இந்திய மருத்துவம்

unani

டாக்டர் படிப்பு என்றாலே எம்.பி.பி.எஸ்.தான் பலருக்கு நினைவில் வருகிறது. வெள்ளையர்கள் காலத்தில் இம்மருத்துவக் கல்வி பிரபலமானது. அவர்கள் சென்ற

பின்னரும் அதுவே நிலைத்துவிட்டது. ஆனால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக  சீனம், இந்தோனேஷியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், அரபு நாடுகளின் பல நாடுகள், எகிப்து, இந்தியா, நேபாள், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உட்பட மக்களின் பெருமதிப்புக்குரிய மருத்துவமாக விளங்குபவை ஆங்கில மருத்துவமல்ல. அந்தந்த நாடுகளில் காலம் காலமாக நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வரும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் சீன மருத்துவ முறைகள்தான்.

மேற்காணும் மருத்துவ முறைகள் தற்போது இந்திய மருத்துவம் எனவும், மாற்று மருத்துவம் எனவும் வழங்கப்படுகிறது. ஆனால் இவைதான் அடிப்படை மருத்துவமாக தொடக்கம் முதல் விளங்கியது. பின்னர் இவைகளுக்கு மாற்றாக வந்த ஆங்கில மருத்துவம் அடிப்படை போலவும், பாரம்பரிய மருத்துவம் மாற்றை போலவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

இன்றைக்கு கிராம அளவில் சித்த மருத்துவர் தேவை அதிகரித்துவிட்டது. ஏனெனில் சமீபத்தில் பிரபலமான இதய மருத்துவர் தலைமையில் நிகழ்த்திய ஆய்வில் இதயநோய், கொழுப்பு அடைப்பு, மூட்டு வலி, தோல்நோய்கள், கருப்பை நோய், மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தலைசிறந்த மூலிகை மருந்துகள் நன்கு குணம் தெரிவதாக முடிவினை அறிவித்தார். இன்னும் நன்கு படித்து முறையான மருத்துவம் செய்யும் சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவர்களை விடவும் நன்கு பொருளீட்டி வருவதைக் காணலாம். ஆகவே +2 முடித்த மாணவர்கள் சித்த மருத்துவப் பட்டக் கல்வியைப் பெற்று ஊர்தோறும் சொந்தமாக மருத்துவமனைகளை அமைக்கலாம். அயல்நாடுகளுக்கு அதிகளவு விற்பனையாகும் மருந்துகளில் இந்திய மருந்துகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் நாட்டிற்கு நிறைய அன்னிய செலாவணியை ஈட்டித்தருகின்றன.

+2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் சேரத்தகுதியுள்ளவர்கள் ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பான இதனைப் படிப்பவர்களுக்கு அரசுப்பணி, தனியார் மருத்துவமனை, சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்பு, தனியார் மருந்து தயாரிப்பகங்களில் பணி என ஏராளமான வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சென்னை அரும்பாக்கத்திலும், நெல்லை பாளையாங்கோட்டையிலும் அரசுக் கல்லூரிகள் உள்ளன. இதைப் போன்றே தனியார் கல்லூரிகளான குமரி மாவட்டம் மூஞ்சிறையில் உள்ள திருவிதாங்கூர் சித்த வைத்திய கல்லூரி, ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி மேற்கு தாம்பரம், சென்னை, வேலுமயில் சித்த மருத்துவக்கல்லூரி, திருப்பெரும்புதூர், ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி, கோவை போன்றவற்றிலும் பட்டக்கல்வி தருகின்றனர். மேலும் மருத்துவத்தில் முதுநிலையும், ஆய்வுக் கல்வியிலும் பட்டமளிக்கின்றனர்.

கூடுமானவரை தங்கிப் படிக்கும் வகையில் தான் பல கல்லூரிகளிலும் விடுதியுள்ளது. ஏனெனில் நாலரை ஆண்டுகள் செய்முறை, வகுப்பறை பயிற்சிகளை மூலிகை, மருந்து, உடற்கூறு, நோய்களின் தன்மை இவைகளைப் பற்றி கற்பிக்கின்றனர். பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் செயல்பட்ட பின்னரே இப்பட்டக்கல்வி முழுமை பெறும்.

+2 முடித்தவுடன் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளை செலவிட்டுப் படித்தால் சிறந்த சித்த மருத்துவராக முடியும். சித்த மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம் கற்பிப்பதைப் போலவே ஆயுர்வேதத்தையும், யுனானி மருத்துவமும் கற்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தரும் பட்டங்கள் அரசு சான்றிதழுடன் மருத்துவ பல்கலைக் கழகத்தின் அங்கீகாரமும் பெற்றுள்ளது.

சித்தா, ஆயுர்வேதம், யூனானி, ஓமியோபதி மற்றும் இயற்கை யோகா மருத்துவத்தில் பட்டம் மற்றும் பட்டயக் கல்வி கற்பிக்கும் இடங்கள்.

சித்தா BUMS

1) அரசு சித்த மருத்துவக் கல்லூரி அரும்பாக்கம், சென்னை - 106.

2) அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002.

3) வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரி, 48, கிராண்ட் வெஸ்ட் ட்ரங் ரோடு, பெங்களூரு நெடுஞ்சாலை, திருப்பெரும்புதூர் - 602 105.

4) ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம். பூந்தண்டலம், திரும்பெரும்புதூர் தாலுகா, மேற்கு தாம்பரம், சென்னை - 600 044.

5) திருவிதாங்கூர் சித்த வைத்திய கல்லூரி, ஆனந்த ஆசிரமம், முனிச்சிறை, புதுக்கடை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் - 627 171.

6) அயோத்தி தாசர் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மற்றும் பயிலகம், தாம்பரம் சானிடோரியம், சென்னை.

7) ஆர்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி, திருச்சி ரோடு, சூலூர், கோயம்புத்தூர் - 641 402.

யுனானி BUMS

வளைகுடா நாடுகளில் மதிப்பு மிக்க இந்த பட்டக் கல்வி பெற உருது, பார்சி, அரபி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பத்தாம் வகுப்பு, +2 பயில்வது சிறந்தது. சென்னை பல்கலைக் கழகம் நடத்தும் அப்சல் உலமா தேர்வு பெற்றவர்களுக்கு ஏற்ற படிப்பு இது. ஏனெனில் பாடப்பிரிவில் முழுவதும் அரபி தொடர்பான மூலிகை மருத்துவம் சார்ந்ததால் மொழி அறிவு மிக முக்கியம்.

அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை - 600 106.