எபோலா வைரஸின் வேகம்!

   downloadமேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய 4 நாடுகளில் எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் பரவியுள்ளது. உயிர்க்கொல்லி நோயான இதை குணப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 4,500 வரை உயர்ந்துள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளை தவிர செனேகல், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் எபோலா நோய் தாக்கி உள்ளது.
யேல் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி மையம், லைபீரியாவின் சுகாதார மற்றும் சமூகநல அமைச்சகம் ஆகியவற்றின் 7 விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த வைரஸ் பரவும் வேகம் இப்போது உள்ள நிலையிலேயே நீடித்தால், வரும் டிசம்பர் 15-ம் தேதி வாக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுவதுடன், பலியாவோர் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
குறிப்பாக, இந்த வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள லைபீரியாவின் மான்ட்செராடோ நகரில் மட்டும் 1.7 லட்சம் பேருக்கு இந்த வைரல் பரவும். இது அந்த நகரின் மொத்த மக்கள் தொகையான 13.8 லட்சத்தில் 12 சதவீதம் ஆகும். 90,122 பேர் பலியாவார்கள்.
ஆனால் சர்வதேச நாடுகள் இணைந்து, வரும் 31-ம் தேதி முதல் எபோலா தடுப்பு நடவடிக்கையை விரைவுபடுத்தினால், மான்ட்செராடோ நகரில் மட்டும் 97,940 பேருக்கு எபோலா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
அதாவது எபோலா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை இப்போது இருப்பதைப் போல 5 மடங்காக உடனடியாக அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும்.
இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற மூத்த அதிகாரியும் தொற்று நோய் இயல் பேராசிரியருமான அலிசன் கால்வனி கூறும்போது, “எபோலா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களுக்கு பரவுவதையும், பலி எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
கினியாவில் உள்ள ஒரு குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இது வேகமாக பரவி வருகிறது. லைபீரியா, சீரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் இதுவரை 9 ஆயிரம் பேருக்கு எபோலா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூ யார்க் மருத்துவருக்கு எபோலா
கினியாவில் எபோலா நோயாளிக்கு சிகிச்சை அளித்துவிட்டு கடந்த வாரம் தாய்நாட்டுக்கு (அமெரிக்கா) திரும்பிய மருத்துவர் கிரெய்க் ஸ்பென்சருக்கு (33) எபோலா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர் நியூ யார்க் நகரில் உள்ள பெல்லவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நகரில் மொத்தம் 8 அரசு மருத்துவமனைகளில் எபோலா சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
கினியாவில் பாதிக்கப்பட்ட 1350 பேரில் 416 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 233 சுகாதார பணியாளர்களும் அடங்குவர்.
நைஜீரியாவில் 20 பேர் எபோலா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேரும், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலும் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ நாட்டில் எபோலா பாதிக்கப்பட்டுள்ள 71 பேரில் 43 பேர் பலியாகி உள்ளனர். செனேகலில் ஒருவர் இறந்துள்ளார்.
இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.