பெண்களை வலிமை.....

teachபெண்கள் சமூகத்தின் இருப்புக்கான அடையாளங்கள். அவர்களை பலப்படுத்துவது இந்த சமூகத்தை பலப்படுத்துவது போலத்தான்! சமூகத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமானவர்களா? என்று பட்டிமன்றம் நடத்துவதை விட அவரர் இடங்களில் அவர்களது பணிகளை சிறப்பாக செய்வதன் மூலம் சமூகத்தை மேம்படுத்துவது முழு சமூகத்துக்கும் பெரும் பயனை தரும். எனவே பெண்ணை பலவீனமானவளாகவே அறிமுகப்படுத்தி, அடையாளப்படுத்தும் செயல் விடப்பட வேண்டும். ஒரு சமூக அமைப்பில்

பெண்களின் பலம் குறித்து பேசுவதும் எழுதுவதும் இலகுவாக இருந்தாலும் அது சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதென்பது நீண்ட நாள் காத்திருந்து பெற வேண்டிய ஒன்று என்பதை மறுக்க முடியாது.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அல்லாஹ்விடம் ஆணை விட பெண்ணுக்கு எந்த வித்தியாசமான அந்தஸ்த்தும் இல்லை;தக்வா எனும் உள்ளச்சம் தவிர. வணக்க வழிபாடுகளில் ஆணோடு சேர்த்து பெண்ணும் இணைத்தே கூறப்படுகிறாள். ”நிச்சியமாக முஸ்லிமான ஆண்களும் முஸ்லிமான பெண்களும், இறைவிசுவாசமுள்ள ஆண்களும் இறைவிசுவாசமுள்ள பெண்களும், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்ற ஆண்களும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்ற பெண்களும், உண்மையாளரான ஆண்களும் உண்மையாளரான பெண்களும், பொறுமையான ஆண்களும் பொறுமையான பெண்களும், அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற ஆண்களும் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற பெண்களும், தான தர்மங்கள் அள்ளி வழங்குகின்ற ஆண்களும், தான தர்மங்கள் அள்ளி வழங்குகின்ற பெண்களும்,நோன்பு நோற்கின்ற ஆண்களும் நோன்பு நோற்கின்ற பெண்களும், தனது கற்பை பேணுகின்ற ஆண்களும் அதனைப் பேணுகின்ற பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவூட்டுகின்ற ஆண்களும் அவ்வாறான பெண்களும் இத்தகையோருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.(அல் அஹ்ஸாப்:35)
வணக்கவழிபாடுகளில் ஆணை முந்தி பெண் செல்ல முடியுமா என்ற வினா இதன் மூலம் தூக்கி எறியப்படுகிறது. ஆன்மீக ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ளவும் பயிற்றுவிக்கவும் பெண்ணுக்கே உரிய சில தற்காலிக நிலைமைகள் தடையாக அமைந்தாலும் அந்தக்காலப்பகுதி நீங்கிய பிற்பாடு வழமை போல் மிகுந்த ஈடுபாட்டுடன் அவளால் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதைத்தான் இந்த வசனங்கள் உணர்த்தி நிற்கின்றன. அவளது இயல்பு நிலையை காரணம் காட்டி இறைவன் அவளை ஒதுக்கவில்லை, அதனை விரும்பவும் இல்லை. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தான் ஆயிஷா நாயகி ஹைழுடைய நிலையில் இருந்த போதும் நபியவர்கள் அவருடன் மிகவும் அன்புடனும் கனிவுடனும் நடந்து அவரை மானசீக ரீதியாக பலப்படுத்தி வலுவூட்டினார்கள்.
பெண்ணின் மகிமையை இஸ்லாம் கண்ணியமாக கருதுகின்றது. அவள் குறித்த உடன்பாடான பார்வையை அது கொண்டுள்ளது. அவளுக்கு வழங்கப்பட வேண்டிய அந்தஸ்த்து குறித்து தைரியமாக பேசியுள்ளது. உலகை ஆண்ட பெரும்பெரும் சாம்ராஜ்யங்கள் பெண்ணை விலை மதிப்பற்ற விலை மாதுகளாகவே நோக்கியது. ரோம, பாரசீக பேரரசுகளில் பெண்ணுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இருக்கவில்லை. இந்நிலையில் அல்குர்ஆன் பெண்ணை மரியாதைக்கு உட்படுத்தியது. இதற்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகளில் பெண்ணின் பங்கு குறித்து உண்மை சம்பவங்களை அப்படியே எடுத்துக்கூறியது. பெண்ணின் தைரியமான ஆளுமைகள் மூலம் இஸ்லாம் பலமடைய வேண்டும் என்பதே இதற்கான காரணம். பெண்ணை உதறித்தள்ளி விட்டு இஸ்லாமிய எழுச்சியை எதிர் பார்க்க முடியாது. பெண் எப்போதும் பலமானவளாக இருக்க வேண்டும். அப்போது தான் அவள் உருவாக்கும் பரம்பரை, புதிய தலைமுறை வீரர்களை உலகிற்கு வழங்கும். அது நடக்காவிட்டால் குலை நடுங்கி பயந்து பதறிப்போகும் கோழைகளைத்தான் உருவாக்கும்.
