ஏப்ரல் பட்ஜெட் எப்படி...?

 மவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா, DUIHA கல்லூரி, தாராபுரம்
ஏப்ரல் என்றாலே வியாபாரிகளுக்கு சட்டென நினைவுக்கு வருவது அவர்களது வருடாந்திரக் கணக்கு முடிவும் புதுவருடத்திற்கான ஆரம்பமும்தான். இதையே நாம் "பட்ஜெட்" என்கிறோம்.
வணிகர்களுக்கு மட்டுமல்ல சாதாரணமானவர்களுக்கும் இது பொருந்தும். இன்றைக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு பட்ஜெட் என்பது மிகமிக அவசியமான ஒன்றாகும். இதை நாம் "இஸ்லாமிக் பட்ஜெட்" என்றும் அழைக்கலாம்.
இறையருளால் இஸ்லாமியப் பொருளாதாரம் நல்வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆங்காங்கு பணவசதி படைத்தவர்களாய் நம்மவர்கள் வலம் வருவது வரவேற்புக்குரியதே !
அனாதைகள் ஆதரிக்கப்படுவதும், ஏழைகள் ஏற்றம் பெறுவதும், முதிர் கன்னிகள் கரைசேர்வதும், பள்ளி, மத்ரசாக்கள் வளர்வதும், நற்சேவைகள் பல தொடர்வதும் இவர்களைப் போன்ற செல்வந்தர்களால் தான் என்றால் அது மிகையல்ல !
புகழ்மாலை சூடும் அதேவேளையில் இன்றைக்கு இஸ்லாமியர்கள்தான் தங்களது பொருளாதாரத்தில் முறையான கணக்கு, வழக்கு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் இங்கு நாம் கவனிக்கத்தக்கதாகும். அதாவது எதையும் முறையாகச் சம்பாதித்து, முறையாக செலவு செய்ய வேண்டும் என்ற அடிப்படை உணர்வு கூட அறவே இல்லாமலிருப்பது, அல்லது இருந்தும் செயல் படுத்தாமலிருப்பது என்பது பெரும் துயரத்திற்குரியதே !
இஸ்லாம் முறையாகச் சம்பாதித்து முறையாகவே செலவுசெய்ய வேண்டும் என கட்டளையிடுகிறது. இன்று நம்மில் எத்தனைபேர் அந்த ஹலால், ஹராம்களை கவனித்துச் செயல்படுகிறார்கள்? செய்வதெல்லாம் வட்டித்தொழிலாய் இருக்கிறது; ஏமாற்று வணிகமாய் இருக்கிறது; மோசடிப் பொருளாய் இருக்கிறது; கறுப்புப் பணமாய் இருக்கிறது; முழுவரி ஏய்ப்பாய் இருக்கிறது இந்நிலையில் நம்வரவு எப்படி நல்வரவாய் இருக்கும்..?
நமது வரவு சரியாக இருந்தால் தான் நமது செலவும் சரியாக இருக்கும். விதையொன்று விதைக்க, அங்கு முளைக்கும் செடி வேறொன்றாகவா முளைக்கும்...? எனினும் இன்றைக்கு தவறான வழிகளில் பெறப்பட்ட நமது பணங்கள் பல நன்மைகளை நாடி நல்வழிகளில் செலவிடப்படுகின்றன. அவைகளுக்கான நற்கூலிகள் அந்த அல்லாஹ்வால் வழங்கப்படக் கூடும்
என்பது வேறு விசயம். முன்னதாக நாம் நமக்கான இஸ்லாமிய பட்ஜெட் எப்படியிருக்க வேண்டும் என்று சற்று பார்த்துக் கொள்வது நமக்கு நல்லது.
இன்றைக்கு பல குடும்பங்களில் ஒரு முறையான செலவு முறையில்லை. அதனால் செலவுகள் யாவுமே தாறுமாறாக இருக்கின்றன. மாதத்தின் இறுதிப் பத்து தினங்கள் கையில் ஒரு பத்துரூபாய் நாணயக்காசு கூட இல்லாமல் திண்டாட வேண்டியதிருக்கிறது. (இதில் பத்து ரூபாய்க் காசு செல்லாது என்கிற கூப்பாடு வேறு இடையிடையே நம்மை பயமுறுத்திச் செல்கிறது.) எனவே முதலில் நாம் செய்ய வேண்டியது நமது வரவுகள் என்ன? அதற்குரிய செலவுகள் என்ன என்று துல்லியமாய் எழுதிப்பார்க்க வேண்டும்.
