டெக்னாலஜி!

  மனிதன் டெக்னாலஜியின் அடிமையாகி வருகிறான் இதற்கு எதிராக இந்தியாவில் முதன் முதலில் குரல் கொடுத்தவர் காந்தி. தாரளமயமாக்கலின் நுகர்வு உலகம் இந்த உலகின் அனைத்தையும், அனைத்து நாடுகளையும், அனைத்துக் கலாச்சாரம், பண்பாடுகள் கொண்ட மக்களையும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் ஒன்றாக சேர்த்துக் கட்டுகிறது. அதாவது standardization செய்கிறது. உலகின் எந்த மூலையிலும்

நாம் வாங்கும் ஒரு அங்குல போல்டும் சில நாடுகள் தவிர்த்து உலகம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
இப்படி standardization செய்யும் போது அதனை சந்தைப்படுத்துதல் எளிதாகி விடுகிறது. இது பெரும் முதலாளிகளுக்கு கொள்ளையோ கொள்ளி லபம் பார்க்க அருமையான திட்டம். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எந்தப் பொருளும் அய்யப்பேட்டையிலும் கூட கிடைக்கும். நெல் அரிசி சாப்பிடுகிறவர்களை பீட்சா சாப்பிடுகிறவர்களாக மாற்றினால் இத்தாலியிலோ, அமெரிக்காவிலோ அய்யங்கார் பேக்கரியில் பீட்சாவை விற்கவும், தயாரிக்கவும் முடியும். இது உணவில் மட்டுமல்ல உடையில், பழக்க வழக்கங்களில், எண்ணங்கள், கல்வி இப்படி அனைத்திலும் ஒவ்வொரு நாட்டினுடைய, சமூகங்களினுடைய தனித்தன்மைகள் களையப்பட்டு முகவரியற்றவர்களாக எல்லோரையும் அமைப்பில் உருவாக்குவதே தாரளமயமாக்கல். சொல்லப்போனால் எல்லோரையும் ஒரே அச்சில் வார்த்தெடுப்பது. இதை சாத்தியப்படுத்தியது தொழில் நுட்பம். தொழில் நுட்பம் நம்மை நுகர்வு மோகம் கொண்டவர்களாக் மாற்றி வருகிறது.
அடிப்படையில் அறிவியல் வேறு தொழில்நுட்பம் வேறு. அறிவியல் நம்மை மேம்படுத்தும். தொழில்நுட்பம் நம்மை சோம்பேரியாக்கி அடிமைப்படுத்துகிறது. தொழில் நுட்பம் நமக்கு எதிரியல்ல! ஆனால் இன்று தொழில் நுட்பத்தை கையாள்பவர்கள் நம்மை அடிமைகளாக்கும் எதிரிகளாக இருக்கிறார்கள். நம்மை அடிமைப்படுத்த தொழில் நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். நாம் சுய அறிவில்லாமல், சொந்த அடையாளமில்லாமல் இருப்பதை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை செய்யும் இன்னொரு கருவியாகவே மனிதர்களைப் பார்க்கிறார்கள். இதை மாற்றி மனித அறிவை பண்பாட்டை மேம்படுத்தி மனிதர்களை அவரவர்களின் அடையாளங்களோடு வாழவைக்கும் ஒரு முன்னேற்றத்தை நோக்கி நகர்வோம். வாழ்க்கையை கற்றுத் தரும் கல்வி மூலம் வளமான உலகை கட்டி அமைப்போம்.