செலவில்லா சித்த மருத்துவம்

ayurveda
அன்பான வாசகர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்;
74. நில ஆமணக்கு அல்லது ஆதாளை;
இது ரோட்டு ஓரங்களில் மிகுதியாக காணப்படும். ஆமணக்கு போல காய்காய்க்கும். இதன் இலைக் காம்பிலிருந்து வரும் பாலை வாய்ப்புண்ணுக்கு போட்டால் குணமாகும். இலைச் சாறும் வேப்ப எண்ணெயும் சேர்த்து பதமாக காய்ச்சி சொறி, சிரங்குகளுக்கு தேய்த்து வர குணமாகும்.
75. பொன்னாவரை;
இது வெட்ட வெளிகளிலும், ரோட்டோரங்களிலும் மிகுதியாகக் காணப்படும். மஞ்சள் நிற மலர்களைக் காணலாம். இதன் இலை வேர் புழு கொல்லியாக பயன்படும். இதன் இலையும் கீழ்வாய் நெல்லி இலையும் சமமாக சேர்த்து அரைத்து கோலி அளவு காலை – மாலை மோருடன் சாப்பிட மஞ்சள் காமாலை நோய் தீரும். இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து மேலால் பூசி 1 மணி நேரத்திற்கு பிறகு வென்னீரில் குளித்து வர சொறி சிரங்கு குணமாகும்.
76. சாம்பல் பூசணி;
இதன் இலைகளை அரைத்து காலை – மாலை கோலி அளவு பாலுடன் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை நோய்கள் குணமாகும். இதன் காய்க்குள் செம்பருத்தி பூக்கள் ½ நாட்கள் வைத்திருந்து அதில் உள்ள சாற்றை குடிக்க அதி தூரம் போவது நின்று விடும்.
77. பசலைக்கீரை;
இது பயிர் நிலங்களில் சிறு செடியாக தரையோடு ஒட்டி படர்ந்து கிடக்கும். இதை நன்கு அரைத்து மோர் அல்லது பாலுடன் சாப்பிட்டு வர சிறுநீரகக் கடுப்பு குணமாகும். தொந்தியும் குறையும்.
78. வெந்தய இலை;
இதை அரைத்து நீருடன் பருகி வர சர்க்கரை நோய் குணமாகும். உடம்பு சூடு தணியும், வயிற்றுப் புண், வாய்ப்புண் குணமாகும்.
79. நன்னெரி வேர்;
காடுகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும் கொடி வகையைச் சேர்ந்த்து. நல்ல மனமாக இருக்கும். இதன் வேர்களை நன்கு கழுவி இடித்து 10 கிராம் அளவு 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு இராவு முழுவதும் வைத்திருந்து குடிக்க உடல் சூடு தணியும்.
80. சிறியா நங்கை;
இது காடுகளில் காணப்படும். கொடி கொடியாக இருக்கும். இது மிகுந்த கசப்புடையது. இதை சூரணம் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட தேகத்திற்கு வனப்பை உண்டாகும். ஜன்னி, காய்ச்சல், விஷ கடிகள் ஓடிவிடும்.
81. பேய்புடல்;
இது காடுகளில் காணப்படும். சிறிது கசப்புடையது. கொடி கொடியாக இருக்கும். இதனை கசாயம் இட்டு குடிக்க பித்த, கப, விஷ சுரங்கள் குணமாகும்.
82. தொட்டால் சுருங்கி;
இதை நீர் விட்டு அரைத்து வாத வீக்கங்களில் கட்டி வர வீக்கம் கரையும். மேக மூத்திரத்தைப் போக்கும். இதை வென்னீர் இட்டு நன்கு அரைத்து புண்களில் கட்டிவர ஆறாத புண்களும் ஆறிவிடும்.
83 .நேத்திரப் பூண்டு;
இது தரிசு நிலங்களில் கொடியாக படர்ந்து காணப்படும். நான்கு இலைகளை உடையதாக இருக்கும். இதன் இலையை முறித்தால் உடைந்து விடும். இதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர சிரசு நோய்கள் குணமாகும். இலைச் சாற்றை நெற்றியில் பூச தலைவலி தீரும்.
84. சங்கு புஷ்பம் அல்லது காக்காட்டான்;
இதில் நீலம், வெள்ளை என்று இரண்டு வகை உண்டு. வேலிகளில் காணப்படும். இதன் இலை சாற்றுடன், இஞ்சிச் சாறு, தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் அதிக வியர்வை நின்று விடும்.
85. நத்தை சூரி;
இது வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் காணப்படும். சிறு செடியாக இருக்கும். இதன் விதைகள் காப்பிக் கொட்டை மாதிரி சிறியதாக இருக்கும். இதன் இலைகளை சிறிது நேரம் சுவைத்து வயில் அடக்கிக் கொண்டால் பல் வலி தீரும். இதன் சமூலத்தை இடித்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சித் தேய்க்க வாத நோய்கள் குணமாகும். இதன் விதையை காப்பிக்கு பதிலாக பொடி பண்ணி காய்ச்சிக் குடிக்கலாம். விதையின் பொடியை பசும் பாலுடன் காய்ச்சிக் குடிக்க நீர் கடுப்பு தீரும்.