சமூகத்தை விட்டு விலகி நிற்கும் கல்வி பயனற்றது.

12465099005 390d4a7877 o
வே.வசந்தி தேவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
“ஒரு மாணவனை சுயசிந்தனை உடையவனாக, ஒரு விமர்சனப் பார்வை கொண்டவனாக, சமூகத்தோடு அவன் சில பிணைப்புகளை உருவாக்கிக் கொள்பவனாக, அந்த மாணவனை மாற்றக்கூடியதாக கல்வி இருக்கவேண்டும்.”
“The purpose of education is not information, but to sensistise” செய்திகளையும் தகவல்களையும் இன்றைய இளைய தலைமுறை பல வழிகளில் பெறலாம் அதற்கு ஒர் சாட்சியாக இணையம் விளங்குகிறது. ஆனால் கல்வி நிலையங்களும், வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இளைஞர்களுக்கு sensitivityஐ கொடுக்கவேண்டும், இணையம் இதை கொடுக்கமுடியாது.
கல்வி நிலையங்களில் “எதையுமே ஆழமாக சொல்லித் தருவதில்லை. நுனிப்புல் மேயத்தான் கற்றுத் தரப்படுகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் நமது தேர்வு முறை.” தேர்வுக்காக நடத்தப்படுகிற ஒரு கல்வி அமைப்பில் ஆன்மா செத்துத்தான் போகும். பெற்றோர்களும் இந்த அமைப்பில் குறுக்கு வழிகளைத்தான் விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு நிறைய மார்க் வருமாறு கற்றுத்தர வேண்டும். அப்படிச் செய்கிறவர்கள்தான் நல்ல ஆசிரியர்கள் என்று எண்ணுகிறார்கள். எந்த ஆசிரியரிடம் படித்தால் நிறைய மார்க் கிடைக்கும் என்று பார்த்து மாலை நேர டியூஷன் படிக்க வேறு அனுப்புகிறார்கள். ” மதிப்பெண்களை மட்டும் மையப்படுத்தி தகவல்களை திரட்டி வினாத்தாளில் வாந்தி எடுக்கும் பாடத்திட்டத்தால் கல்வி முறையில் எவ்வித தாக்கமும் ஏற்பட போவதில்லை. சமூகத்திலும் எந்த ஒரு நல்ல மாற்றமும் நிகழப்போவதில்லை.
இதற்கு தீர்வு.
“கல்வி நிலையங்களில் நடக்கிற விஷயங்கள் எல்லாம் பொது மக்களுக்கு தெரிய வேண்டும் என்று சொன்னால் அதற்கு நிச்சயமாக ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பீடு செய்யவேண்டும். பல நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆசிரியர் பற்றிய மாணவர்களின் மதிப்பீட்டை பார்த்துவிட்டு ஒரு மாணவன் தன் ஆசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டும் இதுபோன்ற நிலை வரவேண்டும். அந்தந்தப் பாடங்களுக்கு வெளியே உள்ள துறை சார்ந்த நிபுணர்களை வைத்து அந்த ஆசிரியரை மதிப்பீடு செய்யவேண்டும். அப்படி செய்தால் Teacher assessment - ல் ஒரு வெளிப்படையான தன்மை கொண்டு வரமுடியும். ஆசிரியர்கள் அஞ்சுவதைப் போன்று பழிவாங்குதல் இருக்காது.”
மாணவர்களை மதித்து அவர்களைச் சுதந்திரமாகப் பேசவிடும் கலாச்சாரமே இங்கு கிடையாது.அவர்கள் துணிச்சலாகக் கேள்விக் கேட்க முடியாது, பள்ளிகள் சிறைச்சாலைகள் தான். அதிலும் பெண்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மிகுந்த அடிமைத்தனம் நிலவுகிறது. அது எப்படி கேள்வி கேட்காமல் அறிவு வளரும்? விமர்சனப் பூர்வமான சிந்தனை எப்படி உருவாகும்? தப்பித்தவறி கேள்வி கேட்கும் குழந்தைகளுக்கு அதிகப் பிரசங்கி பட்டம்தான் சூட்டப்படும்.”
“கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் ஜனநாயகம் இல்லை. ஆசிரியர் - மாணவர் உறவு ரொம்ப மோசமாகத் தான் இருக்கிறது. மாணவர்களிடம் அன்பும், அக்கறையும் கொண்டு பழகுகின்ற ஆசிரியர் மிகவும் குறைவு பள்ளிகளிலாவது ஒரளவு இருக்கிறார்கள். கல்லூரிகளில் இல்லை. இன்றைய மாணவர்கள் அதிலும் கிராமப்புற மற்றும் சிறு நகர்பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் நிறையப் பேர் முதல் தலைமுறையாக பள்ளிக்கும் கல்லூரிக்கும் வருபவர்கள். இவர்கள் அன்புக்கும்,ஆதரவிற்கும், அரவணைப்பிற்க்கும் ஏங்குகிறார்கள். பல குழப்பங்களிலும், மன உளைச்சல்களிலும் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அன்போடும் ஆதரவோடு இருக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. இது போன்ற மாற்றங்கள் கல்வியிலும், கல்வி முறைகளிலும் வராமல் சமூக முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. சமூக முன்னேற்றத்தைத் தராத கல்வியால் எந்தப் பயனும் இல்லை.