வலிமையான வணிகச் சமூகம் அவசரமும் அவசியமும்

பொருளாதாரம். அதுதான் ஒரு சமூகத்தின் இருப்பை வாழ்வின் பலத்தைத் தீர்மானிப்பதில் அடிப்படை பங்கு வகிக்கிறது. பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருக்கும் ஒரு சமூகம் கல்வி, அரசியல், குடும்பம், சுகாதாரம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் பலவீனமடையவே செய்யும். 

எனவே பொருளாதாரத்தை திரட்டும் அறிவையும் அதை வளமாக்கும் திறனையும் ஒரு சமூகத்துக்கு பயிற்றுவித்து வார்த்தெடுப்பது அவசியமான அவசரமான ஒரு செயல்பாடு.

முஸ்லிம் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் வணிகத்தின் மூலம் வளமான சமூகமாகவும் தனது பொருளாதார வளத்தின் மூலம் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களையும், நிலத்தையும் செறிவூட்டி செழுமைப்படுத்திய சமூகமாகவும் வரலாறு முழுவதும் தன் இருப்பை பதிவு செய்துள்ளது.
எட்டாவது நூற்றாண்டிலிருந்து அரேபிய முஸ்லிம்கள் சோழமண்டலக் கடற்கரையிலுள்ள பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் அதிராம்பட்டினம், மண்டபம், வேதாளை, கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய கடற்கரை ஊர்களில் குடியேறி இலங்கை, மலாக்கா, மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளுக்கும் வாணிபத்திற்காகச் செல்லும் பாதைகளாக அவ்வூர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு குடியேறிய அரபு முஸ்லிம்கள் இப்பகுதிப் பெண்களை மணந்து கொண்டு ஓர் இஸ்லாமியப் பரம்பரையை மண்ணின் மைந்தர்களை தமிழ் மண்ணில் உருவாக்கினர். இவர்களின் வழித்தோன்றல்கள் கடலோடிகளாகவும், கப்பல் உரிமையாளர்களாகவும், வணிகர்களாகவும் திகழ்ந்தனர்.
'காயல்' என அழைக்கப்பட்ட காயல்பட்டணத் துறைமுகம் இலங்கை வணிகத்தில் முக்கிய இடம் வகித்தது. சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய வணிக மத்தியத்தலமாக காயல்பட்டணம் வளர்ச்சியடைந்தது. காயல்பட்டண வணிகர்கள் இலங்கையில் மேற்குக் கரையோரத்தில் பல துறைமுகங்களை உள்ளடக்கிய வகையில் அவர்களது வணிகத்தை பரவலாக்கியிருந்தனர். பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய முஸ்லிம் வணிகர்கள் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர். (sukri)
முஸ்லிம் வணிகர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததோடு கடலோடிகளாகவும், நிர்வாகிகளாகவும், கடற்கரையின் பாதுகாவலர்களாகவும் விளங்கினர். பல தென்கிழக்காசிய நாடுகளில் பண்டக சாலைகளை நிறுவியிருந்தனர்.
கப்பல் உரிமையாளர்கள், கடலோடிகள், ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள், முத்து வணிகர்கள், முத்து, சங்கு குளிப்போர், படகு கட்டுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், கடல்சார் பொருள்களை விற்கும் வணிகர்கள், அரேபியாவிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து வியாபாரிகள் என முஸ்லிம்கள் பொருளாதார நிலையில் உயர்வுற்றிருந்தனர்.
கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பொருளியல் வாழ்க்கை பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிசார் என தொடர் காலனியவாதிகளின் ஆக்ரமிப்பால் முஸ்லிம்களின் வணிகமும், தொழிலும் பாதிப்புக்குள்ளாகி அவர்களின் பொருளாதார வாழ்க்கை சிரமத்திற்குத் தள்ளப்பட்டது.
தமிழக கடற்கரையிலும், உட்பகுதிகளிலும் கால் கொண்டு வணிகத்திலும் உற்பத்தியிலும் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை திரட்டும் வேறு வழிகளைத் தேடி சிலர் தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று மொத்த வியாபாரிகளாகவும், சில்லறை வியாபாரிகளாகவும், உற்பத்தித் துறையிலும் கால் பதித்தனர். இன்னும் சிலர் சிங்கப்பூர், பர்மா, மலேயா என வேறு நிலங்கள் நோக்கி பயணிக்கத் தொடங்கி 1980 களுக்குப் பின்னர் அரபு நாடுகளில் வேலை பார்த்து இன்று தமிழ்நாட்டிலும் அரபு நாடுகளிலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் இருபதாயிரம் கூலிக்கு வேலை தேடி அலைகின்றனர்.

