வாழ்வியல் கல்வி

    14010900-cute-little-indian-future-doctor-holding-syringe-with-cheerful-smile-isolated-on-white-backgroundகல்வி ஏட்டில் மட்டும் இல்லை. கல்வியில் ஆகச் சிறந்தது நம்முடைய வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் பெறுகிற அனுபவமே மிகச் சிறந்த கல்வியாகும். ஒருவருடைய அனுபவம் இன்னொருவருக்கு பாடமாகிறது, உண்மையில் எதையும் கற்றுக் கொள்ளதாவரை அதை மற்றவருக்கு கற்பிக்க முடியாது.
கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. அந்த வாழ்க்கை தரமான நல்லதொரு சமூகத்தை உருவாக்கத் துணைநிற்கிறது!
     கல்வியின் இந்த உயர்ந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக தரை மட்டமாக்கப்பட்டு விட்டது. கல்வி எல்லாவகையிலும் வர்த்தகமாக மாறி விட்டது. இப்போது கல்வி என்பது படிப்பதற்கு பணம், படிப்பை சொல்லிக் கொடுப்பதற்கும் பணம். படிப்பு முடிந்த பின்னால் கல்வியில் போட்ட பணத்தை சம்பாதிக்கும் வெறியோடு பணத்தை தேடி பேயாய் அலையும் பிசாசு வாழ்க்கை. தேடிய பணம் ஆசைப்படும் அளவுக்கு கிடைக்காவிட்டால் பித்துப் பிடித்த வாழ்க்கை. இதைத்தான் இன்றைய       தலைமுறைக்கு கற்றுத் தருகிறது கல்வி நிலையங்கள் என்ற “வியாபார நிலையங்கள்.”
     பண்புகளையும், அறங்களையும் தொலைத்து விட்டு பணத்தின் மீது மட்டும் பற்று கொண்டு வாழப் பழக்கும் ஒரு கல்விமுறை தேவையா? இப்படியொரு கல்வி கற்ற சமூகத்துடன் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை. அதை அனுதினமும் அனுபவிக்க பழகி விட்டோம். அடிதடியும், திருட்டும், கொலையும், கற்பழிப்பும், கும்பல் வன்முறையும் நமக்கு பழகிப் போய் விட்டது.
மனிதாபிமானம், இரக்கம், மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்தல் என்பது மனிதர்களைத் தவிர நாய், புறா, காக்கா போன்ற உயிரினங்களுக்குத்தான் கிடைக்கிறது.
     வாழ்வதற்கு உயிர் தேவை. ஆனால் உயிர் இருக்க பணம் தேவை என்றாகி விட்டது. காசில்லா விட்டால் செத்துப் போ என்று சொல்வதற்கு மருத்துவம் படித்து வருகிறார்கள் மருத்துவர்கள். அவர்களையும் மனிதர்கள் என்று நம்புகிறோம். காசில்லா மருத்துவம் காணாமல் போய் விட்டது.
    அண்டி வாழும் மக்கள் உடல் நலமில்லாமல் போனால் எந்தப் பலனும் எதிர்பாராமல் கை வைத்தியம் சொல்லி சுகப்படுத்திய நம்முடை தாத்தாக்களும், பாட்டிகளும் வேண்டாத பொருளாக வீட்டிற்கு வெளியே தள்ளப்படுகிறார்கள். இதை விட, கேவலம் என்று சொல்வதற்கு வேறு எதை செய்ய வேண்டும்? தரமில்லாத மனிதர்கள் பெருகி விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
      அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல முயற்சிகள் மனதுக்கு ஆறுதல் தருகிறது.
     சில நாட்களுக்கு முன்னால் நாளிதழில் படித்த செய்தி ஒன்று. பொள்ளாச்சி அருகேயுள்ளது ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில், 120மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள்ளே சுவாசத்தை சுகப்படுத்தும் மூலிகைச் செடிகள் அழகாய் வளர்க்கப்படுகிறது.
      இப்பள்ளி மாணவர்களிடையே படிப்பு மட்டுமின்றி, மூதாதையரின் வாழ்க்கை முறை, மூலிகைப் பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். இதில், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியோடு, மூலிகைச் செடிகளை நட்டு வருகின்றனர். அதில், பொது ஆரோக்கியத்திற்கு உகந்த திருநீர் பத்தினி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி, நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை, கண்ணிற்கு உகந்த நந்தியா வட்டம், சளி, கபம் ஆகியவற்றை சரி செய்யும் கற்பூர வல்லி உள்ளிட்டவைகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
மாணவர்களே தினமும் அந்த செடிகளுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகின்றனர். மேலும், பள்ளியில், மாணவர்களைக் கொண்டு சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் பெற்றோரிடம் மூலிகைப் பயன்பாடு குறித்து விளக்கப்படுகிறது. மூலிகையின் மகத்துவம் குறித்து இளைய தலைமுறையிடம் விளக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
   பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களிடம் கல்வி கற்பிப்பதோடு, உடல்நலம் பேணுவது குறித்தும் விளக்கப்படுகிறது. அதில், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பெயர் பெற்ற மூலிகை வைத்தியம் குறித்து மாணவர்களிடையே தினசரி விளக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளியில், அமைக்கப்பட்ட சுகாதார குழுவினர் வாரத்தில், மதிய உணவு வேளையின்போது, ஒரு நாள் ஒரு மாணவரது வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் மூலிகை பயன்பாடு குறித்து விளக்குவதுடன், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் ஆரோக்கிய வாழ்விற்காக இந்த சின்ன அளவிலான முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றார்கள் ஆசிரியர்கள்.
     கல்வித் துறையில் ஒரேயடியான மாற்றம் என்பது சாத்தியமில்லாத போது இது போன்று சின்ன சின்ன மாற்றங்களை முயற்சித்துப் பார்க்கலாமே!
   அனைத்துப் பள்ளிகளின் வளாகத்திலும் இந்த சின்ன அளவிலான மூலிகை பண்ணை அமைக்கப்பட்ட வேண்டும் இந்த திட்டம் மூலம் மூலிகை பயன்பாடு மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும், அத்தோடு அறம் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடத்தில் உண்டாக்கி சக மனிதர்களுக்கு உதவும் பண்பாளர்களாக மாற்ற முயற்சி செய்வோமா.....?
சுமய்யா, சாபிரா