குழந்தையின் ஆளுமை வளர்ச்சி...!

அஸ்ஹர் அன்சார், மனநல ஆலோலசகர்.

chil p
ஆளுமை என்பதை மக்கள் பல்வேறு கருத்துக்களில் பயன்படுத்துகின்றனர். ஆளுமை என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் கொடுப்பது கடினம் எனினும் உளவியல் அறிஞர்களின் கருத்தின் படி
‘ஆளுமை என்பது ஒருவனின் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை, எனவும், ‘ஒருவன் தனது சூழலுக்கு ஏற்ற பொருத்தமான வாழ்வை அடைவது’ எனவும், ‘ஒரு நபரிலிருந்து இன்னொரு நபரை வேறுபடுத்தி அறிந்து கொள்ளக்கூடிய ஒருவனது முழுமையான நடத்தை முறை’ எனவும் வரைவிலக்கணங்கள் கொடுத்துள்ளனர்.
பொதுவாகப் பார்க்கும் போது ‘ஒருவனின் ஆளுமையானது அவனது உள்ளம், உணர்வுகள், சிந்தனை, உடல்தோற்றம், அவனது இயல்பான நடத்தைகள் அனைத்தையும் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இது அவனது அடையாளமாகவும் கருதப்படுகிறது. உண்மையான ஒவ்வொரு வெளிப்பாடும் ‘அவன் யார்’, ‘அவன் எவ்வாறானவன்’ என்பதை இலகுவாக இனம்காட்டுகிறது’.
ஒருவன் தனது எண்ணங்கள், உணர்வுகள், இயல்பான நடத்தைகள் என்பவற்றை முறையாக வளர்த்துக்கொள்வதிலும் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதிலும் அயராது உழைக்க வேண்டிய பொறுப்புக்கு உட்படுகிறான். இதைத் தொடர்ந்து செய்யும் போது அவன் அவனை ஏற்றுக்கொள்ளவும், நேசிக்கவும் பழகிக்கொள்கிறான். இதனால் அவனது ஆளுமை ஆரோக்கியம் பெறுகிறது.
ஆளுமை வளர்வதற்கான பயிற்சியை ஒருவனின் வாழ்வில் ஆரம்ப கட்டத்திலிருந்தே கொடுக்க வேண்டியிருக்கிறது. சிறு பிராயத்திலேயே சிந்தனை, உணர்வுகள், செயல்பாடுகள் அனைத்தும் பக்குவப்படுத்தப்படும் போது அல்லது முறையாக வெளிப்படுத்த வழிகாட்டப்படும் போது ஆளுமை அழகும் ஆரோக்கியமும் கொண்டதாக வளர்ந்து செல்வதை ஒவ்வொரு தாயும் தந்தையும் கண்டு மகிழ்ச்சியடைவதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.
ஒருவனின் வாழ்வு அவன் பிறந்த உடனே ஆரம்பமாகும் ஒன்றல்ல. அது பிறக்கும் முன்பே ஆரம்பிக்கிறது. ஒரு குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் போதே அதற்குக் கற்றுக்கொள்ள முடியும். நோய்களை, வலிகளை உணர முடியும். விருப்பங்களையும் வெறுப்புக்களையும் அடையமுடியும். கருவிற்குள்ளேயே அழுப்பு, சோர்வு எனும் தன்மைகளையும் அடைய முடியும் என ஆக்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் வில்லியம் லிலி குறிப்பிடுகிறார்.
கருவறையில் உள்ள குழந்தையால் தாய்க்கு ஏற்படும் பல்வேறு விதமான மனநிலை மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கவலை, பயம், மனஅழுத்தம், பதைபதைப்பு, சந்தோசம் போன்ற தாய் அனுபவிக்கும் உணர்வுகளின் தாக்கத்தைக்கூட கருவிலுள்ள குழந்தை உணர முடியும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
‘கருவுற்ற நேரத்திலிருந்து ஆரம்பிக்கும் உணர்வே குழந்தையாகும்’ என பிரடரிக் லெபோய் எனும் மருத்துவர் தனது ‘வன்முறையற்ற பிறப்பு’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். கருவுற்ற காலத்திலிருந்து தாயின் உணர்வுகள், எண்ணங்கள், செயல்பாடுகள், தாய்க்கு கிடைக்கும் அன்பு, ஆதரவு, மதிப்பு போன்ற அனைத்தும் குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். கருவில் இருக்கும் போது குழந்தை தாயின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அதனால் தாயின் ஒவ்வொரு செயல்பாடும் குழந்தையின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள வேண்டியது தாயின் பொறுப்பு. அவளுக்குத் துணையாக மற்றவர்களும் இருக்க வேண்டும்.
குழந்தையின் ஆளுமை வளர்வதற்கான ஆரம்ப இடமாக கருவறை காணப்படுகிறது. கருவறையை அமைதியும் அறிவும் நிறைந்த ஒரு பூங்காவனமாக, கல்விச்சாலையாக மாற்றியமைத்துக்கொண்டால் குழந்தை பிறக்கும் முன்பே உலகிற்கு அச்சமில்லாமல் ஆசையோடும் ஆர்வத்தோடும் முகம் கொடுக்கக்கூடிய தாயாரைப் பெற்றுக்கொள்கிறது.
குழந்தைகள் வளர்ந்து வரும் போது அவர்கள் தத்தமது அடையாளத்தைப் பற்றிய உணர்வினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பெற்றோர்களை விட அவர்கள் வேறுபட்டவர்கள் என்றும் புரிந்து கொள்கின்றனர்.
