அணு உலைகளில் இருந்து பொங்கி வழியும் உண்மைகள்!

Nuclear-Iran
தடைகளை தகர்த்தெறிந்து அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பாஜக அரசின் தேசபக்தி:
அணு உலைகளில் இருந்து
பொங்கி வழியும் உண்மைகள்!
- ப.ரகுமான்
"நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அணுவிபத்து இழப்பீடு பொறுப்புச் சட்டத்தின், 17(b) பிரிவின் முக்கியத்துவத்தில் மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளப்போவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தீவிர கவலைக்குரியது. (17(b) பிரிவு என்பது, வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குறைபாடுகள் காரணமாக விபத்து ஏற்பட்டால், அணு உலைகளை தயாரித்தவர்களை பொறுப்பாக்கி, இழப்பீடு தருவதற்கு கடப்பாடு உடையவர்களாக ஆக்கும் பிரிவு). இதன் மூலம் தயாரிப்பாளர் ஏற்க வேண்டிய மொத்த பொறுப்பு தொடர்பாகவும் சமரசம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் மீறப்படுகிறது"
- ரவிசங்கர் பிரசாத், பாஜக மூத்த தலைவர்
இதைப் படித்தவுடன், மோடி அரசில் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டு, தற்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும் ரவி சங்கர் பிரசாத்துக்கு, மோடி அரசையே விமர்சிக்கும் துணிச்சல் வந்துவிட்டதாக வியப்படைய நேரிடுவது இயல்புதான்.
"அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, அதை அமெரிக்க நிறுவனங்களுக்கு பரிசாக எடுத்துச் செல்லப் போகிறார் பிரதமர்" என்று செப்டம்பர் 19ம் தேதி ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. அதையடுத்தே ரவிசங்கர் பிரசாத் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்தார்.
ஆக, "பிரதமர் அமெரிக்க நிறுவனங்களின் நலன்களுக்கான செயல்படும் ஆள்" என்பதாக ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருப்பதை ஆமோதித்தே அவர் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்பதும் வெளிப்படை.
மோடியின் அமைச்சர்கள், வெளிப்படையாக மக்கள் நலனுக்காக பேசும் வகையிலும், மோடி அரசு அதை அனுமதிக்கும் வகையிலும் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்கிக் கொண்டிருக்கிறதா? என இப்போது உங்களுக்கு வியப்பு மேல் வியப்பு ஏற்படுகிறது.
"ஒரேமாதிரியான சம்பவங்கள் வரலாற்றில் இரண்டு முறை நிகழ்கின்றன. அது முதல் முறை சோகமாகவும், இரண்டாவது முறை கேலிக்கூத்தாகவும் முடிகிறது" என்ற, காரல் மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகத்தை, அது காரல் மார்க்ஸின் வாசகம் என்று சொல்லாமலே மேற்கோள் காட்டுவார் அருண் ஜேட்லி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது!
தற்போது ஆளுங்கட்சியாக இருந்து, நாட்டின் இறையாண்மையும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கி இருக்கும் பாஜக அரசுக்கு இதைவிட பொருத்தமான வாசகம் வேறெதுவும் இருக்க முடியாது.
"அணுவிபத்து இழப்பீட்டு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, அதை அமெரிக்க நிறுவனங்களுக்கு பரிசாக எடுத்துச் செல்லப் போகிறார் பிரதமர்" என்று செப்டம்பர் 19ம் தேதி ஊடகங்களில் வெளியான செய்தி மன்மோகன் சிங்கைப் பற்றியதாகும். அது வெளியான ஆண்டு 2013.
ஐ.நா.பொது சபையில் உரையாற்றச் செல்கிற சாக்கில் அப்படியே அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்தித்து பேசிவிட்டு வருவதற்காக, 2013 செப்டம்பர் 26ல் வாஷிங்டன் சென்றார் மன்மோகன் சிங். அதை முன்னிட்டுத்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன.
