக ஊடகங்களை தவறுக்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அதற்கான தண்ட னைகளை கடுமையாக்க வேண்டும். அதற்கேற்ற சட்டதிட்டங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

Write on புதன்கிழமை, 28 நவம்பர் 2018

“தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு மழைக் காலத்தின்போதுதான் டெங்கு காய்ச்சலும், இன்னபிற நோய்களும் பரவி மக்களின் உயிரைக் குடித்தது. அத்தகைய துயர்மிகு நிலை மீண்டும் நம் மக்களுக்கு வராது தடுக்க வேண்டியது நமது தலையாயக் கடமை.
ஆகவே, தமிழகம் முழுவதும் நிலவேம்புச் சாறினை மக்களுக்கு வழங்கிட வேண்டும். இத்தோடு காய்ச்சல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆலோசனைகளையும், கருஞ்சீரகம் போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த நமது வீடுகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த பொருட்களைப் பற்றிய விழுப்புணர்வு பரப்புரையையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.”
சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அதற்குக் கீழே இருக்கின்ற நீதி விசாரணை நீதிபதிகளை நியமிப்பது என்பது, இந்திய அரசியல் சட்டத்தின் 234, 235, 236 -வது பிரிவுகளின்படி மாநிலங்களுக்கு உள்ள தனி அதிகாரம் ஆகும். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மாநிலத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தோடு கலந்து ஆலோசித்து கீழமை நீதித்துறை நடுவர்களை நியமிக்கவேண்டும்.
இது சமூக நீதிப்படி இட ஒதுக்கீட்டு சட்டப்படியே நடைபெற்றாக வேண்டியது சட்டக் கட்டளை, நடைமுறையாகும். வழக்குகள் ஏராளம் நிலுவையில் உள்ளன என்பது உண்மையே; அதற்காக காலியாக இருக்கும் கீழமை நீதிபதிகளுக்கான பதவிகளை நிரப்பிட மத்திய அரசே, உள்துறை சட்டத்துறையே ஏற்பாடு செய்யப் போகிறது. ‘நீட் தேர்வு மாதிரி ஒரு பொதுத் தேர்வை, நாடு முழுமைக்கான ஒரே தேர்வு நடத்தி, அதன்மூலம் இவர்களே தேர்வு செய்ய உள்ளனர். எனவே, மத்திய அரசின் இந்த மாநில அதிகாரப் பறிப்புத் திட்டத்தை மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இதுபற்றி உச்ச நீதிமன்றமும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதைபோல செயல்படுவது சரியல்ல. மாநில அரசுகளே அவசரமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாநில சர்வீஸ் கமிஷன்கள் மூலம் உயர் நீதிமன்ற கலந்தாலோசனைகளோடு உடனடியாக செய்ய பிரித்துக் கொடுத்தால் பணி மேலும் எளிதாகும், இட ஒதுக்கீடும் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டுக் கட்சிகள், இயக்கங்கள், மாநில உரிமையைப் பாதுகாக்க இத்திட்டத்தினைக் கடுமையயாக எதிர்த்து முளையிலேயே கிள்ளி எறிவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.

