இஸ்லாம் வலியுறுத்தும் ஆரோக்கியம். 4

உணவில் கவனம் செலுத்துவோம்.
O.M. காஜா முகைதீன் ரப்பானி
parotta 1வரலாற்றுப் பேராசிரியர் வாகிதியின் பேரர் அலி என்பவரின் நெருங்கிய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் உங்கள் “திருமறைக் குர்ஆனில்” மருத்துவக் கல்வி பற்றி எதுவும் குறிப்பிட்டது மாதிரி தெரியவில்லையே என்று சற்று ஏளனமாகக் கூறிய போது “ஏன் குறிப்பிடப்படவில்லை? மருத்துவக் கல்வி முழுவதையும் பற்றி இறைவன் தன் திருமறையில் பாதி வாக்கியத்திற்குள் ரத்தினச் சுருக்கமாகக் கூறியிருக்கிறான்” என்று மிடுக்காக மறுமொழி பகர்ந்தார் அவர். எந்த வாக்கியத்தில் ? என்று அக்கிறிஸ்தவர் கேட்ட போது “நீங்கள் உண்ணுங்கள், இன்னும் பருகுங்கள் எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்” (அல்குர் ஆன் 7:31) என்ற திருக்குர் ஆனின் தெளிவான வசனங்களை எடுத்துரைத்தார் அலி. மீண்டும் அக்கிறிஸ்தவ நண்பர் அலியை நோக்கி “உங்களின் முஹம்மது நபி மருத்துவக் கல்வி பற்றி ஏதேனும் கூறியிருக்கிறார்களா?” என்று கேட்டார். ‘ஆம் சில வாக்கியங்களுக்குள் அவர்கள் மருத்துவக் கல்வி முழுவதையும் அடக்கிவிட்டார்கள்’ என்று அலி பதில் கூறினார். அந்த வாக்கியங்கள் என்ன? என்று அந்த நண்பர் கேட்டார். அதற்கு “வயிறே நோயின் பிறப்பிடம். பத்தியமே மருந்துக்கெல்லாம் தலை” என்று மனித குல வழிகாட்டி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார் அலி. இவைகளைக் கவனமாகக் கேட்ட கிறிஸ்தவ நண்பர் திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபிகளும் மருத்துவ மாமேதை ஜாலினூஸுக்கு மருத்துவக் கலை பற்றி எந்தவொன்றையும் பாக்கிவைக்கவில்லையே! என்று ஆசிரியத்தோடு கூறினார்.
மேலே கூறப்பட்ட வாசகங்கள் நமக்கு பல்வேறு செய்திகளை உணர்த்தினாலும், இங்கே நாம் மனதில் பதியவேண்டிய செய்தி உணவு விஷயத்தில் கூட நமது பொருளாதாரத்தை வீண் விரயம் செய்யக்கூடாது என்பதே! ஆனால் இன்று நம்மில் பலர் பசிக்கு உண்ணுவதை விட ருசிக்காக அளவில்லாமல் உண்ணுகிறோம், நமது பெண்களும், குழந்தைகளும் ஹோட்டல் உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். கஷ்டப்பட்டு வந்த நமது சம்பாத்தியம் நம்மை அறியாமலேயே விரயமாகி வருகிறது. மட்டுமல்லாமல் இதனால் பலவிதமான நோய்களை நாம் வழிய வாங்கிக் கொண்டு, அதற்கு மருத்துவம் செய்வதிலும் நமது பொருளாதாரத்தை விரயம் செய்து வருகிறோம்.

ஹோட்டல் உணவு என்று வரும் போது நாம் அதிகமாக வாங்கிச் சாப்பிடும் உணவு “பரோட்டா” மற்றும் எண்ணெயில் பொறித்த கறி, மீன் வகைகள் ஆகியவற்றை குறிப்பாகக் கூறலாம். இந்த உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் அறிய வாய்ப்பில்லை! எனவேதான் அவைகளை அதிகமதிகம் சாப்பிட்டு வருகிறோம். பரோட்டா, போண்டா போன்றவைகள் மைதா மாவில் செய்யப்படுகிறது. அந்த மைதா மாவு பற்றி நாம் தெரிந்து கொள்ள முற்படும் போது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கிடைக்கின்றன.

