இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனைகள்-3

gasasali
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தங்களது கல்விக் கோட்பாடுகளை இரண்டு வகைகளகாக பிரிக்கிறார்கள்.
Obligatatory Sciences (கட்டாய அறிவியல்) Optional Sciences (விருப்ப அறிவியல்)
கட்டாய அறிவியல் பாடத்தில் மார்க்க அறிவியல், அதனோடு தொடர்புடைய விஷயங்கள், மொழியியல் மற்றும் இலக்கண, இலக்கியம் போன்ற விஷயங்களை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்போம்.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விக் கோட்பாடுகளில் அடுத்த விஷயம் விருப்ப அறிவியல். விருப்ப அறிவியலை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் இரு வகைகளக பிரிக்கிறார்கள்.
Optional Sciences
Revealed Science
1.நான்கு அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, ஸஹாபாக்களின் கூற்றுக்கள்)
2.அதன் கிளைகள் (மார்க்க சட்டங்கள், மார்க்க நீதி போதனைகள்)
3.மொழியியல் மற்றும் இலக்கணம்
4.திருமறை ஓதுதல், தஃப்ஸீர், மார்க்க சட்டங்களின் மூலம், (Source) முறைப்படுத்தப்பட்ட சரித்திரக் குறிப்புகள் (Annals) மனிதப் பரம்பரை பற்றிய ஆய்வு (Genealogy)
Non revealed science
1.மருத்துவம் (Medicine)
2.கணிதம் (Mathematics)
3.கவிதைகள் (Poetry)
4.வரலாறு (History)
விருப்ப அறிவியலில் மேற்காணும் பாடத்திட்டங்களை ஏன் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
Optional Sciences – இல் முதல் பகுதியை Revealed Science என்று பிரித்து அதில் நான்கு வகையான பாட அம்சங்களை வைத்திருக்கிறார்கள்.
1. நான்கு அடிப்படைகள் :- கல்வி கற்கின்ற ஒரு மாணவன் இஸ்லாத்தின் நான்கு அடிப்படை அம்சங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
1.(குர்ஆன், 2. ஹதீஸ், 3. இஜ்மாஃ (இமாம்களின் ஏகோபித்த முடிவு) 4. கியாஸ்.
2. அதன் கிளைகள் :- நான்கு அடிப்படைகளின் கிளைகளாக இரண்டு விஷயங்களை முன் வைக்கிறார்கள்.
அ. ஃபிக்ஹ் (மார்க்கச் சட்டங்கள்) ஒவ்வொரு முஸ்லிமும் மார்க்கத்தின் சட்டங்களை அறிந்துகொள்வது அவன் மீது கடமையாகும். நபி(ஸல்) அவர்கள் “உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் தொழ கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழச் சொல்லுங்கள்” என்ற கருத்தில் இதை சொல்லி இருக்கிறார்கள்.
பத்து வயதை அடைந்தனுக்கு தொழுக்கைக்கான சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதன் சாரம். குளிப்பு கடமையான ஒருவனுக்கு தொடக்கூடாத, செய்யக்கூடாத சில செயல்கள் உண்டு. இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு குளிப்பின் கடமைகள் தெரியும்.
இதுபோல் குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை எத்தனையோ சட்டங்கள், உறவுகளில் தொடங்குகின்ற சட்டங்கள் அண்டை வீட்டாரின் கடமைகள் வரை திருமணம், வணக்க வழிபாடுகள் என நீண்டு கொண்டே செல்கின்ற பட்டியல் மரணம் வரை தொடர்கிறது.
வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால் நேர்மையை இழந்து தவிக்கிறது நம் சமூகம். ஏழைகளிடம் எப்படி பழக வேண்டும், பிறர் புன்படாதவாறு எவ்வாறு பேச வேண்டும். பெற்றோர்களையும், பெரியவர்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாததால் சொந்தப் பெற்றோரை பத்தோடு பதினொன்றாக பார்க்கிறார்கள்.
குழந்தை பிறந்த உடன் என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரியாததால் குழந்தைகள் அந்நிய கலாச்சாரத்தோடு வளர்கின்ற சூழல் இளைஞர்களும் தங்களுக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் உணராததால் அவர்களும் அவர்களை நம்பி இருக்கின்ற சமூகமும் திசை தெரியாமல் பயணிக்கத் தொடங்கி விட்டது.