நபியவர்களுக்கு வஹி கிடைத்த போது அதிர்ச்சியால் உறைந்து போய் தன்னை போர்த்தி ஆசுவாசப்படுத்துமாறு கூறிக்கொண்டு வந்த நபிகளாரைக் கண்டு அவரது துணைவி பதை பதைக்கவில்லை. கத்திக்கொண்டும் கதறிக்கொண்டும் ஒப்பாரி வைத்து புலம்பி ஊரைக் கூப்பிடவில்லை. நிதானத்துடன் அவரை அணுகி தானும் சாதுர்யமாக நடந்து அறிவு பூர்வமாக நிலமையைக் கையாண்டார். அடுத்து செய்ய வேண்டிய அவசரமான வேலையை அறிவுபூர்வமாக செய்து வெற்றிகண்டார். இந்த நுட்பமும் துணிவும் சமகால பெண்கள் தமது குடும்ப, சமூக வாழ்வில் பெற்றிருக்க வேண்டியது முக்கிய அம்சமாகும். நாகரீக உலகில் அழகான ஆடைகளை உடுத்தி அலைந்து திரியும் ஆண்களின் புற அழகில் மயங்கி பல்லிளித்து வாழ்வை பாழாக்கும் யுவதிகளுக்கும் செயற்கை அழகுடன்women தமது அலங்காரங்களை பொதுமக்கள் பார்வையிட காட்டித்திரியும் பெண்களின் மாய வலையிலும் மயங்கி மண்டையை குழப்பிக்கொள்ளும் இளந்தலைமுறை ஆண்களுக்கும் இதில் அதிகம் படிப்பினைகள் உள்ளன. அழகை மறைப்பதிலும் கற்பை பேணி நடப்பதிலும் தான் பெண்ணின் துணிகரமும் வசீகரமும் பெண்மையும் வெளிப்படுகிறது. காட்டித்திரிவதில் அல்ல.
நபியவர்கள் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செல்கிறார். கூடவே அவரின் தோழர் அபூ பக்ர்(ரழி)யும் செல்கிறார். விஷயமறிந்த குறைஷிக் காபிர்கள் அவர்களைப்பின் தொடர்வதற்காக வந்து அஸ்மா (ரழி)அவர்களிடம் இருவரைப்பற்றியும் விசாரிக்க அவரோ பயந்து போய் காட்டிக் கொடுக்கவில்லை. தைரியமாய் எதிர்த்து நின்றார். நெஞ்சுரத்துடன் செயற்பட்டார். இருவருக்கும் தேவையான உணவை கொண்டு சேர்த்தார்.தனது பிள்ளைகளையும் வீரர்களாக வளர்த்தெடுத்தார். இஸ்லாத்துக்காக உழைக்க வைத்தார்.
இப்படி இஸ்லாமிய வரலாறு நெடுகவும் பெண்களின் உயிர்ப்புள்ள ஆற்றல்கள் வெளிப்பட்டதை காணலாம்.
பெண்ணை பலவீனப்படுத்தியே காட்ட முனையும் இன்றைய அதி நவீன உலகில் தனது மானம் மரியாதையை இழக்காமல் சமூகக்களத்தில் நின்று செயல்பட்டு தாக்குப்பிடிக்கும் ஆற்றலும் வலிமையும் இஸ்லாமிய சமூக அமைப்புக்கே உரித்தானது. எனவே பெண்ணை மிகச்சரியாக இனங்கண்டு அவளது இயல்பான பலவீனங்கள் தவிர்த்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் அவளையும் முன்னுரிமைப்படுத்தி செயல்படும் போது சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எனவே ஆற்றலும் ஆளுமையும் மிக்க பெண்களை இனங்கண்டு அவர்களுக்குரிய வழிகாட்டல் நிகழ்சிகள், பயிற்சி வகுப்புகள் மூலம் பெண்ணை வலுவூட்டி பலமாக்குவதும் பயன் பெறுவதும் சமூகத்தலைமைகளின் பொறுப்பாகும்.