மைதா, அது ஒரு இறுதியாக அரைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக்கிழங்குகளிலும்) மாவு ஆகும். நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை “பென்சாயில் பெராக்சைடு” என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தி வெண்மையாக மாற்றுகிறார்கள், அதுதான் மைதா. இந்த “பென்சாயில் பெராக்சைடு” என்பது வெள்ளைத் தலை முடிகளை கருமையாக பயன்படுத்தும் “டை” யில் உள்ள ஒரு இரசாயனமாகும். அது மைதாவில் உள்ள புரோட்டீனுடன் சேரும்போது பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோயை உருவாக்குகிறது. மேலும் அந்த மைதா மாவுடன் ஆயில், முட்டை, டேஸ்ட் மேக்கர், சர்க்கரை, அஜின மோட்டோ போன்ற பொருட்களும் கலந்துதான் ‘பரோட்டா’ எனும் ரொட்டி தயாரிக்கப்படுகிறது.
இத்தகைய மைதாவில் தயாரிக்கப்படுகிற பரோட்டா தினசரி அல்லது அடிக்கடி சாப்பிடுவது நமது உடலுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஜீரண சக்திக்கு அது உகந்ததல்ல. ஏனெனில் மைதாவில் நாற்சத்து இல்லாததால் அது நமது செறிமான சக்தியைக் குறைத்து விடுகிறது. எனவே பரோட்டாவை அடிக்கடி சாப்பிடுவதை விட்டும் தவிர்ந்து கொள்வது மிகவும் நல்லது. சில மேலை நாடுகளில் மைதாவின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்திருக்கிறார்களாம். கேரளாவில் பரோட்டாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் எல்லா விசயங்கள் போல இது குறித்தும் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்பது வருந்தத்தக்கது.

மைதா மாவில் தயாரிக்கப்படுகிற உணவுப் பொருட்களை அடிக்கடி தொடர்ந்து சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல், இருதயக் கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் ஏற்ட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மைதா மாவு, ஆயில் கூட்டுடன் தயாராகும் பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு சீக்கிரம் செறிக்காமல் மலச்சிக்கல் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
மனிதனின் ஆரோக்கியமற்ற வாழ்விற்கு மலச்சிக்கல் மிகப்பெரும் காரணமாக இருக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவு சரிவர செறிக்காமல், நமது உபாதைகள் வெளியேறாமல் உடலில் தங்கி விட்டால் வயிறு உப்புசமாவதோடு, நமது உடலின் பல பாகங்களுக்கும் கேடு விளைவித்து ஆரோக்கியமற்ற உடலமைப்பைத் தருகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதால் வயிற்று வலி, மூலம் போன்ற வியாதிகள் ஏற்படக் காரணமாகி விடுகிறது.
இப்படி பல சிக்கல்கள் இருப்பது தெரிந்தும் இது விசயத்தில் பலர் கவனமற்று இருக்கிறார்கள். குறிப்பாக இருதய நோயாளிகள், ஆஸ்துமா, காச நோயாளிகள், கர்ப்பினிப் பெண்கள் போன்றோருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பெரும் ஆபத்தாகி விடும்.
எனவே விரைவில் ஜீரணமாகாத உணவுகளைத் தவிர்த்து முறையான உணவும், உடற்பயிற்சியும் இருந்தால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.
இன்று நம்மில் பலர் மலச்சிக்கல் ஏற்பட்டவுடன் ஆங்கில மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதும், இனிமா கொடுப்பதும் தொடர் கதையாகி விட்டது. இது போன்ற பிரச்சனைகளுக்கு முஹம்மது (ஸல்) அவர்கள் அருமையான மருந்தை நமக்கு சுட்டிக் காட்டிச் சென்றுள்ளார்கள், அதுதான் கருஞ்சீரகம்.
வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி நோயைத் தீர்க்கும் தன்மையுடைய பொருளை மருத்துவத்தில் (Carminative) ‘அகட்டு வாய்வகற்றி’ என்று குறிப்பிடப்படுகிறது.கருஞ்சீரகத்தின் இந்த “Carminative” செயல்பாடு வயிற்றிலுள்ள வாயுவை போக்குகிறது. உணவு சீரணிப்பதை எளிதாக்குகிறது. உணவின் சத்துப் பொருட்கள் இரப்பை மற்றும் குடல் பகுதிகளில் நன்கு உள்ளுறிஞ்சப்படுவதற்கு துணை செய்கிறது. எனவேதான் முஹம்மது (ஸல்) அவர்கள் கருஞ்சீரகத்தின் பண்புகளைப் பற்றி கூறும் போது “கருஞ்சீரக விதையில் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது மரணத்தைத் தவிர!” என்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல் : புகாரி.

இத்தகைய சிறப்புமிக்க கருஞ்சீரகத்தைப் பற்றி இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது “கருஞ்சீரகம் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண், அஜீரணத்தால் ஏற்படும் உடல் கோளாறுகள், குமட்டல் மற்றும் வாயு சம்பந்தமான நோய்களை குணமாக்க உதவுகிறது. “வயிறுதான் நோயின் பிறப்பிடம் “என்ற நபிமொழிக்கொப்ப, வயிறு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக இருப்பதால் அதனைப் பயன்படுத்தி நமது உடலை ஆரோக்கியமுள்ளதாக ஆக்கிக் கொள்ள முயல வேண்டும்.