மொத்தத்தில் நாம் எதற்காக வாழ்கிறோம் எந்த நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்ற சட்டங்கள் தெரியாததால், தெரிந்துகொள்ள முன்வராததால் இன்று நம் சமூகம் கேளிப் பொருளாக பார்க்கபப்டுகிறது.
அதனால்தன் கல்வி கற்கின்ற மாணவர்கள் மார்க்க சட்டங்களை தெரிந்து கொண்டால் குடும்ப உறவு, நட்பு, வியாபாரம் அனைத்தும் சீராகும் என்பதால்தான் மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்வது அவசியம் என்கிறார்கள் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.
நான்கு அடிப்படை அம்சங்களில் இரண்டாவதாக மார்க்க நீதி போதனைகளை குறிப்பிடுகிறார்கள். பொதுவாக ஒரு விஷயத்தை புரியவைக்க வேண்டும் என்றால் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது சம்பவங்களும், கதைகளுமாகும்.
எனவே திருமறையில் இடம் பெற்ற நபிமார்கள், முன்னோர்களின் சம்பவங்கள், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை ஆகியவைகளைச் சொல்லி மானவர்களுக்கு புரியவைக்கும் போது, வருங்காலத்தில் நாமும் அவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற சிந்தனைக்கும் மாணவர்கள் தங்கள் இளம் வயதிலேயே மாறிவிடுகிறார்கள்.
உலகில் வாழுகின்ற கோடான கோடி முஸ்லிம்களின் ஈமானிற்கும் இறையச்சத்திற்கும் நமது தாத்தாமார்களும், பாட்டிமார்களும் தோட்டிலில் பாட்டாக, படுக்கையாக கதையாக பேசிய சொல்லப்பட்ட சம்பவங்களும், வரலாறுகளும் காரணம் என்பதை எவர் மறுக்க முடியும்.
எனவே நம் சமூகம் சீர்பெற மார்க்க நீதிபோதனை மிக அவசியம் என்பதை இமாம் கஸ்ஸாலி அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அடுத்தாக மொழியியல் இலக்கணம் :-
கட்டாய பாடத் திட்டத்தை சொல்கின்ற போது மொழியியல் மற்றும் இலக்கணத்தை சொன்ன இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் விருப்பப் பாடத்தின் கீழும் மொழியியல் மற்றும் இலக்கணத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அதம் மூலம் அவைகளின் முக்கியத்துவத்தை விளங்க முடிகிறது.
யூத, கிறித்தவ நாடுகளிலிருந்து வருகின்ற கடிதம் அந்தந்த மொழிகளில் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் யூத கிறித்தவர்கள் பேசிய மொழிகளை சில ஸஹாபாக்களிடம் கற்றுக் கொள்ளச் சொன்னார்கள். நபித்தோழர்களும் அந்த மொழிகளைக் கற்றுக் கொண்டார்கள்.
கேரளா போன்ற கல்வியில் உயர்ந்த மாநிலங்கள் மேலும் சில நாடுகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதற்கு அவர்களுடைய பிள்ளைகளை M.Phil,P.hd போன்ற ஆய்வுநிலை படிப்புகளுக்கு வெளிடங்களுக்கு அனுப்பி படிக்க வைப்பதும் ஒரு காரணமாகும்.
அதுபோல கல்வியில் உயர்ந்த, சிறந்த அறிஞர்கள் கல்வியாளர்கள் தங்களின் வாழ்விடங்களைத் தாண்டி கல்வி எங்கே தரமாக கிடைக்கிறதோ அந்தக் கலாசாலையை நோக்கிச் செல்லும் பயணிப்பது தாபிஈன்களின் காலத்திலிருந்து இன்று வரை அந்த நிலை இருப்பதை நம்மால் காண முடிகிறது.
ஒரு மாணவனின் கல்வித் தரமும் தகுதியும் அதிகரிப்பதற்கும், அவன் தனது சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கும் மொழியியலும், இலக்கணமும் மிகவும் அவசியம் என்பதால்தான் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கட்டாய பாடத்திலும், விருப்பப் பாடத்திலும் சேர்த்து வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்ததாக திருமறை ஓதுதல், அதற்கு தஃப்ஸீர் - விளக்கங்களை தகுதியானவர்களிடம் இருந்து பெறுவதைத் தொடர்ந்து மார்க்க சட்டங்களின் மூலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் இமாம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பொதுவாக சட்டங்களை இருமுறைகளில் விவரிக்கலாம் 1. இன்று நாம் பேசுகின்ற, படிக்கின்ற சட்டங்கள் அதாவது ஒரு மனிதருக்கு தொழுகைக்கான சட்டங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டால் கடைகளில் தமிழ் கிதாபுகளை வாங்கி படிப்பது. அதில் “தொழுகையின் பர்ளுகள்” என்ற தலைப்பில் சில செய்திகளை போட்டிருப்பார்கள். அதை படித்து விட்டு சிலர் பின்பற்றுவார்கள். இது சட்டஙகளை படிப்பதில் முதல் வகை.
