பிளாஸ்டிக் கு(ட்)ப்பை

plasticp
சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனாலும், புவி வெப்பமயமாதலுக்கு முழு முதற்காரணமாக கருதப்படும் பிளாஸ்டிக், பாலிமர் பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
தமிழகத்தில் சமூக அக்கறையுள்ள சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான செயல்களை செய்து வந்தாலும், இந்த அவலங்களை களைய அரசே முயற்சி எடுத்தால் எப்படியிருக்கும்..?
சிக்கிம் மாநில அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக அப்படி ஒரு அதிரடியை செய்திருக்கிறது. ஆம்
அரசு மற்றும் அரசு சார்ந்த எந்த விழாக்களிலும் மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது என அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. நுரையூட்டப்பெற்ற பானங்கள் அடங்கிய பாட்டில்களுக்கும் அந்த தடையை விதித்திருக்கிறது. குப்பைக்கூளங்கள் பஜார்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிக்கிம் அரசு, பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களில் இருந்து நாம் அன்றாட தேவைக்கான, ஸ்பூன், பிளேட்ஸ், கண்டெயினர்கள் போன்ற பொருட்களையும் உடனடியாக தயாரிக்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டின் அடுத்தடுத்த மாநிலங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்.....?
முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்
சில மாதங்களுக்கு முன்பு இதே சிக்கிம் மாநிலம் இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய மாநிலம் என்ற சிறப்பான வாழ்வு பெற்றது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். “பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களும் உண்ணும் உணவும் உரம், மருந்து, தூவி விஷமாக்கப்பட்டது. ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவது இப்போது மிக முக்கியம். சிக்கிமைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன.
சிக்கிமின் இந்த இயற்கை மாற்றத்திற்கு காரணம் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார். இன்று முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாறி இருக்கிறது சிக்கிம்.
மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனை.