சுகமே... சுகமா...?

7th-april-world-health-day-2013
காற்று நுழையாத வீட்டுக்குள் அடிக்கடி வைத்தியன் நுழைவான்
– இந்தியா
மனிதவாழ்வின் ஆதாரங்களில் அவனது சுகாதாரம்தான் முதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுத்தம், சுகம், சுகாதாரம் என்பது ஒன்றையொன்று தொட்டுச் செல்லும் இணைப்புத் தொடராய் இருக்கும். ஒன்றின்றி இன்னொன்றில்லை.
பிப்ரவரி 28 வரை பன்றிக் காய்ச்சலுக்கு இரையானோர் ஆயிரத்து ஐந்து என்று புள்ளி விவரங்கள் புலம்கின்றன. இப்போது இதன் எண்ணிக்கை இன்னும் இரு மடங்கு பெருகி இருக்கக்கூடும். இக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுவோர் பத்தாயிரத்திற்கும் மேல் உள்ளனர் என்பது எழுதவும் வேண்டுமோ?.
இதன் மூலக்காரணி, துய்மையின்மையே என்பது பெரும் வேதனைக்குரிய செய்தி. இயந்திரங்களால் முன்னேறிய ஒருதேசம் இயங்கும் / இயக்கும் மனிதர்களை கொத்துக் கொத்தாக இழந்து நிற்பது நியாயமானதுதானா? நோய் நொடிகளையும் குப்பைக் கூளங்களையும் கொண்டுவந்து குவிப்பது யார்? கடலிலும் கரையிலும் விண்ணிலும் வீதியிலும் திரும்பிய பக்கமெல்லாம் சுகாதாரக் காற்றைச் சுவாசிக்க முடியவில்லையே.... சுகவீனக் கேடுகளல்லவா ஆங்காங்கு எல்லைக் கோடுகளை கோலம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது?
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,”
“கந்தையானாலும் கசக்கிக்கட்டு,” “கூழானாலும் குளித்துக்குடி” போன்ற தமிழகத்துப் பழமொழிகள் சொல்லும் செய்தி, “ஆரோக்கிய வாழ்வே அமைதியான வாழ்வு” என்றுரைக்கிறது.
உணவில், உடையில், உடலில், இடத்தில், இருப்பில் என யாவற்றிலும் சுகாதாரம் கட்டாயம் கவனிக்கப்படவும் கண்காணிக்கப்படவும் வேண்டிய ஒன்று. நோபல் பரிசு பெற்ற இந்தியர் ஆர்.கே.பச்சோரி சொல்வார்: சுற்றுப்புறச் சுகாதாரக் கேடுகளுக்கு 90% சதவீதம் “மனிதத் தவறுகளே முதல் காரணம்” என்று. உண்மையும் அதுதானே!
மனிதன் தன் இருப்பிடத்தையும் இருப்பிடத்தின் பண்புகளையும் அதன் சிறப்புக் கூறுகளையும் அறிந்து கொள்ளும் முறையே சுற்றுப்புற சுகாதாரக் கல்வி என்பார் திரு “ஏர்னெஸ்ட் ஹெகல்” என்ற ஆய்வாளர்.
இன்றைக்கு என் இந்திய தேசத்தில் என் அடிப்படைக் கல்வியே கேள்விக்குறியாய் தலைகுனிந்து நிற்கும் வேளையில் சுகாதாரக் கல்வி என்றால் “ஆ! அப்படியா!” என்று ஆச்சரியக் குறியோடு தலை நிமிர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. கூடவே விழிப்புணர்வும் திருதிருவென விழிபிதுங்கி விழிக்கிறது.
ஆரோக்கியம் என்பது ஓடியாடும் உடலில் மட்டுமில்லை. உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் அருந்தும் நீரிலும் படுக்கும் பாயிலும் இருக்கும் இடத்திலும் கழிக்கும் கழிவறையிலும் இருக்கத்தான் செய்கிறது, அதனதன் வடிவங்களில்!
மாதாந்திர மருத்துவ இதழ்களும் வருடாந்திர மருத்துவ மலர்களும் நன்கு விற்வனையாவதிலிருந்து நாம் நமது ஆரோக்கிய நிலையை நன்கு அளவீடு செய்துகொள்ள முடியும். கூடவே சற்று விழிப்புணர்வு பெற்றிருப்பதையும்! இளைய சக்தி இணையற்ற சக்தி என்பது அவர்களின் எண்ணிக்கையில் இல்லை, அவர்களது ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது.
