மனிதர்களை வாழ்விக்கும் மனிதம்!

பங்களாதேஷ் - மியான்மர் எல்லையில் சீக்கியர்கள் ‘குரு கா லங்கார்’ என்ற இலவச உணவு வழங்கும் நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள்.
மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் கல்சா எய்ட்(இந்தியா)ன் சீக்கிய வாலண்டியர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு நிவாரணப் பணிக்காக வங்காளம் - மியான்மர் எல்லையில் உள்ள தெக்னாஃப என்ற பகுதியில் தங்கினார்கள்.
முன்னதாக இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உணவு வழங்க பங்களாதேஷ் அரசு அனுமதி வழங்கியது.
ஆரம்பத்தில் இந்தக் குழுவினர் புலம் பெயர் அகதிகளுக்கு உணவுப் பொட்டலங்களையும், தண்ணீரையும் விநியோகித்தார்கள்.
மியன்மரில் இருந்து படகுகளில் பயணம் செய்து வந்திறங்கும் முஸ்லிம்களுக்கு ஷாபுரி தீவிலும் உணவு வழங்கினார்கள்.
இது குறித்து கல்பா எய்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அமீர் பிரீத் சிங் இந்தியன் எக்ஸ்பிரசிடம் பேசும் போது :
“நாங்கள் பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பின்னர் அரிசி, காய்கறிகள் மற்றும் பெரிய பாத்திரங்கள் போன்ற மூலப்பொருட்கள் வாங்கினோம். எங்களின் ஆரம்ப இலக்கு குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு 35,000 நபர்களுக்கு உணவளிப்பதாகும்.
அதிக எண்ணிக்கையிலான அகதிகள் இருப்பதைப் பார்த்தால், எல்லோருக்கும் உணவளிக்க இயலுமா என்ற கேள்வி எழுந்தாலும் ஏதாவதொரு வகையில் இந்த உதவியைத் தொடங்கித்தான் ஆக வேண்டியிருந்தது” என்றார்.
அகதிகளின் “மோசமான நிலை”, குறிப்பாக தினமும் சாப்பிடாத குழந்தைகளைப் பார்க்கும் போது மிக மிகக் கடினமாக இருந்தது. ஒரே ஒரு நாளில் லட்சக்கணக்கானோருக்கு உணவளிக்க முடியாது என்றாலும் உணவு மிகவும் அவசியமாக உள்ளது.
“நாங்கள் பாத்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை வாங்குவதற்கு உள்ளூர் சந்தைகளுக்கு சென்றோம். ஆனால் சில கடைக்காரர்கள் விலையை அதிகப்படுத்தினார்கள். இருப்பினும் பல உள்ளூர் மக்களும் ஏற்பாடுகளைச் செய்வதில் எங்களுக்கு உதவினார்கள். இதயத்தில் இரக்கத்திற்கு இடமிருப்பவர்கள் அகதிகளுக்காக இறங்குகிறார்கள். சிலர் அவர்களை சுமையாகப் பார்க்கிறார்கள்” என்றார் சிங்.
இன்னும் சில சீக்கிய தொண்டர்கள் “மத வேறுபாடுகளை மறந்து, வயிற்றுப் பசியோடு தூங்கும் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். அவர்களும் மனிதர்களாக இருக்கிறார்கள்” என்பதை சொல்லி ஒரு குழு ரோஹிங்கிய முஸ்லீம் அகதிகளுக்கு உணவு வழங்க நிதி திரட்டுகின்றனர்.