கிலியூட்டும் கழிப்பறைகள் !

மவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHA கல்லூரி, தாராபுரம்.

toilet e

நவம்பர்-19 சர்வதேச கழிப்பறை தினமாக கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் தங்களின் சுகாதாரத்தைப் பேணுவதில்லை. 1.1மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் இரண்டு
இலட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களை பாதுகாக்க, உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐ நா சபை இந்நாளை கடந்த 2013 முதல் விழிப்புணர்வு நாளாக கொண்டாடி வருகிறது.
இச்சூழலில் நாமும் இது குறித்து சற்று விழிப்புடன் இருப்பது நமக்கு மிகவும் பயனளிக்கக் கூடும். மலம், ஜலம் கழிப்பது என்பது மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்று. அதை நாம் கண்ட கண்ட இடங்களில் கழிப்பது என்பது அநாகரீகச் செயல். அதுவும் நம் வீட்டுப் பிள்ளைகளை அங்கேயிங்கே பொதுஇடங்களில் மலம் கழிக்க வைப்பது என்பது முற்றிலும் அருவருக்கத்தக்கது. இதனால் நோய்க்கிருமிகள் பலவும் பரவுகின்றன என்பது நம்மில் பலர் கண்டு கொள்ளாத ஒன்று. மலம் மட்டுமல்ல சிறுநீரும் அப்படித்தான்.
பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள்,நிழல்குடைகள், பொது வழித்தடங்கள், பொதுயிடங்கள் என யாவுமே இரவுவேளைகளில் பொதுக் கழிப்பிடங்களாக மறுமாற்றமும், பெருநாற்றமும் பெறத்தொடங்கி விடுகின்றன. இது பொதுமக்களுக்கு நாம் இழைக்கும் மாபெரும் கேடு அல்லவா ? ஏன் நாம் நமக்கான ஒரு கழிப்பறையை கட்டிக் கொள்ளக் கூடாது? அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது...? இன்றைக்கு நாம் இது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதிருக்கிறது.
வீட்டில் மட்டுமல்ல பொதுவெளியிலும் நாம் மிகுந்த கவனத்துடன்தான் நடந்து கொள்ளவேண்டும். ஒரு போதும் நாம் ஒருவருக்கும் துன்பம், துயரம், துக்கம், தொந்தரவு தருவதே கூடாது. பிறர் மனம் நோகும்படி நாம் நடப்பது என்பது அது என்றைக்குமே நமக்கு வெறுக்கப்பட்ட ஒன்றுதான்.

பிறரின் மகிழ்ச்சியில்தான் நமக்கான மகிழ்ச்சியே நங்கூரமிட்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். பிறகு நாம் ஏன் அடுத்தவர்களுக்கு அவ்வப்போது துன்பமும், தொல்லையும், இடரும் தொடர்ந்து தரவேண்டும் அதுவும் அடுத்தவர் இடத்தில் மலம் ஜலம் கழித்துவைத்து விட்டு...?
சாதாரணமாக நம்ம வீட்டுப்பூனை கூட தனது மல, ஜலத்தை மூடிவைத்து விட்டுச் செல்கிறது. ஆனால் நாம் ஏன் திறந்வெளியில் நமக்கான அசுத்தங்களை நமது கால்நடைகளைப் போல் கழித்து வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்? அல்லது நமது பிள்ளைகளை கழிக்கச் சொல்ல வேண்டும்?
நமக்கு பொதுநலம், பொதுத்தளம் என்பதெல்லாம் அறவே இல்லையா என்ன? நாமும் நம்மைப் போன்ற சகமனிதர்களுடன் தானே வாழ்கிறோம்? பிறகு ஏன் நமக்குள் அடுத்தவர்களை பற்றியஅக்கறையும், அரவணைப்பும் வருவதில்லை...? நாம் மட்டும் பிறரை குறை கூறுகிறோம். ஆனால் அதே குறைகளை நாம் செய்யும் போது மட்டும் நமக்கு நாமே சமாதானம் சொல்லி, சமாளித்துக்கொள்கிறோம். இது நல்லதொரு பண்பாடா என்ன...?
நன்குயோசிக்க வேண்டிய நேரமிது.
