பெருமானாரின் பொருளாதார சிந்தனைகளிலிருந்து

தொடர் 3

வியாபாரிகளின் முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்)

            இன்றைய நடைமுறையில் வியாபாரம் இல்லாமல் எதுவும் இல்லை

என்ற அளவிற்கு கல்வி, மருத்துவம் உட்பட அனைத்தும் வணிகமாக மாறிப்போன காலம் இது.

            எதற்காக வியாபாரம் செய்கிறோம் என்ற நிலை மாறி. செய்வது அனைத்தும் வியாபாரமாக மாறிப்போனது, எப்படி வியாபாரம் செய்ய வேண்டும். வியாபாரத்தின் தத்துவம் என்ன என்பதெல்லாம் காலாவதியாகி இலாபம்ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முஸ்லிம் சமூகமும் செயல்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி!

            நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை சொன்னார்களோ அதையே செய்து காட்டினார்கள் எந்த விஷயங்களை செய்வார்களோ அதையே சொல்வார்கள், இப்படி செயல்பட்ட காரணத்தால் மற்ற தலைவர்களெல்லாம் அண்ணல் நபியை விட்டு தூரப்பட்டு நிற்கிறார்கள்,

            அண்ணல் நபி (ஸல்) அனைத்திற்கும் முன்மாதிரி என்பதனால் அனைத்துத் துறைகளிலும் அவர்களின் அனுபவம் நிறைந்திருக்கிறது, அதன் அடிப்படையில் அண்ணல் நபி ஸல்... அவர்கள் மிகச்சிறந்த வியாபாரியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்,

            முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்களை 40-வது வயதில் நபியாக அறிமுகப்படுத்துகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து அங்கேயே வளர்கிறார்கள், மக்கா என்பது அன்றைய வியாபார ஸ்தலத்தின் கேந்திரங்களில் முக்கிய்மான ஒன்று. நபி (ஸல்) அவர்கள் தங்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களோடு ஷாம் தேசத்திற்கு வியாபாரத்திற்காகச் செல்வார்கள், அன்றைய ஷாம் தேசம் - இன்றைய சிரியா. மக்காவிற்கும் - சிரியாவிற்கும் உள்ள தூரம் 1.385,54 கி,மீ,

            மக்காவாசிகள் பெரும் பெரும் வணிகர்களாக திகழ்ந்தார்கள், வணிகர்கள் தங்களது வியாபாரப் பொருட்களை வணிகர்களிடம் (இடைத்தரகர்கள்) கொடுத்து அனுப்புவார்கள், அவர்கள் அப்பொருட்களை எடுத்துக்கொண்டு ஷாம் போன்ற நாடுகளில் விற்பனை செய்துவிட்டு அதற்கான இலாபத்தை முதலாளியிடம் கொடுப்பார்கள், பொருட்களை வாங்கிக் கொண்டு அப்பொருளின் தகுதிக்கான, தரத்திற்கான விலையை விட அதிகமாக விற்பனை செய்வார்கள், விற்பனை செய்துவந்த பணத்தில் இவர்கள் பாதியை எடுத்துக்கொண்டு மீதியை முதலாளியிடம் உங்களுடைய பொருள் இவ்வளவிற்குத்தான் விலை போனது என்று கூறி இலாபத்தை முதலாளியிடம் கொடுத்து விடுவார்கள், முதலாளிகள் இவர்களுக்கு கூலியாக எதையேனும் கொடுப்பார்கள். வணிகர் எதைச் சொல்கிறாரோ அதை அப்படியே கேட்கும் சூழல் தான் அன்று நிலவியது. தான் அனுப்பிய பொருளை வியாபாரி எப்படி விற்பனை செய்கிறார் என்பதை கண்காணிக்கவோ. நுகர்வோரிடமிருந்து தமது பொருளைப்பற்றி பேசுவதற்கான வாய்ப்பும், நேரமும், சந்தர்ப்பமும் இல்லாத சூழல். நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு போன்றவைகள் எல்லாம் குழிதோண்டி புதைக்கப்பட்ட காலம். நம்பிக்கையின் அடிப்படையிலான வியாபாரம்தான் அன்று நடைபெற்றது.

