குழந்தை நலம்.

                                                                                                                                                         ..............ஹனான் அஷ்ராவி

 children 1 குழந்தைகள் வளரும்போது பல்வேறு வகையான சூழ்நிலைத் தாக்கங்களுக்கு உட்படுவது இயல்பானது. பெரும்பாலும் தனக்கு அருகில் இருப்பவர்களை கவனிப்பதன் மூலமே குழந்தை தனது நடத்தைகளை அமைத்துக் கொள்கின்றது. நல்ல பழக்க வழக்கங்கள், மோசமான பழக்கங்கள் எதுவாக இருந்தாலும் குழந்தைகள் சுற்றியிருப்பவர்களிடமிருந்து

ற்றுக் கொள்கின்றனர்.

குழந்தைகளின் சில அசாதாரண நடத்தைகளுக்கு சூழ்நிலை முக்கியப் பொறுப்பாக இருக்கிறது. பொய்சொல்லுதல்,நகம் கடித்தல்,விரல் சூப்புதல் போன்றவைக்கு மனரீதியான காரணங்கள் இருந்தாலும். பெரும்பாலும் சூழலின் தாக்கமே குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் இந்த அசாதாரண பழக்கங்களில் ஒன்றே அடுத்தவர்களைக் கடிப்பது.

குழந்தைகளின் கண்களுக்கு தென்படும் எதையும் அவர்கள் உடனே வாயில் வைத்துவிடுவார்கள். அத்துடன் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது அவர்களின் முகம்,கை போன்றவற்றை கடிக்கும் பழக்கமும் சில குழந்தைகளிடம் உள்ளது.

குழந்தைகளாக இருந்தாலும் அடுத்த குழந்தைகளையோ வயதானவர்களையோ கடிக்கும் இந்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்து விடும். இதனால் இவ்வாறு அவர்கள் கடிக்கும்போது அதைக் கண்டிக்காமல் சாதாரணமாக இருந்து விடவும் முடியாது. அவ்வாறு விட்டு விட்டால் பின்னர் அவர்களிடமிருந்து இப்பழக்கத்தை நிறுத்துவது கடினமாகி விடும். இது போன்ற அசாதாரண நடத்தைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

அநேகமான குழந்தைகள் இவ்வாறு கடிக்க ஆரம்பிப்பதற்கான முதல் காரணம்,அவர்களுக்கு பற்கள் முளைப்பதால்தான். ஆகவே,அப்போது அவர்களுக்கு ஏதேனும் ஈரமான துணி அல்லது நிப்புலைக் கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் அவர்கள் பார்ப்பதையெல்லாம் கடிப்பதைப் போல வருகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு இவற்றைக் கொடுத்தால் அவர்களது உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு பின்பு பற்கள் முளைத்து விட்டால் கடிப்பதை மறந்து விடுவார்கள்.

குழந்தைகள் உற்சாகத்தோடு இருக்கும்போது பெற்றோர்களும் அவர்களுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மேலும்,அவர்கள் தேவையில்லாமல் எதையாவது கடிப்பது போல் இருந்தால் அப்போது அவர்களிடம் இப்படிச் செய்யக்கூடாது என்று உடனே எடுத்துக் கூற வேண்டும். அதை விடுத்து,காலம் தாமதித்துச் சொல்லலாம் என்று விட்டு விட்டால் பின் அவர்களது மனதில் பெற்றோர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று தோன்றி விடும். மாறாக,சிறுவயதிலேயே அது தவறு என்று சொன்னால் குழந்தைகள் மனதில் அது நன்கு பதிந்து விடும்.

குழந்தைகளிடம் எப்போதும் அதட்டிப் பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

ஏனெனில்  குழந்தைகளிடம் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷமாகவும் கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படவும் வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் எதைச் சொன்னாலும் புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு ஏதேனும் கோபம் வந்தால்,அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அல்லது பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்த கடிப்பார்கள். ஆகவே,அவர்களுக்குக் கோபம் வரும் வகையில் எதையும் செய்வதிலிருந்து பெற்றோர் தவிர்ந்திருக்க வேண்டும்.

ஏனெனில்,குழந்தைகள் தேவையில்லாமல் கடிக்க மாட்டார்கள். அவர்கள் எரிச்சல்படுத்தப்படும் போதே இவ்வறான அசாதாரண செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே,அவ்வாறு நடப்பதை பெற்றோர்கள்தான் நிறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்குக் கோபம் வந்தால்,அவற்றை வெளிப்படுத்த வேறு முறைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் புரியும் வகையில் அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் தமது பிழையான செயல்களை நிறுத்தி விடுவார்கள்.