Write on புதன்கிழமை, 28 நவம்பர் 2018

ஜி.அத்தேஷ்
பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்த மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏறக்குறைய மதிப்புமிக்க எல்லா அரசு அமைப்புகளையும் அசைத்து விட்டது. பொருளாதாரம், அரசியல், மாநில ஆட்சிகள், ஆளுநர் நியமனங்கள், பல்கலைக் கழகங்களின் பிரச்சனைகள், நீதிபதிகள் மற்றும் ஆணையங்களின் தலைமைகள் நியமனம், வங்கிகள் வாராக் கடன், தொழிலதிபர்கள் வங்கிப் பணத்துடன் ஓட்டம் என்று எதுவும் தப்பிக்கவில்லை. இந்த குளறுபடிகளைத் தவிர்த்து எதுவும் நல்லது நடந்ததாகத் தெரியவில்லை. இப்போது, நாட்டின் மதிப்புமிக்க விசாரணை அமைப்பென்று பாராட்டப்படும் சி.பி.ஐ.யையும் மோடி உள்ளங்கையில் வைத்து சொக்கட்டான் உருட்டி விட்டார்.
நாட்டின் உயர்மதிப்பு ஊழல்கள், அரசியல் படுகொலைகள், காவல்துறையால் கண்டறிய முடியாத நுணுக்கமான குற்றப்புலணாய்வு ஆகிய அம்சங்களைத் தோண்டித் துருவி உண்மையைக் கொண்டு வரும் வல்லமை சி.பி.ஐ.க்கு உண்டு. சில இடங்களில் அரசியல் நெருக்கடிகளுக்கு இலக்காகி வழக்குகளில் சுணக்கம் காட்டும். சி.பி.ஐ. மத்திய அரசின் கூண்டுக் கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. சி.பி.ஐ. அவ்வப்போது சந்திக்கும் நெருக்கடிகள் அதனை நிரூபிக்கிறது
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களாக இருந்த யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர், ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா என்பதை விசாரணை செய்யும்படி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட அலோக் வர்மா அதன் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இருந்த நிலையில் நள்ளிரவில் விடுப்பில் அனுப்பப்பட்டார்
அலோக் வர்மாவிடம் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் பதவியை பிடுங்குவதற்காக திட்டமிடப்பட்ட செயல், இது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தான் இது நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி பலமான ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறது. ரஃபேல் ஊழல் புகாரை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்று மோடி தரப்பில் இருந்து அலோக் வர்மாவுக்கு முதலில் அறிவுறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்புச் செயலருக்கு கடிதம் எழுதி, ரஃபேல் தொடர்பான அதிமுக்கியமான ஆவணங்களை சி.பி.ஐ.க்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார் வர்மா. பாதுகாப்புச் செயலருக்கு அலோக் வர்மா எழுதிய கடிதம் தான் பிரதமர் அலுவலகத்துக்கு பீதியை கிளப்பியதாகச் சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் மோடிக்கு நெருக்கமானவர், நம்பிக்கைக்கு உரியவர். அஜித் தோவல் பிரதமர் சார்பில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து விசாரணை முயற்சிகளை கைவிடும்படி கேட்டிருந்தாராம். ஆனால், அதற்கு அலோக் வர்மா மறுப்புத் தெரிவித்ததால், இரவோடு இரவாக இயக்குனர் பொறுப்பில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார். இது, சில மணி நேரங்களில் நடந்துள்ளது என அலோக் வர்மாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாக India Section என்ற இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா குற்றச்சாட்டின் பேரில் அலோக் வர்மா நீக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பு சொல்கிறது.
மத்திய கண்காணிப்பு ஆணையர் கே.வி. சௌத்தரி அக்டோபர் 23 பிற்பகலில் டென்மார்க் செல்ல திட்டமிட்டிருந்தார். பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு இரவில் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அழைப்பின் பேரில் இணை இயக்குனர் எம். நாகேஷ்வர் ராவ் இரவில் சி.பி.ஐ. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் துணை ஆணையர்களை அழைத்து தில்லி கான் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஒரு ஆபரேஷன் நடக்க இருக்கிறது. போலீஸ் படையை தயாராக்கிக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தேசிய பாதுகாப்பு மையத்திடம் இருந்து பெற்ற உத்தரவின்படி இரவில் சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தில்லி காவல் ஆணையர் இதர உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். இவை அனைத்தும் நள்ளிரவில் நடந்திருக்கிறது.
அதற்கு நள்ளிரவில் ஏன் அவசரஅவசரமாக இதனை செய்ய வேண்டும். இதில், தான் மத்திய அரசு நடவடிக்கை மீது சந்தேகம் வருகிறது. மோடி ஆட்சியில் மத்திய அரசு, தோல்விகள், விமர்சனங்கள், அவமானங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. செய்ய நினைத்ததை செய்துவிட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு சிந்தனைகள் இல்லை என்பதாகவே தெரிகிறது. இந்த ராகேஷ் அஸ்தனா மீது பல லஞ்ச ஊழல் புகார்கள் இருக்கின்றன. அஸ்தனாவை கைது செய்யும் முயற்சியில் ஏற்கெனவே அலோக் வர்மா இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அஸ்தனாவிடமே புகார் வாங்கி அலோக் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அலோக் வர்மா இப்போது உச்சநீதிமன்றத்தில் நியாயம் கேட்டு முறையீடு செய்திருக்கிறார்.