இங்கே 3 வகையான செயல்பாடுகள் நிகழ்கின்றன.

1. முதலாளி என்பவர் பொருளுக்கு சொந்தக்காரர், அவர் மக்காவில் வசிப்பார்.

2. வியாபாரி என்பவர் மக்காவில் வசிக்கும் முதலாளியிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று பல நாடுகளில் வாழும் நுகர்வோருக்கு விற்பனை செய்து அதற்கான இலாபத்தை முதலாளியிடம் ஒப்படைப்பவர்.

3, நுகர்வோர் இன்று இருப்பது போன்று தெரு தெருக்களுக்கு கடைகள் அன்று கிடையாது,அன்று மக்கள் பொருளை வாங்க வேண்டும் என்றால் அவர்கள் சந்தைக்கு வர வேண்டும். அந்த சந்தையில் மக்கள் ஒன்று கூடுவார்கள், அங்குதான் பொருட்களை வாங்குவார்கள்.

            இந்த முதலாளி - வியாபாரி - நுகர்வோர் எனும் முக்கோண உறவுகளில் முதலாளிக்கும் நுகர்வோருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. வியாபாரிக்குதான் முதலாளியின் தெடர்பும், நுகர்வோரின் தொடர்பும் இருக்கும். உறவுகளில் வியாபாரி என்பவர் நடுநிலைமையோடு இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் வாலிப பருவத்தில் ஸாயிப் இப்னு அபூஸாயிப் அல் மக்ஜிமி என்பவருடன் இனணந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள், அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்,மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்என் சகோதரரே என் தொழில் நண்பரே எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள், (நூல் : அபூதாவூது, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது) என்பதை ஹதீஸ் கிரந்தங்களிலிருந்து அறிகிறோம்,

            இப்படிப்பட்ட ஒரு காலச் சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் தன்னை ஒரு வியாபாரியாக அறிமுகப்படுத்துகிறார்கள், தந்தையையும், தாயையும் இழந்த பெருமானார் ஒரு நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள்.

            மக்காவில் வியாபாரியாக இருந்த முஹம்மது (ஸல்) முதலாளியிடம் பொருளை வாங்குவார்கள், அப்பொருளை வாங்கும்போது அதன் நிறம், குணம், தரம், தகுதி, மதிப்பு அனைத்தையும் மனதில் பதியவைத்துக்கொள்வார்கள், அப்பொருளை விற்கும்போது அப்பொருளின் தன்மை, நிறம், குணம், தரம், தகுதி, மதிப்பு அனைத்தையும் சொல்லி விற்பனை செய்வார்கள்,

            அப்பொருளில் ஏதேனும் குறை இருந்தால் இப்பொருளில் இந்த குறை இருக்கிறது என்றும் சொல்லிவிடுவார்கள், அப்பொருளுக்கான பயன்பாடு அது தொடர்பான அனைத்தையும் தெளிவாக விளக்குவார்கள்,

            பொருளுக்கான விலை கொடுத்து மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு பெருமானாரின் இந்த வியாபார யுக்தி அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமின்றி ஏமாற்றமடைந்தவர்களுக்கு நிவாரணமாகவும் அந்த யுக்தி மாறிப்போனது, அனைத்துப் பொருட்களையும் அதற்கான தரத்தில், தகுதியில் விற்பனை செய்து நுகர்வோர்களை நுகர்வோராக மட்டுமே பார்க்காமல் தனது சகோதாரராகவும் பார்த்து அன்போடு பேசியாதால் அம்மக்கள் நபிகளாரை அல்-அமீன் (நம்பிக்கைக்குரியவர்) அஸ் ஸாதிக் (உண்மையாளர்) என்று பெயரிட்டு அழைத்தனர், இதுபோன்ற பெயர்கள் எல்லாம் அபூபக்கர் (ரழி) அவர்களோ அல்லது உமர் (ரழி) அவர்களோ கொடுத்தல்ல அன்று வாழந்த நுகர்வோர்களும். குறைஷி காஃபிர்களும் வழங்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