அந்த ஆரோக்கியம் இன்றைக்கு எப்படியெல்லாம் சிதைவுண்டுபோய் இருக்கிறது! சுமார் 60 கோடி மக்கள் நமது இந்திய தேசத்தில் இன்னமும் “பொதுவெளிகளில்தான்” எவ்வித கூச்சமுமின்றி காலைக் கடனை கடமை தவறாது நிறைவேற்றி வருகின்றனர். சுகாதாரக்கேடு விளைவிப்பவைகளில் மலமும் ஜலமும்தானே முதலிடம் பெறுகிறது?
நம்மவீட்டு வீதிச் சுவரும் பேருந்து நிலையச் சுவரும் “மினிவாட்டர்” சர்வீஸில் மினு மினு வென்று பளபளக்கவில்லையா? ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் கோடைகால கொண்டாட்டம்தான். கூடவே நீர்த் தடாக நீச்சலோடு “இனப்பெருக்கலிலும்” என்றால் சும்மாவா?
இட்ரகோமா, ஸெட்ஸீ, பிளாக் ஃபிளை, சாண்ட் இவர்களெல்லாம் கோலிவுட் கதாநாயகிகளின் பெயர்கள் என்று ஏமாந்து போகாதீர்கள். மனித உடலில் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பல்வேறு நோய்த் தொற்றுகளை ஒட்டிவைத்துவிட்டுச் செல்லும் “ஆள்அவுட்” ஈக்களின் உயிரியல் பெயர்தான் அவை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல ஈயும் கொசுவும் இத்துணூண்டு இருந்தாலும் அதன் விஷ வீரியம் மிகப் பெரியது. உலகிலேயே வகைகையான, வண்ணவண்ணக் கொசுக்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாம்! ஆம்! ஜாதிகள் நிறைந்த தேசத்தில் ஜாதிக் கொசுகள் ஜாஸ்தியாய் இருப்பதென்பது நியாயமான ஒன்றுதானே!
மலேரியா, சிக்கன்குனியா, காலரா, எல்லோஃபீவர், டெங்கு, பறவைக்காச்சல், பன்றிக்காய்ச்சல், வைரஸ்ஃபீவர், வைரல்ஃபீவர் என்று காய்ச்சலில் மட்டும் எத்தனை வகை? அந்த “ஆரோக்கிய அன்னை எங்கே போனாள்”? இந்திய கடற்கரையோரங்களில்தான் தேடிப் பார்க்க வேண்டும்! ஒருவேளை இலங்கைச் சிறைகளில் சிங்களம் கற்றுக் கொண்டிருக்கக்கூடும். வெகு சீக்கிரமே திரும்பி வரவும் கூடும்.
ஆங்காங்கே நாமும் நமது பிள்ளைகளும் கழிந்து வைக்கும் மலங்களில் இகோலி மற்றும் சல்மோனிலா போன்ற கொடும் மலக் கிருமிகள் உள்ளன. வயிற்று உபாதைகளில் பெரும்பாலானவை இவற்றின் அருங்கொடைகளே! இம் மலஜல விசயத்தில் நமது விழிப்புணர்வு எந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது? கூவம் சென்னையில் மட்டும் இல்லை, நம்மஊரு சாக்கடையிலும் இருக்கத்தான் செய்கின்றது, இன்னொரு கூவம்.
சுத்தம், சுகம், சுகாதாரம் என்று வெறுமனே வாயளவில் விளம்பரம் செய்து கொண்டிருப்பதில் எவ்வித ஏற்றமும் இல்லை. பொன்நிலத்தில் இறங்கி போராட்டக் களத்தில் வேலை செய்யும் போது தான் ஆரோக்கிய வெற்றிகள் அகிலமெங்கும் ஆட்சி புரியத் தொடங்கும். “ஸ்டெபிலோகாக்காஸ் ஆரியஸ்” இது ஒரு ஆங்கிலச் சொற்றொடரில் எழுத்து மாறாத தமிழ் வடிவம் என எண்ணிவிடாதீர்கள். அப்படி யாதொரு அசம்பாவிதமும் தட்டச்சில் நடை பெறவில்லை. நாம் அன்றாடம் கைகழுவாமல் சாப்பிடும்போது நமது கைகளில் குடி கொண்டிருக்கும் பாக்டீரியாவின் பலமான பெயர் தான் அது. இது செய்யும் வித்தைகளை எழுதினால் பக்கங்கள் போதாது. குறிப்பாக செரிமானமின்மை எனும் அஜீரணக் கோளாறை இக்கிருமிதான் ஏற்படுத்துகிறது. இதைவிட வேறு என்ன வேண்டும் இதைப்பற்றிப் புரிந்து கொள்வதற்கு!?