அதில் எதிலெல்லாம் செலவைக் குறைக்க முடியும் என்று பார்க்க வேண்டும். கூடவே வீண் செலவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இன்று நம்முன் நிற்கும் முதலற்ற முன்முதல் செலவு இந்த வீண் செலவுகளே... எனவே இதை நாம் முதலில் குறைக்க முன்முயற்சி எடுக்க வேண்டும். வீண்விரயம் செய்யாதீர்கள்! நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண்விரயம் செய்பவர்களை விரும்புவதில்லை. (அல்குர்ஆன் 6:141)
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:31)
இவ்விரு வான்மறை வசனங்களும் வீண்விரயத்தைப் பற்றி மிகத் தெளிவாகவே தெரிவிக்கின்றன. நமது வீடுகளில் பல வண்ண வடிவங்களில் நிறைந்திருப்பதென்ன? முற்றும் அவை வீண் விரயங்களின் மறுவடிவங்கள் தானே...! எனவே முதலில் நாம் விரயச்செலவுகளை கட்டாயம்
குறைக்க வேண்டும்.
அடுத்து நாம் எந்தவொன்றுக்கும் அளவறிந்து, தேவையறிந்து செலவு செய்ய வேண்டும். குறிப்பாக நமது வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள், விருந்தாளிகள் வரும்போது கவனிக்கிறோம் என்ற பெயரில் தேவையற்ற பயனற்ற உணவுப்பொருட்களை, தின்பண்டங்களை, குடிபானங்களை வாங்கக்கூடாது. தேவையறிந்து நாம் செயல்பட வேண்டும். இயன்றவரை விலை சற்றுஅதிகமாக இருந்தாலும் பழங்களாக வாங்கிக்கொள்ளலாம். அவை எப்போதும் எவரின் உடலுக்கும் ஊறுவிளைவிக்காதவை. அவை நம் பிணிகளை நீக்கும் கனிகள் என்பதை மட்டும் என்றும் நாம் மறக்கக் கூடாது.
நமது வீட்டில் தண்ணீர், மின்சாரம், மின்சேமிப்பு பேட்டரி என யாவுமே வீண் கசிவு இல்லாமல் சிக்கனமாக தேவைக்கேற்ப பயன்படுத்தும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இயன்றவரை குளிர்பதன மற்றும் சூடேற்றித் தரும் பெட்டிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உள்ளதை உள்ளபடி உடனுக்குடன் உண்பதும், உண்பிப்பதும் நமக்கு என்றைக்குமே நல்லது.
இதன் மூலமும் நாம் சிக்கனத்தை, சேமிப்பை கையாளமுடியும். ஆனால் நாம் இப்படியெல்லாம் யோசித்தே பார்ப்பதில்லை அல்லது இதிலெல்லாம அக்கறை செலுத்துவதில்லை. சின்னச்சின்ன விசயங்கள் தான் பெரும் சேமிப்புகளுக்கு அடிப்படை ஆதாரங்களாகயிருக்கின்றன. அதை நாம் என்றைக்கும் மறக்கலாகாது.
அடுத்து என்றைக்கும் வரவு அறிந்து செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிய, சேமிப்பற்ற செலவு என்றும் ஆபத்தான ஒன்றுதான். எந்தெந்த செலவுகள் தேவையற்றவை என்றும் நாம் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு ரூபாய் தான் என்றாலும் கூட அது மாதத்திற்கு முப்பது ரூபாயாகவும், வருடத்திற்கு முந்நூற்று அறுபது ரூபாயாகவும் பெரும்மாற்றம் பெற்று விடுமே..! எனவே என்றைக்கும் நாம் சின்ன விசயங்களில் தான் மிகவும் கவனத்துடனிருக்க வேண்டும். சிறுதுளி பெருவௌ்ளம் என்று சும்மாவா சொன்னார்கள் நம்முன்னோர்கள்...? எனவே நமது செலவுகளில் அதீத கவனம் நமக்கு அவசியம் தேவை.
தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது உண்மையே! எனவே நம்மால் இயன்றவரையில் சற்று தானதர்மங்கள் செய்வது நமது பட்ஜெட்டை பாதுகாக்கும் என்பதில்
எவ்வித ஐயமுமில்லை. எனவே தர்ம காரியங்களுக்காக ஒருசிறு தொகையை நாம் ஒதுக்கி வைத்துக் கொள்வது நமக்கு நல்லது. சொல்லப்போனால் இந்தத் தொகைதான் நம் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம்.
"தர்மம் அது சோதனைகளையும், விதிகளையும் மாற்றியமைக்கிறது" என்று நபிகளார் என்றோ கூறிச் சென்றது இன்றைக்கும் நம் மனச்செவிகளில் ஓங்கியொலித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகையன்று. எனவே தர்மச் செயல்களை ஒருபோதும் நாம் விட்டு விடக்கூடாது.
நாம் எந்தவொரு காரியத்தையும் தனித்தனியாகச் செய்வதை விட கூட்டாகச் செய்தால் அதன் மூலமாக நிறைய சேமிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் நாம் தனித்தனியாக செய்கிற போது அதில் செலவினமும் அதிகரித்து அபிவிருத்தி இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலையை நாம் நமது கூட்டுமுயற்சியின் மூலமாகத் தான் மாற்ற முடியும். "கூட்டாக இருப்பதில் தான் இறையருளிருக்கிறது" என்ற நாயகத்தின் நன்மொழி நமக்கு என்றைக்கும் நல்வழி காட்டிக் கொண்டேயிருக்கும்...! இன்றைக்கு பல குடும்பங்கள் தனித்தனியாக பிரிந்துபோய் இருப்பதால் ஒற்றுமையின் உயரிய இறையருளைப் பெறாமல் செலவுகள் கட்டுக்கடங்காமல் கைமீறிச் செல்கின்றன. விளைவு கடன் கடன் என்று கடனிலேயே வாழ்வைத் தொலைத்து விடுகின்றனர். பிறகு அவர்களை மீட்டெடுப்ப தென்பது முடியாத ஒன்றே...!
இயன்றவரை கடன் வாங்குவதையும், வட்டிக்கு வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்விரண்டில் இருந்தும் வெகு சீக்கிரத்தில் மீளுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல..!
எனவே எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையுடன் தானிருக்க வேண்டும். நமது வரவுகளை அறிந்து அன்றாடச் செலவுகளை சரி செய்தாலே பெரும் தொகையை நம்மால் நிச்சயம் சேமித்துக் காட்ட முடியும். அதுவே நமது திடீர் அவசரகாலப் பிரச்சினைகளுக்கு அரும் மருந்தாக இருக்கும் என்பதில்எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
தன் கையே தனக்குதவி என்பது போல முதலில் நமது திடீர் செலவுகளுக்கு நாம் என்ன செய்வது என்று நமக்கு நாமே யோசித்து அதற்கு மறுவழியை நாம்தான் உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும். சிறுகக் கட்டி பெருக வாழ் என்று நம்முன்னோர் கூறிச் சென்றது இன்றைக்கும் நம்
செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நம்மிடம் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் மனநிறைவாக, மார்க்கச் சட்ட திட்டங்களுக்கு முழுமனதுடன் கட்டுப்பட்டு வாழ்வதில் தான் நமது வாழ்வு அழகானதாக, அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கிறது. போதும் என்ற மனம் நம்மிடம் இல்லாதவரை எந்த ஒரு பட்ஜெட்டும் நம்மிடம் எடுபடப் போவதில்லை. எனவே முதலில் நாம் நமது மனதை "போதும், இருப்பதைக் கொண்டு வாழ்வோம் " என்ற மனநிலைக்கு கொண்டு வரவேண்டும். பிறகு பாருங்கள் உங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்பிறை தான். வாருங்கள்...!
தூயவரவுகளுக்கு வழிவகுப்போம்...!
தீயசெலவுகளுக்குதடைவிதிப்போம்!