            வியாபாரங்களை முடித்துவிட்டு மக்காவிற்கு திரும்புவார்கள் அங்கே முதலாளியிடம் அப்பொருளுக்கான இலாபத்தை உள்ளது உள்ளபடி கொடுப்பார்கள். ஆனால் வியாபாரி எதைச் சொல்கிறாரோ, கொடுக்கிறாரோ. அதை நம்பி வாழ்ந்து. ஏமாற்றமடைந்த முதலாளிகளுக்கு பெருமானாரின் நேர்மை அவர்களின் மீது இன்னும் மதிப்பை அதிகப்படுத்தியது.

            அந்த முதலாளி என்ன பொருள் கொடுத்தார், அப்பொருளின் நிறம், குணம், தரம், தகுதி, மதிப்பு,            அப்பொருளை வியாபாரி எடுத்துச் சென்ற தேதி, கொண்டு வந்த தேதி, பொருளை விற்றவரின் பெயர், வாங்கியவரின் பெயர், அப்பொருளின் இலாபம் அனைத்தையும் பெருமானார் முதலாளியிடம் ஒப்படைப்பார்கள்.

பெருமானாரின் இந்த வியாபார நுணுக்கத்தைப் பின்பற்றித்தான் இன்று வணிகவியல், மேலாண்மை படிக்கின்ற மாணவர்கள் ஈங்க்ஷண்ற், இழ்ங்க்ண்ற், அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் போன்ற யுக்தியை பயன்படுத்தி வருகிறார்கள். இது பெருமானாரால் ஏற்படுத்தப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அன்று எழுத்து வடிவில் இல்லாவிட்டாலும் அதன் நடைமுறை தான் இன்றும் பின்பற்றப்படுகிறது.

            இப்படி ஒரு நம்பகமான வியாபாரி மக்காவில் இருப்பதை அறிந்த செல்வச் சீமாட்டி கதீஜா (ரழி) அவர்கள் தனது அடிமையைத் தூதனுப்பி அழைத்து தனது வியாபாரத்தை அவரிடம் ஒப்படைத்தார்கள். நபிகளாரை கதீஜா ரழி... அவர்கள் திருமணம் செய்ததற்கான பல காரணிகளில் நபி (ஸல்) அவர்கள் நேர்மையான வியாபாரியாக இருந்தார்கள் என்பதுவும் ஒன்று.

            நபி (ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.

            இதுபற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்: கதீஜா பின்த் குவைலித் (ரழி) சிறப்பும், வளமும் மிக்க வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார்கள்.தன் வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார்.நபி (ஸல்) அவர்களின் வாய்மை, நம்பகத்தன்மை போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்ட போது அவர்களை வரவழைத்து என் அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை எடுத்து கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும், மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்கு தருகிறேன் என்ற கோரிக்கையை முன்வைத்தார், அதை நபி (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

பெருமானாரின் வாழ்வு நேர்மையாகவும். ஒழுக்கமாகவும் இருந்ததினால். நபித்துவம் பெற்றவுடன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நபிகளாரின் செயல்பாட்டை உணர்த்துவதாக அமைந்திருந்தன.

            யாருக்கும் தீமை விளைவிக்காமல், யாரையும் ஏமாற்றாமல் செய்யப்பட்ட பெருமானாரின் வியாபார நுணுக்கத்தை நாமும் பின்பற்றி அண்ணல் நபி (ஸல்) அனைத்திற்கும் முன்மாதிரி என்பதை நமது செயலில் நடைமுறையாக்கிட அல்லாஹ் அருள்புரிவானாக