ரத்த அழுத்தம் தரும் புதிய கோட்பாடுகளும் சிக்கல்களும்!

சமீபத்தில், அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம், அந்நாட்டின் இதயநோய் ஆராய்ச்சிக் கல்லூரி (American College of Cardiology) மற்றும் தனியார் ஆராய்ச்சி மையங்கள் இணைந்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டன. அதாவது, தொற்றாநோய்கள் என அழைக்கப்படும் நீரிழிவு, பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கூர்ந்து கவனித்தபோது, 130/80 மிமீ. பாதரச அளவுக்கு அழுத்தம் கொண்டவர்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு ஆகிய பிரச்சினைகள் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த நிலைமையைத் தடுக்க உயர் ரத்த அழுத்தத்தின் உச்சவரம்பை 140/90 மி.மீ.லிருந்து 130/80 மி.மீ.க்குக் குறைத்துவிட்டனர். இதன்படி, அமெரிக்காவில் மட்டும் 32% ஆக இருந்த ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை 46% ஆக அதிகரித்துவிட்டது.
அமெரிக்க நிபுணர்களின் இந்தப் பரிந்துரை இந்தியச் சூழலுக்கு சரிவருமா என்று யோசிக்க வேண்டியது இருக்கிறது. தனி மனிதரின் ரத்த அழுத்தம் நாட்டின் தட்பவெப்பம், வாழும் இடம், வயது, வாழ்க்கைமுறை, உணவு முறை, உளவியல் சிக்கல்கள், பரம்பரைத் தன்மை, உடலில் காணப்படும் பிற நோய்கள் என பல்வேறு அடிப்படைக் கூறுகள் உள்ளன. இவை நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியர்களின் உயர் ரத்த அழுத்தத்தின் உச்சவரம்பை இந்திய மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும்தான் தீர்மானிக்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

வெளிநாடுகளில் மக்களின் மருத்துவச் செலவை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதால் பணப் பிரச்னை இல்லை. ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. ரத்த அழுத்த நோய் அடித்தட்டு மக்களுக்கும் உள்ளது. ஏற்கெனவே, இந்தியச் சாமானியர்கள் மருத்துவத்துக்காகப் பெரும் தொகையைக் கடன் வாங்கியே செலவிட நேர்கிறது. இதனால் அவர்களை நோயாளிகளாக அறிவிப்பதற்கு முன்னால் இதன் பின்புலத்தில் வணிக நோக்கம் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
முன்பு நீரிழிவு நோய்க்கான ரத்த சர்க்கரை சராசரி அளவைக் குறைத்தார்கள். அதனால் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் அதிகரித்தனர். கொழுப்பின் அளவைக் குறைத்தார்கள். அதனால், ரத்தக் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் அதிகரித்தனர். இந்த நோய்களுக்கான மாத்திரைகளின் வணிகம் உச்சத்துக்குச் சென்றது. இப்போது ரத்த அழுத்த அளவைக் குறைத்திருக்கின்றனர். இனி, இந்தியாவில் ரத்த அழுத்த நோயாளிகளும் அதிகரித்திருப்பதாக அறிவித்து அதற்கான மாத்திரை, மருந்து வணிகத்தைக் கூட்டுவார்கள். இது அயல்நாட்டு மருந்து நிறுவனங்களின் வாயில் சர்க்கரை போட்டதுபோல் ஆகிவிடும்.
எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிடுவது அவசியம். தேவையான நிதியை ஒதுக்கி ஆராய்ந்து, இந்திய மருத்துவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும். மக்களும் மருத்துவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்!-
கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.