சிக்கனம் : சில சிம்பிள் வழிமுறைகள் 2

sikkanamr
▪ முன்பே ஒதுக்கி வைத்துவிடுவோம் - 06
பெரும்பாலும் நமக்கு பளபளப்பான ரூபாய் நோட்டுகளைக் கண்ணால் கண்டு கையால் தொட்ட பிறகு அல்லது கணிசமானதொரு தொகையை வங்கிக் கணக்கில் பார்த்தபிறகு அதைச் சேமிப்புக்கணக்கில் எடுத்துவைப்பது சற்று சிரமம்தான். ஏன் இந்தச் சிரமம்? அது நமது கைகளுக்கு வருவதற்கு முன்பே அதை ஒதுக்கி வைத்து விடுவோம்.
எப்படி என்கிறீர்களா? சம்பளம் வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகை அப்படியே நமது சேமிப்புக் கணக்கில் போய்விடும் படி ஓர் ஏற்பாடு செய்துவிட்டால் போச்சு. நடப்புக்கணக்கில் அது வரவே வராது. அப்படி வந்தால் தானே அதைச் செலவழிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும். இது சிக்கனத்துக்கான ஓர் இனிய, எளிய வழி.
இம்மைக்கான சேமிப்புக்காக இவ்வாறு எடுத்து வைப்பது போலவே, நாளை மறுமைக்கான சேமிப்பாகவும் வருமானத்தில் ஒரு பகுதியை ஸக்காத்தாக எடுத்து வைத்து கொடுத்து விட வேண்டும்.
நோட்டாக மாற்றிக் கொள்ளுவோம் - 07
பத்து ரூபாய் நோட்டை மாற்றியது, இருபது ரூபாய் நோட்டை மாற்றியது, ஐம்பது ரூபாய் நோட்டை மாற்றியது, நூறு ரூபாய் நோட்டை மாற்றியது. இவை எதுவுமே நம் நினைவில் இருக்காது. ஏனெனில், இவை அன்றாடம் நடக்கும் ஓர் அனிச்சைச் செயல். அதனால் நினைவில் இருப்பது சிரமம்தான்.
அதே சமயம் ஐநூறு ரூபாய் நோட்டை எப்போது மாற்றினோம் ? இது அநேகமாக நம் நினைவில் இருக்கும். துல்லியமாக எப்போது என்று தெரியாவிட்டாலும் ஓரளவுக்கு அதை நினைவுக்குக் கொண்டு வரமுடியும்.
இப்போது சிக்கனத்துக்கான புதுவழிமுறைக்கு வருவோம். வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போது ஐநூறு அல்லது ஆயிரம்ரூபாய் நோட்டுகளாகத் தரும்படிக் கேட்டுவாங்குவோம்.
நூறுரூபாய் நோட்டை விட ஆயிரம்ரூபாய் நோட்டைச் செலவழிக்க நிச்சயம் நாம் யோசிக்கத் தான் செய்வோம். அதை மாற்றுவது கடினம் என்பது மாத்திரமல்ல, ஆயிரம் ரூபாயை எடுத்துச் செலவழிக்கும்போது ஆயிரம் ரூபாயை மாற்றுவதா..? என்று ஒரு தடவைக்கு இரு தடவை கண்டிப்பாக யோசிப்போம். இந்த யோசிப்பே, செலவழிக்காமல் சிக்கனம் மேற்கொள்ள ஒரு சின்ன வழிமுறைதானே!
கடன் வாங்காதிருப்போம் - 08
நாம் கடன் வாங்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால், கடன்காரராகவே மாட்டோம். மேட்டர் எவ்வளவு சிம்பிள் என்று பாருங்கள்.
நமது வாப்பாமார்கள், பாட்டன், பூட்டன்மார்களின் காலத்தை எண்ணிப்பாருங்கள். பணத்தைக் கையில வைத்திருப்பது என்பது அவர்கள் கனவிலும் நினைத்திராத ஒன்று. ஒரு பொருளை வாங்கக் கைவசம் பணம் இல்லை என்றால், அதை அவர்கள் வாங்கமாட்டார்கள். விஷயம் முடிந்தது.
பணம் இல்லாமை தரும் கவலையை விட, கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டுவது பெரும் வேதனை தரும் என்று சொல்வார்கள். இந்தப்பண்பு, நம்மைக் குறைவாகச் செலவு செய்ய வைப்பதோடு, கடனுக்கான வட்டியிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும். இல்லையா?
மேய்வதைத் தவிர்ப்போம் - 10
'விண்டோ ஷாப்பிங்' அதாவது, வெறுமனே பொருட்களை வேடிக்கைபார்ப்பது, இன்று உலகளாவிய ஒரு பொழுதுபோக்காக மாறிப்போனது. நான் எதையும் வாங்கமாட்டேன். ஜஸ்ட் வேடிக்கை தான் பார்க்கப்போகிறேன் என்றுதான் எல்லாரும் சொல்வோம். ஆனால், நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றிது.
ஏனெனில், ஷாப்பிங் பண்ணப்போனவரை விட, சும்மா அவர் கூடப் போனவர்தான் நிறைய அல்லது ஏதாவது ஒரு பொருளை கொள்முதல் (பர்ச்சேஸ்) செய்து வருவதைப் பரவலாக நாம் காணலாம்.
பொதுவாக மனிதப்புத்தி எப்படியானது என்றால், நாம் ஒன்றைப்பார்த்தால் அதை வாங்கவேண்டும் என்ற ஆசை தானாக நம் மனதில் எழுந்துவிடும். அப்படி எழுந்ததால்தானே மனிதன் சுவனலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தான்.
ஆஸ்கார் வைல்ட் ஒருமுறை சொன்னார் : 'என்னால் எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இச்சையை மட்டும் கட்டுப்படுத்த முடியாதென்று'. இது நூற்றுக்கு நூறு உண்மை. நம்மால் இதுபோன்ற அவசியமற்ற ஆடம்பர பொருட்கள் மீது இச்சையைக் கட்டுப்படுத்த முடியாதென்றால் தயவு செய்து விண்டோ ஷாப்பிங் போகாதிருப்பது நல்லது. ஒரு பொருள் இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வில்லை என்றால், அதை நாம் விரும்பவும் முடியாது. விஷயம் எவ்வளவு சிம்பிள் பாருங்கள்.
தேவையற்றதை விற்றுவிடுவோம் - 09
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் குறைந்துபோக ஆரம்பித்தால், பொருட்களை விற்க ஆரம்பித்து விடவேண்டும். இது சிலருக்கு வியப்பாக தோன்றலாம். வேடிக்கையாகவும் தோன்றும். என்றாலும், அப்படி விற்க ஆரம்பித்து விட்டால், நமக்குத் தேவை இல்லாத எத்தனை பொருட்களை நாம் வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.
அவற்றை எல்லாம் நாம் விற்று விடலாம். விற்ற பணத்திலிருந்து நமக்குத் தேவையான இன்னொரு பொருளை வாங்கிக்கொள்ளலாம். புதுசுதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பழசு வாங்கினாலே போதும்.
உதாரணமாக, செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வாங்கலாம். சில லேப்டாப் கிறுக்குகள், தங்கள் லேப்டாப் இன்னும் பல ஆண்டுகள் உழைக்கத் தயாராக இருந்தாலும் அதை விற்று விட்டு, மேம்பட்ட வடிவங்களை நோக்கி குரங்குகள் போல தாவிக்கொண்டே இருப்பார்கள். நம்மைப் பொறுத்த வரை அந்த லேப்டாப்களே போதுமானது.