இலக்கு இல்லாத வாழ்வு சமூகத்தை கடும் நெருக்கடியில் தள்ளிவிட்டு விடும்

உலகம் முழுவதும் முஸ்லிம் உம்மத் பல வகைகளிலும் நெருக்கடிகளை சந்தித்து வருவதற்கு ஆன்மீக ரீதியாகவும் சமூக வாழ்வு ரீதியாகவும் ஒரு தெளிவற்ற இலக்கற்ற வாழ்வு முறைதான் மிக முக்கிய காரணம்.
குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் எந்த நேரமும் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி வீழ்த்துவதற்கு எதிரிகள் துடித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் முஸ்லிம்கள் துல்லியமான வாழ்வியல் இலக்கோடு சோர்வு இல்லாமல் பயணித்தால் மட்டுமே எதிரிகளின் அடக்குமுறை பேரழிவுகளில் இருந்து தங்களையும் தங்கள் சந்ததியையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஒரு சமூகமாக முஸ்லிம் உம்மத்திற்கு கல்வி சமூக அரசியல் பொருளாதார வழ்வியல் போன்ற அனைத்து துறைகளிலும் எட்ட வேண்டிய இலக்கு மிக துல்லியமாக கால வரையரையோடு வடிவமைக்கப்பட வேண்டும்.
சமூகத்தளத்தில் பணியாற்றும் உலமாக்கள் அறிவுஜீவிகள் தலைவர்கள் அவரவர் சார்ந்துள்ள துறைசார்ந்து இந்த தொலைநோக்கு இலக்கை வடிவமைத்து உம்மத்தின் நெஞ்சங்களில் ஆழமாக பதியவைக்க வேண்டும்.
கால மாற்றத்திற்கேற்ப அந்த இலக்கு மேம்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக பல
தலைமுறையின் மனங்களில் பதியவைக்க வேண்டும். ஜூம்ஆ மேடைகள் குடும்ப திருமண விழாக்கள் போன்ற முஸ்லிம்கள் ஒன்றுகூடுகின்ற எல்லா விழாக்களிலும் முஸ்லிம்களை இந்த இலக்கை நோக்கியே முனைப்படுத்துதல் இருக்க வேண்டும்.
ஒரு 100 ஆண்டுகளுக்கு இடைவிடாமால் இந்த பிரச்சாரத்தை செய்தால் பிறகு அதுவே முஸ்லிம்களின் வாழ்வியல் வழமையாகிப்போகும். இலக்கை நோக்கிய
பயணத்தில் அல்லாஹ்வின் கருணையால் பலன்கள் வெளிப்படத் துவங்கிவிடும்.
இலக்கை நோக்கிய பயணம் தான் மனித வாழ்வு என்பதை உலகின் இறுதிநாள் வரை சமூகத்திற்கு பயிற்றுவிக்க வேண்டும்.
எத்தனை கொள்கை கட்சி இயக்கப் பிரிவுகள் நம்மில் இருந்தாலும் நாம் சென்றடைய வேண்டிய இலக்கு ஒன்றுதான். பாதைகளும் பயணிக்கும் வாகனமும் அதன் வேகமும் மட்டுமே வேறுபடும்.
தனி ஒரு முஸ்லிமுடைய வாழ்வியல் தேவையும் இலக்கும் ஒட்டுமொத்த உம்மத்தின் தேவை மற்றும் இலக்கிலிருந்து வேறுபட்டு விடக்கூடாது.
சில நேரங்களில் சிலரின் சுயநலம் மற்றும் ஆணவத்தால் சமூக கட்டமைப்பில் இருந்து பிரிந்து வாழ்வதை பெருமிதமாக கருதுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களையும் தங்கள் சந்ததியையும் பாதுகாப்பு இல்லாத அபாயகரமான சூழலில் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.
சமூக வாழ்வில் எந்த இலக்கும் இல்லாமல் பிற்போக்குத் தனமாக வாழ்ந்த முஸ்லிம்களும் முஹல்லா கட்டமைப்பிலிருந்தும் தனித்து வாழ்ந்த ஒருசில முஸ்லிம்களும் வாழ்வில் மிக கோரமான அடக்குமுறைகளை அழிவை சந்தித்துள்ளனர் என்பதை இந்தியச் சூழலும் வரலாறு நமக்கு கற்றுத்தருகிறது.
முதல் சிலுவை யுத்தம், அல் அந்தலூஸ் ( ஸ்பெயின்) பாக்தாத், முகலாயப் பேரரசு, பாலஸ்தீன், சோமாலியா இப்போது ரோஹிங்கியா என்று பட்டியல் நீள்கிறது.

சுகபோகம்... அலட்சியம்... உட்பூசல்... எதிரியின் வலிமையை கணிக்காதது...
முன்னேற்பாடுகள் இல்லாதது... உம்மத்திற்கு கற்றுத்தராதது... இவை சமூக அழிவிற்கான காரணங்கள்.
இஸ்லாத்தின் எதிரிகள்... கால அளவு கொண்ட மிக துல்லியமான இலக்கை நிர்ணயித்து ஒவ்வொரு சூழலுக்கும் கால மாற்றத்திற்கும் ஏற்ப செயலாற்றுகின்றனர்.
அவர்கள் பார்வையில் மார்க்கத்தில் பிடிமானம் உள்ள முஸ்லிம்கள் என்றோ பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழும் நவீன மதச்சார்பற்ற முஸ்லிம்கள் என்றோ பிரிவினையெல்லாம் கிடையாது.
இங்கே எதிரிகளின் இலக்கு பாவப்பட்ட முஸ்லிம் மனிதர்கள் அல்ல.
முஸ்லிம்கள் பின்பற்றும் அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள ஜமாஅத் அமைப்பு முதல் உம்மத்தில் இயங்கும் உருவாகும் அனைத்து சமூக அரசியல் கொள்கை இயக்கங்கள் சங்கங்கள் அறக்கட்டளைகள் என அனைவரும் முன்னிறுத்தும் சமூக வளர்ச்சிக்கான பொது இலக்கு உருவாக்கப்பட வேண்டும்.
சாதாரண மக்களுக்கு... இந்த இலக்கு பாதை பயணம் அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் புரியாது. செல்வந்தர்களில் சிலர் இதுபோன்று பேசுவதையே விரும்பமாட்டார்கள். தாங்கள் அனுபவித்து வரும் சொகுசு வாழ்விற்கு சங்கடமாக உணருவார்கள்.
முஸ்லிம் உம்மத்திற்கு பெருகும் நெருக்கடிகளை புரிந்து ஆன்மீக வலிமையோடு சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் வளர்ச்சிக்கான இலக்கையும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு முறியடிக்கும் இலக்கையும் துல்லியமாக வடிவமைத்து ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மேம்படுத்தி உம்மத்தற்கு கற்றுத்தர வேண்டும்.

அது தான் உண்மையான கல்வி.
இதில் சுணக்கம் ஏற்பட்டால்....
இனிவரும் காலங்களில் சந்ததிகள் மிகப்பெரும் அழிவுகளை சந்திக்கும்....

அல்லாஹ் பாதுகாப்பானாக... ஆமீன்