ஆயில் உணவுகளில் கவனம்

258441 431230593581628 865592578 o11341217427javvarisi pondaமனித குலத்தின் மிகப்பெரும் எதிரியே எண்ணெய்தான்! இன்று பல நோய்களுக்கும் மூல காரணம் எண்ணெய் கலந்த, எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகளால் ஏற்படுகிறது. எல்லா எண்ணெய் வகைகளும் கொழுப்புதான். நெய், வெண்ணெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவை நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஈரல் வழியாகச் சென்று கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எந்த வகையான எண்ணெயானாலும் அளவோடு பயன்படுத்துவது சாலச் சிறந்தது. எண்ணெய்யில் பொறித்த பொருட்களை அதிகம் உண்ணுவதால் கலோரி அதிகமாகிறது. அதிக கலோரிகள் கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. அது நாளடைவில் உடல் பருமன், தொந்தி போன்ற விரயமான பகுதிகள் உடலில் ஏற்பட்டு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, இதயம் சம்பந்தப்பட்ட பல வியாதிகளும் வரக் காரணமாகிறது.
கடந்த காலங்களில் காலை, இரவு உணவாக இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற அவியல் உணவுகளைச் சாப்பிட்டு வந்தார்கள்.
ஆனால் சமீப காலங்களில் அவியல் உணவுகளை விட எண்ணெய் மூலம் பொறித்த பரோட்டா, பூரி, வடை போன்ற சீக்கிரம் ஜீரணமாகாத உணவுகளைத்தான் அதிகமாக சாப்பிட்டு வருகிறோம். வருந்தக்கூடிய செய்தி என்னவெனில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் காலையிலேயே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எண்ணெய் பலகாரங்களான போண்டா, பணியாரம், வடை போன்றவற்றை உண்டபின்தான் டீ, காஃபி அருந்தக்கூடிய பழக்கத்தைக் காண்கிறோம். இதனால் நம்மை அறியாமல் நமது உடலில் அதிகமான கலோரிகள் சேர்கின்றன. அதனால் நமது உடல் நிலை வெகு சீக்கிரமே ஆரோக்கியமற்றதாக ஆகிவிடுமே என்ற விழிப்புணர்வு கூட நமக்கு ஏற்படுவதில்லை. என்றைக்காவது ஒரு நாள் சாப்பிட்டால் பரவாயில்லை. தினசரி சாப்பிடுவதால் நமது உடலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்பதை நாம் விளங்க வேண்டும். எனவேதான் “ஆயில்களைக் குறைத்துக் கொண்டால் ஆயுளை அதிகப்படுத்தலாம்” என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நமது உடலில் சுத்தமான இரத்தம் இருப்பது அவசியமாகும். சுத்தமான இரத்தம் நாம் உண்ணும் உணவு மற்றும் பானங்களிலிருந்து கிடைக்கிறது. எண்ணெய் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் கலோரி அதிகமாகி கொலஸ்ட்ரால் உண்டாகிவிடுகிறது. இந்தக் கொலஸ்ட்ரால் நாளடைவில் இரத்தத்தில் கலந்துவிட்டால் உடலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

நம் உடலில் ஏற்பட்டுள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க இறைவன் நமக்கு எளிய வழிமுறைகளைத் தந்திருக்கிறான். அந்த வழிமுறைகளைக் கையாண்ட நமது நாட்டுப் பாட்டிகள் பலன்களை அடைந்தார்கள். அதுதான் பச்சை வெங்காயமும், வெள்ளைப்பூண்டும் ஆகும். தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ஆங்கில மருந்து, உணவுக் கட்டுப்பாடு, தேகப்பயிற்சி போன்றவற்றால் எந்தளவுக்கு குணம் தெரியுமோ, அதைவிட இரு மடங்கு அதிகமாக இந்த வெங்காயத்தில் தெரியுமாம்.
1-DSCN3390வெங்காயம் சாப்பாட்டில் போடுவதற்கும், குழம்பைத் தாளிக்கவும் மட்டும் பயன்படும் என்று எண்ணி விட வேண்டாம். அது மருத்துவ குணம் சார்ந்தது என்பதை அறிவோமாக! எனவேதான் பெரியவர்கள் “நமது வீட்டு அடுப்பங்கரையில் இருக்கும் வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் நம் வீட்டின் இரு மருத்துவர்கள்” என்று கூறுவார்கள்.
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்; வெங்காயமும், வெள்ளைப்பூண்டும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றும் இதய நோய்கள், புற்று நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், ஜலதோஷம், சளித் தொந்தரவுகள் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை என்றும் கூறுகிறார்கள்.
.
இவைகளைப் பற்றி நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் (தாத்தா, பாட்டி) சொல்லும் போது அதை நம்புவதற்கு நமக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததோடு, அத்தகைய யோசனைகளை கேலியோடு புறக்கணித்ததுமுண்டு. ஆக, நமது வீட்டுக்குள் ஒரு மூளையில் உட்கார்ந்திருக்கக்கூடிய பாட்டியின் வைத்தியத்தை நாம் நம்ப வேண்டுமானால், வெளியில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற மருத்துவ நிபுணர்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்து அதை நிரூபித்தால்தான் நாம் நம்புகிறோம். அந்த அளவுக்கு நமது பாட்டிகள் மீது நமக்கு நம்பிக்கை!
அக்காலத்தில் வெங்காயத்தையும், வெள்ளைப் பூண்டையும் அதிகம் சாப்பிடுவதால்தான் “அந்த இரண்டையும் சாப்பிட்டுவிட்டு (அதன் வாடை போகும் வரை சுத்தமாகாமல்) தொழும் இடமான பள்ளிக்கு வர வேண்டாம்” என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களோ? இது போன்ற இயற்கையான வைத்திய முறைகளை அறிந்துகொண்டு, அதை நாம் கடைப்பிடித்து வந்தோமானால், பின் விளைவுகள் ஏற்படாத ஆரோக்கிய வாழ்வை வாழலாம்.
இறைவன் மிக அற்புதமாகப் படைத்த நமது உடலின் இரகசியங்களை அறிந்து, அதைப் பேணிப் பாதுகாப்பது மிகப்பெரிய கடமை. ஒரு விலையுயர்ந்த பொருளை வாங்கும் போது, அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்று அந்தப் பொருளை உருவாக்கிய நிறுவனம் தரக்கூடிய கையேட்டினைக் கவனமாகப் பின்பற்றும் நாம், இறைவன் வழங்கிய விலை மதிப்பில்லாத உடல் நலனை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்பது பற்றி அறிந்து கொள்ள, இறைவனின் வேத வசனங்களைப் படிக்க, பின்பற்றத்தயங்குவது எவ்வளவு வேதனையான விஷயம்!
உலகில் பொருளாதாரம், இன்னும் பல வாழ்வாதாரங்களை எவ்வளவு கடின முயற்சி செய்து அடைந்து கொள்ளவிழைகிறோமோ, அதுபோல நம் ஆரோக்கிய வாழ்விற்கும் நாம் கடின முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஏக இறைவன் திருமறைக் குர்ஆனில் “எவர் கடின முயற்சி எடுத்துக் கொண்டாரோ, அவர் எடுத்துக்கொண்ட கடின முயற்சியெல்லாம் அவர் நன்மைக்காகத்தான்” (அல்குர்ஆன் 29:6) என்று கூறுகிறான்.
ஆகவே விலை மதிப்பில்லா நமது உடல் நிலையைப் பாதுகாக்க, கடின முயற்சியை மேற்கொள்வதோடு, உணவு விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு செயல்படுவோம். ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.
                                                                                                                                                                                      (தொடரும்……..)