மரம் மனிதர்களின் இன்னொரு உறுப்பு

tree5
சென்னையில் சில இடங்களை மரங்களை வைத்தே அடையாளம் கண்டு வந்தேன். ஏனெனில் மரத்திற்கு அங்கும் இங்கும் நகரும் வசதி இல்லை. அதன் உறுப்புக்கள் அழிந்து கொண்டே இருந்தாலும் அதை உதிர்த்துக் கொண்டே தன்னை தழையச் செய்து கொண்டே நின்ற இடத்திலேயே வளரும். வெயில் அடித்தால் காய்வதும் காற்றடித்தால் களைவதும் மழைத்தால் நனைவதும் மரங்களின் கடமையுனர்ச்சி. மரங்களிலிருந்து கற்றுக் கொள்ள இருக்கிறது அநேக பாடங்கள். அதன் ஒவ்வொரு கிளையும், இலையும் பாடம்.
2016 டிசம்பரில் அடித்த வர்தா புயல் காற்றில் மொட்டையடிக்கப்பட்ட வழுக்கைத் தலைப் போல் ஆகிவிட்டது சென்னை. நகரில் ஆயிரக்கணக்கான மரங்கள் மரணமடைந்திருக்கின்றன. மரங்களின் இழப்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து முழுமையாக மனிதர்கள் குறிப்பாக சென்னைவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளால் மட்டுமே மரத்தினை படைத்தல் சாத்தியம் என்ற சத்தியமான உண்மை மனிதர்களுக்கு முழுமையாக புரிவதில்லை. மரங்களின் இழப்பு தீவிரமாக மனிதர்களைப் பாதிப்பதில்லை. இடிந்த கட்டிடங்களை உருவாக்கி விடலாம், மரங்களை இழந்தால் அந்த இழப்பின் வெற்றிடத்தை உடனே சரிசெய்ய முடியாது.
மரம் நம் மூச்சு, மரம் நம் உடலின் வெளி உறுப்பு, சமீபத்தில் ஒரு சூழலியளாலர் சொன்னது போல "மரங்கள் நம் நுரையீரலின் இன்னொரு பகுதி... பாதி நுரையீரல்தான் நம் உடலில் இருக்கிறது, இன்னொரு பாதி மரங்களாக வெளியில் இருக்கிறது. நாம் வெளியிடும் காற்று அதன் உணவு. மரம் வெளியிடும் காற்று நம் சுவாசம்." அறிவியல் மொழியில் மனிதர்கள் மூச்சுவிடும் கார்பண்டை ஆக்சைடு என்ற நச்சுக்காற்றை மரம் உள்வாங்கி மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவையான ஆக்சிஜனை மனிதர்களுக்குத் தருகிறது மரம். அந்த வகையில் மனிதர்கள் வாழ மரங்கள் வேண்டும். மரங்கள் இல்லாமல் ஆக்சிஜன் பேக்கை முதுகில் சுமந்து கொண்டு சந்திரனில் மிதப்பது போல பூமியில் வாழும் வாழ்க்கைக்குப் பெயர் வரமல்ல சாபம்.
மரத்தால் விழையும் வரமும் சாபமும்
பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழை தரும். நிலச்சரிவைக் கட்டுப்படுத்தும். மண் அரிப்பை தடுக்கும். கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும். புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும். கடலோரப் பகுதிகளில் இருக்கும் மரங்கள் அலைகளை கட்டுப்படுத்தும், காற்றின் வேகத்தை குறைக்கும் இது வரம்.
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயரும், புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகும். சுருக்கமாகச் சொன்னால் காலநிலை மாறும். எதுவும் எப்படியும் எப்போது நடக்கலாம் அதற்குப் பெயர் இயற்கைச் சீற்றம், பேரிடர் இது சாபம். புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும். அதற்கு மரங்கள் அவசியம்.
வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டவர்கள் தங்கள் நலவாழ்விற்கு சொத்துக்களை சேர்ப்பதை விட இயற்கையில் சமநிலை பேணிட வேலை செய்யுங்கள். வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு மரக்கூட்டங்கள் அடர்ந்த வனங்கள் தேவை. புவி வெப்பமயமாவதைத் தடுக்க உலகம் முழுவதும் 700 கோடி மரங்களை நடுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
சூழலியளாலர் நக்கீரன் சென்னையில் 2016 டிசம்பரில் காற்றின் சீற்றத்தால் விழுந்த மரங்களின் இல்லாமையால் ஏற்படும் இழப்பு குறித்து எழுதுகிறார். மரங்களற்ற சென்னை எப்படி அமையும். வெப்பம் : மரங்களற்ற இடத்தில் காற்று எளிதில் வெப்பமடையும். இதனால் காற்றின் ஈரப்பதம் குறையும். வெப்பக் காற்று வீசத் தொடங்கும்போது பாதையில் உள்ள மண் மரம் ஆகியவற்றிலுள்ள ஈரத்தையும் சேர்த்து உறிஞ்சிவிடும். அதனால் வெப்பம் அதிகமாகும்.
தண்ணீர் : மரங்கள் என்பவை தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள். பெய்யும் மழையை நிலத்தடி நீராக மாற்றக்கூடியவை மரங்கள். மரங்களின் இழப்பு நில்லத்தடி நீரை குறைக்கும்.
தூசி : நகரங்களில் ஆண்டொன்றுக்கு ஒரு ச.கி.மீட்டருக்கு 35 டன்கள் தூசி உருவாகிறது. தொழிற்சாலைகள் நிறைந்த நகரத்தில் இன்னும் அதிகம். ஆனால் சாலையோர மரங்கள் வாகனம் வெளியிடும் தூசியில் 70% அளவை குறைத்திடும். மரங்களற்ற சென்னை சாலைகளின் தூசியை எப்படி சுத்தம் செய்வது?
ஒளி/ஒலி : கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச்சாலைகளும் முறையே 60%, 45% அளவுக்குப் ஒளியை பிரதிபலித்து கண்களுக்கு ஊறு உண்டாக்கும். ஆனால் ஆலமரங்கள் போன்றவை வெறும் 9%மே ஒளியை பிரதிபலிக்கின்றன. அதுபோல நகரம் என்றாலே ஒலி மாசு. சாலையில் 50 அடி அகலத்துக்கு மேல் மரங்கள் இருந்தால் அவை ஒலியை 20-30 டெசிபல் அளவுக்குக் குறைத்திடும். இனி என்ன செய்யப் போகிறது சென்னை?
உடல்நலம் : மரங்கள் என்பது உயிர்வளி (ஆக்சிஜன்) தொழிற்சாலை என்பதை நாம் அறிவோம். மரங்கள் கூடினால் வீசும் காற்றில் உயிர்வளி கூடும். இதனால் நம் உடல் திசுக்களின் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, நோய் எதிர்ப்புத் திறனும் கூடும். நகரில் மரங்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள் காற்றிலுள்ள நச்சுயிரிகளை (கிருமிகளை) கொல்லக்கூடியவை. ஆனால் சென்னையில் ஓடும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் ஒரு மனிதரின் ஓராண்டுக்கு தேவையான உயிர்வளியை ஏற்கனவே அழித்துக் கொண்டிருக்கையில் மரங்களையும் இழந்த சென்னை இனி என்ன செய்யப் போகிறது? எனவேதான் சென்னைக்கு உடனடியாகத் தேவைப்படுவது அதன் நுரையீரலே. என்று முடித்திருப்பார். மரம் சென்னைக்கு மட்டுமல்ல பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் தேவை. ஏனெனில் மரம் மனிதர்களின் வெளி உறுப்பு.