தனிநபர் என்ற வகையில் ‘நான்’, எனும் ஓர் உணர்வு அவர்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் ஏற்படுகிறது. பின் ஒவ்வொருவரும் தன்னை உயர்வான, பூரணமான, சுதந்திரமுள்ள மனிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை இலக்காகக் கொண்டு தனது இலட்சிய ஆளுமையை நோக்கி கவனத்தைச் செலுத்துகின்றனர்.
குழந்தை சமூகத்துக்குக் கிடைக்கும் அளப்பரிய வளமாகும். அது எவ்வகை நிறத்தை, தோற்றத்தை, குடும்பத்தைச் சார்ந்ததாக இருப்பினும் அதன் உண்மையான மதிப்பு ‘முழுமையை’ நோக்கிச் செல்கின்ற அதன் ஆளுமையில் தங்கியிருக்கிறது. ‘தென்னை மரம் சூரியனை நோக்கி வளர்கிறது. அவ்வாறு வளரும் போது அது நிறைவடைகிறது. அவ்வாறே உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் நிறைவை நோக்கியே பயணிக்கிறது. அதற்கு பெற்றோர், உறவினர்கள், போன்ற அனைவரும் துணைபுரிய வேண்டும்’ என கால் ரோஜஸ் எனும் மனநல அறிஞர் குறிப்பிடுகிறார்.
சிறந்த ஆளுமையைக் கொண்டவர்களின் அனைத்துச்செயல்பாடுகளிலும் அழகையும், முழுமையையும் பார்க்க முடியும். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் மக்களை கவரக்கூடியதாகவும், அவர்களின் பாராட்டுக்கும், நன்மதிப்பிற்கும் உட்பட்டதாகவும் இருக்கும். அவர்கள் அனைவரோடும் பிரச்சினையும், தடையுமற்ற உறவை நிலை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருப்பர்.
ஒரு வளரும் குழந்தையிடம் சிறந்த கலைஞனாக, அரசத்தலைவனாக, புகழ் பெற்ற அறிஞனாக, ஆகக் கூடிய ஆற்றல்கள், திறமைகள் இருப்பது போன்று பலவீனங்களும், பின்னடைவுகளும் இருக்கின்றன. திறமைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, தெரிந்து வெளிப்படுத்திக் கொள்வதற்கும், பலவீனங்கள் ஒவ்வொன்றை இனங்கண்டு அவற்றை அப்புறப்படுத்திக் கொள்வதற்கும் சிறந்த கல்வியும் பயிற்சியும் தொடர்ந்து வழங்க வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கல்விதான் அவனது ஆளுமை வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறது. ஆனால் சிறந்த ஆளுமை என்பது கல்வியாலும் அதன் வழியாக கொடுக்கப்படுகின்ற பாயிற்சியாலுமே கிடைக்கிறது. கல்வியை மாத்திரம் கொடுத்து பயிற்சியும், வழிகாட்டலும் கொடுக்கப்படவில்லையென்றால் ஆளுமை வளர்ச்சி ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்புக் கிடைக்காமல் போகும்.
ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமுள்ளவர்களாக வளர்வதைப் பார்க்கவே விரும்புகிறார்கள்.நோயின்றி ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அவர்களுக்கும் நாட்டுக்கும் முழு உலகிற்கும் பெரும் பயனுள்ளவர்களாவர். இவர்கள் தம் பெற்றோருக்கும் தாம் வாழும் சமூகத்திற்கும் சுகமானவர்களாகவே வாழ்வார்கள்.
அழகான ஆளுமையுள்ள குழந்தைகளை உருவாக்க முனைப்புடன் செயல்படும் அனைத்து பெற்றோர்களும் பின்வரும் விஷயங்களை குழந்தைகளுக்கு வழங்கியும், வழிகாட்டியும் துணைசெய்யத் தவறக்கூடாது.
1. குழந்தைக்கு தேவையான அன்பு, கனிவு ஆகியவற்றை வழங்குங்கள். அதனால் அவன் தன் மீதும் மற்றவர் மீதும் நம்பிக்கை கொண்டவனாக வளர்வான்.
2. குழந்தை மதிப்புமிக்கவன் என்பதை எப்பொழுதும் அவனுக்கு உணரச்செய்யுங்கள் அதனால் தன்னைப்போன்று மற்றவர்களும் மதிமிக்கவர்கள் என கருதுவான்.
3. குழந்தைகளின் உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதனால் மற்றவர்கள் மீதான உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்வான்.
4. குழந்தைகளின் திறமைகளை மதித்து, பாராட்டி ஊக்கமளியுங்கள் அதனால் தன்னை உயர்வும் மதிப்பும் மிக்கவனாகக் கருதிக்கொள்வான்
5. விளையாட குழந்தைக்கு நேரத்தை வழங்குங்கள். அதனால் பல விஷயங்களை கற்கவும், சமூக அனுபவங்களைப் பெறவும் மன ஆறுதல் அடையவும் வழி கிடைக்கும்.
6. எப்பொழுதும் உண்மையான விஷயங்களை உரையாட உற்சாகமூட்டுங்கள். அதனால் தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றாமல் பாதுகாத்துக் கொள்வான்.
7. குழந்தை பின்பற்றும் மார்க்கத்தின் மீது ஆர்வமூட்டுங்கள், அதனால் வழி தவறாமல் கட்டுப்பாட்டிற்குள் வாழ வழி வகுத்துக்கொள்வான்.
8. உங்கள் நடை, உடை, செயல் அனைத்தாலும் அவனுக்கு அழகான செய்திகளை வழங்குங்கள், அதனால் அவன் உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் அன்பும், மரியாதையும், நல்லெண்ணம் கொண்டவனாக இருப்பான்.