இஸ்லாம் வலியுறுத்தும் ஆரோக்கியம்

Boys-prepare-food-at-a-Pa-008
O.M.காஜா முஹைதீன் ரப்பானி
அளவோடு உண்ணுவோம்
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நாம் அதிகம் பேண வேண்டியது நமது வயிற்றைத்தான். நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், அருந்தக்கூடிய பானங்களும் வயிற்றினுள் சென்று அதை செரிமானமாக்கி நமது உடலுக்குத் தேவையான சக்திகளை பெறக்கூடிய வேலைகளைச் செய்வது நமது

வயிறுதான். பல மிஷின்கள் சேர்ந்து செய்யக்கூடிய மிகப்பெரிய வேலைகளை நமது வயிற்றில் இருக்கக்கூடிய இயந்திரங்கள் செய்து முடிக்கின்றன. அவைகள் நம் கற்பனைக்கு எட்டாத காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் செய்து கொண்டிருப்பது வல்ல இறைவன் நம் மீது புரிந்த மிகப்பெரிய கருணை (அலஹம்துலில்லாஹ்) எல்லாப்புகளும் இறைவனுக்கே!
மிகவும் பேணிப் பாதுகாக்க வேண்டிய வயிற்றுக்குள் கண்டதையும் சாப்பிட்டு அல்லது அளவுக்கதிகமாக சாப்பிட்டு, அதன் காரணமாக நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூற, நபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை நிரப்புவதில்லை. ஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்துவதற்கு சில கவளம் உணவே அவனுக்குப் போதுமானது! அவசியமானால் அவனுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும், பிரிதொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாக) இருக்கட்டும்.
(நூல் : திர்மிதீ)
மேற்கூறப்பட்ட நபிமொழியின் படி உணவு உண்ணும் சமயத்தில் நமது வயிற்றை மூன்று பகுதிகளாக ஆக்கிக் கொண்டு, அதை நடைமுறைப்படுத்தி வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “வயிறுதான் நோயின் பிறப்பிடம்” என்று கூறியுள்ளார்கள்.
“அளவோடு உண்டு வாழ்ந்தால் நோய்கள் பல அகன்றுவிடும். சுவாசம் சரளமாக இயங்கும், விரைவாக செரிமானமாகும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், விஷயங்களை நன்கு கிரகிக்கும் ஆற்றலை உண்டாக்கும், மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.aarookiyam
மேலும் மிதமிஞ்சிய உணவு, அறிவைக் குறைத்து சிந்தனையை மழுங்கடிக்கச் செய்துவிடும். வேலைகளிலும், படிப்பிலும் சோர்வை ஏற்படுத்தும் தூக்கத்தை அதிகமாக்குவதோடு, காலப்போக்கில் நரம்புகளுக்கு தளர்ச்சியை உண்டாக்கிவிடும். செரிமானமாகத் தாமதமாகும். (ஜீரணமாகாமல் வயிறு மற்றும் உள்ளுறுப்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்) எல்லாவற்றுக்கும் மேலாக படைத்த இறைவனை வணங்கும் விஷயத்தில் சோம்பலை உண்டாக்கும். சில சமயம் கடமையான தொழுகைகளை நிறைவேற்றுவதை விட்டும் நம்மை மறக்கடிக்கச் செய்துவிடும். எனவே, “மிதமான உணவே சிறந்த வைத்தியன்” என்பதற்கிணங்க உணவு உண்ணும் விசயத்தில் ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் இலட்சியவாதிகள் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்பார்கள். சிலர் உண்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டாம் வகையினர் எந்தவொரு இலட்சியத்திற்காகவும் வாழாமல், தங்கள் வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிக் கொள்வதோடு பல வியாதிகளையும், உடல் பருமனையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். (சிலருக்கு இயற்கையாகவே உடல் பருமன் என்பது வேறு விசயம்) உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O ) அறிக்கையின் படி உலகம் முழுவதும் 40 கோடிபேர் தங்கள் உடலுக்குத் தேவையான எடையைவிட அளவுக்கதிகமான எடையுடையவர்களாகவும், 30கோடி பேர் இதற்காக மருந்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களாகவும், குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் மட்டும் 49 சதவிகிதம் பேர் அளவுகதிகமான எடையுடையவர்களாகவும் இருக்கின்றனர் என்று அறிவித்துள்ளார்கள் (நன்றி தினமனி 09.03.2005)
அளவுக்கதிகமாக சாப்பிடுவர்கள், அதற்குத் தகுந்தார் போல உடல் ரீதியான வேலைகளைச் செய்ய வேண்டும். அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவைகளைப் பேணாததினால் வந்த விளைவுகள் தான் பெரும்பாலும் உடல் பருமனுக்கு காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்.