அலர்ஜி, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், மனஅழுத்தம், புற்றுநோய், தூக்கமின்மை, தோல்நோய், பார்வைக்கோளாறு, செவிட்டுத்தன்மை, உயிரணுக்குறைவு, மலட்டுத்தன்மை, ஊட்டச்சத்தின்மை என வேவ்வேறு பாதிப்புகளுக்கும் காரணம் சுகாதாரமின்மையே!
வளிமாசு, நீர்மாசு, மண்மாசு, ஒலிமாசு, ஒளிமாசு, காற்றுமாசு, சுற்றுச் சூழல் மாசு என குப்பைத் தொட்டில்களின் பட்டியல் நாளுக்குநாள் நம் நகங்களைப் போல வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டேயிருக்கிறது. நீர்தடுப்பனை, கனிமச் சுரங்கம், வனவேட்டை, மின்திட்டம், ஊரக வளர்ச்சி, கழிவுநீர் தேக்கம், நெடுஞ்சாலை விரிவாக்கம், குப்பை எரிப்பு, செல்போன் டவர், நெகிழிக் குப்பை (பிளாஸ்டிக்) கட்டுப்பாடற்ற தெருநாய், கசிவுக்குழாய், சாயப்பட்டறை, தோல்பதனீட்டறை, மார்க்கெட் சகதி, மீன் மார்கெட், கேன்சர் புகையாளிகள் என்று இன்னொரு சுற்றுப் புறப் பட்டியல் சுழற்சி கொள்கிறது.
ஏப்ரல் -7 சர்வதேச சுகாதார தினம். இந்நாள் 1950 முதல் ஐ.நா.வால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்மால் ஆன பங்களிப்புகள் என்ன? என்று ஒரு கணம் நாம் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் சுகாதார விழிப்புணர்வுச் செய்திகள் அவ்வப்போது ஊர்க்காவல் படையினரைப் போல் சுடச்சுட ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
அஜினோமோட்டோ ஆரம்பத்தில் சுவையாகத்தான் இருக்கும். போகப் போக நம் நாவின் சுவைகளையே சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு போய்விடும். ஒரு கொடுங்கோலன்தான் அஜினோமோட்டோ. சுவை மொட்டுகளை இழந்த பின் ருசிகள் எதற்கு? சீனர்களுக்கு இந்திய நாவுகளின் மீது அதீக அக்கரை ஏன்? யோசிக்க வேண்டும்.
மரங்களை வெட்டாதீர், குளங்களை மாசு படுத்தாதீர், தண்ணீரை வீன்விரயம் செய்யாதீர், சுற்றுப் புறங்களை மாசுபடுத்தாதீர், சப்தங்களைக் கூட்டாதீர், உயிரினங்களைக் கொல்லாதீர், சாப்பிடும்முன் கைகளைக் கழுவுங்கள், சாப்பிட்டபின் வாய்கொப்பளியுங்கள், மூக்கை சுத்தப்படுத்துங்கள், தூய்மையான உடைகளையே அணியுங்கள், தலை சீவிக்கொள்ளுங்கள், ஆழகாகக் காட்சியளியுங்கள், நகங்களை வெட்டுங்கள், பற்களை சுத்தப்படுத்துங்கள், அண்டை வீட்டாரின் காற்றுவெளிக்கு வழிவிடுங்கள், பொதுவெளியில் மலம்ஜலம் கழிக்காதீர் என்று சுகாதாரம் குறித்து 7 ஆம் நூற்றண்டிலேயே பெருமானார் பேசி இருப்பது பேராச்சர்யத்திற்குரியது. 14 நூற்றாண்டுகளாகியும் அவற்றை இன்னமும் நாம் பின்பற்றிச் செயல் படுத்தாமல் இருப்பதுதான் அதைவிடப் பேராச்சரியம். வாருங்கள்...
சுகாதாரக் கேட்டை அழிப்போம்!
சுகாதார நாட்டை அளிப்போம்!
எஸ்.என்.ஆர். ஷவ்கத்அலி மஸ்லஹி
பேரா:அந்நூர் இஸ்லாமியக் கல்லூரி
தாமரைப்பாடி - 9865804000