துர் பிணி போக்கும் தர்பூசணி…!

எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி ஏ.என்.ஐ. கல்லூரி – திண்டுக்கல்.

watermelon

அல்லாஹ்வின் அரும் பெரும் படைப்புகளில் பிணிகள் நீக்கும் கனிகளும் காய்களும் தன்னிகரற்றவை.
எத்தனை வண்ணங்கள்… எத்தனை வடிவங்கள்… அவை பார்க்க பார்க்கப் பரவச மூட்டுபவை. சுவைக்கச் சுவைக்க நவரசமூட்டுபவை. பழமுதிர்ச் சோலைகளைத்தான் குர்ஆன் “ஜன்னத் - சொர்க்கம்” என்று சுட்டிக்காட்டுகிறது. இம்மண்ணகத்திலிருந்து அந்த விண்ணகம் வரை தொடர்ந்து தொடர்பிலிருக்கும் ஒன்று உண்டெனில் அது கனிகள் மாத்திரமே!
இது கோடை காலம். கூடவே கோசாப் பழங்களின் கொடைகாலமும் கூட. இப்பழம் குறித்து சற்றுக் கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது.
அரபியில் பித்தீஹ் என்றும் ஆங்கிலத்தில் வாட்டர் மெலன் என்றும் இலங்கையில் வத்தகப் பழம் என்றும் உருதுவில் தர்பூஜ் என்றும் ஃபார்ஸியில் ஹிந்துவானா என்றும் தமிழகத்தில் தர்பூசணி - தண்ணீர் பழம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இப்பழத்தின் தாயகம் தென் ஆஃப்ரிக்கா ஆகும்.
தென் ஆஃப்ரிக்காவின் கலகரி பாலைவனத்தில் தான் இது உயிர் பெறத் தொடங்கிற்று. தண்ணீரற்ற பாலைவன மண்ணில் தண்ணீர் தடாகங்களாய் உருளும் இப்பழங்கள் உண்மையிலேயே அதிசயமிக்கவை. இறையருளை நினைத்துப் பார்க்கத் தூண்டுபவை.
எப்படியோ அப்பழம் உருண்டு உருண்டு எகிப்தின் நைல் நதிக்கரையை கி.மு. 2 இல் எட்டிப் பிடித்தது. பிறகு கி.பி.10 ஆம் நூற்றாண்டு சீனாவையும், கி.பி.13 இல் ஐரோப்பா முழுவதையும் சென்றடைந்து இன்று சீனா, துருக்கி, ஈரான், பிரேசில், அமெரிக்கா, இந்தியா என முறையே இந்நாடுகள் இப்பழத்தைப் பயிரிடுவதில் முன்னணியில் இருக்கின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் வெறுக்காமல் விரும்பும் இப்பழம் தன்னுள் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறுபட்ட சத்துக்களை தன்னிகரற்ற முறையில் உள்ளடக்கிய ஒன்றாகும். பொதுவாக பலரும் பழம் செக்கச் சிவந்திருந்தால் நல்ல சுவையோடு இருக்கும் என எண்ணுவதுண்டு. ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கிறது.
எரித் ரோசின் – பி என்ற சிவப்பு நிறமி நுண்ணூசி வழியே இக்கனியினுள் செலுத்தப்படுகிறது. இந்நிறமியே இக்கனியை செஞ்சிவப்பாய் மாற்றி நம் கண்களை சுண்டி இழுக்க வைக்கிறது. இச்சிவப்பு பழப்பற்று நாளடைவில் நமக்குள் புற்று நோயை புகுத்தி விட்டுச் சென்று விடுகிறது என்பது நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. இப்பழத்தை மட்டுமல்ல எப்பழத்தையும் அறுத்தவுடன் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. பழங்கள் அறுக்கப்பட்டு திறவை நிலையில் இருக்கும் போது அதன் மூலம் நோய்த் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நமதூர்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருக்கும் பழங்களைவிட