பழுதான, குறைபாடுடைய அணுஉலைகளால் விபத்து நேரிட்டால், அந்த அணுஉலைகளை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனங்களை பொறுப்பாக்கும், அணு விபத்து இழப்பீட்டுச் சட்டத்தின் பிரிவை நீக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தம். அதை நீக்க முடியாது என்பதால் நீர்த்துப்போகுமாறு செய்ய மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டது. இதற்காக, அணுசக்தித் துறை மூலம், அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடம் கருத்துக் கோரப்பட்டது. வாகன்வதியும் செப்டம்பர் 4ம் தேதி மத்திய அரசுக்கு ஒரு தந்திரமான வழியைக் கூறினார்: "அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டப்படி, அணு உலையில் விபத்து ஏதேனும் நேரிட்டு விட்டால், இழப்பீட்டை வசூல் செய்யும் உரிமை அல்லது அதற்காக வழக்கு தொடரும் உரிமை அணுஉலையை இயக்குபவர் (Operator) வசமே உள்ளது. அணு உலையை இயக்கப்போவது (ஆபரேட்டர்) மத்திய அரசின் நிறுவனமான என்பிசிஐஎல் (NPCIL) என்பதால், இழப்பீடு கோரும் அல்லது வழக்குத் தொடரும் உரிமை மத்திய அரசு வசமே இருக்கும்; எனவே மத்திய அரசாகப் பார்த்து வழக்கு தொடர்ந்தால்தான் உண்டு. மற்றபடி அணு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் வழக்குத் தொடரவோ இழப்பீடு கோரவோ உரிமை இல்லை என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் கவலைப்பட வேண்டியதில்லை" என்பதுதான் அந்த விளக்கம்.
ஊடகங்களில் இந்த செய்தி வெளியானவுடன், இந்தியாவின் இறையாண்மை பறிபோய்விட்டதகவும், நாடாளுமன்றத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் பாஜக விமர்சித்தது. அதன் ஒருபகுதியாக, 2103 செப்டம்பர் 20ம் தேதி, பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறிய கருத்துதான் தொடக்கத்தில் நீங்கள் படித்தது.
மேற்குறிப்பிட்ட விளக்கத்தை தாங்கள் கேட்டுப் பெற்றதாகவோ, அதை அமெரிக்க நிறுவனங்களுக்கு சொல்லப்போவதாகவோ அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த மன்மோகன் சிங் அரசு சொல்லவில்லை. ஊடகங்கள் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டித்தான் இந்த செய்தியை வெளியிட்டன. அதற்கே வானத்துக்கும் பூமிக்கும் தாண்டிக்குதித்தது பாஜக.
ஆனால் இன்று, ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜகவோ இந்த விளக்கத்தை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறது. அதற்குள் நுழைவதற்கு முன்னர் ஒரு புறாப் பார்வையில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உருவான கதையை பார்த்து விடுவோம்.
அமெரிக்காவின் குடுமி சும்மா ஆடுமா?
ஐ.நா.வில் இடம்பெற்றிருந்தும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் (Nuclear Non Proliferation Treaty - NPT)), அணுவெடி சோதனை தடை ஒப்பந்தத்திலும் (Comprehensive Test Ban Treaty - CTBT) கையெழுத்திடாத நாடுகள் மூன்றே மூன்றுதான்; அவை இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல். ஆனால் மூன்றுமே அணு ஆயுத நாடுகள். இத்தகைய நாடுகள் அணுசக்தி ரீதியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதாவது, அணு உலைகள், அணுத் தொழில்நுட்பங்கள், அணு எரிபொருள்கள் உள்ளிட்ட எதையும் உலக நாடுகள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு வழங்கக் கூடாது. (சோவியத் ஒன்றியத்துடன் நட்பு பாராட்டி வந்த இந்தியா இப்படி தனிமைப்படுத்தப்பட்டிருந்தது; அமெரிக்கா தலைமையிலான முகாம் இந்தியாவை தனிமைப்படுத்தி, இஸ்ரேலுக்கு தேவையான அனைத்தையும் ரகசியமாக அனுமதித்து வந்தது. இதற்கேற்ப சோவியத் ஒன்றியம் இந்தியாவுக்கு தேவையான அணுஉலைத் தொழில்நுட்பங்களை பகிரங்கமாகவே செய்து வந்தது. கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கும் ஒப்பந்தம், சோவியத் ஒன்றியத்தின் தகர்வுக்கு முன்னர் செய்யப்பட்டதாகும். சோவியத் ஒன்றியம் தகர்ந்ததன் பிறகும்கூட இந்தியா அணுவெடிச் சோதனைகளை தொடர்ந்து நடத்தியது. இதன் பிறகு அணுசக்தி ரீதியாக இந்தியா மிகவும் கடுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டது; அதனால் பெரிய பாதகம் என்று சொல்வதற்கில்லை).