சட்டத்தின் இரண்டாவது வகை : தொழுகையில் தக்பீர் தஹ்ரீமா என்பது பர்ளு (முதலாவது தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா என்று சொல்லபடும்) ‘தக்பீர் தஹ்ரீமா பர்ளு’ என்ற சட்டத்தை சட்ட வல்லுநர்கள் எந்த குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸின் அடிப்படையில் முடிவு செய்தார்கள் என்பதை அரபியில் உசூலுல் ஃபிக்ஹ் (சட்டத்தின் அடிப்படை) என்று சொல்லுவோம்.
இதுபோல தொழுகையை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பர்ளுகள், வாஜிபுகள், சுன்னத்கள், நஃபில்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சட்டம் உண்டு. இது போல ஒவ்வொரு சட்டங்களையும் அதன் மூலம் வரை படிப்பதே ஃபிக்ஹின் அடிப்படை. ஒவ்வொரு சட்டமும் இந்த சட்டம் இன்னாரிடமிருந்து இன்னார், இன்னாரிடமிருந்து இன்னார் பெற்றார் என்ற (அஸ்மாவுர் ரிஜால்) பட்டியல் நீண்டு இறுதியில் அது நபி (ஸல்) அவர்களைச் சென்றடையும்.
மேலோட்டமாக சட்டங்களையும், அதன் மூலங்களையும் மாணவர்கள் கற்றுக் கொண்டால் அவர்கள் தரம் மிகுந்தவர்களாக உருவாகி வருவார்கள்.
ஒரு சட்டத்தை எடுப்பதற்கு பல திருமறை வசனங்களை, ஹதீஸ்களை தேடும் இவர்கள் ஃபிக்ஹ் துறையில் தேர்ந்த வல்லுநர்களின் தகுதியை புரிந்து கொள்வார்கள். அவர்கள் மீது கண்ணியம் பேணுவார்கள்.
ஒருவரை பின்பற்றுவது வேறு கண்ணியம் செய்வது வேறு. பின்பற்றுதல் என்பது அல்லாஹ் வுக்கும் அவன் தூதருக்கும்தான். மரியாதை என்பது எல்லோருக்குமான ஒன்று.யூத மனிதரின் ஜனாஸாவைக் கண்டு எழுந்த நின்ற நபி (ஸல்) அவர்களின் செயல் நாம் அறிந்த ஒன்றுதான்.
எனவே ஒரு மாணவன் சட்டங்களை அதன் மூலங்களில் இருந்து தெரிந்துகொள்வது அவந்து கல்வித் தகுதியின் நிலையை அதிகரிக்கச் செய்கிறது என்பதால் இதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அடுத்ததாக ஒரு மாணவன் முறைப்படுத்தப்பட்ட சரித்திரக் குறிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.
உலக விஷயங்களை கற்றுக் கொள்வதிலும், அதில் ஈடுபடுவதிலும் அக்கறை கொண்ட பல முஸ்லிம்கள் மார்க்க விஷயங்களை அறியாது வழி தவறி விடுகிறார்கள். அவர்களைப் பார்த்து முஸ்லிம் அறிஞர்கள் கண்ணீர் வடித்தாலும் அடுத்த தலைறைக்காக சமூகத்தின் மீது உள்ள அறிஞர்கள் உழைக்கிறார்கள்.
அதன் அடிப்படையில்தான் கல்வி கற்கின்ற மாணவன் சரித்திரக் குறிப்புகளை முறைப்படுத்தப்பட்ட வரிசையில் தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
நம்மிடம் இல்லாத ஆனால் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த விஷயத்தைத் தான் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்ற சரித்திரக் குறிப்பை ஒவ்வொரு மாணவனுடன் தெரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பிறந்த 570 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உள்ள சரித்திரக் குறிப்புகளை நாம் ஆராய்ச்சி செய்தால் நமக்கு ஏராளமான படிப்பினைகளும் பாடங்களும் கிடைக்கும்.