கொசு வலைக்குள் படுத்திருக்கும் பழங்களே அதிகம். இந்த வலை, நுண்கிருமிகளின் நுழைவாயில் என்பது பலரும் கவனத்தில் கொள்ள மறக்கும் செய்தி. அதுவும் சாலையோர, சாக்கடையோரக் கடைகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இருந்தாலும் உப்புத் தூளும் மிளகாய்த் தூளும் தூவப்பட்ட துண்டுகள் நம்நாவை மீண்டும் மீண்டும் சுண்டியிழுக்கவே செய்கிறது. வலை போட்டு பிடிப்பது என்பது இதுதானே…?
வைட்டமின் பி -1 முதல் பி - 6 வரையிலான அனைத்து ஊட்டச் சத்துகளும் இப்பழத்தில் இணைந்துள்ளது. இந்தப் பழம் நமது மூளை, கண், தோல், சதை என முக்கிய உறுப்புக்கள் யாவற்றிற்கும் பலமான சக்தியை வாரி வழங்குகிறது. இது “சிட்ரூலின்” சத்துக்களை தன்னுள் தக்க வைத்திருப்பதால் சிட்டுக் குருவி லேகியத்தைப் போல் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறதாம். இது அமெரிக்க மருத்துவர்களின் அரிய கண்டுபிடிப்பு. “அதில்” குறையுள்ளவர்கள் இதில் இனி கவனம் செலுத்துவார்களாக!
பைட்டோ நியூட்ரின்ஸ் சத்துக்களும் இப்பழத்தில் அபரிமிதமாக இருப்பதால் நமது உடலின் புத்துணர்ச்சியும், சுறு சுறுப்பும் வெகு வேகமாக வேலை செய்கின்றன. கூடவே மூளையும் புதுப் புத்துணர்வு பெறுகிறது. மூளை சரியானால்தானே வேலை சரியாகும்.
இப்பழத்திலுள்ள “லைக்கோபைன்” சத்து மேனியை மிளிர வைக்கிறது. தோல் சுருக்கங்களை சுருட்டி வைத்து விடுகிறது. பார்ப்பதற்கே பளபளப்பான சருமத்தை தருகிறது. இக்கனியுடன் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து முகத்தில் பூசி, சற்று காய்ந்த பின் கழுவி விட்டு கண்ணாடியைப் பாருங்கள். பருக்களும் கரும்புள்ளிகளும் வெண் பொட்டுகளும் காணாமல் போகும். இப்படியான “பேஸ்ஷியல்” பயன்களும் இப்பழத்தில் உண்டு.
இப்பழம் பசலைக் கீரைக்குச் சமமானது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. பக்கப் பார்வை, தூரப் பார்வை, மாலைக் கண், மங்கல் கண் என கண் பார்வை சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் அருந்தீர்வு பசலையில் உண்டு. அதே ஆற்றல் இக்கனிக்கும் உண்டு. பார்வைக் குறைபாடுள்ளவர்கள் புசிப்பார்களாக!
சுகர் குயின் – இனிப்பு ராணி எனப்படும் கரும் பச்சை நிற தர்ப்பூசணியின் விலை சற்று அதிகமிருப்பது போலவே அதன் சத்துக்களும் சக்தி வாய்ந்தவையே! ஐந்து நட்சத்திர உணவகங்களில் இப்பழங்களே அதிகமதிகம் இடம் பெறுகின்றன. இதில் விசேசம் என்னவென்றால் கடும் குளிரிலும் இக்கரும் பச்சைப் பழம் கனிந்து வருவதுதான்.
புதுச் சிந்தனை படைத்த ஜப்பானியர்கள் பூக்கும் போதே இப்பழத்தை சிறு சதுரப் பெட்டியில் துளையிலிட்டு வளர்க்கையில், அப்பழம் கனச் சதுரமாய் காய்ப்பது நம் கண்களை கவர்வதோடு, கனகச்சிதமாக பழங்களை வண்டியில் ஏற்றி அனுப்ப முடிகிறது. உண்மையிலேயே இப்பழம் வத்தகப் பழம் மட்டுமல்ல, நல்ல வர்த்தகப் பழமும் கூட...
தூய பழங்களை உள்ளே தள்ளுவோம்
தீய பிணிகளை வெளியே தள்ளுவோம்..