உணவு உடலுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் அவசியம்

aris

நம்மில் பலருக்கு அதுவா..? இதுவா..? என்று முடிவெடுக்க வேண்டிய நேரம் வரும் போது பல நேரங்களில் குழப்பத்திலேயே முடிவெடுக்காமல் பல விசயங்கள் முடிந்து போகிறது.
ஏன் முடிவெடுக்க அல்லது ஒரு காரியத்தை

தீர்மானிக்கத் தடுமாறுகிறோம், அதற்கான காரணம் என்ன என்று ஆராய்கிற போது பல்வேறு விதமான விசயங்கள் நம்மில் தாக்கம் செலுத்துவது தெரிய வருகின்றன.
அவற்றில் முக்கியமானவை கடந்த கால அனுபவங்கள், ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்தனியான சிந்தனைகள், வயது, சமூக பொருளாதார நிலைகள், முடிவெடுப்பதில் உள்ள நம்முடைய முயற்சி, உடல் ஆரோக்கியம் போன்றவை நாம் முக்கியமான தீர்மானத்தை எடுக்க நினைக்கிற போது நம்முடைய உள்ளத்தில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
அதிலும் குறிப்பாக இங்கே நாம் பார்க்கப் போவது சத்தான உணவு குறித்துதான் :
சத்தான உணவும் மேற்கண்ட விசயங்களைப் போன்று முடிவெடுக்கும் விசயத்தில் தாக்கம் செலுத்தத்தான் செய்கின்றது. நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவு அவசியம் என்பதை நாம் எவரும் மறுக்க மாட்டோம். நமது உடல் நிலைக்கும் நேரத்திக்கும் ஏற்ற சத்தான உணவு வகைகளை உடலுக்கு வழங்கும் போது உடல் சுறுசுறுப்பையும் நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் பெற்றுக்கொள்கிறது.
சத்தான ஆகாரங்களை உண்ணுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடைவது போன்று மனநலமும் சிந்தனையும் ஆரோக்கியமாக சுறு சுறுப்பாக இயங்குகிறது என்பதை நம்மில் பலர் கண்டு கொள்வதில்லை.
நமது மூளையின் அன்றாட செயல்பாடுகளுக்கு நாம் உண்ணும் உணவு மிகமுக்கிய தாக்கம் புரிகிறது என மௌன்ட் செனாய் மருத்துவக்கல்லூரியின் சின்டியா கிரீன் எனும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.
நமது உடல் திசுக்கள், இரத்தம், எலும்புகள் மற்றும் உடலிலுள்ள பாகங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் உட்கொள்ளும் சத்தான உணவுகளின் மூலம் சுறுசுறுப்படைகின்றன. நாம் உட்கொள்ளும் சத்துக் குறைவான உணவுகள் நமது உடலை ஆரோக்கியமற்ற நிலைக்கு உள்ளாக்குவது போன்றே நமது மனநிலையையும் ஆரோக்கியமற்றதாக ஆக்கிவிடுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. நாம் பசித்திருக்கும் நேரங்களில் வேறு விசயங்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போவதில் இருந்து இதன் உண்மையைப் புரியலாம். நமது உடலையும் சிந்தனையையும் ஒரு நிறுவனமாக ஒன்று சேர்த்துச் செயல்பட இந்த சத்துள்ள உணவுகள் தேவைப்படுகின்றன.
அளவுக்கு அதிகமாக உண்ணுகிறவர்களை “மாடு போல சாப்பிடுகிறவன்” என்றும் மிகக்குறைவாக உண்ணுகிறவர்களை “காக்கா கொத்துவது போல சாப்பிடாதே” என்றும் சொல்வதையும் அடிக்கடி காண்கிறோம். நமது சிந்தனையில் உணவு ஏதோ ஒரு வகையில் செல்வாக்குச் செலுத்துவதை தெரிந்தோ தெரியாமலோ விளங்கியிருப்பதால் தான் நாம் இவ்வாறு சொல்லக் காரணமாக இருக்கலாம்.
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் சுமார் 30% மூளையின் செயல்பாட்டுக்குச் செல்கிறது. அதனால் ஒன்றிணைந்த உடல் செயல்பாட்டுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் துணைபுரியக்கூடிய உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும். முழுத்தானியங்கள், அவரை இனங்கள், மரக்கறிகள், பழங்கள், கீரைவகைள், மாமிச உணவுகள் என்பவற்றிலிருந்து எல்லாவிதமான சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம் நன்கு தீட்டப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளான தீட்டப்பட்ட கோதுமை, சீனி போன்றவற்றில் விட்டமின்கள் மிகக்குறைவாகக் காணப்படுவதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதோடு சில உடல் திசுக்களிலும் எலும்புகளிலும் தேங்கியுள்ள விட்டமின்களை அழித்துவிடவும் செய்யும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் செயற்கையான நிறமூட்டிகள், உணவுகளை பாதுகாக்கும் (கெமிக்கல்ஸ்) பதப்பொருட்கள், வாசனைகள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இவைகள் சத்தற்றதாக இருப்பதோடு மூளையின் சாதாரண செயல்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்தவும் செய்யலாம். முழுமையான இயற்கை உணவுகள் எல்லாவிதமான சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட உணவுகளில் அப்படி இருக்க வாய்ப்பில்லை. பசிக்குச் சாப்பிடுகிறவர்களாக நாம் இருக்காமல் உடல் மன ஆரோக்கியத்தின் சமநிலையை பேணிக் காக்க சாப்பிடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ‘நீங்கள், சாப்பிடுவதே நீங்கள்’ எனும் விஞ்ஞானக்கூற்றை நாம் செவிமடுத்திருப்போம்.
இயற்கையின் அற்புதமான உணவுகளின் மூலம் கிடைக்கும் விட்டமின்களையும் கனிப்பொருட்களையும் உண்ணாமல் செயற்கையானதும் துரித உணவுகளையும் தொடர்ந்து உண்பதும் உணவில் கவனயீனமாகவும் ஒழுங்கு பேணாமல் நேரம் தவறி உண்பதும் உடலிலும் சிந்தனையிலும் சமநிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும். இறுதியில் நாம் நோயாளிகளாக ஆகிவிடுவோம். நோயுற்றால் உடல் பலவீனம் ஆவதுடன் உள்ளமும் பலவீனத்தை நோக்கி மெல்ல நகர்ந்துவிடும். அப்போது நம்மால் செய்ய முடிந்த பல விசயங்களை செய்ய முடியாத நிலைக்கு நாமே நம்மை உட்படுத்திக் கொண்டவர்களாக ஆகிவிடுவோம்.
‘உணவுகள் நாவுக்கு மட்டுமல்ல அவை உடலுக்கும், சிந்தனைக்கும், நமது ஒட்டுமொத்தமான செயல்பாடுகளுக்கும் துணைபுரியவே பல வகைகளில், வண்ணங்களில் இயற்கை நமக்குத் தந்திருக்கிறது.’ என்ற உண்மையை மனதில் விதைத்துக்கொண்டால் சத்தான இயற்கை உணவுப் பொருட்களை உண்ண நமது உள்ளத்தையும் உடலையும் பழக்கிக்கொள்வோம். அப்போது தான் உடல் ஆரோக்கியமும், சிந்திக்கும் திறனும் கிடைக்கும். தெளிவான நமது சிந்தனை பிரச்சனைகளின் போது நாம் சரியான முடிவுகளை எடுக்க உதவும். நம்முடைய ஆற்றலையும் பெருக்கும். சத்தான உணவுதான் சாதிக்க உதவும்.

அஸ்ஹர் அன்ஸார்