பிரெட் பசியை போக்கவா? உயிரை போக்கவா …?

bread
காலை சிற்றுண்டியாக பலரும் பிரெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். காலை சிற்றுண்டியாக பலரும் பிரெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் விற்பனையாகும் முன்னணி நிறுவன ரொட்டிகள், பன் ஆகியவற்றின் 38 மாதிரிகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் சமீபத்தில் பரிசோதனை செய்தது. 84 சதவீத அளவிற்கு பல நாடுகளில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதில் புற்றுநோயை உண்டாக்கும் பொட்டாசியம் புரோமேட், தைராய்டு பிரச்சினையை உண்டாக்கும் பொட்டாசியம் அயோடேட் ஆகிய ரசாயன பொருட்கள் குறிப்பிடத்தக்கவை. பிரெட் தயாரிப்புக்கு அடிப்படை தேவையான மைதாவை மிருதுவாக்கவும், வெண்மையாக்கவும் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் சேர்க்கப்படுகின்றன.
இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பான்மையான மக்கள் விரும்பி உண்ணும் உணவுப்பொருளில் பிரட், பிசா, பர்கர் போன்றவையும் இடம் பெறுகின்றன. சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர் கூறியதாவது:-
பிரபல நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன் ஆகியவற்றில் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாக காரணமாக கருதப்படும் 2பி கார்சினோஜென் ரசாயனப் பொருள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இவற்றில் காணப்பட்ட இன்னொரு ரசாயனப் பொருள் தைராய்டு குறைபாடுகளை ஏற்படுத்துவது ஆகும். ஆனால் இவற்றின் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யவில்லை. எனவே பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றை ரொட்டிகளில் சேர்க்க தடை விதிக்கவேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் பரிந்துரை செய்து இருக்கிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது தமிழகத்தில் பல பிராண்ட்டுகளில் பிரெட், பன் வகைகள் விற்கப்படுகின்றன. இங்கு விற்கப்படும் பிரெட் மட்டுமல்லாது அனைத்து துரித உணவுப்பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள்வலியுறுத்தியுள்ளன.
பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகியவை இந்தியாவில் தடை செய்யப்படாத ரசாயன பொருட்கள். 20 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன. உணவில் சேர்க்க அனுமதிக்கப்பட்ட 11 ஆயிரம் பொருட்களில் இவையும் அடங்கும். எனவே, அவற்றை இதுவரை பயன்படுத்தி வந்தோம். அப்பொருட்கள் கலந்த ரொட்டி, முற்றிலும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானதுதான் ஆனாலும் மக்களின் அச்சத்தைப் போக்க இனிமேல் புதிதாக தயாரிக்கப்படும் ரொட்டிகளில் இந்த பொருட்களை சேர்க்க மாட்டோம். என்று கூறுகின்றனர் அகில இந்திய ரொட்டி தயாரிப்பாளர்கள் சங்கம்.
குறிப்பிட்ட வேதிப் பொருட்களை இனிமேல் சேர்க்க மாட்டோம் என்று அவர்கள் சொல்லக் காரணம் உயிர்களின் மீதுள்ள அக்கறையால் அல்ல! அவர்களே சொல்வதை பாருங்கள் “புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருள் கலந்திருப்பதாக தகவல் வெளியானதால், ரொட்டி விற்பனையில் 10 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பயன்பாட்டை நிறுத்தினால்தான், இயல்பு நிலை திரும்பும் என்பதால் இம்முடிவை எடுத்துள்ளோம்.” குறைந்த போன லாபத்தை அதிகரிக்கத்தான் இந்த அறிவிப்பு.
சில மாதங்களுக்கு முன் மேகி நூடுல்ஸ் காரீயத்தின் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டு சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. பின்பு சில நாட்களிலேயே தடை நீக்கி உத்தரவு பெறப்பட்டது. இப்போது பிரெட் பன் ரொட்டிகள். ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் காஃபி சாப்பிட வேண்டாம் அதனால் இந்த பாதிப்பு ஏற்படும். டீ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை. சாக்லேட் சாப்பிடுங்கள் உற்சாகமாக வாழுங்கள் என்று ஏதாவது செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இருக்கும் அவசரத்தி(வாழ்க்கையி)ல்? அப்படி என்ன அவசரம் என்று யாரும் கேட்க வேண்டாம். எதையும் தரம் அறிந்து உண்ணும் அறிவு மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. வெந்ததை தின்று விதி வந்தால் செத்துப்போவோம் என்ற வாய்மொழியை வாழ்க்கையாக்கி வருகிறோம். சொந்தமாக விளைவித்து தின்பதை விட்டு விட்டு காசு சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டோம். ஆடி ஓடி சம்பாத்திக்கிறோம் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று இரவை பகலாக்கி உழைக்கிறோம். உழைப்பின் பலன் உணவு என்ற பெயரில் விஷத்தை தின்கிறோம். தினந்தோறும் செக்கப் என்ற பெயரில் மருத்துவனைகளுக்கு நடையாய் நடக்கிறோம். இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? என்று கேட்டால் நாமும் நமது பிள்ளைகளும் நலமுடன் வாழ சிரமப்பட்டுத்தான் ஆகனும் நமக்காகத் தானே கஷ்டப்படுகிறோம் என்ற தத்துவம் வேறு.
எதை தின்கிறோம்? எதற்காக தின்கிறோம் என்ற எந்த புரிதலும் இல்லாமல் கம்பெனிகளின் கையில் நமது வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டு விட்டது. நமது ஓட்டம் ஆட்டம் எல்லாம் இந்த கம்பெனிகளின் நல வாழ்வுக்காகத்தான் நமது நல வாழ்வுக்காக அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வோம்?