செலவில்லா சித்த மருத்துவம்

     ayurvedaஅன்பான வாசகர்களே, இந்த மாதத்துடன் மூலிகை பற்றிய கட்டுரை நிறைவு பெரும். உங்களுக்கு ஏதாவது மூலிகை பற்றி அறிய விரும்பினால் போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
86. நரிமிரட்டி அல்லது கிலு கிலுப்பை :
     இது வாய்க்கால் ஓரங்களிலும், வயல் வரப்புகளிலும் காணப்படும். வழவழப்பாக சிறு காய்கள் தொங்கும். முற்றிய காய்களிலிருந்து சல சல என்ற சத்தம் வரும். இந்த சத்தம் கேட்டு நரிகள் மிரண்டு நிற்கும். அதனால் இதற்கு நரி மிரட்டி என்ற பெயர் உண்டு. இதன் இலைகளை வதக்கி பிழிந்து ரசம் எடுத்து அதில் ஒரு சங்கு அளவில் மூன்று அரிசி எடை கோரோசானை ஒரு அரிசி எடை குங்குமப் பூவும் சேர்த்து குழந்தைகளுக்கு தினம் ஒரு தடவை மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மாந்தம் 18 ஆம் கணை ரோகங்களும் குணமாகிவிடும்.
87. நஞ்சு முறித்தான் இலை :
      இது வேலிகளில் கொடியாக படர்ந்து இருக்கும். இந்த இலைகளை இடித்து சாற்றெல்லாம் பிழிந்து விட்டு அந்தத்துணியை தலையில் வைத்து கட்டி வர - இப்படி ஒரு மணிக்கொரு தடவை சாறு பிழிந்து துணியை தலையில் கட்டி வர காமாலை, மஞ்சள்காமாலை, ஊதுகாமாலை நோய் தீரும். உப்பு புளி நீக்கி உணவு உண்ணவும்.
88. நாவல் இலை :
      இந்த இலையின் கொழுந்து இலைகளை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து 50 மில்லி அளவு தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும். பத்தியம் இல்லை. உடம்பில் உள்ள சர்க்கரைச் சத்தும் குறையும்.
89. துத்தி இலை :
       துத்தி இலை 12 கிராம், மிளகு 3 கிராம், சீரகம் 20 கிராம் என மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு பாகமாக்கி காலையில் 1 பாகத்தையும், மாலையில் 1 பாகத்தையும் இப்படி புதிது புதிதாக தயார் செய்து 3 நாட்கள் சாப்பிட்டு வர மூல இராணிநோய்கள் குணமாகும். துத்திஇலையும், நல்லெண்ணையும் சேர்த்து வதக்கி ஆசன வாயில் கட்டி வர மூலப் புண் ஆறும்.
90. காட்டாமணக்கு :
      இதில் வெள்ளை, சிகப்பு நிறங்கள் காணப்படும். இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஆமணக்கு காய் போல் காய் காய்க்கும். இதன் இலையை வதக்கி பிழிந்த ரசம் 100 மில்லி அளவு காலை, மாலை 3 நாட்கள் குடித்து வர மூலம், ரத்தமூலம், நீர் சுருக்கு நீர் கட்டு ஆகியவை சரியாகும். (புளி, காரம் நீக்கவும்).
91. பாகல் இலை :
இதன் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து 1 சங்கு அளவு குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
92. தகரை :
     இது ரோட்டு ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதில் ஊசித் தகரை, வட்டத் தகரை என இரண்டு வகை உண்டு. ஒன்று சீனி அவரைக் காய் மாதிரி காய்காய்க்கும். ஒன்று பயறு மாதிரி காய்காய்க்கும். இதன் இலை அல்லது வேரை பழச்சாற்றில் அரைத்து மேலால் பூசி வர சொறி சிரங்கு குணமாகும். இதன் விதையுடன் எருக்கன் வேர்தொலி, வசம்பு இம்மூன்றையும் சமபாகம் சேர்த்து வென்னீர் விட்டு அரைத்து சகல தோல் நோய்களுக்கும் போட குணமாகும்.
93. சப்பாத்தி கள்ளி :
     இதில் வட்ட வட்டமான முள் உள்ள பகுதியில் சிவந்த பழங்களும் காணப்படும். இந்த பழங்களில் உள்ள சாறை சப்பிட்டால் உடல் சூடு தணியும், இதில் காணப்படும் உள் முள்ளையும் விதையையும் சாப்பிடக் கூடாது. இந்த பழ ரசத்தை தினமும் சாப்பிட்டு வர ஆஸ்துமா குறையும்.
94. சிவனுர்வேம்பு :
    இது காடுகளிலும், தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் சிறுசெடி முள் உள்ளது போல் தோன்றும் முள் இல்லை. மிகச் சிறிய இலை உண்டு. சமூலத்தை இடித்து குடிநீர் செய்து குடிக்க தோலில் காணப்படும். படைபத்துகள் தீரும். இதன் வேர்தொலியை வாயில் இட்டு சுவைக்க பல்வலி தீரும். சமூகமாக இடித்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி மேலால் தேய்க்க தோலில் தோன்றும் சொரி, சிறங்கு படை நோய்கள் குணமாகும்.
மருத்துவர்;
K.P.பால்ராஜ் RTSMP
S.V.கரை –Pin ;627856