மத்திய கால கட்டத்தில் ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் பெரும் பங்கு வகித்த முஸ்லிம்கள், அதன் பிறகும் வணிகத்திலும் தொழில் துறையிலும் சிறந்து விளங்கிய முஸ்லிம்கள் தங்களது பொருளாதார வளத்தின் மூலம் தனது சமூகத்திற்கும், தன்னுடன் வாழ்ந்த மக்களுக்கும் சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். வரலாறு அதை செய்திருக்கிறது.
செத்தும் கொடுத்த சீதக்காதி, உமறுப் புலவர், காயிதே மில்லத், அப்துல்கலாம் என சில முஸ்லிம் பெயர்களே தமிழ் சமூக வரலாற்றை படிப்போருக்கு திரும்பத் திரும்ப பதியவும் பதிப்பிக்கவும் படுகிறது.
ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் பிற்காலச் சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் இஸ்லாமியர் குறித்த பதிவுகள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. சோனகர் என்ற பெயரில் இவர்கள் அழைக்கப் பட்டுள்ளனர்.
தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் திரு விளக்கேற்ற சோனகன் தாவூது பரஞ்சோதி என்பவன் காசு வழங்கியுள்ளதாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரேபியர்களைச் சோனகர் என்றழைத்ததால் அவர்களிடம் வாங்கப்பட்ட வரியை ‘சோனகவரி’ என்று முதல் இராசராசனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்த ‘மேடை முதலாளி’ அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று நேதாஜி தான் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்வார். அந்த அளவுக்கு நேதாஜியிடம் மதிப்பை ஏற்படுத்திய நேசர் தம் சொத்துகள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்த வள்ளல் ஹபீப்.
முஸ்லிம்களின் இந்த பொருளாதாரப் பங்களிப்புகள் அவர்களின் வணிகம் மற்றும் தொழிலின் காரணமாகவே சாத்தியமானது. வணிகத்தின் மூலம் இறைவன் வழங்கிய அபரிமிதமான செல்வத்தை வாரி வழங்கி எந்த வேறுபாடும் இல்லாமல் மனித சமூகத்திற்கு பயனளித்தனர் முஸ்லிம்கள்.
வணிகத்தை மரபாக பாரம்பரியமாகக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் சென்ற தலைமுறையும் வாழும் இன்றைய தலைமுறையும் வணிகத்தின் பெரும் பயனை உணராதவர்களாக இன்றைய கல்வித் திட்டத்திட்டத்தின் வழியாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளார்கள். மூன்றிலக்க, நான்கிலக்க மாதச் சம்பளம் பெறுவது பெருமை என கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தனக்குத் தேவையானதை சம்பாதிப்பதே பெரும் சிரமம் என்ற எண்ணத்தால் தர்ம சிந்தனை குறைந்தவர்களாக மாற்றப்பட்டிருகிறார்கள்.
இன்று மாத ஊழியம் பெறும், பெரும் கூட்டம் தானாக உருவானதல்ல முதலாளித்துவ சிந்தனையால், கல்வியால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. முஸ்லிம் சமூகமும் தன்னை அறியாமல் தன் சுயத்தை அறியாமல் இந்த சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல தேவையுடய எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு.
தன் வேர்களை நோக்கி, வணிகத்தை நோக்கி தானும் திரும்புவது சமூகத்தையும் திருப்புவது. வணிகத்தை, தொழில் துறையை ஆளுமை செய்யும் முன்மாதிரி வணிகர்களை, தொழில் முனைவோரை உருவாக்குவது என தமிழகத்தில் வாழும் இன்றைய முஸ்லிம் தலைமுறைக்கு ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது.
அதை உணர்ந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஒரு தொடர் பிரச்சாரமாக “நாம் ஒரு வணிகச் சமூகம்” என்ற தலைப்பை கையிலெடுத்து பல இடங்களில் பரப்புரை செய்து வருகிறது.
மேலும் இன்ஷா அல்லாஹ் பாண்டிச்சேரியில் உருவாக இருக்கும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் ஒரு பிரிவாக “இந்தோ - அரப் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ்” என்ற பெயரில் ஒரு வணிகப் பள்ளி உருவாக்கப்பட இருக்கிறது.
மேலும் முஸ்லிம் சமூகத்தில் வணிகர்களை, தொழில் முனைவோரை உருவாக்கும் ஒரு முயற்சியாக நமது சமூகநீதி முரசு மாத இதழில் “வணிகம் செய்வோம் வளம் பெறுவோம்” என்ற தலைப்பில் அடுத்த மாதம் முதல் ஒரு தொடர் வெளி வருகிறது.
எந்த துறையாக இருந்தாலும் வழிநடத்தும் தகுதி படைத்தவர்கள் அத் துறைசார் நிபுணர்களே. அதன்படி பொருளாதாரத் துறைசார் அறிஞர் முனைவர் ஜாஹிர் ஹீஸைன் அவர்கள் வணிகத்திலும், தொழில் துறையிலும் பயணம் செய்ய விரும்புவோர்க்கு அந்த தொடர் மூலம் ஊக்கமும் ஆலோசனையும் தரவிருக்கிறார். பயன் பெறுவோம், சமூகத்திற்கு பயன் தருவோம்.                                                         

                                                                                                                                        இன்ஷா அல்லாஹ்...