நோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர்

“விவசாயத்தைக் கண்டுகொள்ளாத நாட்டில், நோய்கள் சூழ்ந்து, அழிவை உண்டாக்கும். இன்று அரசியல் இல்லாத இடமே இல்லை. நாம பேசுற மைக்கில இருந்து சாப்பிடுற கடலை மிட்டாய் வரை அரசியல் இருக்கு.
ஏழைகள் சாப்பிடும் பொருளுக்கு அதிக வரியும்,பெரும்பாலான கார்ப்பரேட் வர்க்கம் சாப்பிடும் பீசா, பர்கர் போன்ற உணவுப் பொருள்களுக்குக் குறைந்த வரியும் விதிக்கப்படுகிறதல்லவா (ஜி.எஸ்.டி)! இப்படி அரசியல் எங்கும் நிறைந்திருக்க, மருத்துவத்துக்கும், விவசாயத்துக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. இயற்கைப் பிரச்னைகள் தொட்டு அரசாங்கங்களின் தவறான கொள்கைகளாலும் விவசாயத்தை இழக்கும் விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்.
இதில் கவனம் எடுத்து தடுக்க வேண்டிய அரசோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பல லட்சம் கோடிகளில் கடன் வரி சலுகையும், விவசாயிகளுக்குப் பாராமுகமும் காட்டுகிறது. இன்று நமக்கான உணவு முறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. பன்னாட்டு வணிகத்துக்கான உணவு முறைகள் திணிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான உற்பத்திகள் ஊக்கப்படுத்தப்படும்போது மண் சார்ந்த உற்பத்திகள் வளம் குறைகிறது. ஒரு தேசத்தின் இயற்கை இயல்புக்கு ஏற்பவே உணவுப் பழக்கம் அமையும்.
ஆனால், இன்று மாற்றப்பட்டு வரும் பன்னாட்டு உணவுப் பழக்கம் மற்றும் இயந்திரமயமான கார்ப்பரேட் உலக மயமாக்கம் ஆகியவை புதுப்புது நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த நோய்களைத் தீர்ப்பதாகக் கூறியே புற்றீசல் போல பல மருந்து நிறுவனங்களும், பகாசுர மருத்துவமனைகளும் தோன்றுகின்றன. நோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர். ஆனால், இன்றைய மருத்துவ உலகின் நிலையென்ன?
அதனால் இ ங்கே மருத்துவம் என்பது சேவை என்ற தன்மையில் இருந்து தடம் புரண்டு வணிகம் என்ற கொடூரத்துக்குள் செல்கிறது. இது பெரிய வணிகம் என்பதை உணர்ந்து கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், கோடிகளில் பணம் இறைக்க வேண்டும். இப்படிக் கோடிகளைக் கொட்டி மருத்துவக் கல்லூரி செல்பவர், வெளியே வந்த பின் எப்படி சேவைக்காக செயல்படுவார்? போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்றல்லவா நினைப்பார். அப்படியென்றால் நோயாளிகளின் தலையில்தான் மிளகாய் அரைப்பார். இந்தச் சுரண்டலைத் தடுக்க, மாற்று மருத்துவத்தின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும். மாற்று மருத்துவம் பக்கம் மக்கள் கவனம் திருப்பினால், இந்தச் சுரண்டல் பின்னடைவைச் சந்திக்கும். அப்படியான ஒரு மாற்று மருத்துவமாகவே ஹோமியோ மருத்துவம் உள்ளது.