நகரங்கள் யாவும் "ஸ்மார்ட் அண்டு டிஜிட்டல் சிட்டி"என்று வெகுவேகமாக மாறிவரும் சூழலில் இன்றும் நாம் திறந்த வெளிகளில் மலங்கழித்துக் கொண்டிருப்பது என்பது முற்றிலும்
முரண் நகையாகயிருக்கிறது. இதில் குறிப்பாக கண்டகண்ட இடங்களில் நின்றுகொண்டு சிறுநீர் பாய்ச்சுவது என்பது வெட்கக்கேடானதும், சுகாதாரக்கேடானதும் ஆகும். நமது ஜலம் நம்மைவிட்டும் நீங்கினால் மட்டும் போதுமா? அதை ஒழுங்கு முறைப்படி கழிக்க வேண்டாமா என்ன...?
பாதை ஒழுக்கம்என்பது என்ன.? கண்டஇடங்களில் களிப்புடன் கழிப்பது தானா..? கொஞ்சமாவது யோசிக்க வேண்டும், நாம் செய்வது சரிதானா என்ன.....? "உஷார் ! இங்கு சிறுநீர்கழிக்காதீர் ! கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என்று எச்சரிக்கைப் பலகை வைக்கும் அளவுக்கு நிலமை படுமோசமாக மாறியிருப்பதிலிருந்தே இதன் அவலத்தை நாம் நன்கு எடைபோட்டுக் கொள்ளலாம்.
கண்ட கண்டஇடங்களில், நிழல் தரும் மரங்களின் கீழ், எறும்புப் புற்றுகளில், பொதுப்பாதைகளில், மக்கள்அமரும்இடங்களில், குளிக்கும் குளங்களில், வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்றெல்லாம் அன்றே நபிகள் நாயகம் கண்டித்துச் சொல்லியுள்ளது இன்றைக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சிறுநீர் கழித்து விட்டு சரியாக சுத்தம் செய்யாதவர்களுக்கு அவர் மரணித்தபின்னர் கூட அவரது மண்ணறையில் அவர் வேதனை
செய்யப்படுவார் எனவும் நபிகளார்எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இன்னொரு புறம் கழிவறைத்துப்புரவாளர்கள் விஷவாயு தாக்கி உயிர் இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருவதும் இங்குதான் மிகஅதிகம் என்பது பெரும் வருத்தம்
அளிக்கிறது. மனித மலங்களை தம் கையால்அள்ளிச் செல்லும் கொடூரம் இன்றும் பல கிராமங்களில் நீடிக்கவே செய்கிறது. அவர்களுக்கான எதிர்காலம் எப்போது மணம்கமழும்?
யாருக்கும் தெரியவில்லை. நவீனக் கழிவறைகள் நம்வீட்டுக்குள் கால் பதிக்காதவரை அவர்களது கைகள் மனிதக்கழிவுகளை அள்ளாமலிருக்கப் போவதில்லை. வீட்டுவாசலில் ஓடும் சின்னஞ்சிறு சாக்கடையிலும் கூட நம்மவர்கள் வெட்க சுபாவமின்றி இரவுபகலாக மலம்ஜலம் கழித்து வைத்து விட்டுச் செல்வது மோசமான செயலல்லவா...? அதனால் எத்தனை எத்தனை மனித மூக்குகளும், மூளைகளும் பாதிப்படைகின்றன..? சற்று பொது மக்களும் இதுகுறித்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
சரியான கழிப்பறை வசதி பெண்களுக்கென தமிழ்நாட்டில் இல்லாததால் பெண்களின் கல்வி, கௌரவம், ஆரோக்கியம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாகப் பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பைத் தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நிலையில் அரசு ஊர்தோறும் இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ள கழிப்பறைகள் பராமரிக்கப்பட வேண்டும்? ஊர் வாசிகள்தான் அவற்றை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அசுப்படுத்துவதும், சேதப்படுத்துவதும் நாம் நமது அரசுக்குச் செய்யும் மோசடி என்பதை ஏன்நாம் உணர்ந்து செயல்படுவதில்லை..?
