மாற்றத்திற்கான விதை…

nammalwar
மனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். அவனது வாழ்க்கை மனித சமூகத்துக்கு மட்டுமல்லாது பிற உயிரினங்களுக்கும் பயனுள்ள வகையில் அமைய வேண்டும். அந்த வாழ்க்கை மூலம்தான் முழுமையாக வாழ்ந்த நிம்மதி கிடைக்கும்.
இதன் படி தானும் வாழ்ந்து பிறருக்கும் உணர்த்தியவர்தான் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவர் மறைந்து ஓராண்டாகிவிட்டது. மனிதன் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டும். தான் செய்யும் சமூகப் பணிகளுக்கு தனது வாழ்நாளிலேயே பிரதி பலன் பாராது உழைக்க வேண்டும். அப்படி உழைத்த மனிதன் இறை நம்பிக்கையோடு மரணித்தால் அதற்கான கூலி இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவன் ஏற்படுத்திய சமூக மாற்றத்தால் இந்த உலகம் பயனடையும் காலமெல்லாம் அதன் பலன் அவனுக்குமுண்டு. அதுதான் சதகதுன் ஜாரியா, தொடர்ந்து நன்மை பெற்றுத் தரும் “நிலையான அறம்” என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
சமூக மாற்றத்திற்காக உழைத்த ஒவ்வொருவரும் அப்படித்தான் வாழ்ந்து மரணித்துள்ளார்கள். அந்த வகையில் காலம் காலமாக இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வந்த இந்தியாவில் வெள்ளையர்களின் சதியாலும் அதன் பிறகு நம்மை ஆளும் கொள்ளையர்களின் சதியாலும் “இரண்டாம் உலகப் போரில் மிச்சமாகிப்போன வெடி மருந்துகளை “உரம்” என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளுக்கு அனுப்பி இயற்கை விவசாயம் சிதைக்கப்பட்டது. (விரிவான செய்தி சமூக நீதி முரசு இதழ் பிப்ரவரி 2014 இல் பார்க்கலாம்.)
விளைவு மண் மலடாகியது. கால்நடைகள் குறைந்தது. அனைத்திற்கும் மேலாக உணவு என்ற பெயரில் விஷத்தை உண்டதன் விளைவாக இவ்வளவு காலமாக இல்லாத அளவிற்கு கடும் நோய்களில் மனித சமூகம் சிக்கியது. பெயர் சொல்லத் தயங்கிய வியாதிகள் சாதாரணமாக ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்து விட்டது. இத்தகைய சூழலில் வேளாண்துறையில் பட்டப் படிப்பை முடித்து வேளாண்துறையில் பணியாற்றிய நம்மாழ்வார் தனது அரசுப் பணியை துறந்து இயற்கை விவசாயத்தைக் கற்று ஊர் ஊராக ஒற்றை ஆளாகச் சென்று இயற்கை விவசாயத்தை பயிற்றுவித்து “வானகம்” என்ற பயிற்சி மையத்தை நிறுவி இறுதியாக தஞ்சை மற்றும் சுற்றுப் புற மண்ணை மயானமாக்கும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்தில் 2013 இல் டிசம்பர் மாத இறுதியில் போராட்டக் களத்திலேயே மரணித்தார். அதையொட்டி வெளிவந்த “சமூக நீதி முரசு இதழில் நம்மாழ்வாரும் இனி நாமும்” என்ற கட்டுரை வெளியானது. அதில் இயற்கை விவசாயத்திலும் இயற்கையோடு இயைந்த வாழ்விலும் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்து அலசப்பட்டது.
சமூக நீதி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பணிகளைப் பொறுத்த வரையில் முஸ்லிம் சமூகம் கல்வித் துறையில் முன்னேற வேண்டும் என்ற இலக்கில் பணியாற்றி வருகிறது. அதோடு மட்டுமின்றி வாழ்வியல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.
ஒரு சமூகம் சிக்கலில் மாட்டியிருக்கும் போது அதற்கான் தீர்வை முன் வைப்பது ஒரு முஸ்லிமின் கடமை. ஒட்டு மொத்த மனித சமூகமும் நோயின் பிடியில் உள்ளது. இரசாயனம் கலக்காத மக்கள் நலன் தரும் பொருட்களை விளைவிப்பது, அதை விற்பனை செய்வது வியாபாரம் என்பதைத் தாண்டி சதகத்துன் ஜாரியா (நிலையான அறம்). மேலும் அறிவு இறைநம்பிக்கையாளர்களின் கையில் இருந்த காலமெல்லாம் உலகம் சீராக இயங்கியது என்பது வரலாறு. அந்த அடிப்படையில் வேளாண் துறையில் ஆய்வு நிலை வரை செல்லும் மாணவர்களை நமது இல்லங்களிலிருந்து உருவாக்க வேண்டும்.
