செலவில்லா சித்த மருத்துவம்

மனித இனம் நல்ல தேகக் கட்டையும் அழகையும் பெற காய், கனி, கிழங்கு, கீரை வகைகளையே பெரும்பாலும் உணவாக உட்கொள்கிறார்கள். இங்கிலாந்து தேசத்தில் சில இடங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் கிழங்கு வகைகளையே உண்டு தேக ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் அழகாகவும் இருக்கிறார்கள். மேலும் ஸ்காட்லாந்து பெண்கள் கூட உருளைக் கிழங்கையும் மோரையுமே அதிக உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் இங்கிலாந்து பெண்களை விட இவர்கள் நல்ல தேஜஸுடனும் அழகுடனும் அறிவு கூர்ந்தவர்களாகவும், நோய் நொடி இல்லாதவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பது அறிஞர்கள் கூற்று.
கணவனும் மனைவியும் எவ்வளவு அழகுடையவர்களாகவும், நல்ல கட்டுமான உடல் அமைப்பு கொண்டவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் விரும்பிய நேரத்தில் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசி, சந்தோஷமாகவும், சமாதானமாகவும் நல்ல நல்ல காரியங்களை பேசிக் கொண்டு உடலுறவு கொள்வார்களானால் அவர்களுக்கு நல்ல குணம், ஒழுக்கம், அறிவு செறிந்த பிள்ளைகள் பிறக்கும்.
இவ்வாறு மக்கள் பேறு அடைந்த தாய் மட்டற்ற மகிழ்ச்சியை அடைவாள். அதோடு கணவனும் மாமா, அத்தை, பாட்டிமார்கள், உற்றார்கள், சுற்றத்தார்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதை நாம் காண்கிறோம். இவ்வளவு சீரோடும் சிறப்போடும் நாம் பெற்ற குழந்தைகளை வளர்க்கும் போது சிற்சில தொந்தரவுகள், அதாவது நோய் நொடிகள் குழந்தையை தாக்குகிறது. ஆகவே குழந்தையை பராமரிக்கும் முறையையும் சிற்சில நோய் கண்டால் அதிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் வழிமுறைகளையும் இங்கு விளக்கமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் பசும்பாலை காய்ச்சும் போது ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை போட்டு காய்ச்சி பின் இலைகளை எடுத்து விட்டு அப்பாலை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் வயிற்றில் புளிப்பு சேராது. ஜலதோஷம் பிடிக்காது. ஜீரண சக்தியும் உண்டாகும் இரவில் தூங்கும் முன் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் சேர்த்துக் கொடுத்தால் நல்ல தூக்கம் வரும். குழந்தைகளின் பூப்பு (வெள்ளை) படர்ந்திருக்கும். அதற்கு மாசிக்காயை பொடித்து நாக்கில் தடவி விட மாறிவிடும். குழந்தைகளுக்கு வாந்தி இருந்தால் ஒரு துண்டு வசம்பை எடுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் சேர்த்து நாக்கில் தடவினால் கக்கல் நின்று விடும். குழந்தைகள் பசியின்றி சாப்பிட மறுத்தால் மூன்று வெற்றிலையுடன் ஐந்து மிளகுத் தூள் சேர்த்து கசாயம் இட்டு கொடுக்க மூச்சு காட்டாம சாப்பிடும். குழந்தைகளுக்கு வயிற்றுக் கடுப்பு இருந்தால் சிறிது கசகசாவை அரைத்து பசும் பாலில் கலக்கி கொடுக்க குணமாகும். கண்களில் ஊறல் இருந்தால் வெந்நீரில் கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு கண்களைக் கழுவி விட தீரும். குழந்தை வயிற்று வலியால் அழுதால் சுக்கை எடுத்து மேல் தோலை உரித்து எடுத்து விட்டு, வறுத்து பொடித்து அப்பொடியுடன் சர்க்கரை சேர்த்து சுடு தண்ணீரில் கொடுக்க வயிற்று வலி தீரும்.