இப்போது, எம். நாகேஷ்வர் ராவ் என்பவரை சி.பி.ஐ. இயக்குனராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. இவர் பா.ஜ.க. மீது கருணை கொண்டவர் என்று கூறப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் முன்னர் 1999 ல் இந்த நாகேஷ்வர் ராவ் மத வெறுப்பை தூண்டிபேசியதாக ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில் இவர் மீது பொதுநல வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. அலி கிஷோர் பட்நாயக் என்கிற சி.பி.எம் தலைவர் ஒருவர்தான் இவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்டுகள் தான் நாட்டின் உண்மையான அச்சுறுத்தும் சக்திகள், இந்திய அரசியல் சட்டத்தை வரைந்தவர்கள் சிறுபான்மைக்கு ஆதரவானவர்கள் என்று ஒடிசா கஞ்சம் மாவட்டத்தின் பெர்காம்பூரில் பொது நிகழ்ச்சி ஒன்றில் 1988 டிசம்பரில் பேசியிருக்கிறார். பெர்காம்பூர் வளர்ச்சி ஆணையத்தில் ராவ் துணைத் தலைவராக வேலை செய்து கொண்டிருந்த போது, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ல் தி ஹியூமேன் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய சர்வதேச மனித உரிமைகள் விழாவில் பங்கேற்றுக் கொண்ட போது அவ்வாறு பேசியிருக்கிறார்.
அச்சமயம், சி.பி.எம். இளம் தலைவராக இருந்திருக்கிறார் அலி கிஷோர் பட்நாயக். ஒரு ஐ.பி.எஸ். தரத்தில் உள்ள அதிகாரி அவ்வாறு பேசியதைக் கேட்டு துணுக்குற்றேன். உள்ளூர் நாளேடு ஒன்றும் இதனை பதிவு செய்தது. அன்றைய சட்டமன்றத்திலும் கூட எதிர்கட்சிகள் ராவுடைய பேச்சை எழுப்பி விவாதித்தன. எதிர்கட்சிகள் பிரச்சனை கிளப்பியதால் மாநில அரசு, ராவ் மீது போலீஸ் விசாரணை மற்றும் வருவாய்த்துறை தரப்பில் ஒரு விசாரணை என இரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்கிறார். உடனடியாக ராவ் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதுடன் அவர் மீது போடப்பட்ட பொதுநல வழக்கை மேலும் முன்னெடுக்கவில்லை.

வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் திறந்த உடனேயே வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு கொண்டுபோக உள்ளதாக பட்நாயக் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒருவரைத்தான் இப்போது சி.பி.ஐ. இயக்குனராக மோடி அரசு நியமனம் செய்திருக்கிறது
மாநிலங்களின் முதன்மைச் செயலர்களையும் கவர்னர்களையும் அதிரடியாக நீக்கி தங்கள் விருப்பப்படி செயல்படும் நபர்களை அந்த இடங்களில் அமர்த்திக் கொண்டு வரும் அதே செயலைத் தான் இப்போது சி.பி.ஐ. விவகாரத்திலும் மத்திய அரசு செய்திருக்கிறது. ஆனால், சி.பி.ஐ. விவகாரத்தில் மோடி அரசின் குட்டு வெளிப்பட்டு விட்டது. ஊழல் இல்லாத அரசு என்று நான்கு ஆண்டுகள் பெருமை பேசி வந்த பா.ஜ.க.வுக்கு ரஃபேல் விவகாரம் சரியான சிக்கலாக மாட்டியுள்ளது. மோடி பிரதமரான போது, “நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்வோம் ஐந்தாவது ஆண்டு அரசியல் செய்வோம்” என்று கூறினார். இப்போது, ரஃபேலை வைத்து காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக அரசியலை முடுக்கி உள்ளது.

மத்திய அரசின் மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அன்னா ஹசாரே, ஊடகங்கள் அலைக்கற்றை ஊழலை கொண்டு காங்கிரஸ் ஆட்சியை (2004-2014) கவிழ்க்க தீவிரம் காட்டினார்கள். இறுதியில் அது வெடிமருந்து இல்லாத பட்டாசாக நமத்துப் போனது. இப்போது, ராகுலும் காங்கிரசும் மட்டும் தான் ரஃபேல் ஊழல் பற்றிப் பேசுகிறார்கள். மற்றவர்கள் உறங்கப்போய் இருக்கிறார்கள்.
2013 ஜூன் 5 ஆம்நாள் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்ட சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறது என்று டிவிட்டரில் மோடி பதிவிட்டார். அப்போது அவர் குஜராத் முதலமைச்சர்.

சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சி.பி.ஐ. கூண்டுக் கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து சொல்லி இருந்தது. இப்போது பிரதமராக வந்துள்ள மோடியும் கிளி கூண்டை விட்டு பறந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்.