அந்த வகையில் நம்மோடு இணைந்து பணியாற்றும் சகோ முஹம்மது சேலத்தில் ஆர்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளார். ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட்டி (OFM) லும் உறுப்பினராக உள்ளார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்றுள்ளார். இவர் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிப்பதோடு விளை பொருட்களை மதிப்பு கூட்டவும் தமிழகம் முழுவதும் இயற்கை அங்காடி துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார். அவரது தொடர்பு எண் 9865909626.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கப் பணிகளில் ஈடுபடும் மற்றுமொரு சகோதரர் கோயமுத்தூர் ஷபி முஹம்மது. இயற்கை விவசாயம் மற்றும் நாம் தற்போது உண்ணும் இரசாயன உணவுகளினால் ஏற்படும் கேடுகள் குறித்து புரிந்து கொண்ட பிறகு நல்ல வருமானம் வரும் வேலையை உதறி விட்டு இயற்கை உணவுப் பொருட்களை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்கிறார். விரைவில் இயற்கை அங்காடி துவங்க உள்ளார். அவரது தொடர்பு எண் 9677411774 – 99439 99011
அல்ஹம்துலில்லாஹ்... நம்மாழ்வாரின் பணிகள் முஸ்லிம் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை அங்காடிகள் நடத்தும் முஸ்லிம்கள் சிலர்.
1.கோட்டார் அருகே எடலாகுடி என்ற ஊரில் சகோதரர் முஸ்தஃபா அவர்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். விவசாயத்தில் சில நுட்பங்களைப் புகுத்தி மகசூலை அதிகப்படுத்தியதற்காக டில்லி வாட்டர் அண்ட் சாயில் துறையும், கர்நாடக விவசாயக் கல்லூரியும் இணைந்து இவருக்கு புதுமைப் படைப்பாளி விருதை அளித்து கௌரவப்படுத்தியது.
2.தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த சகோ, எஸ்.எம்.ஹுஸைன் அவர்கள் தோட்டக் கலைத் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நம்மாழ்வாரின் நண்பரான இவர் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
3.தஞ்சை சேர்ந்த சகோ, அப்துல்லாஹ் இயற்கை விவசாயம் செய்வதோடு முஸ்லிம்கள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
4.நாகர்கோவிலில் வசிக்கும் சகோ சாகுல் என்பவர் இயற்கை அங்காடி நடத்துவதோடு பசுமை சாகுல் என்ற பெயரில் இயற்கை விவசாயம் குறித்தும் வாழ்வியல் குறித்தும் ஃபேஸ்புக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
5.சென்னை மண்ணடியில் சகோ ஃபெரோஸ்கான் இயற்கை அங்காடி நடத்துவதுடன் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட்டில் (OFM) உறுப்பினராக உள்ளார்.
6.சென்னை மண்ணடிப் பகுதியில் சகோ ஜின்னா இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். செல் : 7402530898
7.சமூக அக்கறையோடு ஆர்கானிக் பால் பண்ணையை திண்டிவனத்தில் சகோதரர் அஹ்மது நடத்தி வருகிறார்.
8.குமுளியில் சகோ அஸ்கர் இயற்கை விளை பொருட்கள் அங்காடி நடத்தி வருகிறார்.
9.திருவண்ணாமலை சகோதரர் அப்துல் கலாம் ஆர்கானிக் ஊறுகாய் தயாரித்து இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
கட்டுரையில் நீளம் கருதி சிலரின் பெயர்கள் மட்டுமே தந்திருக்கிறோம்.
இயற்கை வேளாண்மையில் முஸ்லிம்களின் பங்கு குறித்து “வானகம்” நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அரபு நாடுகளில் பணி புரிந்த சிலர் இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வத்தினால் தாயகம் திரும்பி வானகத்தில் வந்து பயிற்சி பெற்று சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்கள். ஆனாலும் முஸ்லிம்களின் பங்கு இன்னும் அதிகமாக வேண்டும்.
பெட்டிச் செய்தி.
சில வருடங்களுக்கு முன்பு மளிகைக் கடைகளுக்குச் சென்று சாமை, குதிரை வாலி, வரகரிசி, தினை, கம்பு, சிகப்பு அரிசி உள்ளிட்ட பெயர்களைச் சொல்லிக் கேட்டால் அப்படி என்றால் என்ன?! என்று கேட்ட நிலைமாறி இப்போது மளிகைக் கடைகளிலும் ஷாப்பிங் மால்களிலும் எங்களிடம் சிறுதானியங்கள் கிடைக்கும் என்று அறிவிப்பு பலகைகளைப் பார்க்க முடிகிறது. சிறு தானியங்களின் நன்மைகள் குறித்த புரிதலுக்கு சித்த மருத்துவர் ஆறாம் திணை கு. சிவராமன் அவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இது போன்ற பணிகளை அர்ப்பணிப்புடன் எடுத்துச் செல்கிற மருத்துவர்கள் சமூகத்தில் உருவாக வேண்டும்.