2005ம் ஆண்டு ஜூலையில், பிரதமர் மன்மோகன் சிங்கும்- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையோ, வளர்ந்து வரும் இந்தியாவின் எரிசக்தி தேவைகளை நிறைவு செய்வதற்காக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்வது பற்றியும், இந்திய-அமெரிக்க உறவை உலகளாவிய செயல்தந்திர கூட்டாக மாற்றுவது பற்றியும் பேசியது. ஆக இந்தியாவை தனிமைப்படுத்தியிருந்த நிலையை மாற்றி, அதோடு கைகோர்ப்பது என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்த திட்டமாகும்; அது முழுமையாக பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த அறிக்கைக்குப் பிறகு, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் 2008 அக்டோபர் 10ல் எட்டப்பட்டது. இதற்கு நடுவே, அமெரிக்காவே முன்னின்று, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, அணுத்தொழில்நுட்பங்கள், அணுக்கருவிகள், அணு உலைகளை வழங்கலாம் என்ற நிலையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. கறாரான நிலைப்பாடு கொண்ட, அணுஎரிபொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பையும் (NSG - Nuclear Supplier Group) மசியச் செய்தது அமெரிக்கா. அதன் விளைவாகத்தான் அமெரிக்காவுடன் மட்டுமல்லாது வரிசையாக பல நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள முடிகிறது (அணுஉலைக்காக வழங்கப்படுகிற தொழில்நுட்பங்கள், கருவிகள், எரிபொருள்களை பயன்படுத்தி இந்தியா அணுஆயுத பலத்தை பெருக்கிக் கொள்ள முடியாதவாறு கண்காணிப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுவிட்டது; அப்படியே ஒருவேளை அணு ஆயுத பலத்தை பெருக்கிக் கொண்டாலும், அதை நாம் சொல்கிறபடி பயன்படுத்துகிற அளவுக்கு வெளியுறவுக் கொள்கையை இந்தியா அடகு வைத்துவிட்டது என்பதுதான், இதன் உண்மைப் பொருள். இவ்வளவுக்கும் மேலாக விலைபோகாமல் கிடக்கும் அணுச் சரக்கிற்கு வலுவான சந்தையாக இந்தியாவை மாற்றியமைக்கும் மிகப்பெரிய பொருளாதார ஆதாயம், பனிமலையின் நுனிமுனை போல மறைந்திருக்கிறது!).
அமெரிக்காவின் முயற்சிகள் சர்வதேச அளவில் மட்டுமல்லாது இந்தியா நாடாளுமன்றத்திற்குள்ளும் ஊடுருவிப் பாய்ந்தது. அணுசக்தி ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டபோது, நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசை வெற்றிபெறச் செய்வதற்காக, கோடி கோடியாக பணம் நாடாளுமன்றத்தின் பாதாளம் வரை பாய்ந்ததே, அது "அமெரிக்காவின் எச்சக் காசு" என்ற குற்றச்சாட்டு எழுந்ததையும் இந்த இடத்தில் மனங்கொள்ளலாம்.
ஒப்பந்தம் வெற்றிகரமாக எட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவின் ஜிஇ (GE), வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) நிறுவனங்களுடன் ஒப்பந்தம், அந்த நிறுவனங்கள் அணு "உலை வைப்பதற்கு" மகாராஷ்டிரத்திலும், ஆந்திரத்திலும் இடம் தேர்வு செய்யப்பட்டது என எத்தனையோ "பகீரதப் பிரயத்தனத்திற்கு" பிறகும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செயலுக்கு வந்துவிடவில்லை. காரணம் இந்திய நாடாளுமன்றத்தில் 2010ல் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீடு பொறுப்புச் சட்டம் ( (CLNDA - Civil Liability for Nuclear Damages Act, 2010).
உண்மையில் இந்த சட்டம் மிகுந்த குறைபாடுடையது என்பதோடு, அணுஉலை வைக்கும் கொள்கைக்கு சாதகமாக இயற்றப்பட்டது. இதன்படி, அணு உலை விபத்து நேரிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி வழக்குத்தொடர முடியாது.
ஆனால் இந்த சட்டத்தைக்கூட அணுஉலை வைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்க மறுத்துவிட்டன. முதல் காரணம், அணுஉலை கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் விநியோகித்தவர்களை பொறுப்பாக்கி, அதற்குரிய இழப்பீட்டை வசூலிக்கும் உரிமையை அணுஉலை இயக்குபவர்களுக்கு (ஆபரேட்டர்), இந்த சட்டம் வழங்குகிறது; இரண்டாவது இழப்பீட்டுத் தொகையின் அளவு.
வடிவமைப்பில் குறைபாடு, தயாரிப்பில் பழுது காரணமாக, அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டாலும் அதற்கு தங்களை பொறுப்பாக்கக்கூடாது; இழப்பீடு கோரினாலும், அது விபத்தின் தன்மை, பாதிப்பின் அளவு என்பதைப் பொறுத்தெல்லாம் நிர்ணயிக்கப்படாமல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தொகை என்பதைத் தாண்டிப்போகக் கூடாது என்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நிலைப்பாடு.