அந்த ஒற்றைக் கழிப்பறையை நம்பி எத்தனையெத்தனை குடும்பங்கள் அனுதினமும் அதிகாலையில் நீண்ட வரிசையில் நிற்கின்றன ஆண்களும் பெண்களுமாய்... ரேசன் கடையைப் போலவே..! எனவே, அவரவர் பொறுப் புணர்ந்து ஊர்ப்புற கழிவறைகளை பாதுகாக்க வேண்டும். வசதிபடைத்தோர் தமது வீட்டுக்குள்ளேயே நவீன கழிப்பறைகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால், வசதியற்றோர் என்ன செய்யமுடியும் அந்த ஒற்றைக் கழிப்பறைக்குச் செல்வதை விட..!
இந்நேரங்களில் தான் ஊரைச்சுற்றியுள்ள "முள்காடுகள்" கை கொடுக் கின்றன. தங்களுக்கான அதிகாலை கடன்களைக் கழிக்க இவ்விடங்களை நோக்கி வெகுவேகமாகச் செல்கின்
றனர். இதில் பெண்களும், பெண் பிள்ளைகளும் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்களும், அவஸ்தைகளும் அப்பப்பா சொற்களால் சொல்லி விட முடியாதவை. எழுத்துக்களால் எழுதி
விடவும் முடியாதவை. அதுவும் அவர்கள் அந்தக்கதிரவனின் கதிரொளி வெளிச்சச் கீற்றுகள் வெளியே வரும்முன் இவர்கள் வெளிக்குக்குப் போய் விட்டு வேகவேகமாக வீடு திரும்ப
வேண்டும் என்பது அவ்வளவு சீக்கிரம் வேறு எவராலும் கடைபிடிக்க
முடியாத ஒன்று. இருப்பினும் இவர்களுக்கு இதைவிட்டால் வேறுவழி இல்லையே..!
குறிப்பாக சுத்தத்திற்கு பெயர்போன இஸ்லாமியர்கள் இன்று சுத்தமாக
பெயர் போனவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளும், வாழும் வீதிகளும் அசுத்தங்களால் நிரம்பிவழிவதை நீங்கள் கண்கூடாககாணமுடியும். அவர்களது வணக்க
வழிபாட்டுத்தளங்களும், அதைக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களும் கூட முற்றிலும் தூய்மையற்றிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. "சுத்தம் அது இறைவிசுவாசத்தி(ஈமானி)ன்
மறுபாதி" என நபிகளார் உயர்த்திச் சொல்லியிருப்பதிலிருந்தே இதனை நாம் நன்கு எடைபோட்டுக் கொள்ள முடியும். அந்த இறைவிசுவாசமிக்க அந்த தூய்மைப் பண்பு இன்றைக்கு நம்மிடையே எப்படியிருக்கிறது..? என்று ஒன்றுக்கு மூன்றுமுறை யோசித்துப்பார்க்க வேண்டியஒன்று.
சுத்தம் சோறு போடும்,காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பன போன்ற பொன்மொழிகளெல்லாம் சுத்தத்தின் அவசியத்தை உணர்த்துகின்றன. அதிலும் குறிப்பாக மலம், ஜலம் கழித்து விட்டு உடனே நமது கை, கால்களை சுத்தம் செய்வது என்பது மிகமிக முக்கியமான ஒன்று. குறிப்பாக நமது நகங்களை சீராக வெட்டிட வேண்டும். பெரும்பாலான நோய்கள் நமது நகங்கள் வழியேதான் நமது உடலினுள் உட்புகுகின்றன.
எனவே நீண்டு வளரும் நமது நீள் நகங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறே காலில்செருப்பு அணிந்து கழிவறைக்குச் செல்வதும்
காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் நமதுகை, கால் பாதங்கள் வழியேயும் நவீன நோய்க் கிருமிகள் ஊடுருவிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நாம் நன்னீர் கொண்டு கை, கால்களை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
கழிவறை தினக் கொண்டாட்டங்கள் என்பது இவையாவற்றையும் உள்ளடக்கியது தான். கழிவறை கட்டுவது பெரிதல்ல அதை தக்க கவனிப்புடன் பராமரிப்பது தான் மிகப்பெரிது. இது
விசயத்தில் மாபெரும் விழிப்புணர்வு நம்மிடையே, குறிப்பாக குழந்தைகளிடமும், பள்ளிப் பிள்ளைகளிடமும் மிகமுக்கியமாய் வரவேண்டிய ஒன்று.
வாருங்கள்...!