மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு சிக்கல் தொடருமா?

Cancer patient
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு சிக்கல் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு சிறப்பு சலுகையாக வழக்கம் போல் நுழைவுத் தேர்வை மதிப்பெண் அடிப்படையில் நடத்திக் கொள்ள அனுமதிப்பதும் வழக்கமாகி விட்டது. மத்திய அரசின் பெரியண்ணன் மனோபாவம்தான் இதற்குக் காரணம். விடுதலை பெற்ற காலத்திலிருந்து பிராமணர் பிராமணர் அல்லாதார் இடையிலான மோதல் பல வடிவங்கள் எடுத்து CBSE கல்வி வாரியத்தின் உருவில் தற்பொழுது மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கருநாகமாக விஷம் கக்கியுள்ளது.
காஷ்மீர், மகராஷ்ட்ரா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பான்மை மாநிலங்கள் தொடக்கத்திலிருந்தே CBSE கல்வி வாரியத்தின் தேர்வை எதிர்த்து வந்தன. நீதி மன்றத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்த்தது. ஏனென்றால் பிராமணியத்தின் கோட்பாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு ஆதரிப்பதால் பிராமணர் அல்லாத இந்திய கிராமங்களில் உள்ள ஒடுக்குமுறைகளில் சிக்கிய குடும்பத்து பிள்ளைகள் தங்களுக்கு சமமாக நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவர்களாக ஆவதை விரும்பவில்லை. எனவே தேர்வு முறையை மாற்றும் குழப்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்தினர். இது தற்செயலாக நடந்தது அல்ல. டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மத்திய அமைச்சராக இந்த துறையை ஆண்ட போதே பிராமணியத்தை தூக்கி நிறுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன. 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் மருத்துவ மாணவ சேர்க்கை தொடர்பாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மாநில மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்கும். இதில் வேறு தலையீடு தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என்று சட்டம் இயற்றி அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று உயர் கல்வியை காப்பாற்றும் ஆவணமாக்கி விட்டார்.
இது தொடர்பாக தற்போது நடந்த வழக்கிலும் இது குறிப்பிடப்பட்டு நீதிமன்றம் ஏற்றுள்ளது. தேர்தல் நடைமுறை இருந்த காரணத்தால் முதல்வரால் எதுவும் செய்ய இயலவில்லை. தேர்தல் முடிவு வெளியாகி தேர்தல் ஆணைய விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக அவர் எடுத்த முயற்சிகளால் தமிழகத்தின் உரிமைகள் இதர மாநிலங்களான கர்நாடகம், மகராஷ்ட்ரம், காஷ்மீர் மாநிலங்களின் உயர் கல்வி உரிமையும் காப்பாற்றப்பட்டுள்ளது.
இதே சிக்கல் அடுத்த ஆண்டும் தொடரும் அபாயம் உள்ளது. இதற்கு மாநில அரசுகள் இந்த ஆண்டை போலவே குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவார்களா? என்பது தெரியவில்லை. எனினும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒரு சீட்டுக்கு ரூபாய் 75 லட்சம் முதல் 90 லட்சம் வரை மாணவர்கள் +2 முதலாண்டு படிக்கும்போதே பல தனியார் பல்கலைக் கழகங்கள் வசூல் வேட்டை நடத்தி விட்டன. நுழைவுத் தேர்வு என்றவுடன் பல மாணவர்களும் தங்கள் செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டனர். அப்போது பணம் திருப்பித் தர மனமில்லாமல் கொஞ்சம் பொறுங்கள் பல மாநில் அரசுகள் தேர்வு முறையை எதிர்க்கின்றன. கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. சாதகமான தீர்ப்பு வரும். உங்களுக்கு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கை தரும் வகையில் பேசி திருப்பி அனுப்பினர். அதற்கு ஏற்றவாறு குடியரசுத் தலைவரின் அவசர சட்டம் பிஜேபியின் அடிப்படைக் கொள்கைக்கு ஏற்றவாறு தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும் பணத்தை கொள்ளையடிக்க அவசர சட்டம் பெருமளவு உதவியது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்த ஒரு தேர்வு குழப்பத்தால் தனியார் நிறுவனங்கள் ஈட்டிட காரணமானது. பொதுவாக மருத்துவம் படிக்க +2 வில் உயிரியல், வேதியியல், தாவரவியல் ஆகிய பாடங்களை தேர்வு செய்து கவனத்துடன் மாணவர்கள் நம்பிக்கையோடு படிக்கிறார்கள். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழிகள் பல மாநிலங்களில் உள்ளவாறு அந்தந்த மொழிகளில் கிராமப்புற மாணவர்கள் பலன் பெற அந்தந்த மாநில கல்வி வாரியங்கள் தேர்வுகளை நடத்தி அதன் அடிப்படையில் தேர்வானவர்களை உயர் கல்விக்கு தயார்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய கல்வி வாரியம் நடத்தும் பாடத்திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்ட வினாக்களுக்கு மாநில மொழிகளில் கல்வி பெற்றோர் தேர்வில் பங்கு கொண்டு மாநில மொழிகளில் எடுக்கும் மதிப்பெண்னுக்கு நிகராக எடுப்பது இயலாது. எனவே பல மாநிலங்களும் பொது நுழைவுத் தேர்வை கடுமையாக எதிர்க்கின்றன. இதற்கு நிலையான ஒரே தீர்வு பாராளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை மாநிலங்கள் உயர் கல்வி தேர்வு நடத்தும் விவகாரங்களில் மத்திய கல்வி வாரியம் தலையிடக் கூடாது மாநில உரிமை உயர்கல்வி விவகாரங்களில் காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழியை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த தொல்லை ஒவ்வொரு ஆண்டும் தொடரும்…
இதை செல்லமாகவோ, கோபமாகவோ அவரவர் விருப்பப்படி மே மாத தலைவலி என்றே குறிப்பிடலாம். க. குணசேகரன்