உணவின் ருசி கருதி அதிகமாக உண்ணுவதைத் தவிர்த்து விட்டு, ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான வகை உணவுகளை கலந்து அளவோடு உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும்.
சிறிது காலத்திற்கு முன் பசிக்காக மட்டுமே உண்ணுபவர்களாக இருந்த நாம். இன்று பசிக்காக உண்ணுவதை விட ருசிக்காகவே அதிகம் உண்ணுபவர்களாக இருக்கிறோம்.
இஸ்லாமிய ஜனாதிபதிகளில் ஒருவரான உமர் ரழி… அவர்கள் கூறினார்கள் : வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது ஆரோக்கியத்தியத்தை பாதித்து நோய்களை உருவாக்கும் தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும் அந்த இரண்டிலும் நடுநிலையை மேற்கொள்ளுங்கள். அது உடலை சீர்படுத்தி வீண் விரயத்தை தவிர்க்கும். நிச்சயமாக அல்லாஹ் கொழுத்த உடல்களை வெறுக்கிறான். நிச்சயமாக மனிதன் மார்க்கத்தை (இறைவழி காட்டுதலை) விட தனது மனோ இச்சையை தேர்ந்தெடுத்தால் அழிந்து விடுவான்.
(நூல் : அல் கன்ஜ்)aarokiyamaaroarroki
உடல் வலிமை மிக்க இறைநம்பிக்கையாளன் பள்வீனமான இறை நம்பிக்கையாளனை விட அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவன். இதைத்தான் இறைத்தூதர் முஹம்மது ஸல்… அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
வாய்க்கு ருசியாக இருக்கிறது என்பதற்காக வயிறு முட்ட சாப்பிட்டால் வயிறும் மனசும் நிரைந்து விடும். ஆனால் உடலுக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்குமா? என்பதை நம்மில் பலர் யோசிப்பதே இல்லை. ஒரு பக்கம் உண்ணும் உணவுப் பழக்கத்தில் அலட்சியத்தைக் கடை பிடிக்கிறோம். இன்னொரு பக்கம் இன்றைய உணவின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இப்படி தரமில்லாத உணவுகளை வயிறு நிறைய சாப்பிட்டால் நம் உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்கும்?
நாம் ஆரோக்கிய விசயத்தில் கவனமாக இருந்து நமது உணவு பழக்கங்களை மிகவும் சீராக கடை பிடித்து வந்தாலும், சில நேரம் அன்பானவர்களின் நிர்பந்தத்தால் அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டிய நிலை ஏற்படும். அந்த சமயத்தில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
எனது ஆசிரியப் பெருந்தகையை ஒருவர் விருந்துக்கு அழைத்தார், அழைத்தவர் உணவுத்தட்டில் அளவுக்கதிகமான உணவையும், இன்ன பிற பதார்த்தங்களையும் (அன்பின் மேலீட்டால்) எடுத்து வைக்க, ஆசிரியர்கள் திகைத்துப் போய், அன்பரே! உண்மையில் என் மீது அன்பும், பாசமும் இருந்தால் என் விருப்பத்திற்கு என்னை சாப்பிட விடுங்கள் என்று கூறியதோடு அன்பை அதிகமாகவும், உணவைக் குறைத்தும் கொடு’ இதுதான் உன் பிரியமானவர்களுக்கு நீ அளிக்கும் நன்மையான செயல் என்றார்கள். உண்மையும் அதுதான் விருந்து கொடுப்பவர்களின் அன்புக்கு அடிபணிந்து நான் அவர்கள் பரிமாறும் உணவுகளை அளவுக்கதிகமாக சாப்பிட்டு, அதன் காரணமாக பாதிக்கப்படுவது அவரல்ல நாம்தான். ஆக எங்கும் எப்போதும் உணவு விசயத்தில் விழிப்போடு இருந்து நம் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஏனெனில் நம் ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது. நம் கைகளினால் நம் அரோக்கியத்தை பாழ்படுத்திட வேண்டாம். நம்மைப் படைத்த இறைவன் கூறுகிறான் “உங்கள் கரங்களால் உங்களை நீங்களே அழிவுக்குள்ளாக்காதீர்கள். (அல் குர்ஆன் : 2:195) ஆகவே அளவோடு உண்ணுவோம் ஆரோக்கியமாக வாழுவோம்.