nuclear-explosion-miscellaneous-tube-796363
இதனால் 7 ஆண்டுகளாக நீடித்து வந்த முட்டுக்கட்டைக்கு மோடி அரசு வெற்றிகரமாக தீர்வு கண்டிருக்கிறது. இதற்காக அணுஉலை விபத்து இழப்பீடு பொறுப்புச் சட்டத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளியைக் கூட மத்திய அரசு மாற்றவில்லை. பிறகு எப்படி அமெரிக்காவையும், அமெரிக்க நிறுவனங்களையும் இந்த சட்டத்தை ஏற்க வைத்திருக்கிறார்கள் என்பதை மத்திய அரசே 7 பக்க அறிக்கையாக, கேள்வி-பதில் வடிவில், கடந்த பிப்ரவரி 8ம் தேதி வெளியிட்டிருக்கிறது. அதன் ஆங்கில வடிவத்தை http://mea.gov.in/press-releases.htm?dtl/24766/Frequently+Asked+Questions+and+Answers+on+Civil+Liability+for+Nuclear+Damage+Act+2010+and+related+issues என்ற இணைய தள முகவரியிலும், தமிழ் வடிவத்தை http://mea.gov.in/Images/pdf/Frequently_Asked_Questions_and_Answers_tamil.pdf என்ற முகவரியிலும் சென்று படித்துக் கொள்ளலாம். அதன் சாரத்தையும், முக்கிய விவரங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.
தோலிருக்க பழந்தின்னிகள்! சட்டமிருக்க அதன் சாரத்தை சுரண்டிவிட்ட சுதேசிகள்!!
ஓர் அணு விபத்து நேரிட்டால் அதற்கான அதிகபட்ச இழப்புத் தொகை 30 கோடி எஸ்டிஆர் (SDR) என அணுவிபத்து இழப்பீட்டுப் பொறுப்புச்சட்டம் கூறுகிறது. ஒரு எஸ்டிஆரின் தற்போதைய மதிப்பு 87 ரூபாய் என்பதால், கொடுக்கப்பட வேண்டிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையின் அளவு 2,610 கோடி ரூபாய்.
இதில், ஆபரேட்டர் என்று சொல்லப்படும் அணுஉலை இயக்குபவர் (மத்திய அரசு நிறுவனம்) பொறுப்பேற்க வேண்டிய அதிகபட்ச இழப்புத் தொகை ரூ.1500 கோடி.
ஆக மொத்த இழப்பீட்டுத் தொகை என்பது அதிகபட்சத் தொகையான ரூ.2600 கோடியை எட்டி விட்டால், ஆபரேட்டர் அதாவது மத்திய அரசு நிறுவனம் 1500 கோடி ரூபாயை தந்துவிடும். மீதமுள்ள 1100 கோடி ரூபாயை மத்திய அரசு தந்துவிடும்.
மேலும் மத்திய அரசு, அணு பொறுப்பு நிதியம் (Nuclear Liability Fund) ஒன்றை ஏற்படுத்தும். அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 5 பைசா மேல் வரி விதிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை நிதியத்தில் சேர்க்கப்படும்.
விபத்து நேரிட்டு விட்டால், ஆபரேட்டர் தர வேண்டிய 1500 கோடி ரூபாயும், தொகுப்புக் காப்பீட்டின் மூலமே பெற்றுத் தரப்படும். இந்த தொகுப்புக் காப்பீடு (Insurance pool) என்பது, இந்தியாவில் உள்ள அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கூட்டாக செய்யப்படும்.
ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில், ஒருவேளை தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையின் அளவு 2600 கோடிக்கும் மேல் சென்றுவிட்டால், Convention on Supplementary Compensation for Nuclear Damage (CSC) என்ற சர்வதேச அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச நிதியத்தை இந்தியா நாடும். இதற்காக அந்த அமைப்பில் இனி இந்தியா உறுப்பினராக வேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை, இந்திய அரசே காப்பீட்டுத் தொகுப்பின் மூலம் வழங்கிவிடும் என்று, அமெரிக்காவுக்கும், அணு உலை, கருவிகளை விற்கப்போகும் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது.
மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார் அல்லவா? அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகம், அணுசக்தித் துறை, என்பிசிஐஎல் நிறுவனம், நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களும், அமெரிக்க தரப்பில் அந்நாட்டு அரசின் பிரதிநிதிகள், ஜிஇ, வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இந்த தொடர்பு குழுவில் இடம்பெற்றனர். அந்த தொடர்பு குழு, 2014 டிசம்பருக்கும்-2015 ஜனவரிக்கும் இடையே டெல்லி, லண்டன், வியன்னா என 3 இடங்களில் கூடி பேசியுள்ளது. இந்தியா தரப்பில் இருந்து அரிசியும், அமெரிக்கா தரப்பில் இருந்து உமியும் கொண்டுசென்று, அதை கலந்து பின்னர் ஊதி ஊதி இரு தரப்பினரும் தின்னலாம் என்பதுதான், தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடு.
பாரத் மாதா கி ஜே!
- ப.ரகுமான்