போதையில்லா சமுதாயம் நோக்கி..

Succes

போதைப் பொருட்கள் பயன்பாட்டால் நமது சமூகமும் நாடும் சீரழிவை சந்தித்து வருகிறது. தனிநபருடைய உடல் நலம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகளாக இருக்கும்

மது, புகைத்தல், போதைப் பொருட்கள் அனைத்தையும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்துள்ளது.
இப்போது தமிழ்நாட்டில் அனைவராலும் குடியின் தீமை உணரப்பட்டு மதுவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு மதுவுக்கு எதிரான வீரியமான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மது மற்றும் போதைப் பொருட்களை தடை செய்வதும் அவற்றை புறக்கணிக்க வலியுறுத்துவதும் நமது சமூகத்திற்கோ அல்லது உலகத்திற்கோ புதிய விசயமல்ல. இந்த நாசகரமான பழக்கத்தை தடை செய்வதன் நோக்கம் போதையால் தனி மனிதனுக்கு கேடு ஏற்படுகிறது என்பதால் மட்டுமல்ல. மாறாக, குடும்பங்களுக்கும், முழு சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் இதை கவனத்தில் கொண்டுதான் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உட்கொள்வது தற்கொலைக்குச் சமம் என்று எச்சரிக்கிறது. (தற்கொலை, அது உடனடியாக நடந்தாலும், சிறுகச் சிறுக ஏற்பட்டாலும் தற்கொலைக்கு இஸ்லாத்தில் சிறிதும் அனுமதி கிடையாது.) எனவே ஒவ்வொரு மனிதனும் போதைப் பழக்கத்தை விட்டும் விலகியே இருக்க வேண்டும். குறிப்பாக ஒரே இறைவனை நம்புகிற நேசிக்கிற ஒருவனுக்கு போதை கட்டாயம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
கெட்ட பழக்கங்கள் காரணமாக ஏற்படும் தீய விளைவுகள் படிப்படியாகவே தென்பட ஆரம்பிக்கும். முதலில் அந்த பழக்கத்திற்கு அடிமையானவனின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதைத் தொடர்ந்து தனது உழைப்பின் மூலம் குடும்பத்திற்கு பயன் தந்து கொண்டிருந்த அந்த மனிதன் தனது ஆற்றல்களை இழந்து வலிமை குன்றி குடி நோயாளியாக மாறிப்போவான். முதலில் குடும்பத்திற்கும், நாளடைவில் அவனைச் சூழவுள்ள சமூகத்திற்கும் இறுதியில் முழு நாட்டிற்கும் ஒரு சுமையாக மாறிப் போவான். தனியொரு மனிதனின் சீரழிவு ஒரு சமூகத்தின் அழிவாகவே மாறிப்போகிறது.
முஸ்லிம்களை ‘ஹைர உம்மத்’ அதாவது ‘மிகச்சிறந்த சமூகம்’ என திருக்குர்ஆன் போற்றுகிறது. இது தொடர்பான வான்மறை வசனத்தில் “மனிதர்களுக்காக எழுப்பப்பட்ட சமூகங்களில் நீங்களே சிறந்தவர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள். தீமையை தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்” (ஆலு இம்ரான் 110) என்று வந்துள்ளது.
சிறந்த உம்மத் என்ற சிறப்பு, நன்மையை ஊக்குவித்து தீமையை விட்டும் மக்களை தூர விலக்கும் காரியத்தை செய்வதன் மூலமே நமக்கு கிடைக்கும். இக்கடமைகளை செய்யாமல் நமக்கு இந்த சிறப்பு கிடைக்காது. எனவே பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் உம்மத்தினரான நாம் இந்த கொடிய பாவத்தில் இருந்து மக்களை தடுக்க பாடுபட வேண்டும்.
போதைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்தைப் போன்றே அவற்றை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் தனி நபர்களுக்கும், சமூகத்திற்கும், முழு நாட்டிற்கும் தீமை ஏற்படுத்தும். ஒரு சமூகத்தை அல்லது நாட்டை பலவீனப்படுத்த அச்சமூகத்தை பொருளாதார, கலாசார, ஒழுக்க மற்றும் ஆன்மீக செயல்பாடுகளை விட்டும் தடுக்க மக்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கும் கேடுகெட்ட போக்கு சில தீய சக்திகளால் கையாளப்படுகிறது.
பொதுவாக போதைப் பொருட்கள், விதவிதமான மதுபானங்கள் வெளி நாட்டுச் சரக்கு என்ற மயக்கத்தை ஏற்படுத்தி அயல் நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது அல்லது கடத்தப்படுகின்றது. இவைகளில் மதுபானத்தை விட ஹெரொயின், அபின் போன்ற போதை பொருட்கள் அதிக அழிவை ஏற்படுத்தக்கூடியவைகள்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய மனிதர்களை குறிப்பாக ஊக்கம் மிகுந்த மாணவர்களை இளைஞர்களை செயலிழக்கச் செய்து ஒரு நாட்டின் முன்னேற்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்து விடுகின்றது.
எனவே, இந்த மோசமான பழக்கத்தையும் அதன் பின்னணியில் இருக்கக் கூடிய சதிகளையும் முறியடிப்பது நம் அனைவரது கடமையாகும். குறிப்பாக தீமையை தடுப்பதை கட்டாயக் கடமையாகவே அல்லாஹ் வலியுறுத்தும் நிலையில் போதைப் பொருட்களுக்கு எதிராக செயல் பணியை முஸ்லிம்கள் ஒரு போதும் புறக்கணிக்கவே முடியாது.
முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை :
ஷீ போதைப் பழக்கத்தை எங்கு கண்டாலும் அதை முஸ்லிம்கள் அனுமதிக்கக் கூடாது.
ஷீ இது தொடர்பாக பிற சமூகத்திற்கும் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஷீ குறிப்பாக இளைஞர் அமைப்புக்களுடன் இணைந்து இதற்காக நாம் பாடுபட வேண்டும்.
ஷீ மது, மற்ற போதைப் பொருட்கள் விற்பனை நமது பகுதியில் நடைபெறுவதைக் கண்டால் உரியவர்களுக்கு அது பற்றி தகவல் தர வேண்டும்.
ஷீ ஒவ்வொரு மஹல்லாவும் தமது மஹல்லாக்களில் உள்ளவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மஸ்ஜிதுகளின் மூலம் நடைமுறைப்படுத்த பொறுப்புள்ள நிர்வாகங்கள் முன் வர வேண்டும் இல்லையேல் தமது பொறுப்பற்ற செயலுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் மறுமையில் வரும்.
ஷீ போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் குறிப்பாக முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் குற்றத்திற்கான தண்டனையைப் பெறுவதற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது.
ஷீ போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டத்தை கொண்டு வந்து குடி நோயாளிகளை குணப்படுத்த வேண்டும். இப்பணியில் தாவா அமைப்புக்களும் இணைய வேண்டும். ஏனெனில் இது போன்ற தீமைகளை தடுப்பது ஃபர்ளு கிஃபாயா வகையைச் சேர்ந்த கடமையாகும். ஆகவே, இதை பொருட்படுத்தாமல் பாராமுகமாக இருப்பதும் ஒரு பெரும் பாவமே.
ஷீ அரசு நிறுவனங்களோடும், ஏனைய சமூக நலன் அமைப்புக்களோடும்; நாம் இணைந்து எந்தளவு இப்பணியை செயல்திறனுடன் மேற்கொள்கின்றோமோ அந்தளவு நமது நாடும், மக்களும், நமது எதிர்கால சந்ததியினரும் பாதுகாக்கப்படுவார்கள். இன்ஷா அல்லாஹ்,