குழந்தைகளுக்கு கோழை ஏற்பட்டால், திப்பிலியை வறுத்து அத்துடன் வெற்றிலைச் சாறும், தேனும் சேர்த்து கொடுக்க கோழை மாறிவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த பேதிக்கு வெந்தயம் பத்து கிராம், சீரகம், ஜாதிக்காய், நெல்லி வத்தல், கடுக்காய்த் தொலி வகைக்கு ஐந்து கிராம் பொடித்து பதினோறு சிட்டிகை தாய்ப்பாலுடன் சேர்த்துக் கொடுக்க குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் விடாத வயிற்றுப் போக்கிற்கு ஜாதிக்காய் பத்து கிராம், கசகசா நூறு கிராம் இரண்டையும் நன்கு அரைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வர வயிற்றுப் போக்கும் மாறி உடல் தேரும். குழந்தைகளுக்கு மலம் போகாவிட்டால் மகிழம் விதையை வாங்கி பொடி செய்து பசு நெய்யுடன் குழைத்து துணி திரியில் தடவி குழந்தைகளின் மல வாசலில் சொருக உடன் மலம் கழியும். குழந்தைகளுக்கு பேதியானால் சிறிது வசம்பை அரைத்து தண்ணீர் அல்லது பாலுடன் கொடுக்க பேதி நின்று விடும்.
குழந்தைகள் விடாது அழுதால் வசம்பை சுட்டு பொடித்து நீர் சேர்த்து குழந்தையின் வயிற்றில் பூச குழந்தை அழுகையை நிறுத்தி விடும். குழந்தைக்கு ஓயாது விக்கல் இருந்தால் மயில் இறகு, திப்பிலி இரண்டையும் சுட்டு கரியாக்கி குழந்தையின் நாவில் தடவ விக்கல் நின்று விடும். குழந்தைகளுக்கு மூலம் அண்டி தள்ளினால் தான்றிக்காய் பொடியைத் தடவி வர மூலம் உள்ளே போய்விடும். குழந்தை சிறுநீர் விட அழுதால் சர்க்கரை, உப்பு இரண்டையும் சமமாக சேர்த்து கொடுக்க சிறுநீர் தாராளமாக போகும். குழந்தைகளின் சொறி சிரங்கிற்கு குப்பைமேனி சாறும் தேங்காய் எண்ணெயும், மஞ்சள் பொடியையும் சேர்த்து காய்ச்சி தேய்க்க சொறி, ஊறல் தீரும். வெட்டுக்காயம், புண்களுக்கு மஞ்சள் பொடியையும் கற்பூரத்தையும் சேர்த்து நீரில் கரைத்து புண்ணை சுத்தம் செய்து விட்டு, பிறகு மஞ்சள் பொடியை தடவி வர புண் ஆறிவிடும்.
தாய்ப்பால் சுரக்க கீழாநெல்லி வேரை பாலில் அரைத்து பெற்றவள் குடித்து வர பால் கங்கை போல் ஊறும். சிறுவர்களுக்கு கரப்பான் நோய் கண்டால் குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு இவைகளை மை போல் அரைத்து பூசி சீயக்காய் தேய்த்து நீராடி வர கரப்பான் மாறும். குழந்தைகள் மண்,சாம்பல் தின்பதற்கு கீழாநெல்லி வேர் ஐந்து கிராம், கடுக்காய் தோல் பத்து கிராம், மிளகு பத்து கிராம் மூன்றையும் புளித்த மோரில் அரைத்து கலக்கி குழந்தைகளுக்கு காலை, மாலை சங்களவு மூன்று நாள் கொடுக்க நிறுத்தி விடும். குழந்தைகளுக்கு மாந்தம் இருந்தால் நொச்சி இலை, பொடுதலை இலை, நுணா இலை, வேலிப் பருத்தி இலை இவைகளின் இலைகளை சமமாக எடுத்து வெதுப்பி சாறு பிழிந்து சங்களவு கொடுக்க மாந்தம் சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு பொடுகு இருந்தால் வெள்ளை மிளகு, வெந்தயம் இரண்டையும் சமமாக எடுத்து அரைத்து தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளிப்பாட்ட பொடுகு போகும். குழந்தைகள் கீழே விழுந்தால் உள்காயம் இருக்கும். அதற்கு சிறிது மஞ்சள் பொடியை பாலுடன் சேர்த்து கொடுக்க உள்காயம் ஆறி குழந்தை நலமுடன் காணப்படும்.
மருத்துவர் K.P.பால்ராஜ் TRSMRSI
செல் : 9487348763