தூய்மை இந்தியா மலர தூய இஸ்லாம் கூறும் போதனைகள்-1

ஐந்து வகை நீர்கள்
01. தூய்மையான நீர் : மழை நீர், கடல் நீர். இவை தன்னளவிலும் தூய்மையானவை; பிறவற்றையும் தூய்மைப் படுத்தக்கூடியவை.’வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் இறக்கினோம்.’ [குர்ஆன் - 25 : 48]
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கடலில் பயணிக்கிற போது, குறைவான குடிநீரையே எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். அதிலிருந்து உளூச் செய்துவிட்டால் தாகம் தணிக்க நீரில்லாமல் போகிறது. எனவே, கடல் நீரில் நாங்கள் உளூ - உடல் தூய்மை செய்யலாமா’ என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ‘கடல் நீர் தூய்மையானது. அதில் உள்ள இறந்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவையே’ என்று கூறினார்கள். [புகாரி]
ஆற்றுநீர், ஊற்றுநீர், குளத்துநீர் போன்றவையும் சுத்தமானவையே. இவற்றின் மூலமும் நாம் சுத்தம் செய்யலாம்.
02. பயன்படுத்திய நீர் : உடல் உறுப்புகளைக் கழுவும் போது, குளிக்கும்போது உறுப்புகளி லிருந்து வெளியேறும் நீருக்கு பயன்படுத்தப்பட்ட நீர்’ எனப்படும். இதுவும் பொதுவான நீரைப் போன்று சுத்தமானதே.
நபி (ஸல்) உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் கழுவிய பிறகு கைகளில் மீதியி ருந்த நீரால் தமது தலையைத் தடவினார்கள். [அபூதாவூது]
‘ஓர் இறைநம்பிக்கையாளன் ஒருபோதும் அசுத்தமாக மாட்டான்.’ [புகாரி] அப்படியானால், அவனது உடலின் மீது பட்ட நீர் எவ்வாறு அசுத்தமாகும்?
03. சுத்தமான பொருட்கள் கலந்த நீர் : சோப்பு, குங்குமம், மாவு போன்ற நீருக்குத் தொடர்பில்லாத பொருட்கள் கலந்த நீர், அது தண்ணீர் என அழைக்கப்படும் வரை சுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவையே. அது நீர் என்ற தன்மையை இழந்து விட்டால், அது தன்னளவில் சுத்தமானது. பிறவற்றை சுத்தம் செய்யத் தகுதியற்றது.
நபி (ஸல்) அவர்களும் மனைவி மைமூனாவும் ஒரே பாத்திரத்தில் குளித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் கோதுமை மாவின் துகள்கள் இருந்தன. [சுனன நஸஈ]
04. அசுத்தமான பொருட்கள் கலந்த நீர் : அசுத்த மான பொருட்கள் கலந்து அதனால் நீரின் தன்மை மாறியிருந்தால், அதன் மூலம் சுத்தம் செய்வது கூடாது. இது அறிஞர்களின் ஒருமித்த கருத்து. நீரின் தன்மை மாறாமல் இருந்தால், அது சுத்தமான நீரே.
‘அசுத்தமானவை கலந்து நீரின் வாடை, சுவை, நிறம் போன்றவை மாறாவிட்டால், அந்த நீர் சுத்தமானது.’ [பைஹகீ]
05. எச்சில் நீர்கள் பலவகை உள்ளன :
01) மனித எச்சில் நீர்
முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், குளிப்புக் கடமையானவர், மாதவிடாய், பிரசவத்தீட்டு ஏற்பட்டுள்ள பெண் போன்றோர் அருந்தி மிஞ்சியுள்ள எச்சில் நீர்கள் அனைத்தும் சுத்தமானவையே.
இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்தவர் பாபு ஜெகஜீவன் ராம். இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பு. இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், ஒரு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள் என்பது வரலாறு. ஆனால், இஸ்லாமில் இதுபோன்ற தீண்டாமை இல்லை.
‘இணைவைப்பாளர்கள் அசுத்தமானவர்கள்’ [09 : 28] என்று குர்ஆன் கூறுவது, கொள்கை ரீதியான அசுத்தத்தையே குறிக்கிறது. அவர்களது உடல்களைப் பொறுத்த வரை அசுத்தமானவை யல்ல.
ஏனெனில், இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்துள்ளனர். அவர்களது அரசாங்கத் தூதர்கள் மற்றும் தூதுக்குழுவினர் நபியவர்களைச் சந்திக்க மஸ்ஜிதுன் நபவிக்கு உள்ளே வருகை புரிந்துள்ளனர். அவர்கள் உடல் பட்ட எந்தப் பொருளையும் கழுவித் தூய்மை செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடவில்லை.
‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது ஒரு பாத்திரத்தில் நான் நீர் அருந்திக் கொண்டி ருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்த அந்தப் பாத்திரத்தை வாங்கி நான் வாய் வைத்துக் குடித்த, எனது உதடுகள் பட்ட இடத்தில் தமது உதட்டை வைத்து நீரை அருந்தினார்கள்.’ [ஆயிஷா (ரளி) முஸ்லிம்]
02) கால்நடைகளின் எச்சில் நீர்
உண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளின் எச்சில் நீர் அசுத்தமானதல்ல. எனவே அதை அருந்துவதும் அதில் உளூ - அங்க சுத்தி செய்வதும் அனுமதிக்கப்பட்டதே.
03. வன விலங்குகளின் எச்சில் நீர்
கழுதை, கோவேறுக் கழுதை, வன விலங்குகள், இரை தேடும் பறவைகள் முதலியவை அருந்தி எஞ்சிய நீரும் சுத்தமானதே.
04. பூனை அருந்திய நீர்
இதுவும் சுத்தமானதே. ஏனெனில், ‘பூனை அசுத்தமானதல்ல. அது உங்களைச் சுற்றி - அண்டி வாழும் ஓர் உயிரினம்‘ என்பது நபிமொழி. [புகாரி]
05. நாய், பன்றியின் எச்சில் நீர்
இவை அசுத்தமானவை. ஏனெனில், ‘உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்து நீர் அருந்தினால், அதை அவர் ஏழு தடவை கழுவிச் சுத்தம் செய்யவும். முதல் தடவை மண்ணால் சுத்தம் செய்யவும்‘ என்பது நபிமொழி. [முஸ்லிம்]